உலகில் சக்திவழிபாடு மிகத்தொன்மை வாய்ந்தது. 'சகத்தின் வடிவெல்லாம் பரமேஸ்வரியின் வடிவமே' என்று தக்கயாகப்பரணி கூறுகிறது. உலகின் பலநாடுகளிலும், பலஇனக்குழு மக்களிடையேயும் பரவலாக இருந்து வந்துள்ளது. வேதகாலத்திற்கும் முற்பட்டதாகக் கருதப்பெறும் சக்திவழிபாடு, இன்றுவரையிலும் பலபெயர்களிலும், பல்வேறு உருவங்களிலும் எல்லைக்காவல்தெய்வம்; என்றெல்லாம் வழிபடப்பெறுவது கண்கூடு. சங்கஇலக்கியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலையில் கொற்றவை, காளி, கடல்கெழுசெல்வி, மலைமகள் என்ற பெயர்களில் சக்திவழிபாடு கூறப்பெற்றுள்ளது.

“மலைமகள் மகனே, மாற்றோர் கூற்றே
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ, பழையோள் குழவி”

என்று திருமுருகாற்றுப் படையில் நக்கீரர். சக்தியின் மகனே! முருகா! என்றழைத்துப் பாடுகிறார். சங்ககாலத் தாய்த்தெய்வம் கொற்றவை. மலைமகள், காளி; பழங்குடி மக்களினத்தில் வழிபடப் பெற்றவள் பழையோள் என்றும் வழங்கப் பெற்றவள், உமையாள், துர்க்கை என்று சிவசக்தியோடு ஒன்றிவிட்டதை விளக்குகிறது எனலாம்.

போருக்குச்செல்வோர் வெற்றிபெறும்பொருட்டு கொற்றவையை வழிபடும் மரபு, இன்று அம்மையாக, உலகீன்ற அன்னையாக பார்வதி, சக்தி என்று வழிபடும் நெறியாக மலர்ந்துள்ளது. அன்னை என்றாலும் அவள் நித்தியமான கன்னிகை என்று மறைகள் பேசுகின்றன.

உலகின் பழையநாகரிகங்களில் சிறந்த நாடுகளான எகிப்து, பாபிலோனியா, சுமேரியா போன்ற நாடுகளிலும் இந்தியாவிலும் 'மோடி' என்று இத்தாய்த்தெய்வவழிபாடு கடைப்பிடிக்கப் பெற்றுள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மோடு என்றால் எல்லாரையும் பெற்ற பெரியவயிறு என்று பொருள். அப்பெரியவயிற்றை உடையவள் மோடி. எல்லா உலகங்களையும், உயிர்களையும், பஞ்சபூதங்களையும் போன்று அனைத்தையும் ஈன்றெடுத்ததால் உலகீன்ற அன்னை பெரியவயிறுடையளாகவும், பாலூட்டி வளர்த்தமையால் பெரிய தனங்களை உடையவளாகவும் உருவாக்கப்பெற்ற சுட்டமண்ணினால் ஆன சிற்பங்கள் ஐரோப்பா, மொகஞ்சதாரோ போன்ற நாடுகளிலும் இந்தியாவிலும் கிடைத்துள்ளன. தென்னிந்தியாவில் பிற்காலத்தில் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆதிச்சநல்லூரில் கி.மு.7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உலோகத்தாலான தாய்த்தெய்வச்சிற்பம் கிடைத்துள்ளது.

மோடு என்பதற்கு பெரியவயிறு என்று நச்சினார்க்கினியர் பெரும்பாணாற்றுப்படையில் (458ம் வரி) பொருள்கூறுகிறார். 'மோடேந்துஅரிவை' என்னும் இலாவணகாண்டம்; 'பெருமோட்டாள்' என்னும் தேவாரம்; அருணகிரிநாதரும் தம் திருப்புகழில் அன்னையை 'மோடி' (434) என்கின்றார்.

காவிரி, கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, பவானி போன்ற நதிகளை, கடலை, நாட்டை, மலையைத் தாயாகவே கருதி இன்றும் வழிபட்டு வருகிறோம். கடல்கெழுசெல்வி, காடமர்செல்வி, வனதேவதை, மலையரசி, கொல்லிப்பாவை, பிடாரி, காளி என்றெல்லாம் பெண்மையின் மேலான தன்னலமற்ற தாய்மையைத் தாய் காட்டுகின்ற அறக்கருணைக்கும் மறக்கருணைக்கும் ஏற்பப் பல திருநாமங்களைச் சொல்லி வழிபடுகிறோம்.

