'வாக்கிற்கு அருணகிரி', 'கருணைக்கு அருணகிரி', என்று போற்றப் பெறும் சுவாமி அருணகிரிநாதர் 15-ஆம் நூற்றாண்டு காலத்தே அருணைத்தலத்தில் அவதரித்த மகான். தமிழ்நாடு செய்த தவம் அவருடைய அற்புதப் பனுவல்கள், தணிகை மணி, திருப்புகழ் மணி, அருள்மொழியரசு, வாரியார் சுவாமி, வாகீச கலாநிதி, கி.வா.ஜ., சாதுராம்சுவாமி, பித்துகுளி முருகதாஸ் போன்றவர்களால் காப்பாற்றப்பட்டு, பாடப்பெற்று, பிரசங்கம் செய்யப்பெற்று மக்களிடையே பரவியுள்ளன. வாரியார் சுவாமி அநாயாசமாகத் திருப்புகழ்பாடி விளக்கம் தருவது கேட்டு மயங்கிய நான் ஒருநாள் “சுவாமி, நீங்கள் எத்தனை பிறவியில் திருப்புகழைப் பாராயணம் செய்தீர்களோ அமிர்த தாரையாகப் பொழிகிறீர்களே!” என்றேன். “இல்லை சரசுவதி அம்மா! இந்த ஜன்மத்தில்தான் படிக்கிறேன்” என்றார்.

தொடர்ந்து, “முந்தின பிறவியில் நான் திருப்புகழ் படித்திருந்தால் இந்தப் பிறவி எடுத்திருக்கமாட்டேன். இந்தப் பிறவியில் திருப்புகழ் கற்ற எனக்கு இனிப் பிறவி கிடையாது” என்று அழுத்தமாகச் சொன்னார். “கருப்புகல் வாராது இனி” என்ற நம்பிக்கையுடன் திருப்புகழைப் பாராயணம் செய்வோம். குழந்தையின் நோய்க்குத்தான் மருந்துண்டு. பக்தியிருக்கும் தாயின் கருணை உள்ளத்தோடு, உலக உயிர்களின் துன்பம், குறை, குற்றம் இவற்றைத் தன்னுடையதாக ஏற்று உயிர்கள் ஈடேறப் பக்தி மார்க்கத்தைப் போதித்து, அன்பு, அவிரோதம், ஈகை, அருள் வலியுறுத்தல், சத் சங்கத்தில் ஈடுபடுதல், அனைத்தையும் காட்டிய வள்ளல் அருணகிரியார்.

“அந்தம் ஆதியில்லா முருகனுக்கு அந்தாதி அழகன் குமரனுக்கு அலங்காரம் அழியாப் புகழடைய முருகனுக்குத் திருப்புகழ் எல்லா வகுப்பினருக்கும் இறைவனாம் கந்தனுக்கு வகுப்புகள், வருத்தம் போக்கி வளங்கள் சேர்க்க, வள்ளி முருகனுக்கு விருத்தங்கள் என வாரி வழங்கிய வள்ளல் நம் அருணகிரிநாதராம் குருநாதர்.

வண்ணத் தமிழ்:

தமிழுக்குத் தலைவனே முருகன். முத்தமிழால் வைதாரையும் வாழவைக்கும் கருணையாளன். அவனுடைய திருவடி நம் தலைஎழுத்தை மாற்றும், அழிக்கும், அந்தத்திருவடியை எங்கும் தேடி அலையாதீர்கள். அருணை முனிவரின் அருந்தமிழ்ப்பாடல்களில் முருகன் திருவடிகள் பதிந்திருக்கின்றன. என் பாவடி ஏட்டிலும் பட்ட தன்றோ? (தாவடி ஓட்டுமயிலும், கந்தர்அலங்காரம்) என்கிறார் சுவாமிகள். அந்தத்தமிழ், சந்தத்தமிழ், வண்ணத்தமிழ் பந்தம்களையும் பக்தித் தமிழ். அதை எழுத்துப்பிழையறக் கற்றுவிட்டால். கழுத்தில் யமனின் சுருக்குக் கயிறு இருக்காது.

