சித்ரக் கவித்துவத் தமிழில் தேனூறும் திருப்புகழோதி குன்றுதோறாடும் குமரனை குறிஞ்சிக் கடவுளாம் கந்தனை வழிபட்ட அருளாளன் அருணகிரிநாதன்..அற்புதத் திருப்புகழால் இவ்வகண்ட பாரத தேசத்தின் பல்வேறு சைவத் தலங்களுக்குச் சென்று அங்கெல்லாம் இறைவனை வழிபட்டு இவ்வுலகோர் உய்ய வழிகாட்டிய கருணைக்கோர் அருணகிரி அவர். அருணகிரியார் பாடியதாகப் பதினாறாயிரம் பாக்கள் என்றாலும் நமக்கு இன்று கிடைத்துள்ளவை ஆயிரத்து முன்னூற்று நாற்பது பாடல்கள் மட்டுமே. தேவாலயம் தோறுமுள்ள தமிழ்க்கடவுளை தலம் வாரியாக தரிசிக்க தணிகைமணி அவர்கள் முருகவேள் பன்னிரு திருமுறைகளில் முறையே ஆறு படைவீடுகள், பஞ்சபூதத்தலங்கள்,காசி முதலான தலங்கள், பொதுப்பாடல்கள் என்று வகுத்துள்ளார் இதில் காஞ்சி முதலான பஞ்ச பூதத் தலங்களை பற்றி 205 பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. இதில் பொற்புக்கச்சிக் குமரனை பற்றி மட்டும் 44 திருப்புகழ்ப் பாக்கள் நமக்கு கிட்டியுள்ளன.

'புஷ்பேஷு ஜாதி,நகரேஷு காஞ்சி' என்றார் காளிதாசன்.பூக்களில் ஜாதிமல்லிகை உயர்ந்தது. நகரங்களில் உன்னதமானது காஞ்சி. அந்த காஞ்சி பஞ்ச பூதத் தலங்களில் பிருதிவி (பூமி, மண்) தலமாகும். முக்தியைத் தரக்கூடிய ஏழு புண்ணிய நகரங்கள் அயோத்யா, ஹரித்வார், காசி, துவாரகா, மதுரா, உஜ்ஜயினி, காஞ்சி. இதில் தென்னாட்டில் அமைந்த ஒரே தலம் காஞ்சி. 64 சக்தி பீடங்களில் தேவியின் நாபிஸ்தலம் காஞ்சி மாநகரம். நாபி மனிதனின் ஆறு சக்கரங்களில் ஸ்வாதிஷ்டானத்தைக் குறிக்கும். ஸ்வாதிஷ்டட்டானமென்பதே உலகியலை ஒட்டிய ஆதார சக்கரமாயிற்றே.

வேத காலத்திருந்தே காஞ்சி கல்விக்கூடமாய்த் திகழ்ந்தது. இப்பழம்பெரு பாரதத்தின் பல்கலைக் கழகங்களாகத் திகழ்ந்த நாளந்தா, பாடலிபுத்திரம் போன்று காஞ்சியும் ஞான கடிகையாகத் திகழ்ந்தது. காஞ்சியில் தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டும் இரு கண்ணெனப் போற்றி வளர்க்கப்பட்டன.

அருணகிரியாரின் 44 திருப்புகழ் பாக்களிலும், கச்சி ஏகம்பன், கம்பையாற்றில் தவம் புரி அன்னை காமாக்ஷி. பொற்கைக் கொற்றவன் குமரன், காஞ்சியின் மேற்கூறிய பெருமைகள் எல்லாவற்றையும் விரிவாகப் பார்க்கலாம்

கந்த புராணம் இயற்றிய கச்சியப்ப சிவாச்சாரியார் மற்றும் திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் தோன்றிய திருத்தலம் காஞ்சி. காஞ்சிப்பதிப் பாடல்களெல்லாமே வல்லினச்சந்தம் கொண்டவை. க, ச, ட, த, ப, ற என்ற எழுத்துக்கள் கொண்ட பாடல் வரிகள்.

“தத்தத்தத் தத்தத் தத்தத்தத்தத்தத்
தத்தத்தத் தத்தத்”
“பொக்குப்பைக் கத்தத் தொக்குப்பைக் குத்துப்
பொய்த்தெத்துத் தத்துக் குடிப்பேணி”
“தத்தத், தனதான தத்தத்தனதான
அற்றைக் கிரைதேடி அத்தத்திலுமாசை “ தமிழ் வளர்த்த தலம் என்பதைக் குறிப்பிடுகையில் “சுத்த சித்தத் தமிழ்” சுத்த த்ரய தமிழ் எனும் அருணகிரியார் தமிழ் கற்றலும் தமிழ் ஆராய்ச்சியும் ஆசிரியர்கள் மாணாக்கரிடை காந்தமும் ஊசியுமென இணைந்து தழைத்தோங்கியது என்கிறார்.

