திரு. T.T.K. முருகன், தொழிலதிபர், கோவை ஸ்ரீலஸ்ரீ சாது சாமிகள் அதிட்டானம்.

ஈஸ்வரனான சிவபெருமானுக்குப் 'பஞ்ச முகேஸ்வரன்' என்று ஒரு பெயர் உண்டு. ஆம்! சிவபெருமானுக்கு ஐந்து திருமுகங்கள். (ஐந்து முகங்கள் கொண்ட பரமேஸ்வரனைத் திரு வானைக்கோவில் எனும் திருத்தலத்தில் உள்ள 'பஞ்ச முகேஸ்வரர்' ஆலயத்தில் தரிசிக்கலாம். சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேக விழா வைபவம் ஆகியவை இங்கு அடிக்கடி நடைபெறும்)

சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள். முருகனுக்கோ ஆறு முகங்கள். ஆறு முகன் என்ற பெயரே பிரபலம் ஆயிற்றே! சிவ பெருமானை விட முருகப்பெருமான் உயர்ந்தவர் என்பது, சொல்லாமலே விளங்குமே

இதை இன்னும் அழகாக எளிமையாகச் சொல்வார் திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள்.

'சிவபெருமான் தான் முருகனாக வந்தார். ஐந்து முகம் கொண்ட சிவபெருமான், ஆறு முகம் கொண்ட முருகனாக வந்தார். ஐந்து பெரிதா? ஆறு பெரிதா? ஓர் உதாரணம் சொன்னால் எளிமையாக விளங்கும்.

‘வெண்ணெய் தான் காய்ச்சிய பிறகு நெய்யாக மாறுகிறது.

ஆனால் வெண்ணெய்க்கு வாசனை கிடையாது; நெய்க்கு வாசனை உண்டு. காய்ச்சும் போதே பக்கத்து வீட்டம்மா வந்து கேட்பாங்க; 'வீட்ல என்ன விசேஷமா?'ன்னு விசாரிப்பாங்க. வெண்ணெய்யாக இருந்தபோது இல்லாதிருந்த வாசனை, நெய்யாக ஆனதும் ஊரைத் தூக்கும்.

'அதுபோல வெண்ணெய்-சிவபெருமான்; நெய்-முருகப்
பெருமான். ஆகவே சிவனை விட, முருகனுக்குப் பெருமை அதிகம்'
என்று சொல்வார் வாரியார் ஸ்வாமிகள்.

முருகன் பெருமையை சிவபெருமானே அம்பிகையிடம் கூறுகிறார்; ‘ஆறுமுகன் நமது சக்தியே ஆவான். நமக்கும் அவனுக்கும் வேறுபாடு ஒன்றுமில்லை. அவன் நம்மைப்போல எங்கும் வியாபித்து இருப்பான்; குழந்தை வடிவாகக் காணப்படுவான்; எல்லாவற்றையும் அறியும் முற்றறிவுடையவன்; தன்னை வழிபடுபவர்க்குச் செல்வத்தையும் ஞானத்தையும் வீடு பேற்றையும் கொடுக்க வல்லவன்' என்கிறார் சிவபெருமான்.

“ஆதலின் நமது சக்தி அறுமுகன் அவனும் யாமும் பேதகம் அன்றால் நம்போற் பிரிவிலன் யாண்டும் நின்றான் ஏதமில் குழவி போல்வான் யாவையும் உணர்ந்தான் சீரும் போதமும் அழிவில் வீடும் போற்றினர்க்கு அருள வல்லான்” (கந்த புராணம்)

இதே தகவலை இன்னும் சற்று விரிவாக, சூரபத்மனிடம் கூறுகிறார் வீரபாகுத்தேவர்; ‘சூரபத்மா! சிவபெருமானே தம்முடைய திருவிளையாடலால்,ஒரு குழந்தை ஆயினார். அவருடைய ஆறு முகங்களின் உண்மையினால் அதை நீ அறிவாய்! ரத்தினங்களுக்கும் அதன் ஒளிக்கும் வேறுபாடு இல்லாததைப் போல, முருகனுக்கும் சிவபெருமானுக்கும் வேறுபாடு இல்லை'என்று கூறுகிறார் வீரபாகுத்தேவர்.

