தலைவர், அருளாளர் அருணகிரிநாதர் மணிமண்டப அறக்கட்டளை, கிரிவலப்பாதை, திருவண்ணாமலை.
வையம் தோன்றிய காலம் தொட்டு உய்யும் உயிர்கள் யாவும் அவை செய்யும் செயல்களின் புண்ணிய, பாவங்கள் எல்லாம் கண்ணுக்குத் தெரியாமல் கணக்காய் இறைவனால் வகுக்கப்பட்டு அவற்றிற்கேற்ற ஜீவன்களாய் படைக்கப்பட்டு பலாபலன்களை, உயர்வு தாழ்வுகளை, பெருமை சிறுமைகளை கணகச்சிதமாய் வழங்கி இந்த பஞ்ச பூத லோகத்தை செவ்வனே ஆண்டு கொண்டிருக்கிறான் நம் ஈசன் என்றால் இதில் வியப்பென்ன இருக்க முடியும்?
அப்படி இலட்சக் கணக்கான ஜீவன்களுள் மானுடப் பிறவியே மிக உயர்ந்ததென அனைத்து அருளாளர்கள், ஞானிகள், சான்றோர்கள் போன்றோர்களால் போற்றப்பட்டுள்ளதென்பதை நாம் அனைவரும் அறிவோம். மனிதராய்ப் பிறந்து மனிதராய் வாழ்ந்தால் அது புண்ணியம்; மனிதராய்ப் பிறந்து மாமனிதராய் வாழ்ந்தால் அது மகா புண்ணியம்; மனித உருவாய்ப் பிறந்து அருளாளராய் வாழ்ந்தால் அது பூர்வீக ஜென்ம புண்ணியம்; மானுடராய்ப் பிறந்து ஞானியாய் வாழ்ந்தால் அது ஜென்ம ஜென்மாய் செய்து வந்த கோடி கோடியான புண்ணியம் என்கிறார்கள் தவத்தில் சிறந்த பெருமக்கள்.
அவ்வண்ணம் இந்த மண்ணில் தோன்றி இறை அருளைப் பெற்று வாழ்ந்து அவனடியை சேர்ந்திருந்தாலும், இன்று வரை பெரும்பாலான மக்கள் மனதுள் உறைந்து கொண்டிருப்பவர்கள் பலர். ஆயினும் அவர்களுள் நம் சிந்தை கவர்ந்த ஒப்பற்ற ஞானி, ஈடிலா சந்தக்கவி, நேரடியாக முருகப் பெருமானின் காட்சி பெற்று அருளையும் பெற்றவர் அறியாமை எனும் இருளையும் போக்கியவர்தான் நம் அருணகிரிப்பெருமான்.
அத்தனை பெருமைக்குரிய மகா ஞானி அருணகிரிப்பெருமானைப் பற்றி சுருக்கமாக சிறிது காண்போமே. பெரும் வணிகரான சந்திரமௌலி - முத்தம்மை தம்பதியருக்கு கி.பி. 1370ஆம் ஆண்டு பிரபவ வருடம் புரட்டாசித் திங்களில் இரண்டாவது குழந்தையாக அருணகிரிப்பெருமான் அவதரித்தார். இவரின் தமக்கை பெயர் ஆதி என்பதாகும்.
