திருமதி. உமாமகேஸ்வரி, சென்னை
செந்திலாண்டவன் அடிமை
'சத்‘தெனச் சொல்லும் தாவில் சிவத்திலும்
'சித்‘தெனச் சொல்லும் தேவியிடத்திலும்
புத்திரப் பெயர் மூண்டு இலகு ஆனந்த
வஸ்துவின் கழல் வாழ்த்தி வணங்குவோம்
மாற்ற மனங்கழிய நின்ற மறையோன், பூங்கோதை இடப் பாங்கு உறையும் முக்கட் பரஞ்சோதி, எவ்வுயிர்க்கும் பின்ன மற நின்ற பெருமான். பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும் தஞ்சமென நிற்கும் தனிப்பொருள், வெள்ள வெற்பின் மேல் மரகதக் கொடியுடன் விளங்கு தெள்ளு பேரொளிப் பவள வெற்பு என அருளாளர்களால்
துதிக்கப்பெற்ற ஐம்முகச் சிவம், தனது அதோமுகமும் தந்து திருமுகங்கள் ஆறாகித் தோற்றுவித்த செல்வச் சிறுவன் அன்றோ! நம் பதிணென்நயனன்.
“குஞ்சர மாமுக விக்கிநப்ரபு
அங்குச பாசக ரப்ரசித்தனொர்
கொம்பன்ம கோதரன் முக்கண்விக்ரம ...... கணராஜன்”
என்று ஆனை முகத்தோனைக் குறிப்பிடுகிறார் அருணகிரிநாதர்.
அபிராமிபட்டரும் 'நயனங்கள் மூன்றுடை நாதனும்' என சிவத்தையும்.'முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே' என்று சக்தியையும் புகழ்கிறார். அம்மையும்,' அப்பனும் 'கஜானன சோதரனும் முக்கண்ணர்களே என்று தெளிந்தபின், கரிபின் வரு குழகனும் முக்கண்ணனே என்ற உண்மையும் புலப்படுகிறது.
“சிலை நுதல் - 420 - திருவருணை
கணகண கட்கட் கணின்க ணென்றிட ...... நடமாடுங்
கருணைய னுற்றத் த்ரியம்ப கன்தரு முருக!”
கணகண கட்கட் கணின்கண் என்ற ஒலி செய்ய நடனம் செய்கின்ற கருணைப் பிரான், (சூரியன், சந்திரன், அக்கினி ஆகப் பொருந்திய) முக்கண்ணன்பெற்ற முருகனே எனவும்
“புவனத் தொடு” - 558 - திருச்சிராப்பள்ளி
"சிவனுத் தமனித் தவுருத் திரன்முக் கணனக் கன்மழுக் கரனுக் ரரணத் தரிபுரத் தையெரித் தருள்சிற் குணனிற் ...... குணனாதி முக் கணன் நக்கன்மழுக்கரன் ... முக்கண்ணன், திகம்பரன் (திக்குக்களையே ஆடையாகப் புனைந்தவன்), மழு ஏந்திய கரத்தன்” எனவும் புகழ்கிறார்
நீரின்றி அமையாது இவ்வுலகு - சிவனன்றி இயங்காது, அகில உலகும் என்பது போல, திருச்செந்தில் கலம்பகத்தில் 'நீயலதில்லை யாவையும் உலகம்' என்று நுதற்கண்ணனின் திருமகனைப் போற்றுகின்றார், சுவாமிநாத தேசிகர். சிவனார் மனங்குளிர செவியில் உபதேச மந்த்ரம் பகர்ந்தவன். தந்தைக்கே குருவாகி தனித்து உயர்ந்தோன். திருக்குருந்தடி அருள்பெற அருளிய குருநாதர் திருக்குழந்தை அன்றோ “சுரர்ச்சங்கந் துதித்தந்தஞ்
செழுத்தின்பங் களித்துண்பண்
சுகத்துய்ந்தின் பலர்ச்சிந்தங் ...... கசுராரைத்”
துவைத்தவன் அல்லவா நம் வேலன்.அவனே சிவப்பண்பும் தவப் பண்பும்தரவல்லவன். சுரர்ச்சங்கம் ஓதும் அஞ்செழுத்தாம் ‘நமச்சிவாய‘த் தினின்றும் ஆறெழுத்தாம்' சரவணபவ 'மந்திரத்திற்கு உடையோனாம் எம்பெருமான் ஆறுமுகங்களும், பன்னிரு திருக்கரங்களும் கொண்டு சரவணத்தில் உலகம் உய்ய உதித்தவன் அன்றோ! முகத்திற்கு இரண்டு நயனங்கள் என்றால் ஆறுமுகத்திற்கும் பன்னிரு நயனங்கள் தானே!!!
