நினைத்தவுடன் மீனாய் வந்து வேதங்கள் மீட்டவா ! கடலில் மலையைத் தாங்கி விளையாடும் ஆமையே! பூமியைக் காத்த பெரிய வராஹனே ! திடீரெனத் தூணில் தோன்றிய சிம்ஹமே! மூன்றடி கேட்ட வாமனனே! கோபம் கொண்ட பரசு ராமா! கருணை கொண்ட தசரதராமா! விளையாடும் பல ராமா! கோபியர் கொஞ்சும் தந்திரக் கண்ணா! குதிரை மீது ஏறி வரப்போகும் கல்கியே என பத்து அவதாரங்கள் எடுத்த செந்தூர் முருகனின் மாமனை நினைந்து வணங்குகின்றேன்.
இறைவன் எவ்வித கர்ம வினையின்றி அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டவே பூமியில் இறங்கி வருதலான 'அவதாரம்' எடுக்கிறார். ‘எண்திசை திகழும்புகழ் கொண்டவன்', ‘பூவாயன்’ எடுத்த பத்து அவதாரங்களை இப்பொழுது திருப்புகழினூடே காண
மச்ச அவதாரம் விஷ்ணுவின் முதல் அவதாரமாகும். 'மச்சம்' என்ற சமஸ்கிருதச் சொல், தமிழ் மொழியில் ‘மீன்’ எனப் பொருள் தரும். இந்த அவதாரத்தில், விஷ்ணு நான்கு கைகளுடன், உடலின் மேற்பாகம் தேவ ரூபமாகவும், கீழ்ப்பாகம் மீனின் உருவாகவும் கொண்டவராகத் தோன்றினார் என்று மச்ச புராணம் கூறுகிறது.
'சிறுத்த செலு அதனுள் இருந்து
பெருத்த திரை உததி கரந்து!
செறித்த மறை கொணரநிவந்த ஜெயமாலே---'(கறுத்த தலை)
சிறிய மீன் உருவத்தினுள் அவதாரம் செய்து, பெரிய அலை வீசும் கடலுக்கு அடியில் ஒளித்து வைத்த வேதங்களை மீட்டு வருவதற்காகத் தோன்றிய வெற்றித் திருமால், "மகர சலநிதி முழுகி விளையாடிய",-----“வேத மீண கமலக் கணர்”
'உததி' என்று கடலைக் குறிக்கிறதும், 'மறை கொணர வந்த' என்று வருகிறதும் கண்டால், நமக்கு ஆச்சரியமாக இருக்கலாம் .இந்த அவதாரம் வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்த சோமுகாசுரனைக் கொன்று, வேதங்களை மீட்டதைப் பற்றிக் கூறுகின்றது
மச்சாவதாரத்தில் மகாப் பிரளயம் வர, ஏழாவது மனுவும், சப்த ரிஷிகளும் மீன் உருக் கொண்டு தம் உயிர் பிழைத்திருக்க, மற்ற எல்லா உலகங்களும் அழிந்து ஒழிந்தன. பொங்கிப் பெருகும் கடலில் மூன்று உலகங்களும் மூழ்கின.
பிரம்மா இரவு, சோர்ந்து தூங்கும்போது அவர் வாயிலிருந்து வேதங்கள் தாமே வெளிவந்ததைக் கண்டு, குதிரை உருவம் கொண்ட ஹயக்கிரீவன் என்ற அசுரன் தனது யோக சித்தியினால் அந்த வேதங்களை திருடிக் கொண்டு செல்ல, உலகத்தில் அறம் ஒழுங்காக நிறைவேற வேதத்தின் துணை அவசியம்என்றும், வேதங்கள் இருந்தாலன்றிப் பிரும்ம சிருஷ்டி இயங்காது என்பதையும் அறிந்த திருமால், ஹயக்ரீவனால் திருடி மறைக்கப்பட்ட வேதங்களை மீட்பதற்காக, மீனாக அவதரித்தான்.