தந்தை யின்
மறைவுக்குப் பின், இவரின்
தமக்கையாரும் இவரும் இவரது
தாயாரின் பார்வையில்
வளர்ந்தார்கள். அருணகிரிப்
பெருமானின் ஏழாவது வயதில்
இவரது தாயாரும்
காலமாகிவிட்டார். இறக்கும்
தருவாயில் தனது மகள்
ஆதியிடம் அருணகிரியை
ஒப்படைத்து கடைசி வரையில் இவனை நீ காப்பாற்று என்று கூறி கண்களை மூடினார்கள். நாம் அனாதைகளாகி விட்டோமே என்று அருணகிரியார் தனது தமக்கையிடம் வருத்தத்துடன் கூற, நம்மை நம் முருகப்பெருமான் கைவிட மாட்டார் தம்பி என்று ஆறுதல் கூறினார் தமக்கை ஆதி.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வந்த அருணகிரியார் செல்வச் செழிப்பினாலும் தமக்கையின் தகுந்த பாதுகாப்பினாலும் காளைப் பருவம் எய்தினார். காண்போரை சொக்க வைக்கும் இளவரசன் போல் தோற்றப் பொலிவில் மிளிர்ந்தார். கண் போன போக்கிலும் மனம் சென்ற திசையிலும் தன் இளமைக் காலத்தைக் களிப்புடன் கழிக்கலானார். எந்தப் பணியுமின்றி உட்கார்ந்தே சாப்பிட்டால் மலையும் கரையும் என்பார்கள் பெரியோர். அவ்வண்ணமே பெற்றோர் சேமித்து வைத்த செல்வம் கரையத் தொடங்கியது. காலங்கள் ஓடின. பொன் நகைகள் போயின. பொருளெல்லாம் போயின. சேமிப்பையெல்லாம் இழந்தார். தன் பொலிவையும் இழந்தார். தீரா நோயும் வந்து பற்றியது. அதனினும் பசித் தீ பொசுக்கியது. வறுமை வாட்டத் தொடங்கியது.
தமக்கை செய்வதறியாது தவித்தார். தம்மால் ஏதும் செய்ய முடியவில்லையே என கண்ணீர் வடித்தார். முருகனை வேண்டுமாறு தம்பி அருணகிரியை வேண்டினார் அன்புத் தமக்கை ஆதி. தமக்கை சொன்ன வார்த்தைகள் அருணகிரியாரின் நெஞ்சைத் தொட்டது. அவரது தீய எண்ணங்களைச் சுட்டது. ஆழ்ந்து சிந்திக்கலானார். அண்ணாமலையார் கோயிலுக்குச் சென்று முருகப் பெருமானிடம் மனமுருகி வேண்டினார். என் மீது உயிரையே வைத்திருக்கும், எனக்காகவே தன் வாழ்நாள் முழுதும் கழித்துக் கொண்டிருக்கும் என் தமக்கைக்கும் பெருந் துயரத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறேனே முருகா, முருகா நீதான் அடியேனைக் காப்பாற்றி நல்வழி காட்டவேண்டும் என்று நெஞ்சார எண்ணி வருந்தி வேண்டினார். அங்கேயே உட்கார்ந்துவிட்டார்.
தன் கடந்த காலத்தை எண்ணி எண்ணி வேதனையுற்றார். எதிர்காலத்தை நினைத்து மனம் புழுங்கலானார். செய்வதறியாது தத்தளித்தார். மனம் பேதலித்தது. இனி வாழ்ந்து பயனில்லை. இத்தனை நீண்ட பிரச்சனைக்கு மாண்டு போவதே சரியான வழியென அவராக எண்ணிக் கொண்டார். மனம் துணிந்தார். கிடுகிடுவென்று கோபுரத்தின் மீது கடகடவென ஏறி உச்சிக்குச் சென்றார். அங்கிருந்து முருகா! முருகா! என உரத்தக் குரலோடு கீழே குதித்தார்.
துச்சாதனன் பாஞ்சாலியை துகிலிருத்த போது கூட, பாஞ்சாலி கண்ணனை எண்ணி எண்ணி வேண்டி நின்றபோதும், தனது கைகளால் தன் மானத்தைக் காத்துக்கொண்டு கண்ணா கண்ணா என்றழைத்த போதும் வராத கண்ணன், தன்னை எப்போது முழுமையாக நம்புகிறாள் என்ற தருணத்திற்காகவே காத்திருந்த கண்ணன், பாஞ்சாலி தனது இரு கைகளையும் நீட்டி கண்ணா இன்னும் உன் மனம் இரங்கவில்லையா? என் மானம் காக்க வரவில்லையா? என்று கதறிய போதுதான் கண்ணன் பாஞ்சாலியைக் காப்பாற்றினான் என்கிறது மகாபாரதம்.
