முன்னுரை: செந்தமிழ் நாட்டின் சிறப்புறு தெய்வமான கந்தவேளின் கழல்அடி பரவிய தொண்டர் பெருமகனின் திருக்கூட்டத்தைச் சேர்ந்தவர் அருளாளர் அருணகிரிப்பெருமான். நக்கீரர்தேவர், கச்சியப்ப சிவாச்சாரியார், பகழிக்கூத்தர், குமரகுருபரசுவாமிகள், இராமலிங்க அடிகளார், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், பாம்பன் சுவாமிகள் ஆகியோர் அந்த “அடியார் திருக்கூட்டத்தில்” சிறந்த இடத்தைப் பெற்றவர்கள். அவர்களுக்கு எல்லாம் ஒரு மணிமுடியாகத் திகழ்ந்தவர் அருளாளர் அருணகிரிப்பெருமான் ஆவார்கள்.
அருணகிரிப்பெருமான் அருளிச் செய்த நூல்கள் : அவை 1.திருப்புகழ், 2.கந்தர் அநுபூதி, 3.கந்தரலங்காரம், 4.திருவகுப்பு, 5.கந்தரந்தாதி, 5.வேல்விருந்தம், 6. மயில்விருந்தம், திருஎழுகூற்றிருக்கை இவற்றுள் “கந்தரலங்காரம்” என்னும் ஞானநூலில் காப்புச் செய்யுளோடு சேர்ந்து 101 பாடல்கள் உள்ளன. “கந்தரலங்காரம்” என்ற நூலின் சிறப்பினை 7 பாடல்களில் விளக்கியுள்ளார். கந்தரலங்காரம் என்னும் நூல் முருகப்பெருமானுடைய அலங்காரத்தைக் கூறுவது ஆகும். முருகப்பெருமானின் திருவடி, வடிவம், அவர் வாகனமாகிய மயிலின் சிறப்பு (முருகனுக்கு மயில் வாகனன் என்ற சிறப்புப்பெயரும் உண்டு) படை (வேல்படை), கொடி, (“சேவல்கொடியாயோன்-அமரர் சிகாமணியே” என்றெல்லாம் போற்றப்படுபவர் முருகன்) அவருடைய திருநாமத்தின் சிறப்பு-பெருமை, அழகு போன்றவற்றை விளக்குவது “கந்தரலங்காரம்” எனும் நூலாகும்.
இந்த நூல் முருகப்பெருமனைப்பற்றி, அருளாளர் அருணகிரிநாதர் திருவாய்மலர்ந்தருளிய பிரபந்தங்களில் சிறந்த ஓன்றாகும். இப்பாடல் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த -பிடித்த பாமாலை ஆகும். இந்நூலின் பற்பல அரிய பெரிய-உயர்ந்த - சிறந்த கருத்துக்களைக் கொண்டு விளங்குகின்றது.
- அறம் செய்தலின் அவசியத்தையும், எம பயத்தை நீக்கும் ஆற்றலையும், யாக்கை நில்லாமையும், செல்வம் நிலையாமையும், சிவயோகத்தின் சிறப்பினையும் அடியார்களுக்கு கருணைகாட்டி அவர்களை நல்ல அடியார்களாக ஆக்கியவர்களுக்கு அருள்புரியும் திறத்தினையும் “அடியார்க்கு நல்ல பெருமானாக” திகழ்ந்ததையும் - மேலும் பல உயர்ந்த கருத்துக்களைக் கொண்டு பாடல்களை அருளாளர் அருணகிரிநாதர் இந்நூலில் அமைத்துள்ளார் - எல்லாவற்றிற்கும் மேலாக “தமிழால் வைதாலும் - வைதவரை வாழவைக்கும் கருணைக் கடலாகத்திகழ்பவர் முருகப்பெருமான்” என்று அருணகிரியார் ஒருபாடலில் விளக்கியுள்ளார்.
இந்த ஞானநூலை நாள்தோறும் பாராயணம் செய்யும் அன்பர்களின் உடல் கம்பிக்கவும், உள்ளம் உருகவும், அன்பு பெருகவும், உபதேசம் செய்வதோடு இல்லாமல் பாராயணம் செய்வோர், துன்பம் பலவும் நீங்கி, இன்புற்று எந்தை கந்தவேல்தன் அருளைப்பெற்று நலம் பெறுவர் என்று உறுதியாக எடுத்தியம்புகின்றார் அருளாளர் அருணகிரிநாதர்.
