ஒரு கியூ ஆர் குறியீடு காட்டப்பட்டுள்ளது. இது ஒரு வெள்ளை பின்னணியில் கருப்பு சதுரங்களைக் கொண்ட ஒரு இரு பரிமாண பார்கோடு ஆகும். இதில் மூன்று பெரிய சதுரங்கள் மூலைவிட்டங்களில் (மேல்-இடது, மேல்-வலது, கீழ்-இடது) மற்றும் கீழ்-மையத்தில் ஒரு சிறிய சதுரம் உள்ளன. இந்த குறியீடு தரவை குறியாக்கம் செய்கிறது, ஆனால் ஸ்கேன் செய்யாமல் உள்ளடக்கத்தை தீர்மானிக்க முடியாது.
அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் அருள் வழங்கினார் என்பது எல்லோருக்கும் தெரியும். திருவண்ணாமலைத் திருக்கோயிலின் கம்பத்து இளையனார் சந்நிதியின் தோற்றத்திற்கே இத்தகைய அருள்தான் காரணம்
அதென்ன கம்பத்து இளையனார்?
சம்பந்தாண்டான் என்னும் பெயர் கொண்ட ஒருவர், அப்போது திருவண்ணாமலையில் வாழ்ந்தார். அரசவையின் ஆஸ்தான புலவராகவும் விளங்கிய இவர், பொறாமை கொண்டவர்; அருணகிரியாரை எப்படியாவது மட்டம் தட்டவேண்டும் என்று திட்டம் போட்டார். அரசராக இருந்த பிரபுட தேவ மகாராஜாவிடம் இல்லாததும் பொல்லாததும்
சொன்னார். அருணகிரியார் முருகனுக்கு நெருக்கம் என்றால், முருகனை வரவழைக்கச் சொல்லுங்களேன் என்று தூண்டிவிட்டார். முருகன் அருள் செய்ததாகக் கூறுவது பொய் என்று குற்றம் சாட்டினார். மகாராஜாவும் சம்பந்தாண்டானின் பொய் வாதங்களை நம்பி, அருணகிரியாரை அழைத்து, முருகப்பெருமானை வரவழைக்கும்படி கட்டளையிட்டார்.
அருணகிரியார் மயிலை வேண்டிப் பாடினார்; மயில் முருகனை வேண்ட, ஆடும் மயில்மீது ஆடிக் கொண்டே ஆறுமுகனும் காட்சி கொடுத்தார். அதுவும் கம்பத்தில் வந்து காட்சி கொடுத்தார். அந்தக் கம்பமே கருவறையாக அமைந்த சந்நிதிதான், கம்பத்தில் இளையனார் தோன்றிய கம்பத்து இளையனார் சந்நிதி.
அண்ணாமலையார் என்னும் சிவபெருமான் அக்கினிப் பிழம்பு. அதுபோன்றே, முருகனும் அக்கினிப் பிழம்பாக உதித்தவர். சிவனார் தந்தை; எனவே, மூத்தவர். முருகன் மகன்; எனவே இளையவர். ஆகக்கூடி, இளையனார்.
முருகப்பெருமானை அருணகிரியார் வரவழைத்ததான திருப்புகழ்ப் பாடல், அதிஅற்புதமானது.
அதல சேடனார் ஆட, அகில மேரு மீதாட, அபின காளி தானாட அவளோடு அன்(று) அதிர வீசி வாதாடும் விடையில் ஏறுவார் ஆட அருகு பூத வேதாளம் அவையாட மதுர வாணி தானாட மலரில் வேதனார் ஆட மருவு வானுளோர் ஆட மதியாட வனச மாமியாராட நெடிய மாமனார் ஆட மயிலும் ஆடி நீ ஆடி வரவேணும்
இதுதான் அருணகிரியார் மயிலை வேண்டிப் பாடிய திருப்புகழ். அதலத்தில் உள்ள ஆதிசேடன் ஆடுகிறான். ஈரேழு பதினான்கு லோகங்கள் என்பதுண்டு. மேலிருந்து கணக்குப் போட்டால், பூமி ஏழாவது; பூமிக்கு மேலே ஆறு லோகங்கள்; பூமிக்குக் கீழே ஏழு லோகங்கள். மேலே இருக்கும் ஆறு லோகங்கள், புவர், சுவர், மஹர், ஜன, தப, சத்ய லோகங்களாகும். கீழே இருக்கும் ஏழு லோகங்கள், அதல, சுதல, விதல, தலாதல, ரசாதல, மஹாதல, பாதால(ள - இப்பெயர்கள் எல்லாவற்றுக்குமே ‘ல’ என்னும் எழுத்தும், ‘ள' என்னும் எழுத்தும் ஒன்றுக்கொன்று மாறி வரலாம்) லோகங்கள் ஆகும். 'அதல விதல முதல் அந்தத் தலங்கள்' என்று இன்னொரு திருப்புகழில் அருணகிரியாரே பாடுகிறார்.
