‘வாக்கிற்கோர் அருணகிரி வாழ்க்கைக்குத் திருப்புகழ்‘ என்பதற்கு ஏற்ப, ‘திருப்புகழைப்‘ பாடு என்று திருமுருகப் பெருமானின் அருளாசியுடன், தித்திக்கும் செந்தமிழில், கருத்துச்செறிவுடனும், சந்தப் பொலிவுடனும், இசைத்தாளங்களுடனும், அருணகிரியார் அருளிய தெய்வீக நூல் திருப்புகழ்.
ஆறுமுகப்பெருமாளின் அருள் மழையாக, ஆறுபடை வீடுகளிலும், மற்றும் பல க்ஷேத்ரங்களிலும் உறைகின்ற குமரக்கடவுளைப் போற்றிப் புகழ்கின்ற பதினாயிரத்திற்கும் மேலான பாடல்களில், 'யான் பெற்ற பேறு பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப, தேடிக் கிடைக்கப்பெற்ற ஆயிரத்தி முந்நூறுக்கும் மேலான பாடல்களை தந்தருளியது வடக்குப்பட்டு சுப்ரமணியபிள்ளை மற்றும் அவரது மகன் தணிகைமணி செங்கல்வராய பிள்ளை ஆவர்.
இப்பாடல்களுக்கு கருத்துரை நல்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தணிகைமணி
செங்கல்வராயப் பிள்ளை, திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் மற்றும் கி. வா. ஜெகந்நாதன் ஆகியோர் ஆவர்.
அவற்றில் 503 பாடல்களுக்கும், கந்தர் அனுபூதி, மயில், வேல் விருத்தங்கள் முதலியவைகளுக்கும் முறைப்படி இராக, தாளத்தோடு பாடுவதற்கு 'திருப்புகழ் இசை வழிபாடு' என்ற முறையை ஏற்படுத்தி, உலகெங்கும் உள்ளவர்கள்பாடி இன்புற வழிவகுத்தது குருஜி ராகவன் அவர்கள்.
நானும் என் வாழ்க்கைத் துணைவியும் கனடாவில் இருந்தபோது திருப்புகழ் கற்றுக்கொள்ள கிடைத்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்தி, குருஜி ராகவன் அவர்களின் பிரதான சிஷ்யையான தாரா மாமியிடமிருந்து கற்றுக்கொண்டோம். கனடாவிலிருந்து ஓய்வு பெற்றபின் , திருவனந்தபுரத்தில் நிரந்தரமாக இருக்கத் தீர்மானித்தபோது பல அன்பர்களின் விருப்பத்திற்கேற்ப கேரளாவில் பல இடங்களிலும், குறிப்பாக திருவனந்தபுரத்தில், கடந்த 22 ஆண்டுகளாகத் திருப்புகழை, வயது வித்தியாசமின்றி, விருப்பமுடன் படிக்க வருகின்ற எல்லா அன்பர்களுக்கும் கற்றுத்தருகின்றோம்.
குருஜி ராகவன் அவர்களின் விருப்பப்படி கேரளாவில் 'திருப்புகழ் இசை வழிபாடு' முறையில் வகுப்புகள் தொடங்கினோம். அன்பர்கள் எல்லோரும் தாளத்துடன் திருப்புகழ் பாடல்களை அனுபவித்து பாடுவதற்காக, ஒவ்வொரு பாட்டிற்கும், சந்தத்திற்கேற்ப அமைக்கப்பட்டுள்ள தாளங்களை. ‘தாள விளக்கம்’ என்ற தலைப்பில், தமிழிலும், “Thalam explanation” என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும், விரிவாக விளக்கம் எழுதினோம், மேலும் தமிழ் வாசிக்கத்தெரியாதவர்களும் திருப்புகழ் கற்க திருப்புகழ் இசை வழிபாடு பாடல்களை மலையாளத்தில் புத்தக வடிவில் அச்சடித்து வெளியிட்டும், தமிழ், மலையாளம் இரண்டும் வாசிக்கத் தெரியாதவர்களுக்கு வேண்டி, ஆங்கிலத்திலும் திருப்புகழ் பாடல்களை அச்சிட்டு வெளியிட்டும், இந்த இறைப்பணியைத் தொடர்ந்து மகிழ்ச்சியுடன் செய்து வருகிறோம்.
