ஞானப்பொக்கிஷ அருணகிரிநாதர்
கலைமாமணி சொல்வேந்தர் சுகி சிவம்
அருணகிரிநாதர் வரலாற்றைப் பல கோணங்களில் சொல்லலாம். திருப்புகழ், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, திருவகுப்பு, விருத்தங்கள் என்று பட்டியலிட்டு அவர் அருளிய பாடல்கள் வழியாக அருணகிரிநாதரை அனுபவிக்கலாம்.
ஒரு நயமான கருத்துச் சொல்வது என்று சொன்னால் முருகப் பெருமானுக்கு ஆறு திருமுகங்கள். இந்த ஆறு திருமுகங்களும் எதற்காக ஏற்பட்டன? ஆறு நூல்களாக அவரருளிய பாடல்களைக் கேட்பதற்காக, நீ பாடு! நான் கேட்கிறேன் என்று அருணகிரிநாதர் அருளிய திருப்புகழை முருகப்பெருமானே! விருப்பமுடன் கேட்டார்.
‘செய்பதியையும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு
செப்பென எனக்கருள்கை மறவேனே‘
நீ விருப்பத்தோடு சொல் நான் விருப்பத்தோடு கேட்டுக் கொள்கிறேன்' என்று முருகப்பெருமானே! விரும்பிக் கேட்ட நூல் திருப்புகழ்.
திருப்புகழ், திருவகுப்பு, கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, வேறு வகையான விருத்தங்கள் என்று இவையெல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்துப் பார்க்கின்றபோது, ஒவ்வொரு நூலையும் தனித்தனியே கேட்க வேண்டும் என்று விரும்பி ஆறு முகங்களைக் கொண்டு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இன்பத்தைக் கேட்டு அனுபவித்தான் என்று சொல்வது ஒரு மரபு.
அருணகிரிநாதரை “வாழையடி வாழையென வந்த ஞானமரபு” என்று சொல்வது ஏன்? பின்னாளிலே வந்த தாயுமானசுவாமி, எனக்கு ஒரு வழிகாட்டி உண்டு என்று சொன்னால் அது அருணகிரிநாதர் என்று சொல்லுகிறார்.
"ஐயா! அருணகிரி அப்பா உனைப்போல்
மெய்யாக ஓர்சொல் விளம்பினர் யார்? - வையகத்தோர்
சாற்றரிது என்று ஏசற்றார்; தன்னையாய் முக்கண் எந்தை
நாற்றிசைக்கும் கைகாட்டி னான்'
அருணகிரிநாதர் பெருமைக்குரியவர் என்று சொல்வதற்கு நிறைய சான்றுகள் சொல்லலாம். அவர் இலக்கியங்களில் வல்லவர். தேவாரம், திருவாசகம் மற்றும் தனக்கு முன்பிருந்த பல்வேறு நூல்கள் என அனைத்தையும் நன்கு கற்றவர்.
தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளை அவர்கள் “அருணகிரிநாதர் வரலாறும் நூல் ஆராய்ச்சியும்” என்று ஒரு அருமையான நூல் எழுதியிருக்கிறார்கள். அதில் அருணகிரிநாதருக்குத் தேவாரம், திருமந்திரம் மற்றும் பல அருள் நூல்களில் எந்தளவுக்குப் பயிற்சி உண்டு என்பதை வரிக்குவரி எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். காலத்தால் முற்பட்ட நூல் ஆசிரியர்களுடைய இலக்கியங்களின் மீது நல்ல பயிற்சி அருணகிரிநாதருக்கு இருந்தததை நமக்குக் காட்டுவது அவருடைய பாடல் வரிகளாகும்.
பழமையான நூல்களில் சிறந்த பயிற்சி உடைய அருணகிரிநாதர் இசையில் அதிக நாட்டம் உடையவர். கலைகளில் பெரிய விருப்பமுடையவர். அவருடைய மனம் சராசரியான மனிதர்களுடைய தேவைகளைப் போன்ற உலகியல் சிந்தனைகளில் அதிக நாட்டம் உடையதாகச் சில காலம் இருந்தது.