“அலங்காரம்” என்றும் நூற்றில் ஒன்று பாடல் கற்று அறிந்தவர் வேந்தர் தமக்கு அஞ்சார், எமனுக்கும் அஞ்சார். நரகத்தில் புகமாட்டார்கள் நோய் நொடி அவர்களை அணுகாது, துன்பப்படார், விலங்குகளாலும், விடம்தரும் பிராணிகளாலும் தீங்கு அடையார். இந்த நூலின் இறுதியில் 7 பாடல்களில் இந்நூல் படித்தால், பாராயணம் செய்தால், ஏற்படும் நன்மைகளை விளக்குகின்றார் அருணகிரியார்.
- அறம் செய்யவேண்டும், மனத்தை வேறு எங்கும் போகாமல் இறை சித்தனையோடு இருக்க வேண்டும். சினத்தை அடக்க வேண்டும், சும்மா இருக்க வேண்டும், இங்ஙனம் செய்தால் முருகப்பெருமானது திருவருள் தானே வெளிப்பட்டு நமக்கு துணை நிற்கும் என்பதனைக் கீழ்கண்ட பாடல் மூலம் அருணகிரியார் தெளிவுப்படுத்துகின்றார்.
“தடுங்கோள் மனத்தை - விடுங்கோள் வெகுளியைத் தானம் என்றும்
இடுங்கோள் - இருந்த படி இருங்கோள் - எழுபரும் உய்யக்
கொடுங்கோபச் சூருடன் - குன்றம் திறக்கத் - துளைக்கைவேல்
- செந்தமிழில் வைதாரையும் வாழவைப்பான் முருகன் என்பதிலிருந்து அருணகிரிநாதரின் தமிழ்ப்பற்று நன்கு தெரிகின்றது. இவருடைய தேனூறு தமிழுக்கு வாயூரும் சிவகுமாரன் தலங்கள் தோறும் அருணகிரியாருக்கு தரிசனம் தந்து ஆங்காங்கே திருப்புகழ் பாடல்களைப் பெற்று முருகப்பெருமான் உலகினருக்கு உபகரித்துள்ளான். அந்த அழகான பாடலை அருமையாக நமக்கு வழங்கியுள்ள அருளாளர் அருணகிரிப்பெருமானை போற்ற வேண்டும் - இதோ இந்த அருள் பாடல்
விடுங்கோன் - அருள் வந்து தானே உமக்கு வெளிப்படுமே”
“மொய்தார் அணி குழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதாரையும் அங்கு வாழ வைப்போன் - வெய்ய வாரணம்போல்
கைதான் இருபது உடையான் - தலைபத்தும் கத்தரிக்க
எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே”
இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், இவை முத்தமிழானது என்பர் சான்றோர். வைதாரையும் என்ற எச்ச உம்மையால் வாழ்த்தினாரை இயல்பாகவே வாழவைப்பார் என்பது தெளிவாகிறது. “அங்கு” என்ற பதம் மிக அருமையான ஒருவனை, ஒருவன் வையப்பட்ட இடத்தில் அவனுக்கு சீற்றம் எழும். நம் முருகப்பெருமான் எங்கே தமிழால் வைதார்களோ அவர்களை அங்கேயே வாழவைப்பாராம். என்னே முருகனின் கருணை உள்ளம். முருகப் பெருமானின் தந்தையான சிவபெருமானுக்குத் தமிழ் மொழியில் மிகுந்த ஆர்வம். இதனை மெய்ப்பிக்கும் வண்ணம் மதுரை தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்தும் 49 தமிழ்ப்புலவர்களுள் தாமும் ஒரு புலவராக இருந்து தமிழ் ஆராய்ந்தார். திருவாசகத்தினைக் கேட்க விரும்பும் வகையில் மண்சுமந்து, அரசன் கைகளால் அடிபட்டதும், இரவில் திருவாரூரில் பரவை நாச்சியாருக்காக அவரது வீட்டிற்கு இரவு முழுவதும் தூது சென்றதும், “பித்தா” என்று வைத சுந்தரருக்கு ஐராவதம் என்னும் வெள்ளை யானையை அனுப்பியதும் தமிழ்மேல் கொண்ட பற்றின் காரணம் என்பது தெளிவாகிறது.
