திருவண்ணாமலைக் கோபுர வாயிலில் தவம் இருந்த அருணகிரியார் அந்த கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கின. அந்தக் கரங்களுக்குச் சொந்தக்காரர் வேறு யாரும் இல்லை. குன்றுதோறாடும் குமரனே ஆகும். தன் கைகளால் அவரைத் தாங்கி, “அருணகிரி! நில்!” என்றும் சொன்னார். திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யாரோ எனப் பார்க்க வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். மயில்வாகனனின் தரிசனம் கிடைத்த அருணகிரி வியப்பின் உச்சியிலிருந்து மீளாமல் தவிக்க, முருகன் அவரை, “அருணகிரிநாதரே! “என அழைத்துத் தம் வேலால் அவர்
நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது.
அதல சேடனார் ஆட என்ற திருப்புகழ்ப் பாடல் அருணகிரியார் வாழ்வில் மகத்தானது. சம்பந்தாண்டான் என்பவனோடு வாது செய்தபோது முருகனை திருவண்ணாமலை அரசன் பிரபுட தேவராஜனின் சபையில் வரவழைக்கப் பாடிய பாடல் இது. அருணகிரியார் கந்தவேளை மனதில் தியானித்துப் பின்னர் அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் வடக்குப் பக்கம் இருக்கும் மண்டபத்தின் வடகீழ்த் தம்பத்தில் முருகன் காட்சி அளிக்கும்படி வேண்டிக் கொள்ள முருகன் வேலும் மயிலும் விளங்க நடனக்கோலத்திலேயே சபையில் தோன்றி தரிசனம் தந்தான்.
இப்போது அருணகிரிநாதருக்கு திருவண்ணாமலையிலேயே ஓர் நினைவிடம் கட்ட ஏற்பாடுகள் நடப்பது பற்றி மகிழ்ச்சியடைகிறேன். அமைப்பாளர்கள் என்னை திருப்புகழ் விரிவுரை கௌமாரம் என்னும் மின்னலைப் பகுதியில் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆண்டுகளுக்கு முன்பு உரை எழுதிய விவரங்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் பேரில் இதை எழுதுகிறேன்.
எனக்கு இப்போது 86 வயது ஆகிறது. உடல் நிலை சரியில்லை. நடமாட்டமும் இல்லாமல் இருக்கிறேன். என்றாலும் முருகன் பணி என்பதால் ஓரளவு உடல் வலிமையை அவன் கொடுத்துள்ளதால் எழுதுகிறேன் .
என் சொந்த ஊர் ஸ்ரீவைகுண்டம். குமரகுருபர ஸ்வாமிகள் பிறந்த ஊர். ஊமையாய் இருந்த குழந்தையை திருச்செந்தூருக்கு அழைத்து கந்தர் கலிவெண்பாவைப் பாடவைத்த முருகன் சிறுவயது முதலே என்னை ஆட்கொண்டான். எனக்கு 12 வயது இருக்கும் போது பித்துக்குளி முருகதாஸ் அவர்களின் பஜனையும் திருப்புகழ் பாடல்களும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. அவரது கைத்தல நிறைகனி, உம்பர்தரு, ஏறுமயில், முத்தைத்தரு முதலிய பாடல்கள் என் மனதில் குடிகொண்டன. பிறகு என் 35-வது வயதில் உத்தியோக நிமித்தம் நான் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றேன். அங்கு 1972-ல் பிள்ளையார் கோயில் நியூயார்க் நகரில் அமைக்கும் பணியில் டாக்டர் அழகப்பனுடன் துணைச்செயலாளராக பணிபுரிந்தபோது அங்கு நடக்கும் திருப்புகழ் பஜனையில் ஈடுபாடு கொண்டேன். அப்போது 1973-ல் ஃபிலடல்ஃபியா நகரில் டி.என்.பாலா என்பவர் திருப்புகழ் பஜனையில் மிகப் பிரசித்தி ஆனவரின் அறிமுகம் கிட்டியது. அவர் இசைக் கலைஞர். மதுரை மணி அவர்களின் சிஷ்யர். சிறந்த பாடலாசிரியர். அவரது பாடலான “விளையாட இது நேரமா” ஷண்முகப்ரியா ராகத்தில் மகாராஜபுரம் சந்தானம் அவர்களால் பாடப்பட்டு மிகப் பிரசித்தியான பாடல். பாலா அவர்களின் திருப்புகழ் பஜனை கோஷ்டியில் 35 பேர்கள். நானும் என் மனைவியும் உறுப்பினர்கள். பல ஊர்களுக்குச் சென்று திருப்புகழைப் பாடினோம். பஜனைக்கு இடையில் சில முக்கியமான திருப்புகழ்ப் பாடல்களுக்கு என்னை விளக்கம் சொல்லும்படியாக பாலா பணித்தார். வாஷிங்டன், டொராண்டோ நியூயார்க் முருகன் சன்னிதிகளில் எங்கள் திருப்புகழ் பஜனைகள் சிறப்பாக நடந்தன.
