நினைத்தாலே முக்தி தருவது திருவண்ணமலை என்பர். அப்படி அருணையின் நினைவு வந்தவுடன் நம் மனக்கண் முன் நிற்பது இரண்டு தவ யோகிகள். இன்றளவும் எண்ணிலடங்கா சித்தபுருஷர்களின் தபோ பூமியான அருணையில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இரண்டு ஞானச் சுடர்கள் மனிதவடிவில் உதித்தன. அவர்கள் பதினைந்தாம் நூற்றாண்டில் பிறந்த ஒரு கவிராஜ புருஷரும், இதோ நம் கண் முன்னே எழுபது வருடங்களுக்கு முன் நடமாடிய ஒரு மஹரிஷியும் ஆவர்.

மலரும் மணமும் போல, தேனும் இனிப்பும் போல இரண்டறக் கலந்த ஞானத்தையும் பக்தியையும் போதித்த அம்மகான்களின் திருப்பெயர்கள் அருணாசலத்துடன்

இணைபிரியாது இணைந்துள்ளன. ஒருசுடர் திருவண்ணாமலையிலேயே உதித்தது. மற்றொன்று திருச்சுழியில் மனித உருவெடுத்து திருவண்ணாமலையில் பிரகாசிக்க வந்தது, ஒன்று படாது பாடுபட்டு, அதன் பின்னர் ஞானத்தைப் பெற்ற, சேற்றில் பிறந்த ஞானத் தாமரை; மற்றொன்று பிஞ்சிலேயே பழுத்த ஞானப்பழம் இந்த ஸ்தூல உலகின் கண்ணோட்டத்தில் இருவருக்குள்ளும்தான் எத்தனை எத்தனை வேற்றுமைகள்! ஆனால் இருவரின் முதலும் முடிவுமான லட்சியம் என்னவோ ஒன்றுதான். அவர்களில் ஒருவர் வாக்கு தேவதைக்குத் தன் நாக்கில் இருப்பிடம் தந்த வாக்குக்கோர் அருணகிரிநாதர்; மற்றொருவர் 'பகவான்' என அன்புடன் அழைக்கப்படும் ரமண மஹரிஷி..

திருப்புகழை பக்தி நிறை நூலாக மட்டுமல்லாமல் 'மரணமில் முடிவுள பொருளை' அடையும் வழியைக் காட்டும் வேதாந்த நூலாகவும் நமக்கு அருளியுள்ளார் வாக்குக்கோர் அருணகிரி. சிறுவயதில் மிகவும் அடிபட்டு, மிடியிலும், தகாதவர் பிடியிலும் சிக்கித் தவித்து, நோய் வினைமூண்டு தன் வாழ்க்கையின் முடிவே எல்லா துக்கங்களுக்கும் முடிவு என முடிவு செய்தார். கோபுரத்திலிருந்து குதிக்க முயன்றார். “சோதனை செய்தது போதும். இவனுக்கு ஆத்ம போதனை செய்து, அவனை உய்வித்து அவன் மூலம் உலக மாந்தரையும் உய்விக்க வேண்டும்” என அண்ணாமலையாரின் அரும்புதல்வன் ஆறுமுகன் திருவுளம் கொண்டான். தன் மானுடப் புதல்வனைக் கைகளிலேந்தி, ஞான வேலால் அவன் நாக்கில் எழுதி ஞானோபதேசம் செய்தான். “சும்மா இரு சொல்லற” என்றவுடன் மோன நிஷ்டையில் ஆழ்ந்து விட்டார் அருணகிரி. அதன்பின் அவரை எழுப்பி உலகத்தாருக்கு அவரால் ஆக வேண்டிய சேவையை குறிப்பால் உணர்த்தினான் முருகன். ஆகவே அவனருளால் ஞானம் பெற்று அவன் புகழ் பரப்புவதற்கேன்றே அவனாலேயே அனுப்பப்பட்டவர் அருணகிரியார்.