இவர்தம் கருத்துப் பொழிப்பாக உள்ள விராலிமலைத் திருப்புகழ் பாடலில் மிக அழகாக எடுத்துரைத்துள்ளார். அப்பாடலின் திரண்டகருத்தாக ஆன்மாவானது, ஆணவம் முதலான மும்மலத்தை ஒழித்துத் தெய்வத்தை அடைய வேண்டிய நெறியைக் குறிப்பிடுகின்றார். ஆசைகளும், ஆணவமும் அடங்கப் பெற்றால் அன்றி முருகனை அணுக முடியாது என்றும், முருகன் திருநாமமும், முருகன் பால் பக்தியும் இன்றியமையாதது என்பதை இசைத்தமிழ் பாடல்களால்பாடி உள்ளார் அருணகிரிநாதர். இதோ அவர் பாடிய விராலிமலை திருப்புகழ்ப்பாடலில் அசுரர்களை அழிக்க வேல் விடுத்தருளிய வயலூர் ஆண்டவரே, விராலிமலையில் அருள்பாலிக்கின்ற வித்தகரே, எல்லாம் சிவவடிவமாகப் பார்த்து, சிவயோகத்தில் நிறைவுபெற, சற்குருபரம்பரையோடு சேர எனக்கு அருள்புரிய வேண்டும் என்று அருணகிரியார் வேண்டுவது அப்பாடல்.
“ஐந்து பூதமும்-ஆறு சமயமும்
மந்திரம் வேதம்-புராணம்-கலைகளும்
ஐம்பத்து ஓர் விதமான லிபிகளும்
அண்டர் ஆதி-சரா அசரமும் -உயர்
*வெகுரூப* புண்டரீகனும் மேக நிறவனும்
அந்திபோலும் உருவானும்-நிலவொரு வெயில்காலும்
சந்திரர்-சூரியர் தாமும்-அசபையும்
விந்து-நாதமும்-ஏகவடிவம்
தன் சொரூபம் ஆக உறைவது சிவயோகம்
தங்க ளாணவம்-மாயை கருமம்
மலங்கள் போய் உபதேசக்குருபர
சம்ப்ரதாயமொடு உறு நெறியது பெறுவேனோ
வந்த தானவர் சேனை கெடிபுக
இந்திரலோகம் விபுதர் குடிபுக
மண்டு பூத் பசாப-பசிகெட மயிடாரி
வண் கண் வீரிபிடாரி -ஹரஹர
சங்கரா என மேருகிரி தலை
மண்டு தூள்எழ வேலை உருவிய வயலுரா
வெந்தநீறணி வேணி இருடிகள்
பந்தபாச விகாரா பரவச
வென்றியான சமாதி முறுகுகல் முழைகூடும்
விண்டுமேல் மயில் ஆட - இனியகள்
உண்டுகார் அளிபாட- இதழி - பொன்
விஞ்சு வீசு விரலிமலை உறை பெருமானே'
அருணகிரிநாதர் பல பல உயர்ந்த கருத்துக்களை கந்தரலங்காரம் எனும் ஞானநூலில் சொல்லி இருந்தாலும் அவற்றுள் மிக மிக சிறப்பு வாய்ந்த ஒரு பாடலின் மூலம் முருகப் பெருமானின் திருநாமத்தை ஓதுபவர்களுக்குப் பிறவித் துன்பமும், வறுமைத் துன்பமும் இல்லை என்றும், தனது திருவடியை வணங்குகின்ற நல்ல அடியார்களுக்கு நன்மையையும் தருகின்ற, அடியார் பெருமானாகவும், விளங்குகின்றார் என்பதனை கீழ்க்காணும் பாடல் மூலம் தெளிவுபடுத்துகின்றார் அருணகிரியார் பாடல் மூலம்,
“முடியாப்பிறவிக் கடலில் புகார்-முழுதும் கெடுக்கும்
மிடியால் படியில் விதனப்படார் - வெற்றிவேல் பெருமான்
“அடியார்க்கு நல்ல பெருமான்” - அவுணர்குலம் அடங்க
பெடியாக்கிய பெருமான் - திருநாமம் புகல்பவரே”
கடக்க முடியாத பிறவியாகிய பெருங்கடலில் முருகன் திருநாமம் ஓதுவார்கள்; கடந்து செல்வர் இதனை வள்ளுவப் பெருந்தகையாரும் ஒரு திருக்குறள் மூலம் விளக்கியுள்ளார்.
