'கருணைக்கு அருணகிரி' என்று புலவரால் புகழப் பெற்ற அருணகிரிநாதர், அருணையில் ஒன்றிய மஹா வியக்தியாகிய ஸ்ரீ ரமண மகரிஷிகள் தமது அக்ஷரமணமாலையில் 50 இடங்களில் 'அருள்' என்பதை கூறுவதைப் போலவே, தமது நூல் முழுவதிலுமே கருணா ரஸம் விரவிச் செல்லுமாறு படைத்துள்ளார் மற்றும் முருகனின் அருள் தோற்றம் சிறப்பாக சத்குரு வடிவாய் வருவதைக் குறித்து இரு ஞானியருமே பாடியுள்ளனர்.

“குற்றமுற்று அறுத்தெனைக் குணமாய்ப் பணித்தாள்
குருஉருவாய் ஒளிர் அருணாசலா”

என்று ரமண பகவான் போலவே அருணகிரிநாதரும் முருகனே தன் குருவாய் வந்து வழிகாட்டியதைப் போற்றிப் பாடியுள்ளார்.

'திருவடியும் தண்டையும் சிலம்பும் சிலம்பு ஊடுருவப்
பொருவடிவேலும் கடம்பும் தடம்புயம் ஆறிரண்டும்
மருவடிவான வதனங்கள் ஆறும் மலர்க்கண்களும்
குருவடிவாய் வந்து என் உள்ளம் குளிரக் குதிகொண்டவே!'

என தன் தெய்வ வடிவைக் குறுக்கிக் கொண்டு தனது ஸத்குரு வடிவாய் வந்து முருகன் ஆட் கொண்டப் பேரருளை அருணகிரியார் வியந்து பாடுகிறார். வெறும் நூல் கல்வி மட்டும் பயிலாது, ஸத்குருவின் தாளில் சார்ந்து வணங்கி பணிவோடும் பக்தியோடும் கற்கும் அடியவர் அறிவில் இறைவனே வந்து நிறைவான். அவ்வடியார் கற்பது அனைத்தும் ஞான நூலாகவே இருக்கும். நூற்பயனான ஞானமாக அவனே புத்தியில் புகுந்து உறைவான். திருப்புகழின் முதல் பாடலாகிய “கைத்தலம் நிறை கனி” என்னும் பாடலிலேயே இக் கருத்தைக் கூறியிருக்கிறார் அருணகிரிநாதர். திருமூலரும் தமது முதல் பாடலிலேயே,

“புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே”

என இறைவன் அருள் தமது அறிவினில் வந்து உறைந்து அதைச் சீராக்குவதை உரைக்கிறார். ஸ்ரீ ரமணரும்

“நூலறிவு அறியாப் பேதையன் எந்தன்

மால் அறிவு அறுத்து அருள் அருணாசலா” (மணமாலை 58)

என அக்ஷரமணமாலையில் சத்குருவாய் இறைவன் வந்து தனக்கு மெய்ஞ்ஞானம் தருவதைக் கூறும்போது, பயனற்ற நூல் கல்வியை நீக்கி மெய்மை அறிவை தருவதைக் குறிப்பிடுகிறார்.

அக்ஷரமணமாலை 23 ஆம் பாடலிலும் முருகப் பெருமானின் ஞானக் கனி தந்து அருளும் கருணையை அருணகிரி புகழ்வது போன்று அருணாசலனின் ஞானக்கனி தந்து அருள்புரிதல் குறித்து ஸ்ரீ ரமணர் பாடுகிறார்.

“கையினில் கனி உன் மெய்ரசம் கொண்டு உவகை
வெறி கொள அருள் அருணாசலா”

“உன்னையே நான் நினைத்து இருந்தனையால் உனது அருள் நிறை ஸ்வரூபம் என்னுள் நிரம்பிவிட்டது. அதையே அருந்தி நான் மெய்மறந்து திளைக்கும்படி அருள்வாயாக என” வேண்டுகிறார் பகவான். இதேபோன்று சொல்வளச் சிறப்புடன் அருணகிரிநாதர் முருகனையும் உமை அம்மையும் சேர்த்தே பாடுகிறார்.