பூமிக்கு அடுத்ததாக இருக்கும் அதல லோகத்தில் ஆதிசேடன் இருக்கிறானாம்; அவன் தான் பூமியைத் தாங்கியிருக்கிறான். அவன் ஆட, அதனால் பூமியும் ஆடுகிறது. பூமி மீதிருக்கும் மேரு மலைகூட ஆடுகிறது. சிவனாரோடு அபின்னமாக இருப்பவள் அன்னை. இருப்பினும், தேவைப்படுகிற காலங்களில், அம்பிகை தனி வடிவமாக, வீர சக்தியாகக் காட்சி தருகிறாள். காளிதேவியாக எழுந்தருளுகிற நிலையில், சிவனாரோடு போட்டிப் போட்டுக்கொண்டு நடனமாடுகிறாள். காளி ஆட, விடையேறியான (ரிஷபத்தில் ஏறும்) சிவனார், அவளோடு வாதாடி ஆட்டம் ஆடுகிறார். சிவபெருமான் ஆடுவதைக் கண்டவுடன், திருக்கைலாயத்தில் உள்ள சிவ பூதங்களும் வேதாளப் படைகளும் ஆடுகின்றன. திருக்கைலாயமே ஆடும்போது, சத்யலோகம் ஆடாமல் இருந்துவிடுமா என்ன? வீணாவாணியான சரஸ்வதி ஆடுகிறாள்; அவளுடைய நாதனான நாபிக்கமலத்தாரான பிரம்மாவும் ஆடுகிறார். இப்படி சத்யலோகமும் கயிலாயமும் ஆட, தேவலோகத்தாரும் ஆடுகின்றனர். வானத்து நிலவும் ஆடுகிறது. கோள்களும் நாள்களும் ஆட, மகாலட்சுமியும் ஆடுகிறாள்.
வெறுமே மகாலட்சுமி என்று சொன்னால் ஆயிற்றா? என்ன இருந்தாலும், முருகனுக்கு மாமியார் ஆயிற்றே! திருமாலின் கண்ணீர்த் துளிகளிலிருந்து உதித்த அம்ருதவல்லியும் சுந்தரவல்லியும் தாமே தெய்வானையும் வள்ளியும் ஆனார்கள். ஆகவே, திருமகளும் திருமாலும் முருகனுக்கு மாமியாரும் மாமனாரும் ஆகிறார்கள். தாமரை மலராலான திருமகள் ஆடுகிறாள்; அவள் ஆடுவதைப் பார்த்த நெடியவரான திருமால் தாமும் ஆடுகிறார்.
மயிலும் ஆடுகிறது
அப்பா அம்மா ஆடினால்கூடப் பாதகமில்லை; மாமனாரும் மாமியாருமே ஆடிவிட்டால் முருகனார் என்னதான் செய்யமுடியும்? மாப்பிள்ளையும் ஆடிவிட்டார். மயில் ஆட, மயில்மீதான முருகனும் ஆடிவிட்டார்.
