அருளாளர் அருணகிரிப்பெருமான் தமிழ்மீது அதிகப்பற்று கொண்டவர் என்பதற்கு பல விதிகளைக் கோர்த்து பாடியுள்ளமை சான்றாகும்.

அவர் தமிழ் மீதுகொண்ட பற்றால், அதனை அரிய தமிழ் என்று அழைத்து மகிழ்ந்தார். அதன் இனிமையின் சிறப்பினையும் பல பாடல்கள் மூலம் எடுத்துக்காட்டுகின்றார்

“படர்புவியின் மீது மீறி வஞ்சகர்கள் ‘

என்று துவங்கும் திருப்புகழில் தமிழல் உள்ள நூல்களைப் பற்றி தெளிவாகத் தெரவிக்கின்றார். அவர் தமிழின் சுவையை எந்த அளவிற்கு நுகர்ந்துள்ளார் என்பது நன்கு

விளங்கும். திருச்செந்தூர் வாழ் திருமுருகா! எனக்கு எல்லா நூல்களையும் கற்கும் திறனை வழங்கினாய். உனது திருவடியை வணங்குகிறேன். அவைகளைக் கற்று உணரக் கூடிய சூழ்நிலையைத் தந்துள்ளாய். எனக்கு குற்றமில்லாத உரையுடன் கூடிய நூல்களையும், தெரிய வேண்டிய சங்க நூல்களையும், வரலாற்று நூல்களையும், காவியங்களையும், அறுபத்துநான்கு கலைகளையும், திருவள்ளுவர் கூறிய பொய்யாமொழியாகிய திருக்குறளையும் ஓதியுணர்ந்து பல சந்தங்களுடன் கூடிய மாலை, மடல், பரணி, கோவை, கலம்பகம், முதலிய அநேக நயங்களைக் சொல்லுகின்ற நூல்களை அகந்தை இல்லாமல் கற்கும் திறனைத் தா என வேண்டுகிறார்.

அருளாளர் அருணகிரிநாதர் அருளிச் செய்தவற்றில் நிரம்ப பிறமொழிச் சொற்கள் கலந்துள்ளன. இதைச் சில ஆராய்ச்சியாளர்கள் வினா எழுப்புவார்கள். உண்மைதான். அக்காலத் தமிழ் இலக்கியங்களில் வடசொல் கலப்பு என்பது கி.பி. 15ம் நூற்றாண்டிலிருந்து காணப்படுகிறது.

அருளாளர் அருணகிரிநாதர் வடமொழியிலும் தென்மொழியிலும் சிறப்புப் பெற்றவர் என்பது யாவரும் அறிந்ததே. அவர் தமிழிலும் வடமொழியிலும் ஆழமான புலமை பெற்றவர் என்பதற்கு பல எடுத்துக்காட்டுகளை நாம் காணலாம். திருமுருகனின் உள்ளம் உருகி பாடும் போது அவர் சந்தக் கவிதைகளைப் பாடி மகிழ்ந்தார். திருமுருகன் மீது அருளுணர்வு ஏற்படும் போது திருமுருகனே எடுத்துக் கொடுத்த அடிகள் என்றே நாம் சொல்லலாம். இது இயற்கையாக நிகழ்ந்திருக்கலாம் என்பதுதான் உண்மை. அருளாளர் தமிழின் மேன்மையை எடுத்துக் கூறுவதில் சிறந்து விளங்கினார் என்பது உண்மையே. உலகில் பேசப்படும் மொழிகளில் காலத்தால் தொன்மையானது தமிழ். இதனை 'முந்து தமிழ்' எனவரும் திருப்புகழில் காணலாம். மேலும் அருளாளர் அருணகிரிநாதர் சொற்களின் இனிமையும், இலக்கியங்களின் பெருமையும், இலக்கண அமைப்புகளின் அருமையும், இத்தன்மையது என்று சொல்வதற்கு இயலாத சிறப்பிற்குரிய செவ்வியல் மொழி தமிழ் மொழி, என்னும் செய்தியை பல திருப்புகழ்ப் பாடல்களில் சுட்டியுள்ளார். எடுத்துக்காட்டாக ‘பகர்தற்கு அரிதான செந்தமிழ்‘ என்னும் தொடரில் காணலாம்.திருமுருகப் பெருமான் எளிதில் வயப்படாதவர் கருணைக்குரியவர். ஆனால் தமிழ் பாடல்களின் மூலமாக வயப்படுகிறார் என்பதை அருளாளர் விளக்குகிறார். எளியவராக அருள் புரிவது அவர் இயல்பு என்று திருப்புகழ் கூறி உள்ளார்.

