திருப்புகழில் முருகனை அடைய அருணகிரியார் பல்வேறு வழிகளை வடிவமைத்துள்ளார். அவற்றுள் நான்கு நிலைகள் மிக முக்கிய பங்கை வகிப்பன. 1. நாமம், 2. திருப்புகழ், 3. தலம், 4. அடியார் வாழ்வு. இவை நான்கையும் தெரிந்து கொண்டால் திருப்புகழை ஓரளவு தெரிந்து கொண்டதாக மன நிறைவு ஏற்படும்.
இந்நான்கிற்கும் உள்ள ஒற்றுமைக் கூறுகள்:
- மாதர் இன்பம் தடையாய் இருத்தல்.
- நான்கினாலும் உய்வு பெறலாம்.
- நான்கிலும் தவநிலை உண்டு.
- நான்கையும் எவர் கடைபிடிக்கிறாரோ அவர்கள் உள்ளத்தே முருகன் வாழ்தல்.
இறுதியில் தவநிலையில் நின்று உய்வு பெறுதல். (நிணமொடு குருதி - திருப்பாதிரிப்புலியூர்)
‘நவதொளை யுடைய குரம்பையாம் இதில்
நிகழ்தரு பொழுதில் முயன்று மாதவம் உய ஓரும்
உணர்விலி செப முதல் ஒன்றுதான் இலி
நிறையிலி முறையிலி அன்பு தானிலி
உயர்விலி யெனினும் என் நெஞ்சு தான் நினைவு அழியாமுன்
ஒரு திரு மரகத துங்க மாமிசை
யறுமுகம் ஒளிவிட வந்து நான்மறை
உபநிட மதனை விளங்க நீயருள் புரிவாயே!’
திருப்புகழ் ஒரு ஞானக் களஞ்சியம். அந்தக் களஞ்சியத்தை அடையாளம் கண்டு யார் அனுபவிக்கிறார்களோ, அவர்கள் பிறவியின் பயனைத் தாமாகவே உணர்வர்.
இத்திருப்புகழில், ‘மாதவம் உய ஒரும்’ என்கிறார்.
‘ஆறுமுகம் ஒளிவிட வந்து’ என்று குறிப்பிடுகிறார்.
திருப்புகழை முடிக்கின்ற பொழுது, இரண்டையும் நினைவு படுத்துவார். இப்படி உள்ள திருப்புகழ் பாடல்கள் நிறைய உள்ளன. திருப்புகழின் உள்ளே நுழைவார்க்கு அந்த அமுதம் காத்திருக்கும்.
‘அமலைமுன் அரிய தவம் செய் பாடல்
வளநகர் மருவி அமர்ந்த தேசிக
அறுமுக குறமகள் அன்ப மாதவர் பெருமாளே!’
'அறுமுக குறமகள்' என்று ஏன் கூறினார் எனில் (கரியூரி அரவம் அணிந்த மேனியர்) எனும் திருவருணைத் திருப்புகழில்,
‘அறுமுக வடிவையொழிந்து வேடர்கள்
அடவியில் அரிவை குயங்கள் தோப்புய’
என்பதனால், இந்த இடத்தில் அவ்வாறு கூறினார்.
'அறுமுகம் ஒளிவிட வந்து நான்மறை
உபநிடத மதனை விளங்கள் நீயருள்'
என்று கேட்டது எவ்வாறெனில், (காமாத்திரமாகி - எனும் விராலி மலை) திருப்புகழில்,
'சீகார்த்திகை யாய அறுவகை மாதாக்கள் குமாரன் எனவெகு
சீராட்டொடு பேண வடதிசை கயிலாக்
கோமாற்கு உபதேச உபநிட வேதார்த்த மெய்ஞ்ஞான நெறியருள்
கோதாட்டிய ஸ்வாமி யெனவரும் இளையோனே!
என்பதால் தனக்கும் அருள் புரிவாயே' என்றார்.
இனி நாமங்கள் பற்றி, அதன் வகை, சிறப்பு, பயன் முதலான நிலைகளைப் பார்க்கலாம். நாமம் என்பது பல பொருள்களைக் குறிக்கும். ஒரு சொல்லாக அருணகிரியார் திருப்புகழில் பயன்படுத்தியுள்ளார்.