ஸ்ரீமன் நாராயணனின் பக்தனான 'சத்யவிரதன்' என்ற ராஜரிஷிக்கு ஆற்றில் கிடைத்த மீன் வளர்ந்து பெரிதாகி அதைக் கடலில் போடும்படி ஆகியது. ஏழாம் நாள் பிரளயம் வந்த போது, முனிவர்களும், மூலிகைகளும் உள்ள ஒரு தோணியில் கொம்புடன் கூடிய அந்த மீனை, 'வாசுகி' என்ற பாம்பினால் கட்டித் தோணியை இழுக்க, ராஜரிஷியும் மச்சாவதார புராணத்தை சத்யவிரதனுக்குச் சொல்ல, தண்ணீர் வடிந்து, மச்சமூர்த்தி ஓடத்தைக் கரை சேர்க்க ,சத்திய விரதன் அந்நேரம் பிரம்மனைக் குறித்து பிரார்த்தனைசெய்ய, மீண்டும் அவர் தம் சிருஷ்டியைத் தொடங்க நினைத்தபோது, வேதங்களைக் காணாது திகைத்து திருமாலை வேண்ட, திருமாலும் மச்சமூர்த்தியாகவே வெள்ளத்தில் புகுந்து ஹயக்ரீவனுடன் போரிட்டு வேதத்தை மீட்டுக் கொண்டு வந்து பிரம்மனிடம் சேர்த்தார்.
இரண்டாவது அவதாரமான கூர்மாவதாரம்:
“பணப்பத்திக் கணத்துத்திப் படுக்கைக்கச் சபத்திச்சைப் படுக்கச்சிப் பதிச்சொக்கப் பெருமாளே” -- “இறைச்சிப்பற்றி”----காஞ்சித் திருப்புகழ்
படங்களின் வரிசையையும், நெருங்கிய புள்ளிகளையும் உடைய ஆதிசேஷனை படுக்கையாகக் கொண்ட, ஆமை உரு எடுத்த திருமால் ஆசைப்பட்ட இடமான கச்சி நகரில் (காஞ்சீபுரத்தில்) உறையும் அழகிய பெருமாளே!
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது அமிழ்ந்த மந்திரமலையைத் தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரம் தான் கூர்மாவதாரம்.
அடுத்து மூன்றாவதாக வருவது வராக அவதாரம்---
“கோல உருவாய் எழுந்து பார் அதனையே இடத்து கூவிடும்
முராரி விண்டு திரு மார்பன்" --- (நீலமயில் சேரு மந்தி மாலை----(பேறைநகர்)
பன்றியின் உருவோடு அவதரித்து, மண்ணைத் தோண்டிச் சென்று பூமியை மீட்டு வந்தவனும், ‘முரன்’ என்னும் அசுரனுக்குப் பகைவனுமான முராரியாகிய திருமால், லக்ஷ்மியை மார்பில் வைத்தவன், “சுகரத் தொடம்பு தான் எடுத்து வந்த சூதன்'
ஜயவிஜயர்களான, ஹிரண்யாக்ஷன், ஹிரண்ய கசிபு என்ற இருவரில் இரண்யாக்ஷன் பிரம்மாவைக் குறித்துத் தவம் செய்து, சிருஷ்டியில் தோன்றிய யாராலும், எதனாலும், எந்த ஆயுதத்தாலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்றும் மற்றும் மூவுலகத்திற்கும் அதிபதியாகும் வரங்கள் இரண்டும் வேண்டிப்பெற்றான். பின்னர், பிரம்மா போன்ற தேவர்களை வென்று, பின் திருமாலை வெல்ல, பாதாளத்திற்குச் செல்ல முற்பட்டான். ஆனால் வழி தெரியாது திகைத்து, இறுதியில் தனக்குத் தடையாயிருக்கும் பூமியைப் பாயாகச் சுருட்டி மறைந்தான். பூமாதேவியின் வேண்டுகோளுக்கு இணங்க உடனே பகவான் விஷ்ணு 'குர்குர்' என்று சப்தம் செய்து, யஜ்ஞ வராகமாக (பன்றி) உருவெடுத்தார். பூமியைப் பாயாகச் சுருட்டிய இரணியாக்ஷன்மீது பாய்ந்து தன் தந்தத்தால் (கோரைப் பல்லால்) குத்தி, அவனால் சுருட்டப்பட்ட பூமியை வராகமூர்த்தி வெளிக் கொணர்ந்து அதனை நிலைப்படுத்தி வைகுண்டம் அடைந்தார். அதைத் தாளமுடியாத ஹிரண்யாக்ஷனும் சமுத்திரத்திலே குதித்து மறைந்தான்.