இதனை 'எத்திடார்க்கு அரிய பாத்தமிழ் கொடு எத்தினார்க்கு எளிய பெருமாளே ‘ என்னும் திருப்புகழ்த் தொடர்களில் விளக்குகின்றார்.இவ்வுலகில் படிக்க வேண்டிய அனைத்து தமிழ் இலக்கண இலக்கியங்களையும் முறையாக பயிலாமல் சில காவிங்களை மட்டும் படித்தவர்கள் ஆர்வத்தினால் கவி பாட முனைவதுண்டு, என்ற போதிலும் அவர்கள் பாடும் தமிழ்ப் பாட்டுகளைக் கூட திருமுருகப் பெருமான் செவியாரக் கேட்டு அருள் புரிவார். இதற்கு காரணம் திருமுருகப் பெருமான் தமிழ் மீது கொண்ட பற்றே எனலாம். இதனால் தமக்கும் முருகப்பெருமானுக்கும் தமிழ் மீது உள்ள பற்றினை ஒரு சேர விளக்குகிறார். திருப்புகழில் அருளாளர் பாடும்போது- ‘சில காவியத் துறைகள் உணர்வோர் படித்த தமிழ் செவியார வைத்து அருளும் முரு கோனே ‘ என்கிறார். முருகப்பெருமான் தமிழ் மீது கொண்ட பற்றினைக் கூறும் அருளாளர் தன் திருப்புகழில் பாடும்போது இவைகளையும் அவர் ஏற்றுக் கொள்கிறார் என்பதை-

'இலக்கணங்களும்,இயல் இசைகளும் மிக விரிக்கும் அம்பல மதுரித கவிதை ஏற்றி செந்தமிழ் விதமோடு புவிமிசை புனைவோனே‘ திருமுருகப் பெருமான் எனக்கு பூமாலையை விட செந்தமிழ் நற்றமிழ் மாலையே சிறப்புடையது என்கிறார்.

அருளாளரின் கவிதைகளில் உள்ள நடை, சந்த அமைப்புகள், தாள வகைகள், இவைகளை ஆராய்ந்து சித்தூர் சுப்பரமணியப் பிள்ளை திருப்புகழ் ஓர் இசை இலக்கியம் என போற்றுகிறார் . ஒரு மொழிக்குச் சிறப்புச் செய்வது அதன் வடிவமே ஆகும். சில வடிவ அமைப்பான சொற்களைப் பார்த்தவுடன் இது எந்நாட்டில் பேசும் மொழி என அறிகிறோம். ஆகவே ஒரு மொழிக்கு வடிவமைப்பு என்பது அதி முக்கியம் ஆகும். இதனை அருளாளர் அருணிகிரிப் பெருமான் தன் திருப்புகழில் சந்தப்பாக்களின் மூலமாக விளக்குகிறார் .