தங்குதடையில்லாமல் செந்தமிழ்பாக்களில் சந்தத்தை வைத்து சித்ரகவித்துவ சத்தமிகுத்த திருப்புகழை பூர்வ பச்சிம திக்குகளிலெல்லாம் பரப்ப அண்ணாமலையினின்றும் புறப்பட்டார். தன் பாதங்கள் நோக ஆசேது ஹிமாசலம் என்று கூறுவது போல் குமரன் குடி கொண்ட இடங்களுக்கெல்லாம் சென்று பாடல்களை சமர்ப்பணம் செய்தார். க்ஷேத்ர கோவை என்றே ஓர் இனிய திருப்புகழ் உள்ளது. மேலும் தன் இஷ்ட தெய்வமான முருகனைப் பாட்டுடை நாயகனாக வைத்துப் பதினாறாயிரத்துக்கும் மேற்பட்ட பாக்கள் அவர் நாவிலிருந்து பாய்ந்து வந்திருக்கின்றன. ஆனால் கால வெள்ளத்தில் அவற்றில் பெரும்பாலானவை அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. எஞ்சியவை 1330 திருப்புகழ் பாக்களும், அந்தாதியும், அலங்காரமும், அனுபூதியும் சில வகுப்புகளும் மட்டுமே. ஒவ்வொன்றிலும் கந்தனை விளித்து, சிந்தையில் வைத்து, அந்தரங்கத்தில் நிறுத்தி, பந்த பாசத்தை அறுத்து, தொந்த வினைப்போக்கி, சந்தச் சபைகள் எல்லாவற்றிலும் சிந்தாமல் சிதறாமல் ஆண்டவன் திருப்புகழைப் பரப்பி அண்டி வந்தவர்க்கெல்லாம் அவனை அடையும் வழியைக் காட்டியிருக்கிறார். பின்பு தானும் விந்து நாதத்தில் இரண்டறக் கலந்துவிட்டார்.

ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகளுக்குப்பின் வேங்கடராமன் என்றொரு சிறுவன், தன் பால பிராயத்தில் மரணம் என்றால் என்ன என்றறியப் புகுந்தான். உடலைக் கட்டையாகக் கிடத்தி இன்னதென்றறியாத யோகத்தின் உட்புகுந்து ‘உடல்' வேறு 'தான்' வேறு என்று உணர்ந்தான். உடல் இறந்த பிறகும் 'தான்' இருப்பதாகவும், ,அந்த ‘தனக்கு' தன் உடலைப் பார்த்த பின்பும் துக்கம் ஒன்றும் ஏற்படாததாலும் அந்த 'தான்' என்பது பரிபூரண ஆனந்தமயமான ஆத்மாதான் என்பதை விரல் சொடுக்கும் நேரத்தில் அறிந்து கொண்டான். உலகப்பற்றை நீக்கித் தன் தாதையைத் தேடி திருவண்ணாமலைக்கு வந்தான்; வந்தவன், அந்த இறைவனை தன்னுள்ளேயே கண்டான்; தன் உள்ளேயே கண்டதனால் அவனுக்கு வெளியே வேறெங்கும் செல்ல வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விட்டது. அதன்பின் அந்த அருணையின் எல்லையை விட்டு அகலவேயில்லை. அருணாசலம்தான் அசலம் என்றால் அவனும் அசையாமல் அங்கேயே தங்கிவிட்டான். அந்த ஞானத் தாமரையைத் தேடி உலகெங்கிலுமிருந்தும் சாதகர்கள் மொய்க்கும் வண்டுகளாகத் தேடி வந்தனர். இன்றும் வந்த வண்ணம் இருக்கின்றனர்.

இதை ஸ்ரீ முருகனார் மிக அழகாக விவரிக்கின்றார்.

அருந்தவ மாட்சியால் ஆனந்தமாக
இருந்த இடத்திலிருந்தே-பொருந்த
உலகோரைத் தன்திருமுன் ஒன்றுபடக் கூட்டி
மலவாதனைக் கழித்தான் மன்-

-- ஸ்ரீ முருகனார். (அருணாசல அக்ஷரமணமாலை வருத்தியுரை - பதிப்புரை)

மஹரிஷி மோனமே குருவாகி நின்றவர். அவரும் ஞானத்தையும் கருணையையும் தேக்கி பல பாடல்களை எழுதியுள்ளார். எனினும் நிறைய பாடல்கள் பக்தர்களின் வேண்டு கோளுக்கு இணங்க அருளிச் செய்தவை. அருணகிரியோ மடை திறந்த வெள்ளமாக ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். பாடும் பணியே பணியாய் இருந்த அருணகிரி எப்பொழுது பாடுவதை நிறுத்தினார் என்றே தெரியாது. தன் உடல் எரிக்கப்பட்ட பின்னரும் கூட கிளிரூபத்தில் இருந்து கொண்டு தன் தலைவனைப் பாடியிருக்கின்றார்.