வடமொழி ஸ்கந்த புராணத்தில் ‘த்ரிஷட் (3×6) ஈட்சணம், அஷ்டாதசவிலோசனம் (8+10) என்று வந்துள்ளதால் முகத்திற்கு மூன்று வீதம் ஆறுமுகத்திற்கும், பதினெண் நயனங்கள் என்றாயிற்று. திருச்செந்தூர் அகவல் என்ற பாராயண நூலில் ‘வாரண முகவன், மலரோன் திருமால், வருத்தமில் உருத்திரன் மகேச்சுரன், சதாசிவன் உருத்தெளிந்திட நம் உருவேயாகும். ஆறு மாமுகத்து அமர்ந்ததும் இதுவே, வேறில்லை‘ என்பதனால் சண்முகங்கள் விளங்கு நற்பொலிவுமுளரி முந்நான்கு மூவிரு குமுதம் கருணை யுகந்த கண்களும் ( 3 x 4 )+( 3 x 2) பதிணன் நயனன் என்பது புலனாகிறது.
பாம்பன் ஸ்வாமிகளும்' மூன்றாம் அவர் தம் முகம் ஒன்றும் விழி' என்று போற்றுகிறார். அருட்கண்கள் பன்னிரண்டுடன் அழிப்புக்கண்கள் (ஆறுமுகத்தினுக்கும் உரிய நெற்றிக்கண்) ஆறும் சேர்ந்து அஷ்டாதசவிலோசனங்கள் ஆயிற்று.கருணை கூர் முகங்கள் ஆறானதால் அருள் விழிகள் மட்டும் பனிரண்டாயிற்று என்று முன்னோர் கூறினர். ஐம் முகச்சிவனும் அறுமுகச் சிவனும் ஒன்றே என்பதனால், கோழியைப் பாடிய வாயால் குஞ்சைப் பாட மாட்டேன் என்ற பொய்யாமொழிப் புலவரிடம் 'முட்டை எனும் சொல் வரும்படி பாடல் வாங்கிக்கொண்டு அப்பனும் அவன் மகன் சுப்பனும் ஒன்றே என்று உணர்த்தியவன் அல்லவா
தேவாரம் பாடல் பெற்றதிருத்தலங்களுக்குள் (274) திருப்புகழ் திருத்தலங்களாகப் (105) போற்றப்படுகிறது. அநாதிமல முத்த சிதாகிய பரம்பொருள், சிவபெருமானே. ஆன்மாக்களின் பொருட்டுப் பஞ்சக்ருத்திய கர்த்தாவாய்த் தனு கரணாதி தத்துவதாத்துவிகங்களை உபகரித்தும், ஆறு திருமுகங்களோடும், பன்னிரு திருக்கரங்களோடும், பதினெண் நயனங்களுடனும் கந்த ஸ்வாமியாய், துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனஞ்செய்தும், வேண்டுவோர் வேண்டுவன பெற்று, வினைப்பயனை வென்று வீடு பேறு பெறும் பொருட்டு ஒரு திருமுருகனாய் வந்து உலகு உய்ய உதித்தனன்.
அறிவைத்தவிர மற்று அகிலமும் இல்லை, அறிவைத் தவிர மற்றுஆர் உயிர் இல்லை., அறிவைத்தவிர மற்று அருள் பரம் இல்லை, அறிவைத் தெரிவே பரமார்த்தம் ஆமே என்பது போல எங்கும் செறியும் பரமசிவமாய், அறிவை அறிவது பொருள் என அருளிய பெருமான் அல்லவா! அன்பே சிவமாவது போல கருணையே கந்தனானது. அன்பில் தன்னை அறக் கரைத்த உயிர் இன்பமயம் ஆதலால் சிவச் சொரூபமாயிற்று. சிவனே குகன், குகனே சிவன்.'ஆதலின் சிவத்திடமிருந்து பேதமில்லாமல் யாண்டும் நின்றானாகி, சிவ சத்திரூபமாய் விளங்குகின்றான் ஆறுமுகன்.
'தமிழறிந்த ஆன்மீக அன்பர்களுக்கு, அருணகிரிநாதர் யார் என்ற அறிமுகம் தேவையில்லை. அருணகிரிநாதர் அவதரித்த தலம், நினைத்தாலே முத்தி தரும் என்று போற்றித் துதிக்கப்படும் தொன்மையான சிவ ஸ்தலமான திருவண்ணாமலை.அருணகிரிநாதர் எழுதிய 'திருப்புகழ்' தேவாரத்திற்கு இணையாகவும், 'கந்தர் அலங்காரம்' திருவாசகத்திற்கு இணையாகவும், 'கந்தர் அனுபூதி' திருமந்திரத்திற்கு இணையாகவும் முருக பக்தர்களால் போற்றப்படுகின்றன. திருமுருகன் ஒருவனையே பாடும் பரமபதிவிரத நிலையில் வாழ்ந்தவர் நம் குருநாதர்.சிவயோகநெறியில், ஐயன் ஒருவனையே பாடும் பணியைப் பணியாகக் கொண்டார். கருணைக்குக் கந்தனைப் போலவே அருணகிரியாரும்
அருணகிரி சேவடிப் போது உளத்தில் வைப்பாம்! அருணகிரி பெயர் வள்ளல் சொன்ன திருப்புகழ் வல்லவர் சீர்பாதத்தூளியென் சென்னியதே! செந்திலான் சரணங்களில்! செந்திலாண்டவன் அடிமை.
★★★

