முதல்வர், திவ்யா கலை அறிவியல் கல்லூரி, திருவண்ணாமலை.
கந்தனை வந்தனை செய்து சந்தத்தை தனக்குச் சொந்தமாக்கியவர் அருணகிரிநாதர். உலக இசையியல் அறிஞர்கள் அனைவரும் இராகமாலிகை பாட இவரோ தாளமாளிகையை அமைத்துக் காட்டியுள்ளார். இவர் மனதால் உத்தமனாகவும், மதியால் வித்தகனாகவும் விளங்கி, உலகோரையும் மாற்றச்செய்தார். சங்க காலத்தில் வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா எனும் நால்வகைப் பாவிற்கு முறையே செப்பலோசை, அகவலோசை, தூங்கலோசை, துள்ளலோசை இருந்தன. பின்பு பதினைந்தாம் நூற்றாண்டில் தோன்றிய சந்தக்கவி தம் திருப்புகழ் முழுவதையும் சந்தம் எனும் புதுவகையான இசைவடிவத்தைக் கொண்டு படைத்தருளினார். இவருக்கு பின்வந்த சென்னிகுளம்
அண்ணாமலை ரெட்டியார் சிந்து எனும் வடிவத்தைக் கொண்டு காவடிச்சிந்து பாடினார். பின்னர் அதுவே பதமாக மாறியது. காமக்கூர் கந்தசாமிப் பிள்ளை வில்வாரணி முருகன் மீது நட்சத்திரக்குன்ற வழிநடைப்பதம் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என மூவகைப்படும். இதனைத்தான் முத்தமிழால் வைதாரையும் வாழவைப்பான் என்று அருணகிரிநாதர் பாடினார்.
மனிதன் வெளிப்படுத்த நினைக்கும் கருத்துக்களைக் கேட்போர் விரும்பி ஏற்றுக்கொள்ளும் வண்ணம் இனிய ஓசையோடு கூடிய சொற்களால் புலப்படுத்துவது இசைத்தமிழ். மூலாதாரத்தில் தொடங்கிய எழுத்தோசை பண் என்னும் பெயராக மாறுகிறது. இயலோடு இன்னோசையும் இணைந்து இசைத்தலால் இசை என்று பெயர் பெற்றது.
மனித மனத்தின்மீதும் அதிலெழும் உணர்வுகள் மீதும் தாக்கம் ஏற்படுத்துவதில் ஏனைய கலை வடிவங்களைக் காட்டிலும் அதிக ஆற்றல் படைத்தது இசையே. இவ்விசை சமயத்தில் அதிக ஆளுமையை குறிப்பாக ஆண்டவன் மீதும் அடியார் மீதும் மற்றையோர்மீதும் செலுத்தியுள்ளது. செலுத்தியும் வருகிறது. காயாக உள்ள சமயவியலை கனியான ஆன்மீகமாக மாற்றுவது இசையே.
நாட்டிற்கும் மொழிக்கும் இடையேயான உறவினையும், மண்ணின் மனத்தையும், மாந்தர்தம் குணத்தையும் அடையாளப்படுத்தி நிற்பது இசையாகும். சங்க இலக்கிய நூல்களில் கலித்தொகை, பரிபாடல் இரண்டிலும் இசை தலையெடுக்க முயன்றது. அதனால்தான் ஐவகை நிலங்களும், இசை சார்ந்த பண்களையும், இசைக் கருவிகளையும் பதிவு செய்தன. பின்பு பக்தி இலக்கியங்களிலும் சிற்றிலக்கியங்களிலும் வெளிப்படத் தொடங்கியது. அனைத்து சமயங்களும் இசையால் தமிழை வளர்த்தன. குறிப்பாக பக்தி இலக்கியங்கள் இசைக்குச் செய்த தொண்டு அளவிட முடியாதது.
மக்களது வாழ்வோடு மிக நெருங்கிய தொடர்புடையதாக விளங்கும் இசை தாலாட்டு முதல் ஒப்பாரி வரை (நீலாம்பரி முதல் முகாரி வரை) மனிதவாழ்வில் பின்னிப் பிணைந்துள்ளது. நாட்டுப்புற இசையாக அரும்பி, பிறகு நகர்ப்புற வட இந்திய (இந்துஸ்தானி இசை) இசையாக விரிந்து, பின்பு மேற்கத்திய இசையாக பரிணாமம் கொண்டது எனில் மிகையன்று. எனவேதான் சமயக்குரவர் நால்வரும், பின் வந்த அடியார்களும், கீர்த்தனைகள் இயற்றிய பெருமக்களும் இசையை சிறப்பித்து அதன் வலிமையான அருளாற்றலை உலகிற்கு உணர்த்தினர்.