'பணியப் பணியப் பரமர்ப் பரவப் பரிவுற்று ஒரு சொல் பகர்வோஅமைப்பும் தவைகள் கனகம்மா பரிசைப் பழனிக்குமரப் பெருமாளே‘ என்னும் வரிகளில் உள்ள சந்த அமைப்பும், சந்தத்திற்கேற்ற சொல்லாட்சியும் திருப்புகழின் இயலிசைத் திறனுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

(தமிழ் சொற்களில் யாப்பு என்பது அதிமுக்கியம் ஆகும். இது தமிழுக்கு உயிர் கொடுப்பதாகும். அருளாளர் அருணகிரிப் பெருமான் தமிழ்ச் சொற்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.)

அருளாளர் அருணகிரிநாதர் வைணவம் சைவம் என்று வேறுபாடு கருதாது திருப்புகழ் பாடியுள்ளார். நாராயணமூர்த்தி தமிழ் மொழியின் இனிமையில் மிகவும் அன்புடையவரானபடியால் தெளிவுடைய செந்தமிழைப் பயில்வாரது தமிழ்ப் பாடலைக் கேட்கும் பொருட்டு பின் செல்கிறார். திரிகின்றார். இப்பொழுது விஷ்ணு ஆலயங்களில் வடமொழி வேதபாராயணம் அவருக்குப் பின்னே தொடர்ந்து வர அவருக்கு முன்னே தமிழ் மொழியிலுள்ள நாலாயிரப் பிரபந்தம் பாராயணம் போக, அதனைத் தொடர்ந்து நாராயணர் செல்லுகிறார். தமிழின் பெருமைதான் என்னே! இத்தனிச் சிறப்பு வேறு எந்த மொழிக்குத்தான் உண்டு?. இறந்த மகனை உயிர் பெறச் செய்தலும் (அவினாசி திருபுகழ்) எலும்பைப் பெண்ணாக்கியதும் (மயிலை புராணம்) அனலிலும் புனலிலும் பிழைத்திருந்ததும் இத்தமிழ் மொழி அல்லவா? இத்தெய்வீகத் தமிழின் பெருமையை யாரே உரைக்கவல்லார்?

அருளாளர் அருணகிரிநாதர் தமிழ்ச் சொல்லிற்கு இறைவனே செவி சாய்த்து செயல்பட்டார் என்பதை தன் திருப்புகழில் விவரமாகப் பாடுகிறார். காஞ்சீபுர நிகழ்ச்சியில் தமிழ் மொழிக்கு இறைவன் செவி சாய்த்ததும் அரசன் நிலைகுலைந்ததும் பற்றி விளக்குகிறார். இது ஒரு சிறந்த புராணம் ஆகும்.

வயது முதிர்ந்த அடியார் நற்சிந்தனையுடன் திருக்கோவிலில் நற்பணி செய்தார். அவரின் முதுமைக்கு இளமை வழங்கி திருப்பணி செய்ய வேண்டினார். ஆனால் அந்நாட்டு அரசனோ தனக்கும் அந்நிலை வேண்டும் என கேட்க கணிக்கண்ணன் மறுத்ததால் அவரை ஊரை விட்டுப் போ என்றதும், திருமாலிடம் அரசனின் உத்திரவுப்படி நான் செல்கின்றேன், நீயும் புறப்பட்டு வா என்று தன் தமிழ் சொற்களால் பாட திருமாலும் இலக்குமியுடன் சென்றார். நாட்டில் வறுமை வர, தன் தவறை உணர்ந்த அரசன் மீண்டும் அடியார்களை வரவழைக்க அந்த பெருமாளும் உடன் வந்தார்.என்னே தமிழின் பெருமை

“கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டா - துணிவுடைய
செந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்”

என்று செந்நாப் புலவன் கணிக்கண்ணன் பாட திருமால் தன் பைந்நாகப் பாயைச் சுருட்டிக் கொண்டு சென்றான் என்பதனை திருப்புகழில் விளக்குகிறார்.