'முத்தைத்தரு பத்தித்திருநகை' என முதலடி தந்தான் முத்தமிழ்த்தலைவன். இந்த முதல் திருப்புகழிலேயே, கந்தபுராணம், இராமாயணம், பாரதம் எல்லாம் வருகின்றனவே! முக்கட் பரமனுக்கு வேதத்தின் முற்பட்ட “ஓம்” எனும் பிரணவமந்திரம் பொருளைச் சாற்றிய - கந்தன் அருள் விளையாடல் வந்ததா? பத்துத்தலை தத்தக் கணை தொட்ட இராகவன் புகழ் (இராமாயணம்) சொல்லியாயிற்று? பக்தனுக்குத் தேர்ச் சாரதியாகக் கண்ணன் வந்த பாரதம் பகர்ந்து விட்டாரா? போர்க்களத்தில் முருகனுடைய வீரத்தால் நடந்ததென்ன?

'தித்திதெய ஒத்தப்பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்க நடிக்கக் கழுகொடு - கழுதாட
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத் தொகு தொக்குத்தொகுதொகு
சித்ரப் பவுரிக்குத் திரிகடக என ஓதக்
கொத்துப்பறை கொட்டக்களமிசை
குக்குக்குகு குக்குக்குகுகுகு
குத்திப்புதை, புக்குப்பிடி என – முதுகூடகை
கொட்புற்றெழ நட்பற்றவுணரை
வெட்டிப் பலியிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துட்பொரவல பெருமாளே

வல்லெழுத்து வண்ணம் வந்து, போர்க்களத்தில் ஆந்தை அலறுவதை, அலகைகள் ஆடுவதை, காளி நடனம் புரிவதைக் கண்முன் காட்டவில்லையா

நடனம் ஆடிவா முருகா

‘முருகா, உன் தந்தை நடராசன், ஆடலரசன் - நீ
அவர்மாதிரி நடனம் ஆடிவா நாங்கள் கண்டுய்ய’

எனச் செந்திலோனை வேண்டினார் அருணகிரியார்.

“தண்டையணி வெண்டையங் கிண்கிணி சதங்கையும்
தண்கழல் சிலம்புடன் கொஞ்சவே - நின்
தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
சந்தமொ டணைந்துநின் றன்புபோலக்
கண்டுறக் கடம்புடன் சந்தமகு டங்களும்
கஞ்சமலர்ச் செங்கையும் சிந்துவேலும்
கண்களும் முகங்களும் சந்திர நிறங்களும்
கண்குளிர என்றன்முன் சந்தியாவோ?”

சிவப்பு மயமான அழலாடி போலச் செவ்வேள் முருகன் ஆடிக்காட்டிவிட்டான்! நடனத்திற்கேற்ற சந்தம் இது.

குழந்தை தவழ்ந்து வருகிறதே

‘வந்து வந்து முன்தவழ்ந்து
வெஞ்சுகம் தயங்க நின்று
மொஞ்சி மொஞ்சி என்றழும் குழந்தையோடு
மண்டலம் குலுங்க அண்டர்
விண்டலம் பிளந் தெழுந்த
செம்பொன் மண்டபங்களும் பயின்ற வீடு’

எல்லாம் ஒரு காலம் மங்கும், உன் உயிரும் மங்கும் அப்படி உயிர் மங்கும்முன் கந்தன் காலடியில் வணங்கி, அவன் காட்சியைப் பெற வேண்டிக்கொள்.

மணமாலைத்தா

“அறிவாலறிந்துன் இருதாளிறைஞ்சும்
அடியார் இடைஞ்சல் களைவோனே!
அழகான செம்பொன் மயில்மேலமர்ந்து
அலைவாய் உகந்த பெருமாளே!”

“மயல்தீர, குளிர்மாலையின் கண்

அணிமாலை தந்து, குறைதீரவந்து குறுகாயோ!”