“பழநி மலைவரு பழநி மலைதரு பழநி மலைமுருக விசாகா”

என “குழல டவிமுகில்” என்று தொடங்கும் திருப்புகழில் அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார். மீண்டும் மீண்டும் பழநி என்ற சொல் வருகிறதே என எண்ணலாம். அதனையே விரித்துக் காணும்போது அருணகிரிநாதரின் சொல் சிறப்பு வெளிப்படுகிறது.

“பழநிமலை முருக விசாக”, என்னும் சொற்றொடரை “மலைவரு பழ நிமலை தரு பழநி” என்று அன்வயப்படுத்தினால் இதன் சிறப்பு விளங்கும். முதலில் வரும் ‘பழநி’ என்பது உமை அம்பிகையைக் குறிக்கும். பழத்திற்கு ஒப்பானவள் உமை அம்மை.

ஞானக் கனியாக உள்ள உமை அம்மை, (இமய) மலையில் அவதரித்த பழமையான 'நிமலை' (தூய உருவெடுத்தவள்). விசாகன் அவ் அன்னையிடம் அவதரித்தவன்

'வி-சாகன்' என்றால் விசேஷமான கிளைகளுடன் கூடிய ஒரு மஹா விருக்ஷம். ஞானப் பழமாகிய அன்னையிடம் தோன்றி, அடியார் உள்ளத்தில் ஞானப் பழம் கனிந்து தோன்ற வைக்கும் கடவுளே முருகன் என்பதே இப் பாடலின் உட்பொருள்.

“நாளு மினிய கனியெங்க ளம்பிகை ......” என்று இக்கனியைக் குறித்து அருணகிரியார் பாடுகிறார்.

கைத்தலம் நிறை கனியுடன் தோன்றும் கணபதி, தன் தம்பியாகிய முருகப் பெருமானின் கரத்தைப் பற்றி அன்புடன் அடியாரிடம் அழைத்துச் செல்லுவதாக அருணகிரியார் பாடுகிறார்.

“தும்பிக்கைக் கற்பக முற்றங் கரதலம் பற்றப் பெற்றவொ ருத்தன்”

(கனக்ரவுஞ் சத்திற் சத்தியை விட்டன் என்று தொடங்கும் திருப்புகழ்.)

இங்ஙனம் சத்குருவின் அருளால் அநூபூதி ஞானம் பெற்ற பின் “இறைவன் அருளால் பெற்ற அனுபூதியை உலகெல்லாம் அறியும்படி பரப்ப நீதான் வாக்கினை அருள வேண்டும்” என வேண்டுகிறார் அருணகிரிநாதர்.

“நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்”

இதில் “ ‘செஞ்சொல்' என்பது சிறப்புமிக்க சொற் பிரயோகம். 'செம்மை' என்ற சொல்லே முழுமைக்கும், முதிர்ச்சிக்கும் அடையாளம். இறைவனையும், சத்குருவையும் நாம் கவிதை மாலை தொகுத்துப் பணிந்தால் மட்டும் போதாது. அக் கவிதைகள் செஞ்சொற்களால் -- கனிவு, கருணை, அன்பு அனைத்தும் நிரம்பிய 'செவ்விய' செம்மையான சொற்களால் -- தொகுப்பப்பட்ட பாமாலைகளை நான் கூட்ட அருள் புரிய வேண்டும்” என வேண்டுகிறார் அருணகிரிநாதர்.

அன்பே சிவம் - அந்த அருணாசல சிவத்திடம் இருந்தே இந்த சத்குருவாகிய சிவம் உதித்துள்ளது.

இந்த ஒளி வீசும் அருள் அன்பையே பகவானும்,

“செவ்வாடக ஆர் ஒளியாம் நினைக்கமுக்தி அருள் அருணாசலம்” என்றும், “தத்வமஸி அர்த்தம் அருளைப் பொருள் ஆம் அசலத்து அர்த்தம்” என்றும் பகவான் ரமணர் குறிப்பிடுகிறார்.

அருணகிரிநாதர், அனுபூதி நிலையில், முருகன் தந்த உபதேசத்தினால் தன்னை எண்ணங்கள் அற்ற ஆழ் மௌனத்தில் ஆழ்த்தி, பரத்துடன் ஒன்றச் செய்தானெனக் குறிப்பிடுகிறார்.