இருப்பினும், பெயரளவில் முருகனைக் கூறும் விதத்தில் அவர் கையாண்ட முறைகளைச் சுருக்கமாக பார்க்கலாம். நாமத்திற்கும் புகழுக்கும் வேறுபாடு உண்டு. நாமம் பெயரைக் கூறுவது. புகழ் பெருமையைக் கூறுவது.
பெயரைக் கூறும் முறை:
(நெடிய வடகுவடு) - பொதுத் திருப்புகழ்.
மொகுமொகு என மதுகரம் முரல் குரவணி
முருகன் அறுமுகன் என வரவன பெயர்
முழுதும் இயல்கொடு பழுதற மொழிவதும் ஒருநாளே
புகழைக் கூறும் முறை:
(கொம்பனையார்) - திருச்செந்தூர் திருப்புகழ்.
உம்பர்கள் சுவாமீ நமோநம எம்பெருமானே நமோநம என நாளும்
ஒண்கொடி மோகா நமோநம
உன்புகழே பாடி நான் இனி, அன்புடன் ஆசார பூசைசெய்ய புரிவாயே!
உய்ந்திட வீணாள் படாது அருள்.
பூசை முறை கூறும் விதம்:
(அம்புலி நீரை - திருவானைக்கா)
‘அன்புடன் நாவில் பாவது சந்ததம் ஓதிப் பாதமும் அணியாமல்
அங்கையினால் நின் பூசையும் அணியாமல் என்று கூறுகிறார்.
நாமம் எனும் சொல்லை மட்டும் கையாளும் முறை:
1. இதயம் மிக வாடி உடைய பிளை நாத கணபதி எனும் நாமம் முறை கூற.
(விடம் அடைசு வேலை - கணபதிகாப்பு)
சிவாய எனும் நாமம் ஒரு காலும் நினையாத
திமிராகரனை வா என்று அருள்வாயே (அவா மருவினா - சுவாமி மலை)
காலையில் எழுந்து உன் நாமம் மொழிந்து
காதில் உமை மைந்த என ஓதி (மாலை தனில் வந்து - கும்பகோணம்)
கூப்பிட்டு உசா அருளி வாக்கிட்டு
நாம மொழி கோக்கைக்கு நூல் அறிவு தருவாயே (கார்க்கொத்த மேனி – பாக்கம்)
கடக்கப்படும் நாமமான ஞானமது என்று சேர்வேன்
(வனப்புற்றெழு - திருப் பூக்கொளியூர்) எனும் பொருளில் வந்துள்ளது.
'பூற்பூதம் எனும் நாம அற்ப நிலையாத
பொய்குழல்....' (திருச்செங்கோடு)
இந்த இடத்தில், ‘நாம’ எனும் சொல் ‘பேர்’ எனும் பொருளில் வந்துள்ளது.
இந்த உடம்பு நீர்க்குமிழி போன்று அழியக் கூடியது.
அற்ப - உடலின் இழிவை உணர்த்தியது.
நீர்க் குமிழிக்கு நிகர் என்பர் யாக்கை எனச் சான்றோரும் கூறுவர்.
(இல்லையென நாணி – வெள்ளிகரம்)
எவ்வகையும் நாமம் கவியாகச் சொல்ல அறியேனை...
இந்த முறையிலும் உன்னுடைய திருநாமங்களைப் பாடலாக அமைத்துச் சொல்லத் தெரியாத என்னை...
(வான் அப்புகு - பொது)
‘ஞானச் சித்திச் சித்திர நிக்கத் தமிழால் உன்
நாமத்தைக் கற்றுப் புகழ்கைக்குப் புரிவாயே!
ஞானத்தமிழ் - (ஊனத்தசை தோல்கள் - சீகாழி)
‘சேனக் குரு கூடலில் அன்று ஞானத் தமிழ்
(பெருக்க உபாயம் - திருத்தணிகை)
‘ஞானத்தமிழ்த்ரயம் நீடு நூல்கள் பகர்ந்து’
(கொக்குக்கு ஒக்க - காஞ்சிபுரம்)
‘சிக்கற்று உட்டுக் கருணைச் சுத்தச் சித்தித் தமிழை
திட்டத்துக்குப் புகலப் பெறுவேனோ?’