பாலா கம்ப்யூட்டர் மூலமாக நிறைய மாணவ மாணவிகளுக்கு 1990 முதல் திருப்புகழ் கற்றுத்தந்தார். 2002-ல் நான் ஓய்வுபெற்று நியூயார்க் திரும்பியதும் ஒரு நாள் பாலா என்னிடம் மிகவும் குறைப்பட்டுக்கொண்டிருந்தார். அதாவது அமெரிக்கா, கனடாவில் உள்ள தமிழ் மாணவ மாணவிகளுக்கு திருப்புகழ் மிகக் கடினமாக உள்ளதாகவும், அர்த்தம் புரியாததால் அவர்களுக்கு சிரமமாக இருப்பதாகவும் கூறி என்னை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் சொல்லி பாலா ஆணையிட்டார். நான் கேட்டேன் “கைத்தல நிறைகனியில்” தொடங்கட்டுமா" என்று. பாலா கூறினார்: அகரத்திலிருந்து ஆரம்பியுங்களேன்; முதலில் “அகரமும் ஆகி” தொடங்குங்கள் என்றார். மறு நாளே, பாலாவுக்கு அகரமும் ஆகி ஆங்கில மொழிபெயர்ப்பும், தமிழ் அர்த்தமும் அனுப்பினேன். அன்று தொடங்கிய பணி பின்னர் மலேஷியாவில் www.kaumaram.com http://www.kaumaram.com நடத்தும் சேந்தன், வள்ளி அவர்களின் கவனத்துக்கு வந்தது. அவர்கள் என்னைச் சென்னையில் சந்தித்து கௌமாரம் வலைத்தளத்தில் தினசரி எழுதுமாறு கேட்டுக்கொண்டனர்.
அதேசமயம் குருஜி ஏ.எஸ்.ராகவன் அவர்களின் திருப்புகழ் அன்பர்கள் குழு மும்முரமாக திருப்புகழ் இசை வழிபாடு செய்துகொண்டிருந்தார்கள். டில்லியில் அவர்களது வழிபாட்டில் கலந்துகொண்டு திருப்புகழ் உரை ஆற்றும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது அவர்களது இசை வழிபாடு புத்தகம் 485 பாடல்களைக் கொண்டது. நான் 485 பாடல்களுக்கு ஆங்கில உரை எழுதி முடித்ததும் பிரபல எழுத்தாளர் 1930-களில் மணிக்கொடி என்ற பத்திரிகை ஆசிரியராக இருந்த திரு பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி மாமா) அவர்களை அணுகி நான் புத்தகம் போட விரும்புகிறேன், தாங்கள் முன்னுரை எழுதினால் அதை என்னுடைய பாக்கியமாகக் கருதுவேன் என்றேன். என் மொழிபெயர்ப்பை மதிப்பிட மிகக் கஷ்டமான பாடலான சுவாமிமலை பாடல் “நாவேறு பாமணத்த” பாடலின் தமிழ்/ ஆங்கில உரைகளைப் பரிசீலித்தார். நன்றாக இருக்கிறது என்று சொன்னார். உடனேயே “என்ன, 485 பாடல்களுக்கு மட்டும் உரை எழுதியுள்ளாயே, அருணகிரினாதர் எத்தனை திருப்புகழ் பாட்டு எழுதியுள்ளார்?” என்று கேட்டார். நமக்கு கிடைத்திருப்பது 1300 சொச்சம்” என்றேன். பாக்கி எங்கே என்றவரிடம் “குருஜி ராகவன் 485க்கு மட்டும் இசை அமைத்துள்ளார். பாக்கி பாடல்கள் ஆண்களும் பெண்களும் கலந்து பாடும்படியாக இல்லை” என்றேன். “நீயோ நானோ குருஜி ராகவனோ அப்படி தீர்மானிக்க முடியாது. முதலில் அத்தனை பாட்டுகளையும் மொழிபெயர்த்து வா. அப்புறம் நான் முகவுரை தருகிறேன்” என்றி சிட்டிமாமா கூறிவிட்டார். இந்த சம்பாஷணை நடக்கும்போது மாமாக்கு வயது 96. அவர் உத்தரவுப்படி நான் அத்தனைப் பாடல்களுக்கும் உரை எழுதிமுடிக்கும்போது சிட்டிமாமா அமரர் ஆகிவிட்டார். அவருக்கு பதிலாக அவரது மருமகன் திரு கே.ஆர்.ஏ. நரசய்யா முன்னுரை எழுதிக்கொடுத்திருக்கிறார்.
அருணகிரிநாதர் நூல்கள்
- கந்தர் அந்தாதி (102 பாடல்கள்) * கந்தர் அலங்காரம் (108 பாடல்கள்)
- கந்தரனுபூதி (52 பாடல்கள்) * திருப்புகழ் (1307 பாடல்கள்)
- சேவல் விருத்தம் (11 பாடல்கள்) * மயில் விருத்தம் (11 பாடல்கள்)
- வேல் விருத்தம் (11 பாடல்கள்) * திருவெழுகூற்றிருக்கை.
திருப்புகழைப் போல் இதர நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளேன். இவை இவ்வாண்டு இறுதியில் புத்தகங்களாக வெளியிட அருணகிரிநாதரின் திருவருளை வேண்டுகிறேன்.
★★★

