நலமுற நாடு; திருப்புகழ் பாடு...
“பத்மபூஷன்” திருமதி. சுதா ரகுநாதன், சென்னை.
கந்தா என்றழைக்க கர்மவினை அகலும்
குமரா என்றழைக்க குன்றாவளம் பெருகும்
கார்த்திகேயா என்றழைக்க காலன் வெகுதூரம்
சண்முகா என்றழைக்கச் சங்கடம் ஓடிடும்
ஆம்! மால் முருகன் முருகனை வணங்கினால் தீராவினைகள் எல்லாம் தீரும். அதுவும் திருப்புகழ் பாடி துதித்தால் கேட்டதற்கு மேலாக மேன்மை அளிப்பான். முருகன் தன் அடியார்களுக்கு என்றும் காவலாக இருப்பான்.குமரகுருபரர், முத்துஸ்வாமி தீட்சிதர், பாம்பன் ஸ்வாமிகள், பாலறாவாயன், கிருபானந்த வாரியார் போன்றோர் முருகன் அருளுக்குப் பாத்திரமானவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். திருப்புகழ் என் வாழ்விலும் பல அற்புதமான அனுபவங்களை எனக்கு வழங்கியுள்ளது. எனவே, யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற எண்ணத்தில்
‘நலமுற நாடு திருப்புகழ் பாடு’
என்னும் தலைப்பில் அருணகிரிநாதர், அவரின் திருப்புகழ், மற்றும் என் அனுபவங்களை இனனத்துக் கட்டுரை எழுதியுள்ளேன். படித்துப் பயன் பெறுக.
அருணகிரிநாதர்:
நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை உறையும் முருகப்பெருமானால் ஆட்கொள்ளப்பட்டவர். அவனருளால் திருப்புகழ் பாடும் பேறு பெற்றவர். முத்துக்குமரன் முத்து என்று அடியெடுத்துக் கொடுக்க, முத்து முத்தான பாடல்கள் இயற்றியவர்.
படைவீடுகளில் குடிகொண்ட குமரனையும் மற்றும் ஆங்காங்கே உறைந்து அருள்பாலிக்கும் ஆறுமுகனைச் சந்தத்தமிழால் அபிஷேகம் செய்தவர். எல்லாப் பாடல்களும் வடிவேலன் குறித்தவை என்றாலும் ஆங்காங்கு இராமாயண, மகாபாரத நிகழ்வுகளை அதி அற்புதமாகப் புகுத்தி, சந்த நயம் மாறாமல் பாக்கள் புனையும் இவர்தம் வல்லமையைக் கூறியே ஆகவேண்டும்.
உதாரணமாக முதல் பாடல் முத்தைத்தரு.....என்பதில்
‘பத்துத் தலை தத்தக் கனணதொடு....’
இவ்வரிகளில் இராமபிரான் இராவணனை வீழ்த்திய சம்பவத்தை எழுதியுள்ளார்.
திருப்புகழ்:
தமிழ் இலக்கியத்தில் சந்தம் என்ற நயம் மட்டுமே முழுமையாக உள்ள ஒரு நூல் உண்டு என்று சொன்னால் சந்தேகம் இல்லாமல் திருப்புகழ் என்று துணிந்து கூறலாம். இதனுள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சந்தநயங்கள் உள்ளன.
இந்நூலைக் கற்பவர்கள் வேதம், சகலவித்தை, ஞானநூல் முதலியவற்றைக் கற்காமல் உய்யலாம் என்கிறார் முருகனருள் பெற்ற ஒருவர்.