அருளாளர் அருணகிரிப் பெருமான் தன் நற்றமிழால் ‘பணிகொண்ட துத்திப் படிப்பாய்ச் சுருட்டுப்’ - என்ற அடியில் சுருக்கமாகப் பாடுகிறார். அடுத்து - ‘பழமறைகள் முறையிடப் பைந்தமிழ் பின் சென்ற‘ என்பதில் அவர் திரும்ப வந்ததை விளக்குகின்றார்.

இதில் நுணுக்கமாகப் பார்த்தால் பைந்தமிழ் பயின்றோர் அதிக சக்தி வாய்ந்தவர்கள் என்பது புலனாகிறது.

தமிழ்ச் சொல்லின் வேத வாக்கினைப் பாருங்கள். அரசன் தன் தவற்றை உணர்ந்ததும் மீண்டும் பெருமாளிடம் கேட்க பைந்தமிழ் ஓதுவார் வந்தால் நான் வருகிறேன் என்பதை அருளாளர் அருணகிரிநாதர் - பச்சைப் பசுங்கொண்டலே – இனிய பாவல னுரையினி லொழுகிய கடவுள் – என்கிறார். என்னே தமிழின் சுவை

அருளாளர் அருணகிரிநாதர் திருப்புகழில் தமிழ் மொழிக்கு தனித்தன்மை வழங்கி, தமிழ்த் தொண்டாற்றினார் என்றே நாம் சொல்லலாம். உயிர் என்றும், உயிர் மெய் என்றும், வல்லினம் என்றும், மெல்லினம் என்றும், இடையினம் என்றும், மெய்யுடன் கூடிய அகரமும், உயிருடன் கூடிய எழுத்துக்களை, அவர் விரிவு படுத்தியுள்ளார். இவர் தமிழ் மொழியில் உள்ள இலக்கணச் சுவையை அறிந்து சந்தப்பாடல்களை அமைத்துப் பாடியது அனைவரும் பாரட்டக் கூடியது ஆகும். இக்கட்டுரையில் சில கருத்துகளை மட்டும் பார்த்தோம். இது அளவில் அடங்காத சொல்லோவியம் ஆகும். அருளாளர் அருணகிரிப் பெருமான் சந்தக் கவிபாடும் போது தாளம், இசை, லயம் அறிந்தோம்.

வழி மொழி, சொல் மொழி, எழு மொழி, தீட்சை மொழி, எதுகைச் சொற்கள் , வல்லினச் சொற்கள் என அனைத்தையும் கூறியுள்ளார். அவரின் தனித்தமிழ் யார் அறிவார்? திருமுருகனின் அருட்செல்வமும், தமிழ்ச் செல்வமும், இலக்கணச் செல்வமும், அவருக்குக் கிடைத்தன. இதில் நாம் குறிப்பாகப் பார்க்கும் போது முழுமையான தமிழ் ஞானத்தைப் பெற்றவர் அருளாளர் அருணகிரிநாதர் என்றே நாம் சொல்லலாம்.

அவர் தமிழ் மொழியையும் வளர்த்து சிறப்பித்தார் அதேபோல் தமிழ் மொழியை வளர்த்த சான்றோர்களையும் சிறப்பித்தார் என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

தமிழ் வாழ்க! தமிழ்க் காப்பியங்கள் வாழ்க! தமிழ்ச் சொற்கள் வாழ்க! ! திருமுருகன் திருத்தாள் போற்றி! ! அருளாளர் அருணகிரிதாள் போற்றி!!

★★★

உயிர்காற்றினை உடலில் இயங்கச் செய். மனம் வாக்கு காயம் மூன்றையும் ஒருவழிபடச் செய். உடலிருக்கும் வரை அன்பினை விடாதே. கந்தன் திருவடிகாண தவம் செய். அன்பினை விடாதே. கந்தன் திருவடிகாண தவம் செய்.... யோகியர் போல் விளங்கு.

— (பூரண) திருப்புகழ். நன்றி-அருளாளர் அருணகிரிநாதரின் அமுத மொழிகள் -திருப்புகழ் மாமணி வெ. இராமு