“ஈசனே அவன் ஆடலால் மதலை ஆயினன் காண்
ஆசிலா அவன் அறுமுகத் துண்மையால் அறி நீ
பேசில் ஆங்கவன் பரனொடு பேதகன் அல்லன்
தேசுலா அகன் மணியிடைக் கதிர் வரு திறம்போல்” (கந்த புராணம்)

வீரபாகுத்தேவர் தூது போய்,சூரன் நகரில் பெரும் சேதத்தை விளைவித்துத் திரும்பிய பின், சூரன் அவையைக் கூட்டினான். அப்போது சிங்கமுகாசுரன் சூரனுக்கு அறிவுரை கூறினான்; சிங்கமுகன் சூரனின் தம்பி; தலைசிறந்த ஞானி; சிவனைப்பற்றியும் முருகனைப் பற்றியும் நன்றாக அறிந்தவன். அவன் அண்ணனுக்குச் சொன்ன வார்த்தைகள்;

‘அண்ணா! உனக்கு வரம் கொடுத்தவர் சிவபெருமான். அந்த வரத்தால் பெருமைபெற்ற உன்னை அழிப்பது, மற்றவராலும் இயலாது; தானே அழிப்பது முறையல்ல என்று, பரம்பொருளான சிவபெருமான் நினைத்தே, தன் உருவாகிய முருகப்பெருமானால் உன்னை, முடிக்க நினைத்திருக்கிறார்' என்று தொடங்கிய சிங்கமுகன், அப்படியே வேதக்கருத்துக்களைச் சொல்லி முருகன் புகழை விவரித்து, சூரனை எச்சரித்தான்.

வரமளித்த யாம் அழிப்பது முறையன்று வரத்தால்
பெருமை பெற்றுள சூரனை அடுவது பிறர்க்கும்
அரிதெனப் பரன் உன்னியே தன்னுருவாகும்
ஒரு மகற்கொடு முடித்துமென்று உன்னினான் உளத்தில்

ஒரு மகற்கொடு முடித்துமென்று உன்னினான் உளத்தில் (கந்த புராணம்)

சிங்கமுகன் சொன்ன முருகனை; வீரபாகுத்தேவர் விவரித்த முருகனை; சிவபெருமான், தானே அம்பிகையிடம் சொன்ன முருகனை; குருவாகக்கொண்டு சிவபெருமான் பிரணவ உபதேசம் கேட்டது மிகவும் பிரபலமானது “குருவாய் அரர்க்கு முபதேசம் வைத்த குகனே” எனும் அருணகிரிநாதர் துதிப்பது தெரிந்தது தானே

முதல் திருப்புகழிலேயே, 'முக்கட் பரமர்க்கு சுருதியின் முற்பட்டது கற்பித்து'(முத்தைத்தரு பத்தித்திருநகை) என்று தொடங்கிய அருணை முனிவர், அந்த உபதேசம் பெற்ற சிவ பெருமானின் செயல்களை விவரித்து, முருகப்பெருமானைத் துதிக்கிறார்.

'பித்தா! பிறை சூடி!' என்று சுந்தரர் துதிக்கிறார் அல்லவா? அதை அப்படியே சொல்லி, சிவபெருமான் அணிந்திருக்கும் ஊமத்தம் பூவையும் சொல்லி, 'அப்படிப்பட்ட சிவபெருமான் (உபதேச குரு என்பதால்) தமது உள்ளத்தில் வைத்துப் போற்றிய திருவடிகளை உடையவனே!' என்று துதிக்கிறார் அருணகிரிநாதர்.

“மத்தப் ரமத்தரணி மத்தைச் சடைப்பரமர்

சித்தத்தில் வைத்த கழலோனே முத்துத்தெறிக்க” - திருப்புகழ்

சிவபெருமானைப் 'பெரும் பித்தர்' என்று சொல்லும் இப்பாடலில், அவர் அணிந்த நிலவு, கொன்றை ஆகியவைகளைச் சொல்லாமல், ஊமத்தையை மட்டும் சொல்லியிருப்பது, அருணகிரிநாதருக்கே கை வந்த நுணுக்கமானக் கலை.

ஊமத்தம்பூவையோ, ஊமத்தங்காயையோ தின்றால் பைத்தியம் பிடிக்கும் என்பது பழங்கால மருத்துவம் சொல்லும் தகவல். உதாரணம்... ஸ்ரீ அப்பைய தீட்சிதர். ஊமத்தங்காய்களைத்தின்று பைத்தியம் பிடித்த அந்தநிலையில், அவர் பாடியதுதான், அற்புதமான சிவஸ்துதியான 'உன்மத்த பஞ்சசதி எனும் ஆத்மார்ப்பண ஸ்துதி' எனும் நூல்.