புலவர்களிடத்து அன்புடையான் முருகன் என்ற எண்ணத்தில் அருணகிரிநாதர்
'செஞ்சொல் புலவர்க்கு அன்புற்ற திருச்செந்தில் குமரப் பெருமானே‘ என்று போற்றுகிறார். மேலும், தான் அறிந்தோ அறியாமலோ செய்த பிழைகளைப் பொறுத்து ரக்ஷிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வதைப் பார்க்கும் போதும் அமுதமாய்த் திகழும் திருப்புகழைப் பார்க்கும் போதும் சிவபாலன், பார்வதி நேசன் முருகப்பெருமான், தான் செய்த செயல் தவறு என்று உணர்ந்தால் அடுத்த கணமே அருட் காட்சி நல்கி காக்கவல்லான் என்று நம்பிக்கை உண்டாகும் விதத்தில் பாடல்கள் உள்ளன.
‘பல துன்பம் உழன்று கலங்கிய சிறியன் புலையன்....கழிந்திட வேந்தரும் புரிவாயே’
என்று திருப்பரங்குன்றம் முருகன் துதிக்கப்படுகிறார்.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமான நோய் நீக்கவல்ல அருமருந்து என்ற உண்மையை ஆணித்தரமாக இங்குப் பதிவிட விரும்புகிறேன்.
என்னை ஈர்த்த திருப்புகழ்:
திருப்புகழ் என்னை ஈர்த்ததா? இல்லை.. நான் திருப்புகழால் ஈர்க்கப்பட்டேனா? இரண்டுமே சரி. நான் இராகம் என்றால் திருப்புகழ் பாக்கள் லயம் (சந்தம்). இரண்டும் பொருந்தினால் தான் இசை ஒளிரும். இந்த ஈர்ப்பு எங்கு ஏற்பட்டது? கடந்த இரண்டாயிரமாவது ஆண்டு நார்வேயில் கச்சேரி முடிந்ததும் பக்கவாத்தியக் காரர்களோடு இயற்கையழகை இரசித்துக் கொண்டிருந்த வேளையில் அருமருந்தாய் அகிலம் காக்கும் பொக்கிஷம் திருப்புகழை மக்கள் நலன் கருதி இசைத்து வெளியிட விரும்பினோம். முருகனின் பேரருளால் அபார உச்சியை அந்த இசைத்தட்டு (CD) எட்டியதை இப்போது நினைத்தாலும் மனம் மகிழ்ச்சி கொள்கிறது.
மக்களை ஈர்த்த திருப்புகழ்:
இப்படியாக வெளிவந்த திருப்புகழ் பாடல்களைக் கேட்ட அனைவரும் அந்த ஆனந்த வெள்ளத்தில் மூழ்கியது மட்டுமின்றி பயனாய் பேரானந்தம் கொண்டனர். ஆமாம்! பாடப்பட்டவை அனைத்தும் தீராப்பிணி போக்குவன. இதனைக் கேட்டவர்கள் இல்லாமை, கல்லாமை, அறியாமை, இன்னதென அறியாத நோயுற்றோர் ...எனப்பலரும் நலன் பெற்றதை முருகன் சாட்சியாகப் பதிவிட்டனர். இன்னமும் அது தொடர்கிறது என்பதைச் சொல்ல விரும்புகிறேன்.
கேட்டதை அளிக்கும் ஆறுமுகன்:
சிறுவாபுரி உறை முருகன் நிலத்தொடர்பான அனைத்துச் சிக்கல்களை நீக்குபவன் என்று இத்தல முருகன் பெருமையை அருணகிரிநாதர் குறித்துள்ளார். அதில் முழு நம்பிக்கை வைத்து, குறிப்பிட்ட அந்தத் திருப்புகழைப் பலமுறை பாடி இப்போது நான் வசிக்கும் இல்லம் கிடைக்கப்பெற்றேன். இந்த உண்மையை என்னைச் சேர்ந்தவர்களிடம் சொல்ல, அவர்களும் பாடிப் பயன் பெற்றனர் என்றால், இதைவிட திருப்புகழ் மகிமையைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
அகிலம் உய்ய அருமருந்து
கன்னல் போன்ற சந்தச்சாறு
அதுவே முருகன் திருப்புகழாறு
இன்னல் நீக்கும் பெருவிருந்து
பக்தியிசை பாயும் பாலாறு
நாளுமோதி பெறுக பதினாறு