இவ்விரு மகான்களில் ஒருவரின் பாடல்களில் ஞானம் மேலோங்கி இருந்தது என்றால் மற்றவரின் பாடல்களில் பக்தியின் சுவை சற்று தூக்கலாக இருக்கிறது.

ஒருவர் மூலவர் என்றால் மற்றவர் உற்சவர். இத்தருணத்தில் பரமசிவனின் புதல்வர்களான ஐந்துமுகனும், ஆறுமுகனும் ஒரு கனிக்காக உலகைச் சுற்றி வந்த சம்பவம் நினைவு கூறத்தக்கது. ஐங்கரன் தன் பெற்றோரைச் சுற்றி வந்து பரமாத்மஸ்வரூபத்தில் பிரபஞ்சத்தைக் கண்டறிகின்றான். கந்தனோ, பிரபஞ்சத்தைச் சுற்றி வந்து அதில் பரமாத்மாவைக் காண்கிறான். ரமணமஹரிஷி அருணாசலத்தில் இருந்து கொண்டு அகிலத்திலுள்ளோரை தன்பால் ஈர்த்தார். அருணகிரி, குமரன் குடி கொண்டுள்ள கோயில்களுக்கெல்லாம் சென்று, பாடிப் பரவசமாகி, பாமரனையும் பக்தி பூணச்செய்தார். இவ்விரு மகான்களின் பாடல்களில்தான் எத்தனை ஒற்றுமை! அந்த ஒற்றுமைகளில் இரண்டை ஒப்பிட்டு பார்ப்பதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

அருணகிரிநாதர் முருகனே அடி எடுத்துக் கொடுத்த தன் முதல் திருப்புகழில் 'முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கு இறையே'(முத்து போன்று பற்களை உடைய மென்னகை புரியும் ஐராவத யானை வளர்த்த தெய்வயானையின் தலைவனே) என்று தன் தந்தையான முருகனும் தாயான தெய்வயானையும் இணை பிரியாது இருப்பதைச் சுட்டிக் காண்பிக்கின்றார். இந்த திருப்புகழில் ‘பட்சத்தொடு ரட்சித்துஅருள்வாயே'எனும் போது 'உன் பக்கத்தில் என்னை வைத்து உன்னுடன் சேர்த்துக் கொள்வாயே'என்றும் கூறி சிவ ஜீவ ஐக்கியத்தை வேண்டுகிறார். இது ஓர் உபதேசத் திருப்புகழ் ஆகும். ஆதலால், சிவபெருமான் தனயனிடம் உபதேசம் பெற்ற நிகழ்வையே முதன் முதலாக பாடுகிறார். 'உ' என்பது பிரவண மந்திரத்தின் காக்கும் எழுத்தாகும். 'ம' என்ற மெய்யெழுத்துடன் 'உ' என்ற பிரணவ மந்திரத்தின் ஒரு பகுதியை இணத்து, உலகை யெல்லாம் காக்கும் கடவுள் (பெருமாள்) என்று குறிப்பால் உணர்த்துகிறார். மேலும் ‘தாயிற் சிறந்ததொரு ‘கோவிலுமில்லை என்ற செம்மொழிக்கேற்ப முத்தம்மை என்ற தன் தாயின் பெயரையும் வைத்து ஆரம்பிக்கிறார். காக்கும் கடவுள் ஆனதால், கிரியா சக்தியின் மகத்துவம் விளங்க வேண்டும். ஆகையால் கிரியா சக்தியான தெய்வயானை அம்மையின் சிறப்புடன் முன் மொழிகிறார். என்றும் சொல்லலாம்.