“சும்மா இரு சொல்லற என்றலுமே அம்மா பொருள் ஒன்றுமறிந்திலனே..”

“அறிவற்று அறியாமையும் அற்றதுவே.” “என்னை இழந்த நலம் தானோ பொருளாவது” என அருணகிரிநாதர் அறிவும் அறியாமையும் கடந்த மௌன நிலையில் தன்னையே கரைத்து சொரூபமாவதைக் கூறுகிறார்.

அருணாசல அநுபூதியில் ஒளிபொருந்திய ஞானமாகவே முருகப் பெருமான் ஆத்மாவில் அமர்ந்தான். ஒளி பொருந்திய உருவோடு தோன்றிய முருகன், 'செவ்வான் உருவில்' முதலில் வந்து அணைத்தான். ஆழ்ந்த அத்வைத அனுபூதி பெற்ற இறுதி நிலையில் இறைவனை உருவத்தில் எண்ணுவது ஒவ்வாதது. இந்த இறையனுபவ நிலை இன்னொருவருக்கு எடுத்துக் கூறவும் இயலாது. அவரவரே ஆத்மாவில் சுத்த மௌனத்தில் ஒடுங்கி அறிய முடியும் என்ற இறுதி நிலையை அருணகிரிநாதர் உணர்த்துகிறார்.

முருகப் பெருமானின் இறுதியான அருள், தன்னிடம் சரணாகதியும் மௌனமும் சாதகனை அடையச் செய்வதே என்கிறார் அருணகிரிநாதர்.

“சரணமும் மௌனமும் அருள்வாயே” என்று கூறும் அருணகிரிநாதர் மற்றொரு இடத்தில் “நிர்வசனப் பிரசங்க குருநாதர்” என்று சுட்டுவது ஸ்ரீ ரமணரின் நிலையான ஆழ்ந்த, அதேசமயம் அடியார்க்கு சொற்களைக் கடந்த ஞானத்தை அறிவிக்கும் சொற்கடந்த மௌனம் (Eloquent Silence) என்ற உயரிய நிலையைக் குறிப்பது.

“அறிவறி யாமையு மற்றதறி வாமே
யறியும துண்மையறி வாகா தறிதற்
கறிவித்தற் கன்னியமின் றாயவிர்வ தாற்றா
னறிவாகும் பாழன் றறி.” (உள்ளது நாற்பது 12)

என்கிறார் பகவான். அறியாமையாகிய அஞ்ஞானமும் கடந்த நிலையே ஞான நிலை.

அன்னியமான பொருளை அறிவது ஞானமாகாது தனக்கு அயலாய் அறிவதற்கு வேறு ஒரு பொருளை அறிவிப்பதற்கு ஒன்றுமே இல்லை. தான் யார் என்பதை உணரும் ஆன்மீக அறிவே உண்மை அறிவு என இரு பெரும் ஞானியர் கூறுகின்றனர்.

இதற்கு வழி, அகந்தை என்னும் தன்முனைப்பை அடியோடு அறுத்து எறிவதே என்கிறார் அருணகிரியார். “அரிவாய் அடியோடும் அகந்தையையே” என முருகப்பெருமானிடம் பக்தனை வழிப்படுத்தும் மிகச் சிறந்த சங்கநூல் நக்கீரத் தேவர் இயற்றிய திருமுருகாற்றுப்படை, திருச்செந்தூரில் துவங்கி முருகனை ஆறுபடை வீடுகளிலும் சென்று முருகப்பிரானைத் தரிசனம் செய்து திரும்பி வந்து கொண்டிருக்கும் ஒரு மூத்த பக்தன், முருகனை நாடி அப்பொழுதுதான் கிளம்பிக்கொண்டிருக்கும் இளைய பக்தன் ஒருவனைக் காண்கிறான். இந்த ஆறு படை வீடுகட்குஞ் சென்று எங்ஙனம் முருகனை அடைந்து அவனருள் பெறுவது என்று வினவிய அந்த இளைய பக்தனுக்கு ஆறுபடை வீடுகட்கும் செல்லும் வழியையும், ஆங்காங்கே உள்ள நாட்டு வளம், மலைவளம், ஆலயச் சிறப்புப் பற்றி மூத்த பக்தன் எடுத்துரைக்கிறார். இறுதியில் அவன் கூறும் விளக்கம்தான் சுவையானது.