அவ்வண்ணமே இதுகாரும் காத்திருந்த முருகப் பெருமான் வயோதிக வடிவம் தாங்கி அருணகிரிப் பெருமானை தாங்கிச் சட்டெனப் பற்றிக்கொண்டார். கீழே குதித்தபோது தனக்கு என்ன நடந்தது என்று அருணகிரியார் எண்ணிப் பார்ப்பதற்குள்ளாகவே அந்த முதியவர் மறைந்து விட்டார்.
அப்போது வானில் பிரகாச ஒளியுடன் மகா மகிமை பொருந்திய வேலுடன் அழகன் முருகன் அருணகிரியாருக்குக் காட்சி தந்தார். முருகனைக் கண்டு அளவிலா ஆனந்தமும் களிப்பும் உடையவராய் முருகா! என்னே உன் கருணை என்னே உன் கரிசனம்! என்று நெஞ்சார, வாயாரக் கூறி தரையில் விழுந்து முருகனை வணங்கினார். அப்போது அன்பனே! அருணகிரி! இப்பொழுதே உனக்கு அழகான தோற்றமும் நல்ல பொலிவும் நல்ல ஞானமும் உண்டாகட்டும். நீ என் புகழைப் பாடிக்கொண்டே இரு எனத் திருவாய் மலர்ந்தார்.
அப்பா! முருகா! அடியேனுக்கு என்ன தெரியும், நான் எப்படிப் பாடுவேன் என்று வேண்டி நிற்க, முருகப் பெருமான் அருணகிரியாரின் நாவினில் வேலால் எழுதி, நீ முத்து முத்தாகப் பாடு என்று திருவாய் மலர்ந்தருளினார். முருகப்பெருமானின் பூரண அருளும் ஞானமும் பெற்ற அருணகிரிப் பெருமான் “முத்தைத்தரு பத்தித் திருநகை...” எனத் தொடங்கி, எவராலும் எண்ணிப் பார்க்கவே இயலாத சந்தக் கவியில் ஏராளமான திருப்புகழைப் பாடிப்பாடி மகிழ்ந்தார். முருகப் பெருமானை மகிழ்வித்தார். அறுபடை வீட்டிற்கும் இன்னும் ஏராளமான கோயில்களுக்குமாய்ச் சென்று பாடினார், எண்ணற்ற (ஏறத்தாழ 16,000 பாடல்கள் என்று செய்தி) இன்று வரையிலும் எவராலும் பாட முடியாத சந்தக்கவிகளைப் பாடலானார். இவற்றுள் 1300 பாடல்களுக்கும் மேலாக கிடைக்கப் பெற்றுள்ளன என்பது முருகனின் திருவருள் என்றே எண்ணுவோம்.
திருவண்ணாமலையில் இருந்துகொண்டே
உலகிலுள்ள முருகப் பெருமானின் ஆலயம் ஒன்று கூட
விடுபடக் கூடாதென எண்ணித் தொகைத் தலங்களாகச்
சேர்த்துப் பாடினார்.
“கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம்
உம்பர் வாழ்வுறு சீர்காழி நின்றிடு...
இந்திரணாதன் மாதோடு நன்குற
மங்கை மானையு மாலாய்ம ணந்துல
கெங்கு மேவிய தேவால யந்தொறு”
என்று பாடினார்.
பின்னாவில் நிறைய புலவர்க்கு கொடுமை
செய்து வந்த வில்லிபுத்தாரோடு வாதம் செய்ய
ஒப்புக்கொண்டு பல பாடல்களைப் பாடியதோடல்லாமல், ஓரேழுத்துப் பா என்னும் வகையில் தகர வர்க்கத்தில்
அமைந்த யமகமாக அப்பாடலைப் பாடி
வில்லிபுத்தூராரை திணறடித்தார். வாதில் வென்றார்.
இதனால் அருணகிரிப் பெருமானின் புகழ் மேலும்
உயர்ந்தது.