இசை என்பது ஒருவகை ஓசை. இந்த ஓசை உலகெங்கும் பரவியுள்ளது. இறைவனால் படைக்கப்பட்டுள்ள உயிரினங்கள், மிருகங்கள், பறவைகள், கடல்வாழ் உயிரிகள், தாவரங்கள் என அனைத்தின் இசையைக் காட்டிலும் மனிதன் வாயில் எழும் இசைக்கு 'நாதம்' என்று பெயர். 'நாதவிந்து கலாதி நமோ நம' என்பது நமதையா வாக்கு. இந்த நாதம் மனிதத் தொப்புளிலிருந்து மெல்லியதாக வெளிவரும்போது ‘மந்தஸ்தாயி’ என்றும் தொண்டைக்கு வரும்போது ‘மத்தியஸ்தாயி’ என்றும் செவிப்புலத்திற்கு வரும்போது தாரஸ்தாயி என்றும் பெயர் பெறுகிறது. ஏழு சுவரங்களோடு ஏழு தாளங்களான துருவதாளம், மட்டியதாளம், ரூபகதாளம், ஜம்பதாளம், திரிபுடதாளம், அடதாளம், ஏகதாளம் சேர்ந்து எழுபத்திரண்டு மேளகர்த்தா இராகங்கள் பிறக்கின்றன.
வாய்ப்பாட்டு, குழல், யாழ் முதலான இசைக் கருவிகளின் ஒலி அவற்றின் கால அளவினைப் புலப்படுத்தும் தாளம் ஆகிய மூன்றும் ஒத்திசைத்து இயங்குவதே இசை என்பர் சான்றோர்.
சந்தம்-விளக்கம்:
சந்தம் என்பது சந்திக்கும் தன்மை என்னும் பொருளுடையது. எழுத்துக்கள் ஓசைநயம் தோன்ற சந்திப்பது 'சந்தம்' என்பர். சந்திப்பது சந்து. மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தை முச்சந்தி என்பர் பெரியோர். சந்து+அம் = சந்தம். சந்து என்ற சொல்லின் அடிப்படையாகப் பிறந்ததே சந்தம். தொல்காப்பியர் சந்தத்தை வண்ணம் என்று குறிப்பிடுகிறார். தமிழிசைச் சந்தங்கள் எழுத்தளவு கொண்டவை. சந்த அமைப்பிற்கு அடிப்படையாக அமைவன ஆறு உறுப்புகள். அவை, சந்தம், துள்ளல், குழிப்பு, தொங்கல், கலை, அடி என அறுவகைப்படும்.
நன்னூல், நூலிற்கு பத்து அழகுகளைக் குறிப்பிடுகின்றது. அவற்றுள் ஓசையுடைமையும் ஒன்று. அதனை உருவாக்குவது சந்தம்.
'பண்ணில் ஓசை பழத்தினில் இன்சுவை' என்பது அப்பர் வாக்கு. 'பண்ணும் பதமேழும் பலவோசைத் தமிழவையும்' என்று பாடுகிறார் சம்பந்தர். இறைவனை இசையால் பரவும் முறையால் ஓசையை உயிராக எண்ணி வாழ்ந்துள்ளனர். பக்தி இலக்கிய ஆர்வலர்கள். 'ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே' என்று திருத்தாண்டகமும், 'வழங்கோசை வையம்பெறும்' என்றும் கம்பரும் ஓசையை சிறப்பித்துள்ளனர்.
'சந்தம்' என்பது ஓசைகளை அளக்கின்ற கருவி. ஒலிப்பண்புகளை வரையறுத்துக்காட்டுவது எழுத்தினுடைய வன்மை மென்மைகளை நெறிப்படுத்துவது. இயல், இசை, நாடகத் துறையில் உயிர் நிலையாக நின்று உணர்ச்சிகளை பெருக்கிக் காட்டுவது. ஒலிகள் ஆடுகின்ற அரங்கம் என்று பலவாறு அறிஞர்கள் வரையறை செய்கின்றனர்.