பட்டப்பகல் வட்டத்திரியில் இரவாக பத்தற்கிரதத்தைக் கடவிய - பகல் பொழுதை (சூரியனை) மறைத்து, இரவாகச் செய்து, தன் பக்தனாகி அருச்சுனனைக் காப்பாற்றியது கிருஷ்ணாவதாரத்தில். அந்த அவதாரம் செய்தவர் பச்சைபுயல் மரகத வண்ணனான திருமால். இது ஓர் உபதேசத் திருப்புகழ் என்பதற்கேற்ப அந்த அவதாரத்தைப் பற்றி குறிப்பிடுகையில், அருணகிரிநாதர் நமக்கு உணர்த்தும் பொருளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த புருஷோத்தமன் பத்தற்கு (அர்ச்சுனனுக்கு) யுத்த களத்தில் இரதத்தைக் கடவிய போதுதான் பகவத் கீதை என்னும் பரம உபதேசத்தையும் அருளினான். வேதத்தை மறை என்றும் கூறுவார்கள். கண்ணன் அர்ச்சுனனுக்கு உபநிடதத்தின் சாரமான கீதையை எடுத்துக் கூறினான் என்பதை இந்த வரியில் வெளிப்படையாகக் கூறாமல் மறைத்துக் கூறியுள்ள அருணகிரிநாதரின் கவித்துவத்தை என்னவென்று சொல்வது

நவவிதா பக்தியில் ஒன்றான நாயகி தன் நாயகனிடம் காட்டும் காதலையும் பல பாடல்களில் வெளிப்படுத்தியிருக்கிறார் அருணகிரிநாதர். அகப்பொருள் விளக்கமாக அவர் கந்தனைத் தன் மணவாளனாக நினைத்துத் தன்னுடைய கவிமாலைகளை பல்வேறு விதமாகச் சாற்றி இன்புறுகிறார்.

“விரித்த ருணகிரிநாதன் உரைத்த தமிழ் எனும் மாலை மிகுத்த பலமுடன் ஓத மகிழ்வோனே' (வரித்தகலை - திருப்புகழ்)

கந்தனின் புயங்கள் எந்த மாலையை சூடியிருக்கின்றன தெரியுமா? “அரியதொர் தமிழ்கொடு உரிமையொடு அடிதொழுதே கவிமாலையாக அடிமை தொடுத்திடு புன்சொல் ஒன்று நிந்தியாமல் புனைந்தன”.(புயவகுப்பு)

அது மட்டும் அல்ல, தான் இயற்றிய மாலைகளை கந்தன் புனைந்து கொண்டால் மட்டும் போதாது, அவன் அணிந்துள்ள தார்மாலையை தனக்குத் தந்தருள வேண்டும்'என்று இறைஞ்சிக் கேட்கிறார்.

நீலங்கொள்மேகத்தின்மயில்மீதே நீவந்த வாழ்வைக் கண்டதனாலே மால் கொண்டபேதைக்கு உன் மணநாறும் மார் தங்கு தாரைத் தந்தருள்வாயே.” (நீலங்கொள் -திருப்புகழ்) “குறவாணர் குன்றில் உறை பேதை கொண்ட கொடிதான துன்பமயல்தீர குளிர் மாலையின்கண் அணி மாலை தந்து குறை தீர வந்து குறுகாயோ”

(விறல்மாறன் - திருப்புகழ்)

அவர் அணிவிக்கும் மாலைகள் எல்லாம் இன்று பூத்து நாளை வாடி விடும் மலர்களால் ஆனதல்ல. வாடாத மாத்ருகாபுஷ்பமாலைகள். அவருடைய நாவுதான் அவை பிறந்த இடம். ஞானப் பழமான கந்தன் நடக்கும் இடம் அது. ஆகவே அது தெய்வீகம் நிறைந்தது. அவை அன்பு எனும் நாரினால் தொடுக்கப்பட்ட மாலைகள். அந்த மாலைகளுக்கு வாசனை வேண்டுமே!, அவற்றுக்கு ஞானம் எனும் நறுமணத்தைத் தடவினார். ஞானமாலைகள் ஆதலால் அவை தானாகவே ஒளி வீசுகின்றன. அவைகளைச் சுற்றி குற்றமற்ற அவருடைய புத்தி எனும் வண்டு ரீங்காரமிடுகிறது. மேலும் ஐம்பத்தொரு அக்ஷரங்களாலான இந்த மாத்ருகா புஷ்பமாலையை அவனுடைய அழகிய திருப்பாதங்களில் சமர்ப்பிக்கிறார்.'

