“தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின்
நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர்
ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ
ஓடிப் போம்நம(து) உள்ள வினைகளே!”

என்று அப்பர் பெருமான் போற்றிப் பரவும், திருவண்ணாமலையில் வாழ்ந்து, திருமுருகப் பெருமானின் திருவருளைக் குறைவறப் பெற்று, அம்முருகப் பெருமானை திருப்புகழ், கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம் முதலிய பனுவல்களால் பாடிப் பரவி,

“வாக்கிற்கு அருணகிரி”

என்று பெயர் பெற்றவர் நம் அருணகிரிப் பெருமான். அவர் பாடியருளிய 'கந்தர் அலங்கார' நூலின்கண் வரும் ஒரே ஒரு திருப்பாடலை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம். அப்பாடல் இது.

“வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க் கென்றும் நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்கள் நுங்கட்கிங்கன் வெய்யிற் கொதுங்க உதவா உடம்பின் வெறுநிழல்போல் கையிற் பொருளும் உதவாது காணும் கடைவழிக்கே!” (கந்தர் அலங்காரம்-18)

இப்பாடல் நுவலும் பொருளாவது யாதெனில்,

“வெயில் நேரத்தில் ஒதுங்கி நிற்க நிழலைத் தேடுவோம். அந்நேரத்தில் நம் உடம்பின் நிழலில் ஒதுங்கிநிற்க நம்மால் முடியுமோ? முடியாது! அதே போன்று. மரணத் தறுவாயில், நம் ஆன்மா புறப்பட்டுச் செல்லும் இறுதிவழிக்கு நாம் தேடி வைத்த பொருள் நம் உடன் வந்து உதவுமோ? உதவாது! ஆகையால், இப்போதே வேல் ஏந்திய முருகப் பெருமானைத் துதித்து, ஏழையர்க்கு நொய் அரிசியில் பாதியளவாது தர்மம் செய்யுங்கள்” என்பதாம்.

“பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லை” என்பது தெய்வப் புலவர் திருவள்ளுவரின் திருவாக்கு. ஆனால், அப்பொருள் நாம் உலக வாழ்வில் இருந்து புறப்பட்டுச் செல்லும்போது, நம் உடன் வருமோ என்றால் வராது. இதனைப் பட்டினத்தடிகள் அழகாகப் பாடிச் சென்றுள்ளார்.

"வாதுற்ற திண்புயர் அண்ணா மலையார் மலர்ப்பதத்தைப்
போதுற்று எப்போதும் புகலுநெஞ் சே!இந்தப் பூதலத்தில்
தீதுற்ற செல்வமென்? தேடிப் புதைத்த திரவியமென்?
காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே!"

ஒளவைப் பெருமாட்டியும் இக்கருத்தையே சற்று வன்மையோடு கூறுவார்.

“பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைக்கும்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடு விட்டிங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம்” (நல்வழி-பாடல் 22)

பொருள் வெளிப்படை. ஆதலின், பொழிப்புரை தேவையில்லை.

இக்கருத்தினையே,

“கோழிக் கொடியன் அடிபணி யாமல் குவலயத்தே
வாழக் கருதும் மதியிலிகாள்! உங்கள் வல்வினைநோய்
ஊழிற் பெருவலி உண்ணஒட் டா(து)உங்கள் அத்தமெல்லாம்
ஆழப்புதைத்து வைத்தால் வருமோ நும் அடிப்பிறகே!”

(கந்தர் அலங்காரம்-20) என்று அருணகிரியாரும் பாடுவார்.

ஒளவையாரின் கருத்தே அருணகிரிநாதரின் கருத்து என்றாலும், தானும் உண்ணாமல், பிறரையும் உண்ணவிடாமல் ஆழப் புதைத்து வைக்கும் கேடுகெட்ட மானிடரை ஒளவையார் விளித்துப் பாடுகிறார்.

அருணகிரிநாதரோ, கோழிக் கொடி (சேவற்கொடி)யினைக் கையில் ஏந்தியுள்ள முருகப் பெருமானை வணங்காமல், தான் தேடிய செல்வமே தன்னைக் காக்கும் என்ற எண்ணத்துடன் வாழ்பவரை 'மதியிலிகாள்!' என விளித்து, “உங்கள் வல்வினையும், நோயும், ஊழ்வலியும் உயிர்வாழும் போது உங்கள் செல்வத்தைத் துய்க்க விடாமல் தடுக்குமே! என் செய்வீர்கள்? ஆழப் புதைந்து வைத்தால், உங்களுடனே அது வருமோ, வராதே!” என்று இகழ்கிறார்.

அங்ஙனமாயின் தேடி வைத்த செல்வத்தை என்ன செய்வது? இதோ! அதற்கு வள்ளுவர் காட்டும் வழி

‘ஈதல் இசைபட வாழ்தல், அதுவல்ல(து)

ஊதியம் இல்லை உயிர்க்கு!' (குறள்-231, புகழ்அதிகாரம்)

‘ஈதலும், அதனால் வரும் புகழுடன் வாழ்தலும், நம் உயிருக்கு ஊதியம் போன்றது’ என்பதே இதன் பொருள்.

இதனை அடியொற்றியே, நம் அருணகிரிப் பெருமானும், “கூரிய, ஒளி வீசும் வேல் ஏந்தியுள்ள வேலவனை - கோழிக் கொடியை ஏந்தியுள்ள முருகனை வாழ்த்தி, வறிஞர்க்கு, நொய்யரிசியில் பாதியளவாவது தாருங்கள்” என்று பாடியருளினார். மீண்டும்அப்பாடலை நோக்குவம்.

“வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்கள்: நுங்கட்கிங்கன்
வெய்யிற்(கு) ஒதுங்க உதவா உடம்பின் வெறுநிழல் போல்
கையிற் பொருளும் உதவாது காணும் கடைவழிக்கே!”

அருணகிரி நாதரின் அறைகூவலை ஏற்று, வேலவனை வாழ்த்தி, நம்மால் இயன்ற அறம் செய்து ஆறுமுகம் பெருமானின் அருளைப் பெறுவோமாக

★★★

அரசனைக் கண்டு அஞ்சாதிருக்கவும், எமனுடைய போருக்கு அஞ்சாதிருக்கவும், இருண்ட நரகக் குழியில் விழாதிருக்கவும், கொடிய நோய்களால் துன்புறாதிருக்கவும், கொடிய விலங்குகளால் மனம் கலங்காது இருக்கவும், கந்தர் அலங்காரம் படித்து அதன் மெய்ப்பொருள் உணர். (சலங்காணும்) கந்தர் அலங்காரம்.

நன்றி - அருளாளர் அருணகிரிநாதரின் அமுத மொழிகள் - திருப்புகழ் மாமணி வெ. இராமு