வாரியார் சுவாமிகளின் குருபக்தி

திரு. அ. பிச்சாண்டி முதலியார், திருவண்ணாமலை.

மனிதனாக பிறக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு குரு மிகவும் அவசியம். ஒரு குழந்தைக்குத் தாய் எவ்வளவு முக்கியமோ அதே போல் ஒரு மனிதனுக்கு குரு மிகவும் முக்கியம். குரு வேறு பரம்பொருள் வேறு கிடையாது. யார் குருவின் அருளை பெறுகிறார்களோ அவர்கள் இறைவனின் அருளையும் பெறுகிறார்கள்.

பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய பத்தாம் திருமுறை இயற்றிய திருமூலர் தனது திருமந்திரத்தில் குருவின் பெருமையை இவ்வாறு விவரிக்கின்றார்

‘தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே’

'இறைவனை நேராக வணங்கினால் ஒரு ஓட்டு. குருவை நேராக வணங்கினால் இரண்டு ஓட்டு வரும். ஆச்சாரியன் உள்ளத்தில் தெய்வம் இருக்கின்றது. ஆகையால் குருநாதரை வணங்கினால் இறைவனை வணங்கிய புண்ணியம் வரும். தலைமைத் தபால் நிலையத்தில் அஞ்சல் போட்டால் பேருந்து வண்டி நிலையத் தபால் பெட்டிக்குப் போகாது. ஆனால் பேருந்து வண்டி நிலைய தபால் பெட்டியில் போட்டால் தலைமைத் தபால் நிலையத்திற்கு சென்று விடும். அதுபோல் குருநாதரை வணங்கி விட்டால் இருவகைப் பயனும் கிடைக்கப் பெறுகிறோம். குருநாதருடைய உள்ளத்தில் இறைவன் இருக்கின்றார். நன்றாக பழுத்த ஞானிகள் இறைவனை நேராகவும் உள்ளத்துக்குள்ளே நேருக்கு நேராகக் காண்பார்' என்று குருவின் முக்கியத்துவத்தை வாரியார் சுவாமிகள் பாமரர்களும் புரியும்வண்ணம் எளிதாக உரைப்பார்.

அருணகிரிநாதப் பெருமானின் பெருமையையும் திருப்புகழ் வன்மையையும் பரப்பவே அவதரித்தவர் வாரியார் சுவாமிகள்.

திரு வாரியார் சுவாமி அவர்கள் சிறுவயதிலிருந்தே அருணகிரிநாதப் பெருமானை தனது குருவாக ஏற்றுக் கொண்டார்கள். வாரியார் சுவாமிகளுக்கு அருளாளர் மீதும் திருப்புகழ் மீதும் பற்று ஏற்பட்டதற்குக் காரணம் மதுரை திருப்புகழ் சுவாமிகள்தான். அவர் அங்கு திருப்புகழ் சபை நிறுவி நடத்தி வந்தார்கள். வாரியார் சுவாமிகள் மதுரையில் சில காலம் தங்கியிருந்து திருப்புகழை அவரிடம் முறையாக பயின்றார்கள். வாரியார் சுவாமிகளின் தந்தையான மல்லைய தாச பாகவதர் அருணகிரிநாதர் மீது அளப்பரிய பற்று கொண்டிருந்தார். அவர் காங்கேயநல்லூர் சிவசுப்பரமணியர் ஆலயத்தில் அருளாளரின் திருவுருவத்தை நிறுவி திருகோவிலுக்கு கும்பாபிஷேகமும் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தையின் வழியில் மகனும் அருணகிரிநாதரின் தீவிர பக்தர் ஆனார். சிறு வயதில் தனது தந்தையுடன் அருணை மாநகருக்கு செல்லும் போதெல்லாம் அருளாளருடைய பாக்கெட் சைஸ் படங்களை வாங்கி சில நண்பர்களிடம் கொடுத்து அவர்களை வழிபடச் சொல்வார்.

சுவாமிகளின் தந்தை 1932ம் ஆண்டு காங்கேயநல்லூரில் திருப்புகழ் சபையைத் துவக்கினார்கள். அருளாளரின் அவதாரத் திருநாளான மூலத்தை மிக விமர்சையாக அச்சபை கொண்டாடியது. அந்த விழாவில் சுவாமிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு திருப்புகழ்ப் பாடுவார்.

