“நினைத்ததும் அளிக்கும் மனத்தையும் உருக்கும்
நிசிக் கரு அறுக்கும் பிறவாமல்
நெருப்பையும் எரிக்கும் பொருப்பையும் இடிக்கும்
நிறைப்புகழ் உரைக்கும்”
திருப்புகழின் பயன்களாகத் திருத்தணியில் அருணகிரிநாதர் பாடிய பாடலின் கருத்துக்களாவன: சினத்தவர் முடிக்கும், பகைத்தவரைக் குடிக்கும், அழிப்பவரை அழிக்கும் கேவலமாகச் சிரிப்பவர் தமக்கும், பழிப்பவர் தமக்கும் “திருப்புகழ் நெருப்பு” என்று அறிக
நினைத்தும் அளிக்கும், படிப்பவர் மனத்தையும் உருக்கும், மீண்டும் பிறவாது கருவறுக்கும், நெருப்பையும் எரிக்கும், மலையையும் இடிக்கும் திருப்புகழ் அபூர்வமான ஆற்றல்கள் பெற்றது
விருப்பொடு திருப்புகழ் படிப்பவர் துன்பம் நீக்கிடும்! இசைத் தமிழ் நடத்ததமிழ் எனத்துறை விருப்புடன் இலக்கண, இலக்கியக் கவிநாலும் அளித்திடும் வல்லமை மிக்கது
"திருப்புகழைக் கற்கத்! திருப்புகழைக் கேட்கத்!
திருப்புகழை நித்தம் செபிக்க! - திருப்புகழை
அர்ச்சிக்க முத்திஎளி தாகுமே! கூற்றைவென்று
கெர்ச்சிக்க லாமே கெடி”
திருப்புகழின் தனிப்பெருமை
கி.பி. 1450 இல் பிரபுட தேவராய மன்னர் காலத்தில், திருவண்ணாமலையில் அருணகிரிநாதர் வாழ்ந்தார். எட்டு மொழிகளில் புலமை பெற்று 'அஷ்ட பாஷா பரமேசுவரர்' என்று புகழப்பட்டார். 'சிங்கார மடந்தையர் தீநெறிபோய்', மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்பட்டு, ஊசல்படும் பாடுற்றார்.
திருவண்ணாமலையில் மனம் ஒடுங்கித் தவம் இருக்க முயன்றார். சிற்றின்ப வேட்கை மனம், பேரின்ப நாட்டமின்றி அலைந்தது. கோபுரத்தில் ஏறி உயிரைவிட முனைந்தார். கம்பத்து இளையனார் கந்தப் பெருமான், கையில் ஏந்தி காத்தருளினார். வேலால் நாவில் 'ஓம்' எழுதினார். 'முத்து' என்ற முதன்மொழி எடுத்துத் தந்து பாடவைத்தார். இதனைத் திருச்செங்கோடு திருப்புகழில் ஆவணப்படுத்தி உள்ளார்.
“பூர்வ, பச்சிம, தட்சிண, உத்திர திக்குள
பக்தர்கள் அற்புதம் என ஓதும்
சித்ர கவித்துவ சத்த மிகுந்த
திருப்புகழை சிறிது அடியேனும் செப்பென வைத்து உலகில் பரவத்
தெரிசித்த அநுக்ரகம் மறவேனே” - திருச்செங்கோடு திருப்புகழ்
உலகு எங்கும் நான்கு திசைகளிலும், தனிப்பெருமை மிக்க திருப்புகழை பக்தர்கள் 'அற்புதம்' என்று போற்றிப் பாடுமாறு செய்தான் முருகன்
முருகன் திருப்புகழை உலகம் முழுதும் பரவச் செய்தான். பாடியவருக்கு அநுக்ரகம் செய்து, தரிசனமும் தந்தான் என்று அருணகிரிநாதர் கூறியபடி, 'எப்படித் திருப்புகழ் பரவியது?' என்பதை ஆராய்வோம்? 300 ஆண்டுகாலம் மனதில் கிடந்தது! பிறகே நூலாக மலர்ந்தது
- வடக்குப்பட்டு த.சுப்பிரமணியப்பிள்ளை : 1846இல் வடக்குப்பட்டு என்னும் திருத்தணிகைக்கு அருகில் உள்ள
- கிராமத்தில் தோன்றியவர் சுப்பிரமணியம். அரசுப் பணியில் இருந்தபோது, தில்லை சிதம்பர தீட்சதர்கள் கோயில்
- தங்கள் உரிமை என்பதை நிலைநாட்ட 'தாதுமாமலர்' என்னும் திருப்புகழை அழகுறப் பாடினர்.