சித்ரத் தமிழ் - (பகல் மட்க - பொதுத் திருப்புகழ்)
‘இகல் வெற்றிச் சத்திக் கிரணமும்
முரண் நிர்த்தப் பச்சைப் புரவியும்
இரவிக்கைக் குக்குடத் துவசமும் மறமாதும்
இடை வைத்துச் சித்ரத் தமிழ்கொடு
கவி மெத்தச் செப்பிப் பழுதற
எழுதிக் கற்பித்துத் திரிபவர் பெருவாழ்வே!
(பஞ்சு சேர் - கும்பகோணம்)
‘செஞ்சொல் சேர் சித்ரத் தமிழால் உன்
செம்பொன் ஆர்வத்தைப் பெறுவேனோ!
‘பாவ வினையற்று உன் நாம நினை புத்தி
பாரில் அருள் கைக்கு வரவேணும்’
(தோடு பொருமைக்கண் - பொது)
தேடற்கொணா நிற்கும் வேடத்தர் தாம்வைத்த
சேமத்தின் நாமத்தை மொழிவோனே! (தோடுற்ற காதொக்க - பொதுத்திருப்புகழ்)
தேடற்கொணா நிற்கும் வேடத்தர் என்றது. சிவனைக் குறித்தது. 'மாலறியா நான் முகனும் காணா மலயன்' என்றார். வேடத்தார் - தான் எடுத்துக் கொண்ட வடிவம். காணும் அடியார்களுக்கு வந்தவர் இவர் தான் என்ற உண்மை அறியாத வடிவம் எடுத்தல்.
சிவன், அழகு மேனியாய் நின்ற கோலமும் இவ்வாறே. இத்தகைய பெருமான், தன் அடியார்களுக்குப் புதை பொருளாக வைத்த சொத்து. பஞ்சாட்சரமாகிய ஐந்தெழுத்து நாமம். வேண்டுங் காலத்து எனும் சொல்லாட்சியை இந்த அளவில் நிறுத்தி, முருக நாமங்களின் சிறப்பையும் பெருமையையும் காண்போம். ‘மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்’ (கந்தரலங்காரம்)
- நாமத்தின் சிறப்பு
- நாமத்தைச் சொல்வோர்க்குக் கிடைக்கும் சிறப்பு.
- நாமம் கூறுவோரை ஏன் வணங்க வேண்டும்?
- நாமத்தைச் சொல்லும் முறை.
- நாமத்தைக் கூறுதல் வீண் போகாது.
- ஒவ்வொரு நாமத்திற்கும் ஒரு தனித்தன்மை உண்டு என்பதை விளக்குதல்.
- வினை போக்கும் மருந்தாக நாமம் விளங்குதல்.
- அவிரோதம் பெறுதற்கு அடியார்களோடு சேர்ந்து நாமத்தைக் கூறுதல்.
- திரிகரணை சுத்திபெற நாமத்தைக் கூறுதல்.
- 'கடவுள் நாமம் கற்றல் நற்றவம்' எனும் ஞானசம்பந்தர்
- அருவாக்கை அனுபவித்தல்.
மிக அற்புதமான பகுதி. அருணகிரியார் நாமத்தைக் கூறும் விதங்கள்.
அன்புறச் சொல் - எகினினம்பழி - (திருப்பந்தனைநல்லூர்)
............ வேசியர் வலை வீசும்
அகித வஞ்சக பாவனையால் மயல்
கொடு விழுந்திட ராகமும் நோய் பிணி
அதிகமும் கொடு நாயடியேன் இனி உழலாமல்
அமுத மந்திர ஞானோபதேசமும்
அருளி அன்பூறவே முருகா என
அருள் புகுந்திடவே கழலார்கழல் அருள்வாயே
ராகம் - ஆசை, நோய் - வந்து போகும் நோய், பிணி - நீடித்து நிற்கும் நோய்கள்.