அருணகிரிநாதர் சத்தியை வழிபட்டவற்றை இனிக்காண்போம். தேவேந்திரசங்கவகுப்பு, சீர்பாதவகுப்பு, வேல்வாங்குவகுப்பு, பூதவேதாள வகுப்புகளில் தேவியின் பெருமை, புகழ், திருவிளையாடல், அருள்தன்மை ஆகியவற்றைப் பொதிந்து வைத்து வழிபடுகிறார். “அறுசமய சாத்திரப் பொருளோனே” என்று முருகப் பெருமானையும், “ஆறுசமயத்தி" என்று சத்தியையும் போற்றும் சமயசமரசம் கொண்டவர் அருணகிரிநாதர். தாம்பாடிய திருப்புகழ்ப்பாக்களில் முதல்பாதியில் மாதர் மயக்கில் வீழ்ந்த தன்னிலையையும், மறுபாதியில் முருகன் புகழைப்பாடித் தன்னைத் திருத்தி ஆட்கொள்ள வேண்டும் என்ற வேண்டுதலையும் வைத்துப் பாடியுள்ளார். ஆனால் மாறுபட்ட நிலையில் அன்னைசத்தியின் மேல்கொண்ட அளப்பருங் காதலால், சத்தியின் அருளை, வல்லமையை, பெருமையை, முதல்பாதிப்பாடலில் வைத்தும், அத்தகைய அன்னையின் மைந்தனான முருகப் பெருமானையும், அவரது மாமனையும் அடுத்தபாதியில் வைத்துப் பாடியுள்ளார் என்றால், அன்னையின் முழுமையான அருளைப் பெற்றவர் அருணகிரிநாதர் என்பதில் ஐயம் ஏது?

உலகீன்ற அன்னையே, என்னை ஈன்றெடுத்தத் தாய் (653); என்னுடைய ஆணவ மலத்தையும், உலகமயக்கத்தையும், காமமயக்கத்தையும் அறவே தோண்டி எடுத்து வேரறப் போக்கி, ஆசைகளை ஒழித்து ஒன்றுக்கும் பற்றாத என்னையும் ஆண்டுகொண்டருளிய உமை; அவளே பராசத்தி; எனைஈன்ற அன்னை சுந்தரி (647); என் கண்ணில் வளரும் சிவகாமி (668); எனை அருள்வைத்திட்டு ஆண்டநாயகி (482); எனையீன்ற மலைமாது(644); என்னுடைய மாசுசேர்ந்த ஏழு பிறப்பினையும் அறுத்து, இனிப்பிறவா வரம் தந்த உமை (439); அவளே மழலை பயிற்றும் மாது; சத்தி, கௌரி, பச்சை நிறத்தி, சிவை ஆகிய பராசத்தி, சங்கரன் மகிழும் கருங்குயில், என்னுடைய உயிராக விளங்கும் முக்கண்ணி (52) என்றெல்லாம் அன்னை சத்தியின் அருளில் தோய்ந்து பாடியுள்ளார். “அவளைத் தொழுமின் அமராவதி ஆளுகைக்கே” (அபிராமி அந்தாதி) என்று நம்மையும் அன்னையின்பால் வழிப்படுத்துகிறார்.

அருள் பெற்ற களிப்பில், ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றுமில்லாத அன்னைக்கு ஆயிரம் நாமங்களையும், பல உருவ அழகையும் விதந்து விதந்து பாடி மகிழ்கின்றனர். உலகீன்ற அன்னை, சிவபெருமானின் இடப்பாகத்தாள், மலை மகள், பச்சை நிறத்தி, உமை மாது, நாரணி, கௌரி, அம்பிகை, யாமளை, சாமளை, காரணி, மௌனசுந்தரி, ருத்திரி, அபிராமி, பரசிவை, காளி, சூலி, நீலி, வயிரவி, மோடி, ஆயி, குமாரி, வைரவி, கபாலி, சாம்பவி, கலியாணி என்றும் இன்னும் பற்பல நாமங்களைச் சொல்லி வழிபடுகின்றார். சத்தியை முன்நிறுத்தியே “உத்தமிபுதல்வ” என்று விநாயகரையும், “உமை பயந்தகந்தா!” என்று முருகனையும், “மலைமகள் கணவ!” என்று சிவபெருமானையும், பாடுகின்றார். தியாகமே வடிவானது, தன்னலமற்ற தாயின் வடிவம்.