- “வேத நூன்முறை வழுவாமே தினம்
- வேள்வியால் எழில்புனை முவாயிர
- மேன்மை வேதியர் மிகவே பூசனை புரிகோவே” - தில்லைத் திருப்புகழ்.
- இப்பாடல் திருப்புகழ் என்பது அறிந்தார். திருப்புகழ் ஓலைச் சுவடிகளைத் தேடி அலைந்து தொகுத்தார். 20
- ஆண்டுகள் திருப்புகழ் ஓலைச் சுவடிகளைத் தொகுத்து 1891 இல் முதல் தொகுப்பையும், 1908ல் திருத்தணிகைத்
- திருப்புகழையும் நூலாக அச்சிட்டு வழங்கினார்.
- தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதைய்யரை கடைசி காலத்தில் சுப்பிரமணியப்பிள்ளை சந்தித்தார். படுத்த
- படுக்கையாய் இருந்த அவரது கால்களைத் தொட்டு வணங்கி “ஓலைச் சுவடிகளைத் தேடி அலைந்த பாதங்கள்”
- என்று போற்றினார். உடனே அவர் சுப்பிரமணியப்பிள்ளை கரங்களைத் தொட்டு வணங்கி “திருப்புகழ் ஓலைச்
- சுவடிகளைத் தேடிப் பதிப்பித்த கரங்கள்” என்று போற்றினார்.
- தணிகைமணி வ.சு.செங்கல்வராயப்பிள்ளை : வடிவேலன் அருளால் வ.சுப்பிரமணியப் பிள்ளையின்
- திருமகனாய் 1883இல் செங்கலல்வராயப் பிள்ளை மஞ்சக்குப்பத்தில் பிறந்தார். தந்தையார் விட்டுச் சென்ற
- திருப்புகழ் பதிப்புப் பணியை பேரார்வமுடன் தொடர்ந்து செய்து முடித்தார். ‘முருகவேள் பன்னிரு திருமுறை’ என்று
- திருப்புகழ் 1231 மற்றும் அநுபூதி, அலங்காரம், அந்தாதி வகுப்புகள் அனைத்தையும், உரையோடு எழுதி
- வெளியிட்டார்.
- இவரது திருமகள் வி.சி.சசிவல்லி அவர்களும் திருப்புகழ்த் தொண்டினை விடாமல் மூன்றாம்
- தலைமுறையாக, செய்து வருகின்றார். “திருப்புகழ் ஒளிநெறி” என்னும் மூன்று பாகங்கள் கொண்ட நூல்களை
- 1320 திருப்புகழ்ப் பாடல்களின் சொல்லாய்வாக உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் வழி வெளியிட்டுள்ளார்.
- பாம்பன் சுவாமிகள் : இராமேசுவரம் பாம்பனில் 1852ல் அவதரித்த பாம்பன் சுவாமிகள், தவமிருந்து
- முருகனை நேரில் தரிசித்து அருள் பெற்றவர். திருப்புகழை பரப்பியதுடன், தானே 6666 பாடல்கள் இயற்றியவர்.