ஒருநாள் சுவாமிகளின் கனவில் அருளாளர் காவி உடையில் சன்னியாசி போல் தோன்றி எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது சிறிது அன்னம் கொடு என்று கேட்டார். கனவு கலைந்தது. சுவாமிகளுக்கு கனவின் பொருள் முதலில் புலப்படவில்லை. சற்று யோசித்த பிறகு தான் கனவின் அர்த்தம் புரிந்தது. கோவில் தெற்கு நோக்கி தனது தந்தையால் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த அருளாளரின் திருவுருவத்திற்கு சரிவர நிவேதனம் செய்யப் படவில்லை என்று உணர்ந்தார். தினமும் நிவேதனமும் அன்னதானமும் நடைபெறுவதற்கு தீவிர முயற்சியில் இறங்கினார். தன் சொந்தப் பணத்தில் காங்கேயநல்லூரில் நான்கு ஏக்கர் நிலம் அருணகிரிநாதர் பெயருக்கு எழுதி ஒரு அறக்கட்டளை அமைத்து நித்தமும் அன்னதானம் செய்யத் துவங்கினார். சுவாமிகள் அன்று துவங்கிய அன்னதானப் பணி இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும் 63 நாயன்மார்களில் ஒருவருமான அப்பூதி அடிகள் தான் பார்த்திராத திருநாவுக்கரசு பெருமானை குருவாக ஏற்று தாம் செய்து வந்த அனைத்து பொதுப் பணிகளுக்கும் அவர் பெயரிட்டு மகிழ்ந்தார்.அதேபோல் 64வது நாயன்மாராக போற்றப்படும் வாரியார் சுவாமிகள் தான் பார்த்திராத 15ஆம் நூற்றாண்டில் தோன்றிய அருணகிரிநாதப் பெருமானை குருவாக ஏற்று அவரது பெயரில் அனைத்து அறப் பணிகளும் செய்து வந்தார்.

1940 ஆம் ஆண்டு தனது 34 வது வயதில் சுவாமிகள் மோகனூரில் காந்தமலை அடிவாரத்தில் அருணகிநாதர் அறச்சாலை ஒன்றை நிறுவ முயற்சி மேற்கொண்டார். இதற்காக மாதந்தோறும் மோகனூருக்குச் சென்று சொற்பொழிவு செய்து அதன் மூலம் கிடைத்த பணத்திலும் சிலரது நன்கொடையிலும் அறச்சாலையை நிறுவினார். சுவாமிகள் அருளாளர் பயணித்த தலத்தில் எல்லாம் அவரது திருவுருவத்தை வைக்க எண்ணினார். அவர்கள் மதுரை, திருச்செங்கோடு, வயலூர், பழனி முதலிய தலங்களில் அருளாளரின் சிலையை பிரதிஷ்டை செய்தார்கள்.

தமிழ்ச் சிற்றிலக்கியத்தில் 96 வகைகள் உண்டு. அவற்றில் ஒன்று ‘மாலை’ எனப்படும். சுவாமிகள் எழுசீர் ஆசிரிய விருத்தத்தில் ‘அருணகிரிநாதர் அன்பு மாலை’ என்னும் புத்தகத்தை குருவைப் புகழ்ந்து எழுதி உள்ளார்கள்.

‘ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் புராணம் ‘என்ற புத்தகத்தையும் சுவாமிகள் எழுதியுள்ளார்கள். அதைப்போல் தன் குரு நாதரைப் போற்றி கீழ்காணும் துதியும் எழுதியுள்ளார்கள்

'விருப்புடன் உபய சரணமென் மலரை வேண்டுவார் வேண்டுவதளிக்கும்
பொருப்புகள் தோறும் நின்றருள் ஒருவன் புகழினை அகநெகப் புகன்று
கருப்புகுதாத கதிதனைக் காட்டும் கலையுணர் புலவர்கள் திலகம்
திருப்புகழ் அருணகிரி எமதடிகள் திருவடி குருவடிவாமே.'

வாரியார் சுவாமிகள் தினமும் பல்வேறு ஊர்களுக்குச் சென்று சொற்பொழிவு நிகழ்த்துவார்கள். தனது சுயவரலாற்றை 1982-இல் எழுதும் பொழுது, “எனது இருபத்தைந்து வயது முதல் இன்று வரை நான் விரிவுரை செய்யாத நாளில்லை” என்று எழுதியிருக்கிறார். அவர்தம் நீண்ட ஆயுளில், இருபதாயிரத்திற்கும் மேலான சொற்பொழிவுகளை ஆற்றி இருக்கக்கூடும்.

சாமிகள் எந்த தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினாலும் எப்படியாவது தனது குருநாதரைப் பற்றியும் திருப்புகழ் பற்றியும் ஏதாவது ஒரு சந்தர்பத்தில் பேசிவிடுவார்.

வாரியார் சுவாமிகள் அருணகிரிநாதப் பெருமானை ஓசை முனிவர், தாள சித்தர்,சந்த முனி என்றெல்லாம் பாராட்டுவார்கள். அவர் அவ்வாறு கூறுவதற்கு 'சீரான கோல கால நவமணி' என்னும் விராலிமலைத் திருப்புகழை உதாரணமாகக் கூறுவார்கள்.