வாரியார் சுவாமிகள் சென்னை பல்கலைக்கழகத்தில் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். “செஞ்சொல் உரை கோவை” என்ற பெயரில் அது புத்தகமாக வெளி வந்திருக்கிறது. அதில் அவர் சொல்கிறார் முத்துசாமி தீட்சிதர் பாடி இருக்கிறார், தியாகராஜர் பாடியிருக்கிறார், சியாமா சாஸ்திரி பாடியிருக்கிறார், கோபாலகிருஷ்ண ஐயர் நிறைய கீர்த்தனைகள் பாடி இருக்கிறார். நான் எல்லா மகான்களையும் நமஸ்காரம் பண்ணுகிறேன். அவர்களைப் போல ராகத்தை, அருமையான கீர்த்தனைகளைப் பாடக்கூடிய நபர்களை நீங்கள் பார்க்க முடியாது. அவர்கள் எல்லோரும் ராகத்தில் கவனம் செலுத்தினார்கள். அவர்கள் ராகத்தில் கவனம் செலுத்தினார்களே ஒழிய தாளத்தில் அல்ல. அருணகிரிநாதர் தாளத்தில் கவனம் செலுத்தி இருப்பதை போல் வேறு யாரும் செலுத்தி இருக்க முடியாது. அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறார். ராகமாலிகையை எத்தனையோ வித்வான்கள் பாடியிருக்கிறார்கள். தாள மாளிகை பாடிய ஒரே அருளாளர் அருணகிரிநாதர் மட்டுமே. எல்லா தாளமும் ஒரே பாட்டில் வரும்படி பாடியிருக்கிறார்.
எத்தனை தாளங்கள் உண்டோ அத்தனை தாளங்களும் ஒரே பாடலில் வர வேண்டுமானால் அந்தத் தாளக்கட்டில் அவருக்கு எவ்வளவு ஞானம் இருக்க வேண்டும்.
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தான தத்ததன தத்தத் தனதன தனதான தத்ததன தொடங்கினால் அதே ஒலிக்கட்டு மாறாமல் ஒலி வர வேண்டும்.
தந்தன தந்தன தனன என பாடினால் அதற்குரிய ஒலி மாறாமல் அப்படியே வர வேண்டும்.
இப்படி அருணகிரிநாதருக்கு தாளத்தின் மீது இருந்த ஈடுபாடு அசாத்தியமான பெரிய சிறப்பு.
இதற்கு ஒரு எடுத்துக்காட்டையும் தருகின்றார் வாரியார் சுவாமிகள். வல்லினம் என்று எடுத்துக் கொண்டால் வல்லினம் வருகிற மாதிரியே பாடுவார்.
“பத்தர்க ணப்ரிய நிர்த்த நடித்திடு
பட்சிந டத்திய ...... குகபூர்வ
பச்சிம தட்சிண வுத்தர திக்குள
பத்தர்க ளற்புத ...... மெனவோதுஞ்
சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
ருப்புக ழைச்சிறி ...... தடியேனுஞ்
செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
சித்தவ நுக்ரக ...... மறவேனே”
இப்படி ஒலி ஒழுங்கு வரும்படியாக வல்லினச் சொற்களில் பாடும் ஆற்றல் அருணகிரியாருடைய ஆற்றல்.
மெல்லினம் என்று எடுத்துக் கொண்டால்,
“மன்றலங் கொந்துமிசை தெந்தனத் தெந்தனென
வண்டினங் கண்டுதொடர் ...... குழல்மாதர்
மண்டிடுந் தொண்டையமு துண்டுகொண் டன்புமிக
வம்பிடுங் கும்பகன ...... தனமார்பில்
ஒன்றஅம் பொன்றுவிழி கன்றஅங் கங்குழைய
உந்தியென் கின்றமடு ...... விழுவேனை”
பாடலில் மெல்லின எழுத்தை எடுத்துக்கொண்டு அப்படியே மெல்லின எழுத்து வருவது மாதிரி பாடுகிறார்.
அல்லி விழியாலும் முல்லைநகையாலும் என்ற பாடலில் இடையின எழுத்துகளாகிய ‘யரலவழள’ எழுத்துக்களை அமைத்திருக்கிற அழகைப் பாருங்கள்.