“காந்தக்கல்லும் ஊசியுமென ஆய்ந்து தமிழோதிய காஞ்சிப் பதி” என “வாய்ந்த பிடை நீடுகுலாவிய “ என்று துவங்கும் திருப்புகழில் விவரிக்கிறார்

காஞ்சி மாநகர்க்கு செல்லும் வழி என்ன என்று ஒருவன் கேட்டால் மக்கள் சொல்வார்களாம் எங்கே இளம் சிறார்கள் வேதம் பயின்று உரக்க வேதம் சொல்லும் ஒலியும், அச்சிறுவர்கள்.சொல்வதை மரங்களிலுள்ள கிளிகள் திரும்பச்சொல்லும் ஒலியும் கேட்கிறதோ அதுவே காஞ்சியாகும்.வேதம் தழைத்த இடமாதலால் “மயலோது மந்த நிலை “என்ற திருப்புகழில் ‘நறை வீசு கும்ப நீர் குட மேவு கம்பை நகர் “ஆம் வேத மந்திரங்களால் செபிக்கப்பட்டு,மணமூட்டப்பெற்ற நீர் நிறைந்த குடங்கள் கொண்ட நகரம் காஞ்சி எனவும்,இறைவியை விளிக்கும்போதெல்லாம் பனவி,அந்தணி என்றும் ஈசனை அமகரன் எனவும் அழைக்கிறார் அகார உகார மகாரம் இணைந்த ஓம்கார நாயகன் அமகரன்,

காஞ்சி தலபுராணத்தின்படி இறைவி ஒருசமயம் விளையாட்டாக இறைவனின் கண்களை மூட ப்ரபஞ்சமே இருளில் மூழ்கியது. எல்லா உயிரும் ஆழ்ந்த இன்னலுற்றபோது அன்னை காஞ்சியில் கம்பையாற்றில் மணல் லிங்கம் அமைத்து தன் தவறை நீக்கத் தவம் புரிந்தாள். அவள் தவத்தில் குழைந்த இறைவன் அம்மையைத் தன் பக்கம் பயில்வித்தான்.இந்த தலபுராணத்தை அருணகிரிநாதர்

கச்சி வந்து தன் இருளை நீக்கத் தவஞ்செய் உமையாள் (அறிவிலாப்பித்தர்)

கம்பையாற்றினில் அன்னை தவம் புரி, (வம்பறாச்சில) என்றெல்லாம் பாடுபவர். கம்பையாற்றில் வெள்ளம் பெருகியபோது மணல் லிங்கத்தை பார்வதிதேவி இறுகத்தழுவ அவள்கொங்கைக் குறி லிங்கத்தில் பதிந்ததைக் “அம் நாளங்கிதர் தமை உமையாள் சேர்ந்து” என்று சுட்டிக்காட்டுகிறார்.

காஞ்சி காமகோட்டத்தில் ஆதி சங்கரரால் ஸ்ரீ சக்ரம் ஸ்தாபிதம் செய்யப்பட்டது. இதைக் காட்டி காமாட்சியம்மன் ஸ்ரீ சக்ரத்தில் உறைபவள் என்பதை பனவி ஒன்றெட்டுச் சக்ரதலப் பெண் என அருணை முனி பாடுகிறார்.

காஞ்சியில் அன்னை அறம் வளர்ப்பவள் என்பதை 'இடபமேற் கச்சி வந்த உமையாள் குறைவற முப்பத்திரண்டு அறம் புரிகின்ற பேதை அப்பொற்றப்படி கைக்கொண்டு அறு மிரண்டும் எட்டெட்டும் வளர்க்கும் தலைவி'

என்று பாடியவர் காஞ்சி நகரமே அறம் உறு சீர் காஞ்சி என்கிறார்.

காஞ்சிப்பதியில் 108 சிவாலயங்களும் 18 வைணவ ஆலயங்களும் உள்ளன.முக்கியமான ஆலயங்களான காமாட்சியம்மன் கோயிலை “கவுரிகொட்டம்” எனவும் கச்சபேசர் ஆலயத்தை “கச்சபத்திச்சைப்படு கச்சி,'கச்சி கச்சாலை எனவும் ஏகாம்பரேசுரர் கோயிலுக்கும் காமாட்சி அம்மனின் கோயிலுக்கும் இடையே அமைந்த குமர கோட்டத்தை

கம்பவர்க்குப் புக்கவள் பக்கம் பயில் வரம் பெற்ற குமர கோட்டத்தமர்ந்த பெருமாள் என்றும் ஏகம்பனை கச்சிச் சொக்கன் எனவும் அழைப்பார் நம் பரம குரு நாதர்.