நான்காவது அவதாரமான நரசிம்மாவதாரம்---
“அருமறை நூலோதும் வேதியன இரணிய ரூபாந மோவென
அரிகரி நாராய ணாவென ஒருபாலன் அவனெவ னாதார மேதென
இதனுள னோவோது நீயென அகிலமும் வாழ்வான நாயக னெனவேகி
ஒருகணை தூணோடு மோதிட விசைகொடு தோள்போறு வாளரி
யுகிர்கொடு வாராநி சாசர . னுடல்பீறும் உலகொரு தாளான மாமனும்”
அருமை வாய்ந்த வேத நூல்களில் வல்ல வேதியன் இரணிய ரூபா நமோ என்று பாடம் சொல்லிக்கொடுத்த போது, 'ஹரி ஹரி நாராயணா நமோ' என்று சொன்ன ஒப்பற்ற குழந்தையாகிய பிரகலாதனை நோக்கி இரணியன் அவன் எவன், என்ன ஆதாரம், இந்தத் தூணில் இருக்கிறானா ? நீ சொல்லுக என்று கேட்க, பிரகலாதன் எங்கள் நாயகன் உலகில் எல்லாப் பொருள்களிலும் வாழ்கின்ற நாயகன் என்று சொல்லவும், இரணியன் சென்று எதிரிலிருந்த பெரிய தூணை மோதி அறைய, வேகத்துடன், பெரும் தோள்களுடனும், ஒளி பொருந்திய நரசிங்க வடிவத்துடனும் கையில் நகங்களுடன் வந்து அரக்கன் இரணியனுடைய உடலைக் கிழித்தவனும், உலகமெல்லாம் ஒரு அடியால் அளந்த மாமனுமாகிய திருமாலும்,
எவ்வளவு அழகாக இந்த ஒரு வரலாற்றை பத்தொன்பது திருப்புகழ் பாடல்களில் (19சு) குறிப்பிட்டிருக்கிறார் அருணகிரிநாதர்.
"கனகன் அங்கையிலாலறை தூணிடை மனித சிங்கமதாய் வரை பார் திசை கடல் கலங்கிடவே பொருதே யுகிர் முனையாலே கதறவென்றுடல் கீண் அவன் ஆருயிர் உதிரமுஞ்சிதறாது அமுதாய் உணு கமல வுந்தியனாகிய மால்''---(மனமெனும் )
“கூடமுறைநீடு செம்பொன் மாமதலை ஊடெழுந்தகோப அரி நாரசிங்கன் -“(நீல மயில் சேரு -பேறை நகர்)
'நாராயணாய நம வென்றோதுங்குதலை வாய்ச் சிறியோனுக்காகத் தூணிற் தோற்றிய வச பாணிப் பல நக நுதியின் நிசாசரன் ஆகங்கிழித்து அளைந்தணி துளசியோடு சிறு குடல் தோண்மாலையாக அணியும் கோ-“ -“ கலவியின் நலம் உரை”-
அடுத்து நாம் பார்க்கப் போவது ஐந்தாவது அவதாரமான வாமனாவதாரம்.