- “அருவம் ஒரு நான்கு ஆகி உருவம் ஒரு
- நான்கு ஆகி அறை இரண்டும்
- மருவிஉள உருவருவரும் ஒன்று ஆகி
- முத்திறமும் வழுத்த ஒண்ணாப் பெருவெளிக்கும் அப்பாலாய் உள்ள பொருள் ஈதுஎனவே பெரிதும் சேயோன் ஒருவனையே புகழ்ந்த அருள் அருணகிரி சேவடிப் போது உளத்தில் வைப்போம்” (பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்)
என்று பாடலில் அருணகிரிநாதரை பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் : திருச்செங்கோட்டில் 1870இல் தோன்றியவர் அர்த்தநாரி. 38ஆம்
வயதில் குன்ம நோயால் அவதியுற்று, பழநிமுருகன் சந்நிதியில் திருப்புகழ்க் கேட்டு நோய் நீங்க பெற்றவர்.
'மகான் சேஷாத்ரி சுவாமிகள் திருப்புகழ் மகாமந்திரம்' என்று இவருக்கு உபதேசித்தார். அதிலிருந்து மனைவி,
மகனைத் துறந்து துறவியாகி திருப்புகழைத் தெருவெங்கும், ஊரெங்கும் பாடிப் பரப்பி, வள்ளி மலையில் சித்தி
அடைந்தார். 'திருப்புகழ் சுவாமிகள்' என்று போற்றப்பட்டார்.
1.1918இல் திருத்தணி திருப்படி திருவிழாவை இவரே தொடங்கி வைத்தார். புத்தாண்டின் முதல் நாளில்
365 படிகளுக்கும் திருப்புகழ் பாடி பூஜை செய்து, ஆண்டின் 365 நாள்களையும் சிறப்பாக ஆக்கிக் கொண்டனர்
பக்தர்கள். 104 ஆண்டுகளைக் கடந்தும் 'திருத்தணித் திருப்புகழ் படிவிழா' இன்றும் சிறப்புடன் தொடர்கிறது.
"பலகாலும் உனைத் தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி
படிமீது துதித்துடன் வாழ அருள்வேளே!"
"திருப்புகழ் ஓதம் கருத்தினர் சேரும்
திருத்தணி மேவும் பெருமாளே” -திருத்தணி திருப்புகழ்
சாதுராம் சுவாமிகள்: "சொலற்கு அரிய திருப்புகழை உரைத்தவரை, அடுத்த பகை அறுத்து எறிய, உறுக்கி
எழும், மறத்தை நிலைகாணும்" என்னும் வேல்மாறல் மந்திரத்தையும், திருப்புகழையும் தன் சொற்பொழிவுகளால்
உலகு எங்கும் கொண்டு சென்றவர், சென்னை பொங்கிமடாலய சாதுராம் சுவாமிகள். ஊரெங்கும் திருப்புகழ்
சபைகளை நிறுவியர். வள்ளி மலை சுவாமிகள் சீடர். இவர் பாடிய அருட்பாடல்கள் பத்தாயிரத்திற்கும் மேல் உள்ளன.
கிருபானந்த வாரியார் சுவாமிகள் : 1906ல் காங்கேயநல்லூரியில் அவதரித்தவர் திருமுருக கிருபானந்த
வாரியார் சுவாமிகள். தான் வாழ்ந்த 87 வயது வரையில் திருப்புகழ் பரப்புவதையே தொண்டாகச் செய்தவர்.
'திருப்புகழ் அமுதம்' என்ற மாத இதழில் திருப்புகழுக்கு விளக்கம் அளித்து அவரே வெளியிட்டார். குமார வயலூர்,
வள்ளிமலை, வடலூர் ஆலயங்களில் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்தினார். திரைப்படங்கள் மூலம் முருக
பக்தியை வளர்த்தார். இவருடைய சீடர் சாண்டோ சின்னப்பத்தேவர் ஆவார்.
தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரம் : ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருப்புகழ் பக்த ஜனசபையை சென்னை
இராயப்பேட்டையில் திரு.வி.க. அமைத்துள்ளார். 'முருகன் அல்லது அழகு' என்ற நூல் எழுதினார். ஸ்ரீபாம்பன்
சுவாமிகள் இந்த சபையில் வந்து திருப்புகழ் பெருமைகளைப் பேசியுள்ளார். மகாகவி பாரதியார் இங்கு வந்து
முருகன் பாடல்களை அரங்கேற்றியுள்ளார்.