ஓசையை இனிமைபட உரைப்பதும் வடிவத்தால் பாட்டை அழகு செய்வதும் ஓசை வேற்றுமையை அளவிட்டு வரையறுப்பதும் ஆகிய ஓசையுடைமை, அழகுடைமை எனும் முப்பண்புகளைச் சந்தம் காட்டுகின்றது. நான்கெழுத்து முதலாக இருபத்தாறெழுத்தளவும் உயர்ந்த இருபத்து மூன்றடியானும் வந்து தம்முள் ஒத்தும், குருவும் லகுவும் ஒத்தும் வந்தன அளவியற் சந்தம். ஒவ்வாது வருவன அளவழிச் சந்தம், தலையாகு சந்தம், இடையாகு சந்தம், கடையாகு சந்தம் என்று யாப்பருங்கல விருத்தி விளக்குகின்றது. இது எழுத்து வகையால் இருபத்தாறு பேதமாம். அவை உத்தமம், அதியுத்தமம், மத்திமம், நிலை நன்னிலை, காயத்திரி, உண்டி, அனுட்டிப்பு, பகுதி, வனப்பு, சயதி, அதிசயதி சக்குவரி, அதிசக்குவரி, ஆடி, அதியாடி, திருதி, அதிதிருதி, கிருதி, பிரகுருதி, ஆகிருத்தி, விக்குதி, சங்கிருதி, அபிகிருதி, உற்கிருதி என்பனவாம் என்று வீரசோழியமும் சந்தத்திற்கு விளக்கம் கூறியுள்ளமையை ஆ.சிங்காரவேலு முதலியார் எடுத்துக்காட்டியுள்ளார்.
சந்த வகைகள்:
தத்த, தாத்த, தந்த, தாந்த, தன, தான, தன்ன, தய்ய என்பன எண்வகைச் சந்தங்கள் ஆகும். இவை முதற் சந்தமாகும். இவை எட்டும் ஒலி நீண்டு ஈற்றில் ஆகாரம் பெறும்போது தத்தா, தாத்தா, தந்தா, தாந்தா, தனா, தானா, தன்னா, தய்யா என எண்வகை வடிவங்களைப் பெறும். இவை சார்புச் சந்தம் எனப்படும். முதற் சந்தம் எட்டும், சார்புச் சந்தம் எட்டும் சேர்ந்து பதினாறு முழுச் சந்தங்களாயின. இந்த முழுச் சந்தங்கள் சந்தப் பாடல்களின் ஓசை வாய்பாடாக நின்று சந்தங்களைக் குழைப்பதால் 'சந்தக் குழிப்பு' எனப் பெயர் பெற்றன.
மேற்சொன்ன தனிச்சந்தம் (அ) முதற் சந்தத்திலிருந்து கூட்டுச் சந்தங்களை உருவாக்கலாம். 'தத்ததன' என்பது ஒரு கூட்டுச் சந்தம். இதில் தத்த என்பது ஒரு சந்தம். தன என்பது ஒரு சந்தம். இரண்டும் சேர்ந்து தத்ததன என்ற ஒரு கூட்டுச் சந்தம் உருவாகும்.
'தத்தவும் தாத்தவும் தந்தவும் தாந்தவும்
தனவும் தானவும் தன்னவும் தய்யவும்
தத்தா என்பதின் நீடலும் அடங்கும்
எண்வகைச் சந்தம் என்பார் பெரியோர்'
என்று எண்வகை முதற்சந்தங்களையும் சார்புச் சந்தங்களையும் வகைப்படுத்துகிறார் வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள்.
வண்ணச்சந்தம்:
சில சந்தங்கள் ஒன்று சேர்வது துள்ளல். சில துள்ளல்கள் ஒன்று சேர்வது ஒரு குழிப்பு. மூன்று குழிப்பும் ஒரு தொங்கலும் சேர்ந்தது ஒரு கலை, இரண்டு கலைகள் ஒன்று சேர்ந்தது ஒரு அடி. எட்டுக்கலைகள் சேர்ந்து உண்டாவது ஒரு வண்ணப்பா. வண்ணப்பாவில் உள்ள எட்டுக் கலைகளுள் முதல் நான்கு கலைகள் ஒரு பகுப்பாகவும், பின் நான்கு கலைகள் மற்றோர் பகுப்பாகவும் கொள்ளப்படும். ஒரு பகுப்பில் துறைபற்றிய செய்தியும், மற்றோர் பகுதியில் உள்ள நான்கனுள் முதல் மூன்று கலைகளில் தலைவனின் புகழும் நான்காம் கலையினுள் தலைவனது மலை, நாடு, ஊர் முதலியனவற்றின் அழகும் கூறப்படும்.
வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் தான் எழுதிய 'வண்ணத்தியல்பு' என்ற நூலில் மேற்கண்டவற்றிற்கு இலக்கணம் வகுத்துள்ளார். அவை வருமாறு:
‘சில்வகைச் சந்தப் புணர்ப்போர் துள்ளல்!’
‘பல்வகைத் துள்ளற் புணர்போர் குழிப்பே!’
‘குழிப்பொரு மூன்றும் கூடிய பின்னர்’
‘தொங்கல் தாழிசைத் துள்ளலொன் றிசைக்கிற்
கலையொன் றாமெனக் கழறுவர் புலவோர்!'