அன்னையின் வடிவைச் சொல்லும்போது ஆகாசரூபி, வேதசொரூபி, நாதவடிவி, வேத முதல் அனைத்தும் அவள் வடிவே என்கிறார். நிறத்தைச் சொல்லும்போது, செம்பொன்மேனியாள், பச்சைநிறத்தி, மரகதப்பொன்மேனி என்கிறார். உடையோ; செம்பொற்பட்டு உத்தரியம்; புலித்தோல் ஆடை; வாகனமோ விடையும் (626); சிங்கமும் (768); சரஸ்வதி, லக்குமி, இந்திராணி, ரம்பை, ஊர்வசி, கிருத்திகைமாதர், சப்தமாதர்; ஆகியோர்; அன்னை சத்தியை எப்போதும் தொழுகின்றனர். சிவபெருமான் பணிவதால் அன்னையின் திருவடிமேல் கொன்றை, கரந்தை மலர்களின் மணம் வீசுகிறதாம்.

அகிலாண்டநாயகி, ஆதி அந்தமுமான சங்கரி, எண்குணபூரணி, மழுவுமைகரத்தி, முயலகபதத்தி, வேதக்கிழாள், முக்கண்ணி என்று அருணகிரிநாதர் கூறும் அன்னையின் நாமங்கள், சத்தியும் சிவமும் ஒன்றே அன்றி வேறில்லை என்பதைக் காட்டுகிறது. “அருளது சத்தியாகும், அரன் தனக்கு, அருளையின்றிச் சிவமில்லை; சிவமின்றிச் சத்தியில்லை” என்ற தத்துவத்தை உணர்த்துகிறது. அதுபோலவே திருமாலே தேவி, தேவியே திருமால் என்றும் கூறுகிறார் அருணகிரிநாதர். இரணியனை சங்காரித்ததேவி, திகிரிமேவுகையாள், அண்டம் உண்டநாரணி, அனைத்துயிரையும் காப்பவள் தேவி என்கின்றார்.

மார்க்கண்டேயனைக் கொல்ல வந்த எமனை சிவபெருமான் இடக்காலால் உதைத்துக் கொன்ற வரலாற்றை அனைவரும் அறிவோம். அப்பனின் இடப்பாகத்தில் உறைபவள் அன்னை பராசத்தி. எனவே இடக்காலால் உதைத்து எமனைக் கொன்று மார்க்கண்டேயனைக் காத்தது அன்னை சத்தியே என்று அன்னையின் அருளையும், வல்லபத்தையும் போற்றுகின்றார் அருணகிரிநாதர்.

“காளவிடம் உ(ண்)ணி, மாதங்கி, வேதஞ்சொல்பேதை, நெடுநீலி, பாதங்களால் வந்த காலன்விழ மோது சாமுண்டி, வஞ்சி, பிரானின் இடப்பாகமங்கை, நடமாடி, அன்பாய் தொழும் மாது” (93)

என்றென்று நாமங்கள் பல சொல்லியும் வாழ்த்துகின்றார். அதுமட்டுமின்றி பிரம்ம கபாலத்தைச் சிவபெருமான் தம் இடக்கையில் ஏந்தியுள்ளார் என்பதால் இடப்பாகம் கொண்ட அன்னையே அதை ஏந்தி நிற்கின்ற வீரத்தாய் “ஆரணர் தலைக்களம் கொண்டவள்” (647); இந்த அண்டத்தையே பெற்றெடுத்ததாய் (456); கற்புத்தப்பாது உலகேழையும் ஒக்கப் பெற்றாள் (489), (751; 760) சூரனைவெல்ல முருகனுக்கு வேல் கொடுத்தவள் அன்னைசத்தி அகிலாண்டேசுவரி. ஈறிலாத அன்னையின் வல்லமைபற்றி இருநாழிநெல்கொண்டு 32 அறங்களைக் காஞ்சியில் வளர்த்தது! மீன் வலைச்சியாக அவதாரம் செய்தது, பெருமானைத் தழுவக்குழைந்தது போன்ற திருவிளையாடல்களையும் தம் திருப்புகழில் பாடியுள்ளார்.

வள்ளி - இச்சாசத்தி; தெய்வானை - கிரியாசத்தி; வேல் - ஞானசத்தி. ஞானமாகிய வேலை அன்னையிடம் பெற்றதால் ஞானசத்திதரன் என்று முருகனுக்கு நாமம் உண்டு. சிவயநம என்ற ஐந்தெழுத்து மந்திரத்தில் 'வ' என்பது அருளை அதாவது சத்தியைக் குறிக்கும். ஆன்மாக்களாகிய நாம் உய்வுபெற திருவருளாகிய சத்தியே துணைநிற்கும். அவ்வாறு அன்னையின் அருள்பெற்றதால் அருணகிரிநாதர் முருகனின் தரிசனம் பெற்றார். நாமும் பெறுவோம்.