“அல்லிவிழி யாலு முல்லைநகை யாலு
மல்லல்பட ஆசைக் ...... கடலீயும்
அள்ளவினி தாகி நள்ளிரவு போலும்
முள்ளவினை யாரத் ...... தனமாரும்
இல்லுமிளை யோரு மெல்ல அயலாக
வல்லெருமை மாயச் ...... சமனாரும்
எள்ளியென தாவி கொள்ளைகொளு நாளில்
உய்யவொரு நீபொற் ...... கழல்தாராய்”
இவையெல்லாம் மொழியில் அவருக்கிருந்த வல்லமைக்குச் சான்றாகும்.
அவருடைய ஒலி ஒழுங்கு எவ்வளவு அழகானது என்பதை அவருடைய திருப்புகழை படித்து அனுபவித்தால் தான் தெரியும்.
அருணகிரிநாதர்ப் பெருமானின் மற்றொரு ஒலி நயத்துடன் கூடிய சிறப்பான பாடல் 'திமிர உததி' எனத்துவங்கும் கீழ்காணும் பாடல்.
“திமிர வுததி யனைய நரக
செனன மதனில் ...... விடுவாயேல்
செவிடு குருடு வடிவு குறைவு
சிறிது மிடியு ...... மணுகாதே
அமரர் வடிவு மதிக குலமு
மறிவு நிறையும் ...... வரவேநின்
அருள தருளி யெனையு மனதொ
டடிமை கொளவும் ...... வரவேணும்”
வாரியார் சுவாமிகள் அவர்கள் இந்தப் பாடலை தினமும் பூஜை செய்யும் போது பாட வேண்டும் என்று சொல்வார்கள்.
இந்தப் பாடல் அருணகிரிநாதப் பெருமான் முருகப் பெருமானிடம் நரகத்திற்கு ஒப்பான இப் பிறப்பில் இருந்து விடுதலை தரவேண்டும். செவிடு, குருடு இல்லாமல் பிறக்கவேண்டும். வறுமை இல்லாத வாழ்வு வேண்டும், அமரர் வடிவும், சிறந்த குலமும், அறிவு நிறைவும் என்னை அடிமை கொள்வதோடு மட்டுமல்லாமல் எனது மனதையும் சேர்த்து உடலோடு அடிமை கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறார்.
அருணகிரிநாதப் பெருமான் என் உடலோடு மனதையும் சேர்த்து ஆட்கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறார் என்றால் என்ன பொருள்? உடலும் மனமும் பல நேரத்தில் ஒத்துப்போவதில்லை. உடம்பு சொல்வதை மனம் கேட்பதில்லை. ஆகவே இரண்டையும் சேர்த்து என்னை ஆட்கொள்ள வேண்டும் என்று இப்பாடலில் வேண்டுகிறார்.
அருணகிரிநாதர் தன்னை எப்படித் தாழ்த்திக் கொள்கிறார் என்று கீழ்க்கண்ட சொற்களிலிருந்து அறியலாம். அவர் தன்னை நிந்தித்து கூறிய வார்த்தைகள் அங்கதன், அநி ஜீவன், அநுசிதன், அபராதி, அருளிலி, அவகுணன், அவத்தன், அற்பன், அறிவிலி, ஆசார ஈனன், ஆபாசன், இழிகுலன், கதியிலன், கபோதி, கலையிலன், காமக்குரோத தூர்த்தன், காலன், கூலின், கொடியேன், கொடையீலி, கோளி, சடலன், சமடன், சலன், ஞான கீனன், கலன், தழும்பன், காமீகன், பஞ்ச பாதகன், பத்திமையிலி, பொறையிலன், பங்கன், பாவி, ஜட, கசடன், மூடன், மட்டி, என உரைக்கிறார்.