காஞ்சித் திருப்புகழில் பெரும்பான்மையான பாடல்களில் சுத்தப் பத்தியர் எனும் சொல் விரவியிருப்பதைப் பார்க்கலாம் ஆதி சங்கரர் காஞ்சியில் பீடமேறியதாலும், தொடக்ககாலம் தொட்டு, சிந்தையில் பக்தியில் உருகி, பலகாலும் பாடி வாழ்ந்த சித்தர்களும், பத்தர்களும் நிறைந்த ஊர் என்பதாலே, துதி செயும் சுத்தப் பத்தியர் துக்கங் களைபவன்
சுத்த சித்த த்தொல் பத்தர்க்கு
சுத்த சித்தத்து பத்தி பத்தியர்
சுத்தப்பத்தர்க்கு அத்தற்கு துக்கத்தை ஒழித்து
சுத்தப்பத்தரிருக்கும் குருபதம்

என்றெல்லாம் பாடும் அருணகிரியார் மாசில் அடியார்கள் வாழ்கின்ற ஊர் சென்று அங்கனே நின்று அருள் பாலிக்கும் முருகனைக் காஞ்சியில் குமரக்கோட்டப் பெருமானைத் துதிக்கிறார்.

காஞ்சியிலுள்ள ஆலயங்கள் மிகத் தொன்மையானவை.8,9 ம் நூற்றாண்டுகளில் சோழ அரசர்களாலும், பின் 11 ம் நூற்றாண்டுகளில் பல்லவ அரசர்களாலும் 13,14 ம் நூற்றாண்டுகளில் கிருஷ்ணதேவராய மன்னனாலும் புதுப்பிக்கப்பட்டவை. இவ்வாலயங்களிலுள்ள சிற்பங்களும். கட்டிடக்கலையும் மிகவும் அற்புதமானவை. சிற்பங்களின் கலை நேர்த்தியும் கோயில்களின் கட்டமைப்பும் உலக கட்டிடக்கலை மையத்தால், கைலாச நாதர் ஆலயம் “World Heritage” என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அருணகிரியார் இவ்வாலயங்களின் நேர்த்தியை சுத்த சுதைச் சித்ர, சித்ரத் திருக்கச்சிப்பதி, பணைச் சித்ரக் கலவை, பொற்சித்திர என்றெல்லாம் வியக்கிறார்.

குமர கோட்டக் கடவுள்

“பத்தியுடன் நின்று பத்தி செயுமன்பர் பத்திரம் அணிந்த கழலோன்” பத்தர்க்கு அச்சமறுத்து அன்பை அருள்பவன், பத்தர்க்கு துணை நிற்கும் புதியவன், தொண்டர்க்கு சித்தியளிப்பவன் என்று வாழ்த்தும் அருணமுனி காமக்கோட்டத்து காமாட்சியன்னையை கருதுமன்பர்க்கு சித்தி அளிப்பவள், தெளிதரும் சித்தர்க்குத் தெளிசில் கொந்து அமலை, திரிபுவனத்தைக் காண்ட நாயகி எனப் போற்றுகிறார்.

திருப்புகழில் இராமாயண மஹாபாரதக் கதைகள் ஏராளம் காஞ்சி பாடல்களிலும் இராவண வதம், சீதையை ஜனகர் பெற்றெடுத்தது போன்ற பல செய்திகள் இருப்பினும் சிவபெருமான் இராவணனுக்கு வாள் தந்த நிகழ்வினை ஒரு பாடலில் குறிப்பிடுகிறார். கொற்றத் 'துக்ர வரக்கன் தசமுகன் கைக்குக் கட்கமளிக்கும் பெரியோன்' (கனக்ரவுஞ்சத்திற் சத்தியை விட்டவன் - திருப்புகழ்)

ஞான கடிகை யாதலின் “மக்கட்குக் கூறரிதானது” எனும் திருப்புகழில் இறைதத்துவத்தை கலையறிவால் எட்ட முடியாத,தன்னிகரில்லாதது,தத்வங்களிற் கோவை படாதது என்றெல்லம் விளக்கும் அருணைமுனி காட்டும் கச்சி முருகன்,

“மனத்தின் செயலொழிந்து எட்டப்பட்டதனைச் சென்றடைதரும் பக்குவத்தை அளிப்பவன் வேதாந்தபரம சுகவீடாம் பொருள் அவன் இதவிய பாதாம்புயம் அருள்பவன் துரியமு தப்பி தத்வமனைத்தும் தொலையு மந்தத்துக்கு அப்பால் நிற்க அருள்பவன் அனேக விகற்ப விபரித மனோபாவத்துக்கரிதாய மவுன பூரித சத்ய வடிவினை மாயாமற்குட்

புகலுபவன்”

அவன் அபினவ பத்ம பாதம் வணங்குவோம் முருகா சரணம்.

★★★

  • மறையின் பொருள் கிடைக்கவில்லையே என்று கலக்கம் கொள்ளாதே. கந்தனை வேண்டு. உபதேச மொழியை உட்கொண்டிரு. உள்ளம் தெளிவடைய ஒப்பற்ற மந்திரப் பொருளை உபதேசம் பெறு. (புகரப்) திருப்புகழ்.

நன்றி - அருளாளர் அருணகிரிநாதரின் அமுத மொழிகள் - திருப்புகழ் மரமணி வெ. இராமு