“சேவடி படரும் செம்மல் உள்ளமொடு -
நலம்புரி கொள்கைப் புலம்பிரிந்து உறையும்
செலவுநீ நயந்தனை ஆயின் பலஉடன்
நன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப
இன்னே பெறுதி நீமுன்னிய வினையே”

“முருகப் பெருமானின் திருவடிகளை அடையும் உயர்ந்த நெஞ்சத்தோடு பிறர்க்கு நன்மை செய்யும் கொள்கையுடன், மெய்ஞ் ஞானத்தை அடையும் குறிக்கோளோடு, நீ படை வீடுகளைச் சென்று அடைவாயின் அம்முயற்சியே தேவையில்லை. எக்கணம் நீ உறுதியான தூய உள்ளத்துடன் முருகப் பெருமானை நினைக்கிறாயோ, அக்கணமே அவனை நீ இருந்த இடத்திலேயே அடைகிறாய்” என்று உறுதி கூறுகிறார் நக்கீரத்தேவர்.

'அத்ர ப்ரஹ்ம ஸமஸ்துதே' - பிரம்மம் இங்கேயே, இப்போதே அடையப் பெறுகிறது என்ற கடோப நிஷத் வாக்கினை பகவான் ரமணரும் அருணகிரிநாதரும் நமக்கு நினைவூட்டிச் செல்வதை காண்கிறோம்.

“அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு...”

அஞ்ஞான இருள் மண்டிய உலகில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அருள் ஒளி விளக்கினை ஞானிகள் ஏற்றினர். ஒவ்வொரு நூற்றாண்டிலும் அண்ணாமலையை வந்து அடைந்து வழிகாட்டிய ஞானிகளாகிய - விரூபாக்ஷ தேவர், குகை நமசிவாயர், குரு நமசிவாயர், சேஷாத்ரி ஸ்வாமிகள், ஈசான்ய ஞானதேசிகர், அருணகிரிநாதர், பகவான் ரமணர் போன்ற உயர் ஞானியர்கள் இன்றும் உபதேசங்களை அருளிக் கொண்டுள்ளனர்.

முருகப்பெருமான் பல்வேறு வடிவங்களிலும் பான்மைகளிலும் அண்ணாமலையில் தன்னை வெளிப்படுத்தி உள்ளார்.

“பேசா அநுபூதி தந்தவன்” அவனே

“அறிவும் அறிதத்துவமும் அபரிமித வித்தைகளும் அறியென

இமைப் பொழுதில் வாழ்வித்த வேதியன்”

தமிழ்நாடு முழுவதும் சிறு சிறு கிராமங்கள் ஊடே சென்று பதினாறாயிரம் சந்தக்கவிகள் பாடி அருளினார் அருணகிரிநாதர். அதற்கு மாற்றாக, அருணை நகர் வந்து “நீயே என் தந்தை! நீயே என் குரு” என்று அடைந்த ரமணபகவான் பல்லாண்டுகள் சுத்த மௌனத்திலேயே ஆழ்ந்திருந்தார். தீவிர அடியாரின் வேண்டுகோளுக்கு இரங்கி, தம் ஜீவியத்தின் பிற்பகுதியில் உரையாடல் மூலம் விளக்கம் அருளியும் கவிகள் யாத்தும் ஞானப் பரப்பலை செய்தார் பகவான் ரமணர்.

ஞான சம்பந்தரை திராவிட சிசு - தமிழ்க் குழந்தை என்று மகுடமிடுகிறார் சங்கர பகவத்பாதர். ஞான சம்பந்தருக்குப் பின் பல நூற்றாண்டுகள் கழித்து திருவண்ணாமலை வந்து ஞானச் சுடர் ஏற்றி ஒளி தந்த திராவிட சிசுக்கள் அருணகிரிநாதரும், பகவான் ரமணரும் ஆவர். அவர்தம் ஞானஒளி நம் உள்ளத்தே பதிந்து நம்மை வழி நடத்துமாக

★★★

Arunagirinathar's Thiruppugazh clearly spells out what our ultimate end should be and what means we should adopt to attain that end. Thiruppugazh provides us both the means and the end by indicating the shoulder of Muruga as the means and the Lotus Feet as the end.

— V.S. Krishnan