“கதை விடாத தோள் வீமன் எதிர் கொள் வாளியால் நீடு
கருதலார்கள் மாசேனை பொடியாக
கதறு காலிபோய் மீள விஜயன் ஏறு தேர்மீது
கனக வேதக் கோடூதி அலைமோதும்
உததி மீதிலே சாயும் உலகம் மூடு சீர்பாத
உவணமூர்தி மாமாயன் மருகோனே
உதய தாம மார்பான பிரபுட தேவ மாராஜன்
உளமும் ஆட வாழ் தேவர் பெருமாளே”
கதாயுதம் அகலாத தோளைக் கொண்ட அர்ஜுனனின் அம்புகளால் வெல்லப்பட்டவர்களின் மிகப் பெரிய சேனை தவிடு பொடியாவதற்கு உதவியவரும், கதறிக் கொண்டு சென்ற பசுக்களைக் குழலூதி மீட்டவரும், அர்ஜுனன் தேர்ச்சாரதியாகி, தங்க நிறத்ததான வேத ஒலி தருகிற பாஞ்சஜன்யச் சங்கை முழங்கியவரும், அலைகள் செறிந்த பாற்கடலில் சயனிப்பவரும், உலகையே தமது பாதங்களால் மூடியவரும், கருடனை வாகனமாகக் கொண்டு ஊர்பவரும், மாமாயனுமான திருமாலின் மருமகனே என்று முருகப்பெருமானை விளிக்கிறார் அருணகிரியார்.
இவ்வளவும் திருமாலுக்கானவைதாமே, முருகனுக்கு இல்லையே என்கிறீர்களா? இப்படிப்பட்ட திருமாலே ஆடுகிறார் என்றால், மாப்பிள்ளை முருகனும் ஆடவேண்டும் என்னும் மறைமுகப் பொருளோ என்னவோ
எப்படியோ இளையனாரான முருகனார், மயில்மீது ஆடிக்கொண்டே கம்பத்தில் தோன்றிவிட்டார். மாமனான மாயோன், நரசிங்க அவதாரத்தின்போது கம்பத்தில் தோன்றியதை எண்ணினாரோ என்னவோ, தாமும் கம்பத்தில் காட்சி கொடுத்துவிட்டார்.
ஒற்றைப் பாடல், சம்பவம் என்னவோ முருகனை வரவழைப்பது என்னும் ஒற்றை நோக்கு; ஆயின், எத்தனை எத்தனை அழகுகள்! குழந்தைக்குச் சோறூட்டவும், குழந்தையை நடை பழக்கவும், பற்பல கதைகளைக் கூறி தாய் ஆட்டம் காட்டுவதைப் போல், முருகச் சேயோனை ஆடச் செய்யவும் ஆளச் செய்யவும், அருணகிரியின் தாயுள்ளம் எப்படியெல்லாம் செயல்படுகிறது
இப்படிப் பாடினால் யாருக்குத்தான் ஆடத் தோன்றாது? சொற்களும் ஆடுகின்றன, சொற்களை வாசிக்கவும் வாசித்துப் பாடவும் செய்கிற அடியார் உள்ளங்களும் ஆடுகின்றன அல்லவா
★★★
உய்யும் பொருட்டுன் திருப்புகழை
உரையே னந்தோ வுரைக்கடங்காப்
பொய்யும் களவு மழுக்காறும்
பொருளாக் கொண்டேன் புலையேனை
எய்யும் படிவந் தடர்த்தியமன்
இழுத்துப் பறிக்கி லென்னேயான்
செய்யும் வகையொன் றறியேனே
தென்பால் தணிகைச் செஞ்சுடரே.
உரை : தென்னகத்துத் திருத்தணிகையில் எழுந்தருளும் செழுஞ்சுடராகிய முருகப் பெருமானே, உய்தி பெறும் பொருட்டு உனது திருப்புகழை ஓதுவதை விடுத்துச் சொல்லி முடியாத பொய்யும் களவும் பொறாமையுமே பொருளாகக் கொண்டு வாழும் புலைத்தன்மை யுடையவனாகிய என்னை நிலத்தில் தளர்ந்து விழும்படிப் பற்றி நெருக்கி இழுத்து நமன் உயிரைக் கவருங்கால் யான் செய்யத்தக்கது யாது? ஒன்றும் அறியாமல் மயங்குகிறேன், காண்.
— வள்ளலார்