அமுத மந்திரம் - ஆறெழுத்து மந்திரம் (சரவண பவ) ஞானோபதேசம் - முருகன் தந்த அருள் உபதேசம்,
இப்பகுதி, திருவடிவப் பேற்றை வேண்டுகிறார். எவை நீங்க வேண்டும், எவை பெற வேண்டும், எவ்வாறு
சொல்லவேண்டும் என்பதைக் கூறும் பகுதி.
அடியார்களோடு சேர்ந்து சொல் - (நீல முகிலான)
'காலனது நா வரவ வாயிலிடு தேரையென
காயமறு வாவி விழ அணுகா முன் காதலுடன் ஓதும் அடியார்களுடன் ஆடியொரு கால் முருகவேள் எனவும் அருள்தாராய் எமபய நீக்கம் உயிருள்ள போதே நாமத்தைக் கூறுதல். (எருவாய் கருவாய்) 'ஒருகால் முருகா பரமா குமரா உயிர்கா என ஓத அருள்தாராய்' (காதோடு தோ) ............. மாதரொடு கூடி மயல் படுவேனே நானாரு நீயெவன் எனாமல் எனது ஆவிகவர் சீர் பாதமே கவலை யாயுமுனவே நிதமும் நாதா குமரா முருகா எனவும் ஓத அருள் புரிவாயே! (நசையொடு தோலும்) ‘விழும் அடியார் முன் பழுதற வேள் கந் தனும் என ஓதும் விறல் தாராய்’
அமுது சொல் - (விரகற நோக்கியூம்)
'விரகற நோக்கியும் உருகியும் வாழ்த்தியும்
விழிபுனல் தேக்கிட அன்புமேல்மேல்
மிகவும் இராப்பகல் பிறிது பராக்கற
விழைவு குரா புனை யும் குமார
முருக சடாட்சர சரவண கார்த்திகை
முலைநுகர் பார்த்திப என்றுபாடி
மொழி குழறாத் தொழுது அழுதுஅழுது ஆட்பட
முழுதுமலாப் பொருள் தந்திடாயோ!'
(முழுதுமலாப் பொருள் – உலகப் பொருள் யாவற்றையும் கடந்த பொருள்)
உய்வு ஏற்பட – (அந்தோ மனமே)
வந்தோம் இதுவே கதி யாட்சியும்
இந்தா மயில் வாகனர் சீட்டிது
வந்து ஆளுவம் நாம் என வீக்கிய சிவநீறும்
வந்தே வெகுவா நமை யாட்கொளு
வந்தார் மதம் ஏது இனிமேற் கொள
மைந்தா குமரா எனும் ஆர்ப்பூ உய மறவாதே!
மதம் – மகிழ்ச்சி, (காதலி சொல்லில் பிறக்கும் உயர்மதம் – நான்மணிக்கடிகை, வ.சு.செ. அவர்கள் இவ்வாறு
காட்டுவார். மதம் – ஆணவம் என்றும் கொள்ளலாம். உய – உய்ய – ஈடேற,
உருகிச் சொல் – (அலகில் அவுணரை)
அலகில் அவுணரைக் கொன்ற தோளென,
மலை தொளை யுருவச் சென்ற வேல் என,
அழகிய கனகத் தண்டை சூழ்வன – புண்டரீக
அடியென முடியில் கொண்ட கூதளம் என, வன சரியைக் கொண்ட மார்பென,
அறுமுகம் என, நெக்கு என்பெலாம் உருக அன்புறாதோ
- அறுமுகம் என, நெக்கு என்பெலாம் உருக அன்புறாதோ!
- நாமம் கூறுவது வீண் போகாது - மாண்டார் எலும்பு)
- வேண்டாமை ஒன்றை அடைந்து உள
- மீண்டாறு நின் சரணங்களில்
- வீழ்ந்து ஆவல் கொண்டு உருகு அன்பினை உடையேனாய்
- வேந்தா, கடம்பு புனைந்தருள்
- சேந்தா சரண் சரண் என்பது
- வீண் போமது ஒன்றல என்பதை உணராதோ!