மாபலிச்சக்ரவர்த்தியின் கர்வத்தை அடக்கி அவருக்கு அருள்புரியவும், அதிதியின் வேண்டுகோளின்படி தேவர்களைக் காக்கவும் எடுத்த திருமாலின் அவதாரம் தான் வாமன அவதாரம் 'வாமனன்' என்றால் ‘குள்ளன்’ என்று பொருள்.
மாபலிச்சக்ரவர்த்தியால் மூவுலகையும் ஆளுவதற்காக செய்யப்பட்ட யாகத்தில் மூன்றடி நிலத்தினை தானமாக வாமனன் கேட்டார். சுக்ராசாரியரின் சொல்லைக் கேட்காமல் மூன்றடி தானம் தர மாபலி சம்மதித்த போது, இறைவன் நெடுமாலாக 'திரிவிக்ரம அவதாரம்' கொண்டு வானத்தை ஓரடியாகவும், பூமியை ஓரடியாகவும் அளந்து மூன்றாவது அடியை மாபலிச்சக்ரவர்த்தியின் தலையில் வைத்து பாதாளலோகத்திற்கு அரசனாக்கினார்.
குறளாக(ன்) ஊறு இல் நெட்டை கொண்ட ஆதி மருகா ...(உருவேறவே ஜெபித்து ---விராலிமலை)
“வரதன் அலங்கல் புனைந்தருளும் குறள் வடிவன்”----(சருவி யிகழ்ந்து -சீர்காழி)
வரதன். மாலையைச் சூடியருளும் வாமன வடிவ மூர்த்தி,
இச்சையே செலுத்தி உச்சி தாள் பலிக்குமிட்டமால் -(நச்சுவாள் விழிக்கு )- வாமனராக வந்து தமது விருப்பத்தைக் கூறி, (மகாபலி சக்ரவர்த்திக்கு அவனுடைய) தலையில் தமது பாதத்தை வைத்த திருமால்
“அகில புவனமும் அளவிடு குறியவன் அளவு நெடியவன் அளவிட அரியவன்”-(குமர குருபர குணதர (திருவருணை)
இந்த அவதாரத்திலேயே திரிவிக்ரம அவதாரம் எடுத்ததால் இதுஅவதாரக் கணக்கில் சேர்க்கப் படவில்லை.-
எல்லா உலகங்களையும் பாதத்தால் அளக்க வல்ல குட்டை வடிவுடைய வாமனன், அளந்தபோது நீண்ட (திரிவிக்கிரம) உருவம் கொண்டவன், மதித்து எண்ணுதற்கு அரியவன் ஆகிய திருமால். “இருபதம் அதுதனில் எழுபுவியடைய அளவிட நெடுகிய அரி” யானவர்-----“உலகேழும் விரிவு காணும் மா மாயன் முடிய நீளும் , விதரண மாவலி வெருவமகாவ்ருத வெள்ள வெளுக்க நின்ற நாராயணன்” ஆவார்.
இப்படியாக வாமன அவதாரத்தை இருபத்தெட்டு பாடல்களில் (28), புகுத்தியிருக்கிறார் அருணை முனி.
அடுத்து வரும் ஆறாவது பரசுராம அவதாரம், அருணகிரிநாதர் எழுதி நாம் தொலைத்த திருப்புகழ் பாடல்களில் இருக்கலாம் .
ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாகப் பிறந்து, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம் ‘பரசுராமன்’. இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருக்கிறார்.