“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - நீத்தார்
இறைவன் அடி சேராதார்”
இத்தகைய பிறவிப் பெருங்கடலைத் தாண்டுவதற்கு உரிய தெப்பம் முருகப்பெருமானின் திருநாமமேயாகும் என்றும், தரித்தரமானது அல்லது வறுமையானது, மனிதனுடைய வாழ்வை அடியோடு கெடுத்துவிடும். வடிவு-தனம்-மனம்-குணம்-குடி-குலம் முதலிய யாவும் வறுமையால் அடியோடு அழியும். இச்செய்தியை அருணகிரிநாதர் தன் கந்தர் அநுபூதி நூலில் ஒரு பாடல் மூலம் விளக்குகிறார்.
“வடிவும்-தனமும்-மனமும்-குணமும்
குடியும்-குலமும்-குடிபோகியவா அடிஅந்தம் இல்லா அயில் வேல் அரசே
மிடியென்றொரு பாவி-வெளிப்படினே”
வறுமையால் நல்ல சுகங்களைத் துய்த்ததற்கு, இன்மையால் இம்மை நலனும், அறம் செய்வதற்கு இன்மையால் மறுமை நலனும் இன்றி வறுமையாளன் வாடுவான். இதனை வள்ளுவப் பெருந்தகையும் ஒரு குறளில்.
“இன்மை என ஒருபாவி-மறுமையும்
இம்மையும் இன்றி வரும்”.
ஒருவன் மந்திர மருந்துகளின் துணையால் நெருப்பின் மேலும் படுத்துக்கண்ணுறங்கலாம். ஆனால் வறுமைக்கு நடுவில் இருந்து கண்துயில முடியாது என்று மீண்டும் வள்ளுவர் கீழ்க்காணும் குறள் மூலம் தெளிவுபடுத்துகிறார்.
யாதொன்றும் கண்பாடு அரிது”
அடியார்க்கு நல்ல பெருமாள், ஆறுமுகவள்ளல் அடியார்க்கு யாண்டும் என்றும், எப்பொழுதும் நன்மை செய்யும் பரம கருணைக்கடல் ஆவார்.
வேல் கடலை வற்றச் செய்யும் - ஆதலின் வேலாயுதனாரின் திருநாமம் பிறவிக்கடலை வற்றச் செய்யும்.
“நெருப்பினுள் துஞ்சலும் ஆகும்-நிரம்பினுள்
ஆகவே அவருடைய ஆதரவு அடியார்க்கு நல்லபெருமானாக விளங்குகின்ற திருமுருகனின் திருநாமத்தைத் தினமும் துதித்தும், போற்றியும், வறுமை துன்பத்திலிருந்து விடுப்பட்டு, “எந்நாளும் இன்பமே துன்பம் இல்லை” என்ற சான்றோர் வாக்கிற்கிணங்க முருகப்பெருமானை வணங்கி, நல்லவை எல்லாம் பெற்று, வாழ்வில் இனிதே வாழ்வோம். உலகலொம் அருணகிரிப்பெருமானின் புகழ் ஓங்குக
★★★
வருக்கைச் சுளையும் பொருக்கரை மாவும் செழுங்கனி வாழையும் செழுஞ்சுவைக் கன்னலும் ஒருங்குதலை மயங்கிய அரும் பெருங் கலவையின் அருஞ்சொல் வழக்கமும் திருந்திய நடையும் வண்ண வேற்றுமையும் தண்எனும் ஏக்கமும் ஒன்றி நிரம்பிய குன்றாத் திருப்புகழ்!
— மறைமலை அடிகள்
'பலாச்சோலை போல் ஒவ்வொரு சொல்லும் அடைவே பதிந்து நிற்றலும், மாங்கனி போல் எல்லா சொல்லும் திரண்டு ஒரு பொருள் மேலவாய் அனிமை பயந்து நிற்றலும், வாழையங் கனி சீப்புச் சீப்பாய் பிரிந்து காணப்படுதல் போல செய்யுள் தோறும் வண்ணங்கள் வேறு வேறாய் பிரிந்து இனி திகழ்தலும்,கரும்பின் பாகு போல் அவ்வண்ணங்கள் குளிர்ந்த ஓசையின் வாய் ஒழுகுதலும் நால்வேறு உவமைகளால் குறித்தார்‘ என்று திருப்புகழ் முக்கனி போல் திகழ்கிறது என்று மகிழ்கிறார் மறைமலை அடிகளார்