‘எண்கலை புணர்ப்போர் வண்ணப் பாவே’
‘முந்திய பகுப்பின் கலையோர் நான்கில்
தலைவன் தன்புகழ் மூன்றிற் கூறிமற்
றொன்றில் அன்னவன் வரைநாட் பணிசொற்று
ஏனைய கலைநான்கிடத்தும் பல்வகைத்
துறையில் ஒன்றைத் துகளறக் கூறல்
வண்ணப்பாவின் வழக்கெனத் தகுமே!’
மேற்கண்ட அனைத்து இலக்கணங்களையும் தன்னகத்தே கொண்டது அருணகிரிநாதரின் திருப்புகழ். இவ்விலக்கணங்களை திருப்புகழ் பாடல் ஒன்றிற்கு பொருத்தும்போது,
‘முத்தைத்தரு பத்தித்திருநகை
அத்திதக்கிறை சக்திச்சரவண
முத்திக்கொரு வித்துக்குருப - எனவோதும்’
இந்தக் கலையில் மூன்று குழிப்புகளும் ஒரு தொங்கலும் அமைந்துள்ளன. முத்தைத்தரு என்பது ஒரு துள்ளல். பத்தித்திருநகை என்பது இன்னொரு துள்ளல். இவ்விரண்டு துள்ளலும் சேர்ந்து 'முத்தைத்திரு பத்தித்திருநகை' என்ற ஒரு குழிப்பாக மாறுகின்றது. கிட்டத்தட்ட தளைபோன்ற ஒரு அமைப்பினை இங்கே துள்ளல் என்று குறித்திருக்கின்றார்கள். சீர்போன்ற அமைப்பு சந்தம் என்று குறிக்கப்பட்டிருக்கின்றது. முத்தைத்தரு பத்தித்திருநகை என்பது ஒரு குழிப்பு. அத்திக்கிரை சக்திச் சரவண என்பது இரண்டாவது குழிப்பு. முத்திக்கொரு வித்துக்குருபர என்பது மூன்றாவது குழிப்பு. எனவோதும் என்பது தொங்கல். இந்த மூன்று குழிப்புகளும் ஒரு தொங்கலும் சேர்ந்து ஒரு கலையை உருவாக்குகின்றன. வண்ணச் சந்த விருத்தத்தில் இருண்டு கலைகள் கொண்டது ஒரு அடி. ஒவ்வொரு வண்ணச் சந்த விருத்தமும் எட்டுக்கலைகள் அல்லது நான்கு அடிகளைக் கொண்டு அமையும். அருணகிரிநாதரின் அனைத்துப் பாடல்களும் இவ்வண்ணம் அமைந்துள்ளன என்பது நோக்கத்தக்கது.
இவ்வாறு அருணகிரிநாதர் உருவாக்கிய திருப்புகழ்ப் பாடல்களைப் பகுத்து சந்த ஆராய்ச்சி செய்த அறிஞர்கள் 1307 பாடல்களில் 1008க்கும் மேற்பட்ட சந்தவேறுபாடுகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர் என்பது அறியத்தக்கது.
'வாக்கிற்கு அருணகிரி', 'கருணைக்கு அருணகிரி' என்றழைக்கப்பட்ட நம் கந்தன் தந்த சொந்தன் ‘சந்தச் சக்கரவர்த்தி’ யாகவும் விளங்குகிறார் என்பது சிறப்பு.
இவரை ‘கந்தன் புகழ்பாடும் சந்தன்’ என்று அழைப்பது சாலவே பொருந்தும்.
★★★
முருகன் அருள் பெற்ற மெய்யடியாராகிய அருணகிரியார் எல்லா விடத்தும் முருகைக் கண்டு, குழைந்து குழைந்துருகு முளத்தில் பெருக்கெடுத்து ஓடும் இன்ப வெள்ளத்திற் றோய்ந்து, பாடிய திருப்புகழை என்னென்பேன்? என்னென்பேன்? திருப்புகழ் சந்த அலை வீசும் செந்தமிழ்க் கடல் அன்றோ? சிவபெருமானை வழிபட்டு நால்வர் தமிழ் வேதம் பாடினர். திருமாலை வழிபட்டு பன்னிருவர் தமிழ் வேத மோதினர். முருகனை வழிபட்டு அருணகிரிநாதர் தமிழ் வேதம் அருளினார். அருணகிரியாரின் திருப்புகழும் ஏனையப் பாடல்களும் தமிழ் மறையே ஆகும். செம்மொழியில் சிறந்த அருணகிரிநாதர் அருளிய திருப்புகழை ஓதும் போதும், பிறர் ஓத கேட்கும் போதும், முருகக் கடவுளின் நுண்ணிய வடிவம் அகத்தில் புலனாவது போன்ற ஒரு தோற்றமும், ஒருவித அன்பும், இன்ப எழுச்சி மேலீடும் நிகழ்வதைப் பெறலாம்.
— தமிழ்த் தென்றல் திரு.வி. கல்யாணசுந்தரனார்