“திருப்புகழ் அன்பர்கள்” இராகவன் : திருப்புகழைப் பரப்பும் ஒரே நோக்கத்துடன் டெல்லி, மும்பை, பெங்களூர்,
சென்னையில் ‘திருப்புகழ் அன்பர்கள்’ என்னும் சபையை டெல்லி இராகவன் அமைத்து பல ஆயிரம்
பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் திருப்புகழ் இசைப்பயிற்சி அளித்தார். இன்று இந்த மன்றங்கள் 40
ஆண்டுகளாகத் திருப்புகழைப் பரப்பி வருகின்றது.
"திருப்புகழ் அரசு" ஈரோடு வேங்கட்ராவ் : சென்னைத் துறைமுகப் பொறியாளரான 'வேங்கட்ராவ்' 1917இல், வள்ளிமலை சுவாமிகள் வழிகாட்டலில் திருப்புகழ்ச் சபைகளை நிறுவி, திருப்புகழ் பரப்பினார்.
“திருப்புகழ்மணி” T.M. கிருஷ்ணசாமி : ஜகத்குரு மகாபெரியவரால் ‘திருப்புகழ் மணி’ என்று போற்றப்பட்டவர். வழக்கறிஞராய் இருந்து திருவிதாங்கூர் நீதிபதியாக உயர்ந்த டி.எம். கிருஷ்ணசாமி ஐயர். ‘கையடக்கத் திருப்புகழ்’ நூலை வடிவமைத்து வழங்கியவர்.
'திருப்புகழ் கவிராயர்' சென்னை ஈ.வே. வேங்கட சுப்ரமணியம், கொடுமுடி கோகிலம் கே.பி. சுந்தராம்பாள், திருப்புகழ் இலட்சுமி அம்மாள், பித்துகுளி முருகதாஸ் போன்றோர் திருப்புகழ் பரப்பி திருவருள் பெற்றுள்ளனர்.
1937 இல் வெளிவந்த ‘அருணகிரிநாதர்’ திரைப்படத்தில் டி.எம்.மாணிக்கபாகவதர் நடித்தார்.
1964 இல் வெளிவந்த ‘அருணகிரிநாதர்’ திரைப்படத்தில் டி.எம். சௌந்தராஜன் நடித்தார்.
“எந்தை பிரானுக்கு இருமூன்று வட்டமாய்த்
தந்தைதன் முன்னே ‘சண்முகம்’ தோன்றலாந்
‘கந்தன்’ ‘சுவாமி’ கலந்து அங்கு இருத்தலான்
மைந்தன் இவன் என்று மாட்டிக் கொள்ளீரே” - திருமந்திரம் 1026.
மூவாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட திருமந்திரம் கந்தன் சண்முகம் வழிபாட்டைக் காட்டுகிறது. அன்று முதல் அருணகிரிநாதர் காலம் வரையில் போற்றப்படும் முருகன், இன்றும் அருள்தருவதில் வள்ளலாய்த் திகழ்கிறான்! அருளை வாரி வழங்கும் திருப்புகழைப் பாடி மகிழ்வோம்.
★★★
அருணகிரிநாதர் அருளிச் செய்த நூல்கள் ஆறு: திருப்புகழ், திருவகுப்பு, கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், வேல் மயில் விருத்தம், கந்தரனுபூதி என்பன அவை. இந்த ஆறு நூல்களில் கந்தரனுபூதி வடிவத்தில் சிறியது மகிமையில் மிகப்பெரிய மந்திர சாத்திரம் ஆகும். இதன் பெருமையை உணர்ந்த தாயுமானவர் கூறுவதைக் காண்க:- கந்தர் அனுபூதி பெற்று கந்தர் அனுபூதி சொன்ன எந்தையருள் நாடியிருக்கும் நாள் எந்நாளோ?
இது அருணகிரிநாதர் வெறும் இலக்கண அறிவால் பாடிய நூல் அன்று அவருடைய அனுபூதியைப் பெற்று கந்தர் அனுபூதி பாடி அருளினார்.
— திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்