'தானான தான தான தனதன என்பது அப்பாடலின் சந்தம். மதுரையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த புலவர்கள் 49. நாற்பத்தொன்பதுன்னா சந்தத்துக்கு சரியாக வராது. நாற்பத்தொன்பது என்ற செல்லுக்கு தாத்தத் தத்தன என்று சந்தம் வரும். இங்கே சந்தம் அப்படி
இல்லை. தானான தான தான தனதன. அந்த
தெய்வம் பாடுது ஏழேழு பேர்கள் என்று.
ஏழேழு பேர்கள் என்று சொன்னால் தானான
தான சந்தம் வரும். ஏழேழு அவருக்கு எவ்வளவு
சுலபமாக வருது. இப்படி இவரைப்போல் பாட்டுப் பாட
ஐந்து கண்டத்திலும் ஆள் கிடையாது.
வாரியார் சாமிகள் 1940 ஆம் ஆண்டு
நெல்லைத் திருப்புகழ் சபையையும் 1944ம் ஆண்டு
சிவகாசி திருப்புகழ்ச் சபையையும் துவக்கி
வைத்தார்கள். இது போல் மேலும் பல ஊர்களில்
திருப்புகழ்ச் சபையைத் துவக்கி வைத்தார்கள்.

வாரியார் சுவாமிகள் விரிவுரை செய்வதுடன் கோவில்களில் திருவிழாவின்போது சுவாமிகள் திருப்புகழ் கோஷ்டி செய்து விரிவுரை செய்வார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவரை பின் தொடர்ந்து வந்து கேட்டு மகிழ்வார்கள்.திருச்சி, திருவானைக்கா, திருச்செந்தூர், அம்பாசமுத்திரம், ஆகிய ஊர்களில் திருவிழாவின்போது திருப்புகழ் கோஷ்டி செய்வார்.

சித்தர் தேசம் காங்கேயநல்லூர் ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் அவதார நல் விழா (பத்தாவது ஆண்டு) அருணகிரி நாத படிக்கமலம் போற்ற இருமைநலம் பெற்றேன் இனிது. மெய்யன்புடையிர்! செந்தமிழ் மறையாத் திருப்புகழைத் திருவாய்மலர்ந்தருய சிவஞான பானுவாகிய ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் அவதார விழா அடியிற்கண்ட நிகழ்ச்சிமுறைப்படி திருமுருகன் திருவாலயத்தில் டுனிது நிகழம். அன்பர்கள் அனைவரும் வந்து ண்டு கேட்டு இன்புறுமாறு வேண்டுகிறோம். நிகழ்ச்சி நிரல். சித்திரபாது ஆண்டு ஆனித்திங்கள் 14-ம் நாள் (23-6-42) ஞாயிறு காலை 8 மணி பாலாற்றிலிருந்து பாற்குடமெடுத்தல் 10 " மகா அபிஷேகம். பகல் 12 " அலங்கார தீபாராதனை. I " அன்னதானம். மாலை 7 " சுவாமி திருவீதிபவளி. இரவு 9 " அருணகிரியார் சரித்திர விரிவுரை. இங்ஙனம் த. க. நாராயணசாமி முதலியார் த. க. ஆறுமுக முதலியார் தேவஸ்தான தீருமபரிபாலகர்கள். மல்லையதாஸ் பாகவதர் தலைவர், திருப்புகழ் சபை, தூங்கேயநல்லூர்.

வாரியார் சுவாமிகள் தனது குரு பக்தியின் உச்சத்தை வெளிப்படுத்தும் வகையில் பல சொற்பொழிவுகளில் இவ்வாறு கூறுவார்:-

‘நான் முருகப்பெருமானை வழிபடுவதை மறந்தாலும் மறப்பேன் ஆனால் ஒரு பொழுதும் என் குருநாதராகிய அருணகிரிநாதரை வழிபடுவதை மறவேன்’.

பாரதத்தின் சிறந்த குரு சிஷ்யன் உறவைப் பற்றி சொல்லும் பொழுது துரோணாச்சாரியார்- அர்ஜுனன், சாணக்கியர் -சந்திர குப்தர், இராமகிருஷ்ணர்- சுவாமி விவேகானந்தர் என்று குறிப்பிடுவார்கள்.

மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து குரு சிஷ்யர்களும் சம காலத்தவர்கள். ஆனால் தம் காலத்திற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அருணகிரிநாதப் பெருமானை தனது குருவாக தேர்ந்தெடுத்து வாழ்ந்த வாரியார் சுவாமிகளின் குருபக்தி ஈடு இணையின்றி மேலோங்கி நிற்கிறது.

★★★

ஒழுக்கத்தில் குறைபாடு உடையவராய் முறையில்லாத வாதம் செய்யும் தீயவர்கள், தாய், தந்தையரை பழிக்கும் தீயவர்கள், பசுவின் ஊனுக்காக அதனைக் கொல்லும் தீயவர்கள், பிறர் மனைவியை நாடிய தீயவர்கள், ஆதரவற்றவர்களின் உடமையை கவர்ந்து கொண்ட தீயவர்கள், பிறருக்கு ஒரு பொருளையும் தானம் செய்யாமல் புதைத்து வைத்தவர்கள் ஆகிய இத்தகையோர் யாவரும் நாயைக் காட்டிலும் இழிவான பிறப்பை அடைந்து துன்பப்படுவர். (பாவம் பல செய்யாதிரு- ஆசார - திருப்புகழ்)

நன்றி-அருளாளர் அருணகிரிநாதரின் அமுத மொழிகள் - திருப்புகழ் மாமணி வெ. இராமு