- நாமம் கூறுதலே தொண்டு என்று எண்ணு (சங்குபோல்)
- 'துன்பநோய் சிந்த நல் கந்தவேள் என்று உனைத்
- தொண்டினால் ஒன்றுரைக்க அருள்வாயே?
- மனத்தில் நினைத்து நாமத்தைக் கூறுதலே
- தமக்கு வாழ்வு என்று எண்ணு(ஒழுகு ஊன்)
- 'பரிவால் உளத்தில் முருகா எனச் சொல்
- பகர் வாழ்வு எனக்கும் அருள்வாயே! (தெரிவை மக்கள்)
- பழுதில் நிற்சொல் சொல்லி எழுதி நித்தம் உண்மை
- பகர்வதற்கு நன்மை தருவாயே!(படிதனில் உறவெனும்)
- கதி தரு முருகனும் என நினைபவர்
- கற்பில் புக்கு அறிவொக்கக் கற்பது தந்திடாயோ!
- (பிரமனும் விரகொடு)
- 'மரகத மயில்மிசை வரு முருகனும் என்
- வாழ்க்கைக்கு ஓர் அன்பும் தருவாயே!'
- செல்லும் இடங்களில் கந்தா எனும் நாமத்தைச் சொல்.
- 'சென்றே இடங்கள் கந்தா எனும்பொ
- செஞ்சேவல் கொண்டு வரவேணும்'
- மனதில் தங்க குகநாமத்தைக் கூறு.
- (சருவி இகழ்ந்து)
- .................. குகன் என்பவர்
- மனதினிலும் பரிவொன்றி யமர்ந்தருள் பெருமாளே! (குருதி சலந்தோலும்)
- 'கமல மலர்ந்தேறும் குகன் எனவும் போது உன்
- கருணை மகிழ்ந்தோதும் கலைதாராய்!
- இதயம் எனும் தாமரை மலரில், விளங்கும் குகனே! என்று உன்னை அழைக்க கலை
- இதயம் எனும் தாமரை மலரில், விளங்கும் குகனே! என்று உன்னை அழைக்க கலைஞானத்தைக் கொடுமுருகா! (புகரபுங்க - திருச்செந்தூர்)
‘தகரத் தந்தச் சிகரத்து ஒன்றித்
தட நற் கஞ்சத்து உறைவானே!'
- தகர வித்தை என்கிற வேத சிரோ முடியாகிய ப்ரும்ம ஸ்தானத்தில் பொருந்தி, நல்ல இருதய கமலம் என்னும் இடத்தில் உறைவோனே!
தகரம் - இருதயத்தின் உள்ளிடம்
தகர வித்தை - இறைவனைத் தகராகாசத்தில் வைத்துத் தியானம் செய்யும் முறையை உணர்த்தும் வித்தை
இன்னும் விளங்குவதற்கு, பாம்பன் சுவாமிகளின், 'தகராலய ரகசியம்' எனும் நூலைப் படித்து அறிந்து கொள்ளலாம்.
நிறைவு :-
நூல் வடிவத்திற்காக உள்ள இத் தலைப்பை கட்டுரைக்காக என் சிற்றறிவிற்கு எட்டிய வகையில் சுருக்கித் தந்துள்ளேன்.
நன்றி கூர்தல் :-
விழா மலரை வெளியிடக்கூடிய மணி மண்டப அறங்காவலர் குழுவினருக்கும், பொருளாலும் உடலாலும் உழைப்பை நல்கிய அடியார்களுக்கும் மனமொழி மெய்களால் திருப்புகழ் வாழ்வகத்தின் சார்பாக நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
★★★
Lord muruga is the favourite deity of the Tamil's.He is known by many names.Muruga means beauty. He is supposed to be the embodiment of beauty. He is also supposed to be the commander in chief of the Army of Devas. He had established 6 military camps covering the entire Tamil Nadu for the purpose of fighting and eliminating the Evil forces.There are millions of devotees of Lord Muruga and as to be expected there were many poetic compositions by his devotees. The most important of them is Arunagiri's Thirupugazh.Thirupugazh is a beautiful musical composition which brings out the manifold divine qualities of Lord Muruga.
Dr. C. SUBRAMANIAM, Former Finance minister and Governor of Maharashtra.