இப்புத்தகங்களை “download” செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள “Link” ஐ உபயோகிக்கவும்.
tiv&in&malayalam&2020 https://drive.google.com/file/d/19lbBlaL&DHrj3DIKXyt7OqRIZai8EIO2/view?usp=sharing tiv&in&english&2020 https://drive.google.com/file/d/19wysjpdDLXx7iytVasvr&Y16MubIhDI_/view?usp=sharing திருப்புகழ் இசை வழிபாட்டில் உள்ள பாடல்களின் தாளவிளக்கத்திற்கு இந்த ‘link’ ஐ உபயோகிக்கவும். https://drive.google.com/file/d/1gieBur6RITGFwKIIJqhwx3Ttcx8bogtV/view?usp=sharing
'கோவிட்' தாக்குதலைத் தொடர்ந்து வகுப்புகள் நடத்த முடியாத காரணத்தால், இணையதளம் (YouTube) மூலமாக திருப்புகழ் வகுப்புகள் நடத்தி வருகிறோம்.
ஏறுமயிலேறி வருகின்ற முருகன், ஈசருடன் பேசிய ஞானமொழியை, நாமெல்லாம் அனுபவித்து, எல்லோருக்கும் ஒளிமயமான எதிர்காலம் அமைய, கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகிய கந்தப்பெருமாளின், கருணை கிடைக்க, பொற்பாதங்களை வணங்குகிறோம்.
★★★
திருக்குறளுக்கு அடுத்தபடியாக அதிக உரை எழுதப்பட்ட நூல் அருளாளர் அருளிய கந்தர் அனுபூதி
தமிழ் இலக்கியங்களில் அதிகமாக உரை எழுதப்பட்ட நூல் திருக்குறள் தான். திருக்குறளுக்கு இருநூறுக்கு மேற்பட்டவர்கள் உரை எழுதியுள்ளார்கள். அதற்கு அடுத்தபடியாக கந்தர் அனுபூதிக்குத் தான் அதிகமாக உரை எழுதப்பட்டுள்ளது. சுமார் இருபத்தைந்துக்கும் மேற்பட்டவர்கள் கந்தர் அனுபூதிக்கு உரை எழுதி உள்ளார்கள். அவர்களில் சிலர்...
- சித்தியான்த மகரிஷி - கூடார்த்த தீபிகை உரை.
- திருமுருக கிருபானந்தவாரியார் - விரிவுரை.
- குகதாசன் (திருத்தணிகை திருக்கோயில்).
- P.K. ஷண்முகநாதன், திண்டுக்கல்.
- வாகீசகலாநிதி கி.வா. ஜகந்நாதன்.
- வித்வான் தி.பட்டுசாமி ஓதுவார்.
- பித்துக்குளி முருகதாஸ் - கந்தர் அநுபூதி தந்த தத்துவம்.
- ஆ.ரா. பாலசுப்ரமண்யம் - ஆராய்ச்சி உரை.
- டாக்டர். சரஸ்வதி ராமநாதன், பள்ளத்தூர் - விரிவுரை.
- சாது சிதம்பரசாமி.
- ஜமதக்னி நாயகர்.
- கொழும்பு மு.திருவிளங்கம்.
- சேக்கிழார்தாசன் டாக்டர் R.K.ராமசேஷன்
- டாக்டர் இரத்னவேலு சுப்பரமண்யன்
- மா. ராமகிருஷ்ணன்
- V.S. கிருஷ்ணன்
- Kandar Anubhuthi - N.V. Karthikeyan
- Kandar Anubhuthi - M.R. Bala Ganapathi
கந்தர் அனுபூதி