ஏழாவது அவதாரமான இராமாவதாரம்-------
"தசரதற்கொரு பாலனாகி உதித்து”, “ஓர் முனிக்கொரு வேள்வி காவல் நடத்தி”, “பாலை வனத்தில் நடந்து நீல அரக்கியை வென்று”, “கலின் வடிவமான அகலிகை பெணான கமலபதமாயன்”, “சிலை மொளுக்கென முறிபட மிதிலையிற் சநகமனருள் திருவினைப் புணர் அரி”, “ஊரில் மகுடங்கடந்தொரு தாயர் வசனஞ்சிறந்தவன்”, “திருவைக் கொண்டொரு தண்டக வனமிசை வர”, “மாயமானொடரக்கரை வெற்றி கொள்”, “கொடுங்கைப்பட்ட மராமரம் ஏழுடன் நடுங்கச் சுக்ரிவனோடமராடிய குரங்கைச் செற்று”, “சுத்த வீரிய குணமான இளையவனுக்கு நீள் முடி அரசது பெற்று வாழ்வுற இதமொடளித்த ராகவன்”, “ஒரு தாரைதனை சுக்ரிவற்களித்தவன்”, “இடுங்கனல் குரங்கொடு நெடுங்கடல் நடுங்கிட எழுந்தருள் முகுந்தன்”, “கடலடும்படி கணையேவி”, “அலைகடல் அடைத்த ராமன்”, “அரியதன் படைக் கர்த்தரென்று அசுரர்தங்கிளை கட்டை வென்ற அரி முகுந்தன்”, “பாரிய மாருதி தோள்மிசை கொண்டுற்றமராடிப் பாவி இராவணனார் தலை சிந்தி”, இராகவ இராமன் முன் இராவண இராஜன் “உட்குடன் மாய் வென்றிராகவென்” இலங்கேசர் வனத்துள் வளர் இளந்தாது மலர்த்திருவைச் சிறை மீளும் இளங்காளமுகில்”, “தெற்கரக்கர் பவிஷைக் குலைத்து விட ணற்குநத்தரசளித்து” இறுதியில் பட்டாபிஷேகம் மேற்கொண்டார், “எனது மொழி வழுவாமல் நீஏகு கான் மீதில் என விரகு குலையாதமாதாவும் நேர் ஓத இசையும் மொழி தவராமலேயேகி மாமாதும் இளையோனுடனும்” சென்ற “பொற்றசர் தற்குப் புத்திரன்"-------(யாவும் திருப்புகழ் வரிகள்)
அடுத்து எட்டாவதாக வருவது ‘பலராம அவதாரம்’. நமக்குக் கிடைத்த திருப்புகழ்ப் பாடல்களில் அதைப் பற்றிக் காணவில்லை.
“எனது ராம அவதாரத்தில் எனக்கு தம்பியாகப் பிறந்து சதா சர்வகாலமும், ‘அண்ணா.. அண்ணா..” என்று என் காலையே பிடித்து கொண்டிருந்த லட்சுமணனுக்கு, நான் இதுவரை எதுவுமே செய்யவில்லையே!. அதனால் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. ஆதிசேஷன் மூலமாக எனது அண்ணனாக அவனைப் படைத்து, தினமும் அவன் காலில் நான் விழுந்து எனது நன்றிக் கடனை தீர்த்துக் கொள்வதோடு, எனது அவதாரத்தில் ஒரு பங்கையும் அவனுக்கு தந்துள்ளேன்” என்றார் பரந்தாமன் நாரதரிடம்.அதன் முடிவுதான் இந்த அவதாரம்.