பெற்ற மகிழ்வில் அடுக்கடுக்காக அழகுத் திருப்புகழில் அன்னையைச் சந்தம் பொலியச் சொந்தமாக்கிப் பாடுவதைக் காண்போம்.

படி முழுதும் காத்த மால்குலத்தி, முதுமறையின் பேச்சி, நூல் இடைச்சி, பகிர்மதியம் பூத்த தாழ்சடைச்சி - இருநாழி படிகொண்டு அறங்காத்த மாபரைச்சி மணிவயிரங் கோத்ததோள் வலைச்சி பல்கலையும் போற்றும் வேல்விழிச்சி – நெடுரூவி அடுபுலியின் தோல் படாம் உடைச்சி சமரமுகங் காட்டுமால் விடைச்சி அகலிடம் உண்டார்க்கு நேர் இளைச்சி (இளையவள்) - பெருவாழ்வே

குல சயிலத்துப் பிறந்த பெண்கொடி! உலகடையப் பெற்ற உந்தி அந்தணி; குறைவற முப்பத்திண்டறம்புரி - கின்றபேதை குணதரி, சக்ரப் ப்ரசண்ட சங்கரி கணபண ரத்னப் புயங்க கங்கணி குவடு குனித்துப் புரஞ்சுடும் சின – வஞ்சி நீலி குலபவிசித்திரச் சிகண்டி சுந்தரி கடிய விடத்தைப் பொருந்திய கந்தரி, கருணை விழி கற்பகம் திகம்பரி – எங்களாயி கருதிய பக்தர்க்கு இரங்கும் அம்பிகை சுருதி துதிக்கப்படும் த்ரியம்பகி கவுரி - திருக்கொட்டமர்ந்த இந்திரர் - தம்பிரானே.

திருப்புகழில் அருணகிரிநாதர் போற்றும் அன்னையின் நாமங்கள்

அகரந்திரு, பஞ்சவி, பதிவிரதை,
அகிலம் பரந்தவள், காளி, பரதேவதையாள்,
அஞ்சுமுக நீலி, கிரி குமரி, பரமகலியாணி,
அநகை, கிருபாகரி, பரமேஸ்வரி,
அநாதி, குமாரி, பராபரி,
ஆலபோசினி, குலகிரி தரும் அபிராம பரிபுர நடனி,
இமயத்து மயில், மயூரம், பரை,
இமய மாது, கோமளி, பரை மங்கை,
இகமயவள், கோமளை, பவதி,
உமை, சகலகாரணி, பழையவள்,
உமைச்சி, சமயநாயகி, புராரி,
எண்குண பூரணி, சமயமுதல் வீ, புலச்சி,
கங்காளி, சயிலாங்கனை, பூரணி,
கண்டி, சாம்பவி, மகேஸ்வரி,
ககலச்சி, சிலைமகள், மதங்கி,
கன்னிகக, சிவகாமசுந்தரி, மரகத சொரூபி,
காடுகாள், சிவகாமி, மரகத நிறுத்தி,
காமக் பகாட்டக் குலமயில், சிவரூபி, மரகத வடிவி,
அநுதயை, சுடலைக் கோயில் நாயகி, மலைக்கொடி,
அபிநவை, சுடாரணி, மழுவுழை கரத்தி,
அம்பரி, சூரி, மனோகரி,
ஆகாச ரூபி, கலினி, மாகாளி,
ஆர்யை, செனனி, மாணிக்க மினாள்,
திரு சரஸ்வதி, ஞானச் சிவகாமி, மாதவியாள்,
நவசித்தியருள் சத்தி, ஞான முதல்வி, மாமாயி,
நாத வடிவி, தற்பரை, லோகநாயகி,
நாரணி, திருபுராயி, லோகாயி,
நாரி, மாயி, வாகினி,
நாளுமினிய கனி, மாரி, வாமை
நீலக் கோமளை, மாலினி, விபஞ்சி,
நீல சுந்தரி, முக்கன்சகாடி, வேதக் குழலால்,
பச்சை நங்கை, முதுவிய தவிய கிழவி, வேதாள நாயகி,
பச்சை நிறத்தி, முயலக பதத்தி, மூவர்க்கு முன்னாள்,
பச்சை வஞ்சி, படிதரு பதிவிரதை, யாமலி,
பஞ்சமுக வாலை, பத்தினி, வேரிலி.

★★★