என்று (விரல் மாறனைந்து) திருப்புகழைப்பக்தியுடன் ஒரு மண்டலம் பாராயணம் செய்க. நல்ல மணமாலை கிடைத்து, இல்லறம் தழைக்கும்

“முதுமைத் துன்பம்...........................
...................................................
தொந்திசரிய மயிரே வெளிற நிரை
தந்தமசைய முதுகே வளைய இதழ்
தொங்க ஒருகை தடிமேல்வர மகளிர் நகையாடி
தொண்டுகிழவன் இவனாரென இருமல்
கிண்கிண்என முனுரையே குழற விழி
துஞ்சு குருடு படவே செவிடுபடு செவியாகி”

வைத்தியர் வந்து பார்த்துக் கையை விரிக்க. மைந்தர் உடைமை இருக்கிறதா? கடன் உளதா? என வினவ சர்வமலமும் வெளியேறும் அந்திம காலத்தில் நீ மயில்மீது வந்து காட்சி தந்து காக்கவேண்டும். (யமனிடம் போகாமல், உன் திருவடியில் சேர வேண்டும்) சஹானா இராகத்தில் பாடுங்கள். முதுமை, இறுதிக்கால வேதனை எல்லாம் தெரியவரும்.

படை நடை என்று ‘MARCH’ பண்ணுவார்களே! பீடுநடை தான் அது. இதோ பாருங்கள்.

“பொற்பதத்தினைத் துதித்து நற்பதத்தில் உள்ள பக்தர்
பொற்புரைத்து நெக்குருக்க அறியாதே
புத்தகப் பிதற்றைவிட்டு வித்தகத் துணைத்துதிக்க
புத்தியில் கலக்கமற்று - நினையாதே - போகக்கூடாது”

நெட்டெழுத்து வண்ணம்

நெடில் எழுத்துக்கள் நிறையப் பயின்று வரும் விராலிமலைத் திருப்புகழ்

“மாலசை கோபம் ஓயா தெந்நாளும்

மாயா விகார வழியே செல்”

குற்றெழுத்து வண்ணம்

“தமரு மமரு மனையும் இனிய
தனமும் அரசும் அயலாக”
சொற்பொருட்பின் வருநிலைக்கு ‘அதல சேடனா ராட
அகில மேரு மீதாட
அபின காளி தனாட’

இப்படி எத்தனையோ எடுத்துக்காட்டலாம். ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பம். அதில் முழுகி நின்று விடாமல், நம் கல்வி, நமது செல்வம், நம் சுற்றம், நமது புகழ், இந்த மனிதப்பிறவி எல்லாமே வேலவர் தந்தது என அவனைப்பணிந்து நன்றிப் பெருக்கால் கண்ணீர் மல்கி, கை கூப்பி,

"ஆசைகூர் பக்தனேன் மனோபத்மமான பூவைத்து நடுவே அன்பான நூலிட்டு, நாவிலே சித்ர மாகவே கட்டி ஒரு ஞான வாசம் வீசிப் பிரகாசியா நிற்ப மாசிலோர் புத்தியளி பாட மாத்ருள் புஷ்ப யணி பாட மாத்ருகா புஷ்ப மாலை கோலப்பரவாலி பாதத்தில் அணிவேனே!”

எனப்பாடி, பந்தமகன்று, கந்தன் காலடியில் பணிந்து கிடந்து உய்வோம்.

★★★

The two philosophies saivism and Vaishnavism went almost in parallel lines, each on its own direction,creating a sort of division in the Hindu way of life. It was inconceivable suitable that Sanathana Dharma based on the principle of universal brotherhood should limit inside to certain boundaries. It was Arunagirinathar, the author of Thirupugazh, who broke this boundary wall and established the unity of all forms of worship. He believed that all forms and names are varied manifestation of one Supreme being. Thiruppugazh is a marvelous creation of Arunagirinathar. It is a gateway to the path of knowledge and devotion.

— Arutchelvar Dr. N. Mahalingam