ஒன்பதாவது அவதாரமான கிருஷ்ணாவதாரம்-------
"ஆயர் பாடியில் வளரும் முகில்", "நந்த கோபால மகீபன், “தாமோகமுலனூறு பால் தேடி உரலூடு தானேறி விளையாடு மொரு போதில் தாயாக வரு சோதை காணாது களவாடு தாமோதரன்”, “அண்டர்கள் மனையின் தயிர் உண்டவன்”, “அளையது திருடி அடிபடு சிறியவன்”, “வடகுல கோபாலர் தமொரு பதினாறாயிரம் வனிதையர் தோள் தோய் தரும் அபிராம”, “உலக்கை ராவி நடுக்கடல் விட்டவன்”, “வங்காளக் கொண்டல் வடிவொரு சங்க்ராமக் கஞ்சன்விழவுதை மன்றாடி”, “அரவு பொன் முடிமிசை திமித திமி திமியென நடமிடும் அரி”, “குருந்திலேறும் கொண்டல்”, “கஞ்சன் வரவிட்ட துட்ட குஞ்சர மருப்பொசித்த கங்கனும்”, “மருதிடைபோய்ப் போதொரு சகடுதையா”, “காமபாணமட்டனந்த கோடி மாதரைப் புணர்ந்த காளை”, “இந்த்ர தாருவை ஞாலமீதினிற் கொணர்ந்த சங்கபாணி”, “ஆநிரை ஆள்பவன்”, “சதமா புட் பொருது”, “கருதும் அலகை முலை கோதி”, “மருதமுதைந்த முகுந்தன்”, “சிகர குடையினில் நிரைவர இசை தெரி சதுரன்”, “மற்போர் செய்து விளையாடி”, “விளாவிற் காய்கனி மதுகையில் வீழச் சாடிய”, “புவிக்குள்யுத்தம் புத்திரர் சேயரசணைத்து முற்றும் செற்றிடவே பகை புகட்டி வைக்கும் சக்கிரபாணி”, “விதுரற்கும் அராக்கொடியானையும் விகடத் துறவாக்கிய மாதவன்”, “ஒரு பாரதமேற்புனை வித்த மகாவிர மாயவன்”, “குருக்குலராஜன் தனக்கொரு தூதன்”, “உப சாந்த சித்த குருகுல பவபாண்டவர்க்கு வரதன்”, “பக்தற் கிரதத்தைக் கடவிய பச்சைப் புயல்”, “கூராழியால் முன் வீய நினைபவன் ஈடேறு மாறு பாநு மறைவு செய் கோபாலராயன்”, “ரவிசேயெனும் அங்கராசன் விசிகாகவ மயல் பேடி கைபடுபோது சந்நிதியானவன்”, “அகடு துஞ்சிட மூட்டு பாரதமுடிய அன்பர்களேத்தவே அரியருளு மைந்தர்கள் வாழ்த்து மாயவன்” (யாவும் திருப்புகழ் வரிகள்) - இவரைப்பற்றிய செய்திகளை அருணகிரிநாதர் பல திருப்புகழ் பாடல்களில் புகுத்தியிருக்கிறார் என்றால், அவர் புலமையை என்னென்பது ?
“திருக்கும் தாபதர் வேதியர் ஆதியர் துதிக்கும் தாளுடை நாயகனின்” பத்தாவது அவதாரம் கல்கி
“மடு நடுவில் வெருவி ஒருவிசை ஆதி மூலமென வரு கருணை வரதன் இகல் இரணியனை நுதியுகிரின் வகிரும் அடல் அரி வடிவு குறளாகி மாபலியை வலிய சிறையிட வெளியின் முகடு கிழிபட முடிய வளரு முகில் நிருதன் இருபது வாகு பூதரமும் மகுடம் ஒருபதும் முறிய அடுபகழி விடு குரிசில் மருகனை” வணங்கி, குதிரையின் மீது ஏறி வரப்போகும் கல்கி அவதாரத்திற்காகக் காத்திருக்கலாம் . முருகன் அருளட்டும்
★★★
Arunagiri Nadhar composed
Thiruppugazh as the great sacred versus.
(Maha vakkiam) Those who recite
Thiruppugazh and follow its ideals are
assured of a life of happiness and
prosperity. As the anbar renders
Thiruppugal with full knowledge of its under lying truth, he introspects within and gets elevated to a Supreme state of truth,consciousness and bliss.( sath, chith, Ananda).This is the highest state where the mind subsides in the heart and individual ceases to exist and one remains in pure consciousness of self.(Atman)."“There is growing interest to study Thiruppugazh. The eternal truth contained in Thirupugazh should be spread all over. The message it carries should reach all. The songs should reach the ears of all that is all. Let us carry the philosophy of Thiruppugazh in our daily life.
— Guruji A.S. Raghavan