அடுத்து, சம்பந்தாண்டாரின் பொறாமையாலும் சூழ்சியாலும், கூடுவிட்டு கூடு பாயும் சித்து கைவரப் பெற்ற அருணகிரிப் பெருமான் கிளி உருவம் கொண்டு தேவலோகம் சென்று அரசன் பிரபுட தேவராயன் என்பவருக்காக பாரிஜாத மலரைக் கொண்டு வந்தார். போகும்போது தன் திருமேனியை பேய கோபுரத்தில் வைத்து விட்டுச்சென்றார். அப்போது சம்பந்தாண்டான் அருணகிரிப்பெருமான் வருவதற்குள் அவரது திருமேனியை எடுத்து அருணாசலேஸ்வரருக்கு மேற்கே யாருக்கும் தெரியாமல் புதைத்து விட்டார்.
அதனால் அருணகிரிப்பெருமான் கிளி
ரூபத்திலேயே கோபுரத்தில் உட்கார்ந்து விட்டார். இன்றும்
அந்த கோபுரம் கிளி கோபுரம் என்றே அழைக்கப்பட்டு
வருகிறது. மேலே கிளி உருவம் உள்ளது.
இச்செய்தியை வண்ணச்சரபம் சுவாமிகள் தம்
அருணகிரிநாத சுவாமிகள் புராணத்தின் கிளி வாழ்க்கைச்
சருக்கத்தில்...
“பாடினன் கிளியின் செஞ்சொல்
பன்னிரு செவிக்கோன் கேட்டு
வாடிடேல் வாவா என்று
வரவழைத்து ஒரு வன் சேவல்
நீடிய புயத்தில் நேரா
நிகழ் வலந் தோளில் வைத்தான்
ஆடினர் புலவர் கையால்
அணிமலர் மழையும் பெய்தார்”
எனக் குறிப்பிட்டுள்ளார் என்பது மேலும் அருணகிரிப்
பெருமானின் புகழை சிறப்புறச் செய்கிறது.
அருணகிரிநாத சுவாமிகள் ஆனி மாதம் பௌர்ணமியுடன் கூடிய மூல நட்சத்திரத்தன்று கந்த வேளின் பேரின்பப் பெருவாழ்வில் அமர்ந்தருளினார். இத்தகைய பேரருளாளராகிய அருணகிரிநாத சுவாமிகளின் திருவடிகளை வணங்கி வழிபட்டால் நிச்சயம் முருகனின் அருள் பெற்று யாவரும் உயர்வது உறுதி. அருணகிரிப் பெருமானின் புகழ் பரப்புவோம். முருகப் பெருமானின் அருள் பெறுவோம்
★★★
- கந்தர் அனுபூதியை பாராயணம் பண்ணினால் நம்முடைய அவல நிலைகள் எல்லாம் இணைந்து நெஞ்சு நெகிழலாம்.முருகன் திருநாமங்களையும் கருணையையும் பெருமைகளையும் நினைந்து நெஞ்சு உருகலாம். அருணகிரியார் தாம் பெற்றதாகச் சொல்லும் அனுபவத்தை நாமும் பெற வேண்டும் என்ற ஆர்வம் உந்த அவர் காட்டும் வழியில் செல்ல முற்பட்டு,பேசா அனுபூதியைப் பெறலாம்.
- நெடுந்தூரம் பயணம் செய்பவர்கள் தங்கள் கைகளில் அவலை
எடுத்துக்கொண்டு போவார்கள். அந்த அவலை பலவகையில் பயன்படுத்த முடியும். வெறும் அவலை தேங்காயுடனும் வெல்லத்துடனும் சேர்த்து சாப்பிடலாம். அவலை வேக வைத்து தயிரோடு சேர்த்து சாப்பிடலாம். அவலை பயாசம் பண்ணி உண்டு மகிழலாம். இதைப் போலவே திருப்புகழ்ப் பாக்களை ராகம் இல்லாமலே பாராயணம் செய்யலாம். ராகத்தோடு தாளம் இல்லாமல் பாடலாம். ராகமும் தாளமும் சேர கீர்த்தனைகள் போல கற்பனை ஸ்வரங்களைப் பயன்படுத்தி இனிமையாகப் பாடலாம் இப்படி பல படியாக பாடும் வகையில் திருப்புகழ்ப் பாக்கள் அமைந்து இருக்கின்றன.
— வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன்