அருணகிரிநாதப் பெருமானுடைய பெரிய சிறப்பு என்னவென்றால் அவர் பெரிய பெரிய ரகசியங்கள் எல்லாம் கூட எளிமையாகச் சொல்லிவிடுவார். எதுகையோடு பாட்டு எழுதுகிற பலர் எதுகைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களே தவிர கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். தாளக்கட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதுகிறவர்கள் சில பயனற்ற சொற்களை எதுகையாக வருவதுபோல் பயன்படுத்துவார்கள். ஆனால் அருணகிரிநாதப் பெருமானின் பாடல்களில் நாம் மிகவும் முயன்று தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய அரிய விஷயத்தை ஒலிநயம் மாறாமல் தாளக்கட்டு மாறாமல் மிக எளிமையாகச் சொல்லுவார். அதற்கு ஒரு சிறிய உதாரணம். இறை அனுபவம் என்பது சொற்களால் சொல்ல முடியாது. அதனை உணர்ந்து தான் அறிய முடியும். இதை அவர்கள் 'வாசித்துக் காணொணாதது' என்று துவங்கும் சிராப்பள்ளித் திருப்புகழ்ப் பாடலில் நயம்பட உரைக்கின்றார்.
வாசித்துக் காணொணாதது எனில் புத்தகம் படித்து கடவுளைப் பற்றிய அறிவை ஒரு காலமும் இறக்குமதி செய்து விட முடியாது. நரேந்திரர் எவ்வளவோ புத்தகம் படித்து இருந்தும் கடவுளை அடைய முடிந்ததா? அரவிந்தர் புத்தகம் படித்தும் அடைய முடிந்ததா? அதைப்போல எந்த ஞானத்தையும் இரவலாகவோ வாசித்தோ பெறமுடியாது தானாக இறையருளால் அடைந்தால் தான் உண்டு.
பூசித்துக் கூட ஒணாதது- அதாவது பூஜித்தால் இறை ஞானத்தை பெற்று விட முடியுமா? மந்திரம், பூஜிக்கிற கடவுள், பூஜிக்கின்றவன் ஆகிய மூன்றும் ஒன்றாக இருந்தால் பூஜை கைகூடும். பூஜிக்கிறவன் இறைவனோடு கரைந்து விட வேண்டும். ஆகையால் பூசை செய்து அதனால் கூடலாம் என்றால் அது முடியாது. வாய்விட்டுப் பேச ஒணாதது. வாய் விட்டுப் பேசி விவரிக்கலாம் என்றால் அங்ஙனம் பேச்சுக்கு அகப்படாதது. விந்துநாத ஓசைக்குத் தூரமானது. விந்து சுழல அதனின்று எழும் நாதம் என்னும் ஓசைக்கு அப்பால் வெகு தூரத்தில் இருப்பது.
இப்படி வேறு எந்த ஞானியும் சொல்லாத தெய்வீக ரகசியங்களை மிக எளிமையாக அருணகிரிநாதப் பெருமான் விளக்கி விடுவார்.
முக்தி பெறுவதும் ஞானம் அடைவதும், ஏதோ சில நூல்களைப் படித்து ஏதோ சில வகையான பயிற்சிகளை மேற்கொண்டு நாம் அடைகின்ற விஷயமல்ல. உங்களிடத்தில் இருக்கின்ற 'நான்' முற்றிலும் கரைந்து போய் பிரபஞ்சத்தினுடைய நானாகிய மூலத்தில் கரைந்து இந்தச் சிற்றலை ஆகிய நான் என்பது முற்றிலும் இல்லாமல் போவதுதான் உண்மையான ஞானம். உண்மையான ஞானம் அடைந்தவன் என்று சொல்பவன் புதிதாக எதுவும் அடைவதில்லை. தன்னுடைய நான் என்பதை இழக்கின்றான். “எல்லாம் அற என்னை இழந்த நலம்” என்று அருளாளர் கந்தர் அனுபூதியில் சொல்வார்.
இதுதான் அருணகிரிநாதர் உலகத்திற்குக் கொடுத்த கொடை. முருகபக்தியை வற்புறுத்தி பல்வேறு நூல்களை அவர் தந்திருந்தாலும் கந்தரனுபூதி என்ற ஞான நூல்தான் அருணகிரிநாதருடைய முழு ஞானத்தையும் பிழிந்து வைக்கின்ற ஒப்பற்ற ஞானப் பொக்கிஷம்.
★★★
அருணகிரி நாதன் தமிழ் மணமும்
அரிய கீரன் தமிழ் மணமும்
குறவினன் மணமும் கமிழ்தரு போரூர்க்
குமரனே அமர நாயகனே
— திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்