சிவபெருமானைப் பித்தர் என்று சொல்லும் இப்பாடலில், ஊமத்தம்பூவையும் சேர்த்துச் சொல்லி, ஊமத்தையின் மருத்துவ குணத்தையும் உணர்த்தும் பன்முகத் திறமைக்கு ஈடு இணை இல்லை. மேலும் பார்க்கலாம் வாருங்கள்!

சிவபெருமான் தம் உள்ளத்தில் முருகப்பெருமான் திருவடிகளைத் தரித்தார்-தியானித்தார் என்று பாடிய அருணகிரிநாதர், 'அவ்வாறு சிவபெருமான் தியானிக்கும் போது, அவர் மனதில் முருகப்பெருமானும் பொருந்தி எழுந்தருளினார்; அப்படிப் பட்ட திருவடிகளைக் கொண்ட முருகப்பெருமான்' என்று மற்றொரு பாடலில் பாடுகிறார்.

“நெற்றிவிழி பட்டெரிய நட்டமிடு முத்தமர்நி

னைக்குமன மொத்தகழல் வீரா” (வெற்றிமிசை-திருப்புகழ்)

இது மட்டுமா?முருகப்பெருமான் திருவடிகளில் சிவபெருமான், திருமுடி வைத்து வணங்கினார் என்று பாடி, அதற்கான காரணத்தையும் விவரித்துப் பாடுகிறார்.

“குக்கு டங்கொடி கொண்டப ரம்பர சக்ர மண்டல மெண்டிசை யும்புகழ் கொட்க கொன்றைய ணிந்தசி ரஞ்சர ணங்கி காரா” (ஒக்க வண்டெழு-திருப்புகழ்)

கருத்து : கோழியைக் கொடியாகக்கொண்ட பராபர மூர்த்தியே! சக்ரவாள மலையால் சூழப்பட்ட பிரதேசங்களிலும் எட்டுத்திசையிலும் உன் புகழ் வெளிவர, கொன்றை மாலை அணிந்த தந்தையாம் சிவபெருமானது சிரத்தை-தலையை, உனது திருவடியில் ஏற்றுக் கொண்டவனே

இந்நிகழ்வு, முருகப்பெருமான் புகழ் வெளிப்படுவதற்கானது என்று பாடும் சந்தக்கவி, சிவபெருமான் முருகப்பெருமானைக் கும்பிட்டார் என்றும் பாடுகிறார்.

புயங்கந்திங் களின் துண்டங் குருந்தின்கொந் தயன் றன்கம் பொருந்துங்கங் கலந் தஞ்செஞ் சடைகூடி புகழ்ந்துங்கண் டுகந் துங்கும் பிடும்செம்பொன் சிலம் பென்றும் புலம்பும்பங் கயந் தந்தென் குறைதீராய் (தியங்குஞ்சஞ்-திருப்புகழ்)

கருத்து : பாம்பு, பிறைச்சந்திரன், குருந்த மலரின் கொத்து, பிரம்ம கபாலம்,கங்கை நீர் இவைகளோடு கூடிய, அழகிய செஞ்சடை கொண்ட சிவபெருமான் புகழ்ந்தும் - பார்த்து மகிழ்ந்தும் கும்பிடுகின்ற, உனது செம்பொற் சிலம்பு எப்போதும் ஒலிக்கின்ற தாமரைத் திருவடிகளை எனக்குத்தந்து, என் குறைகளைத் தீர்த்து அருள்வாய்! அருணகிரிநாதர் வேண்டிய அந்த ஆறுமுகன் திருவடிகளையே, நம் குறைகளைத் தீர்க்கும்படி வேண்டுவோம்

★★★

இசையிலே லயம் என்ற ஒன்றை பாட்டிலே கொண்டு வந்து இயலுக்கு லய ஞானத்தை தந்தவர் அருணகிரிநாதர்.சங்கீதக்காரர்களே திகைக்கும்படி அவர்கள் பாடியுள்ளார்கள். சந்த அமைப்புக்குள்ளே லயங்களைக் கொண்டு வந்து அவர் பாடியது போல் வேறு யாரும் பாடியதில்லை. லயத்துக்காக முருகன் படைத்த பிறவிதான் அருணகிரிநாதர்.

— இலங்கை ஜெயராஜ்