ஆசைகூர் பத்தனேன் மனோ பத்மமான பூவைத்து ...... நடுவே
அன்பான நூலிட்டு நாவிலேசித்ரமாகவே கட்டி ...... ஒரு ஞான
வாசம் வீசி ப்ரகாசியா நிற்ப மாசிலோர் புத்தி ...... அளிபாட
மாத்ருகா புஷ்ப மாலை கோல ப்ரவாள பாதத்தில் ...... அணிவேனோ இது போன்றே பகவான் ரமணரும் ஒரு மாத்ருகா புஷ்பமாலையை அருணாசலருக்கு சமர்ப்பிக்கிறார். அவர் இயற்றிய தத்துவப் பாடல்களிலேயே மிகவும் பிரபலமான 'அக்ஷரமணமாலை'யில் வரும் நூற்றியெட்டு கண்ணிகளில் அமைந்துள்ள ஒவ்வொரு மலரும் வாடாத இதய மலராய் அருணாசலனுக்கு அர்ச்சிக்கப்பட்டதாகும். அவை வெறும் வார்த்தைகளாக இல்லாமல் உயிரோட்டமுள்ள காவியமாக இருக்கின்றன. இந்த பக்திமாலை அன்பு மலர்களை ஞான நாரினால் தொடுக்கப்பட்ட மாலையா அல்லது பக்தி எனும் பட்டு நூலில் தத்துவ மலர்களைத் தொடுத்த மாலையா என்று திகைக்கிறோம். இப்பாமாலை அகரவரிசையில் இருப்பதால், மாத்ருகா புஷ்பமாலையாகவும் இருக்கின்றது.

மாலையளித்தருணாசலரமண என் மாலையணிந்தருள்அருணாசலா.

இக்கருத்து அருணகிரிநாதாரின் மேற்கூறிய அகப்பொருள் விளக்கத்தை அப்படியே பிரதிபலிக்கிறது. ரமணன் என்றால் ரமிக்கச் செய்பவன் என்று பொருள். அக வாரிஜத்தில் ரமிக்கின்ற இறைவனுக்கு ரமணன் தொடுத்த மாலை அது. ஈசனுக்கும் ஜீவனுக்கும் ஏற்படப் போகும் ஐக்கியத்தின் ஆரம்பமாகத் திருமணத்தைக் குறிக்கும் மாலை அது. மாலை மாற்றுப் படலத்தின் முக்கிய சாட்சி அது. அன்பாலும் மனதாலும் ஒருமித்த காதலர் இருவர் தொடங்கப் போகும் லட்சியமான ஆனந்த வாழ்க்கைக்கு ஆதாரமான மாலை அது. இத்தனை பொருள் பொதிந்திருந்தாலும், மிக எளிய சொற்களால் பகவான் ரமணர் “அருணாசலா என் மாலையை ஏற்றுக் கொண்டு உன் மாலையை எனக்குத் தந்தருள்வாயாக”என்கிறார்.

அற்பமானதொரு ஜீவன் மாலையை பரமனுக்கு சாற்றுவதில் அதிசயம் ஒன்றும் இல்லை. ஆனால், பரமனே தன் மாலையை அந்த ஜீவனுக்குச் சாற்றி ஏற்றுக் கொள்வதில்தான் முக்கியத்துவம் இருக்கிறது. இந்த மகனீயர்கள் இருவருமே இந்த உடலின் மரணத்துவத்திலிருந்துதான் ஞானம் பெற்றவர்கள். இருவருமே அநுபூதி பெற்ற மகான்கள், இருவருமே பக்தர்களின் முக்தி நெறிக்கு வழி வகுத்துத் தந்தவர்கள். தத்துவப் பாடல்களை இயற்றி அதன் மூலம் ஆண்டவனை அடையும் ராஜபாட்டையை செப்பனிட்டுக் கொடுத்தவர்கள். இவ்விரு மகான்களின் பாக்களை அவர்களுடைய திருக்கரங்களின் விரல்களாக நினைத்துப் பற்றிக் கொண்டு நடந்தால் போதும்; நம் முக்திக்கொரு வித்து கிடைத்துவிடும்

மாலை மாற்றிக் கடிமணம் புரிந்தபின் “ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே”என்று வாழ்த்துவது நம் மரபு. இங்கோ ஜீவனும் பரமனும் இணைந்துள்ளனர். ஆகையால் இங்கு நிலவப்போவது வெறும் ஆனந்தம் அல்ல. அது பேரானந்தம், அது சச்சிதானந்தமாகும்.

ஜீவன் முக்தராகிய ஸ்ரீரமணரை அருணாசல சிவன் ஆட்கொள்கிறான். வள்ளியை நாடி வந்து மணம் புரிந்து கொண்ட முருகன், அருணகிரிநாதரைத் தேடி வந்து தன்வசம் ஆக்கிக்கொள்கிறான்.

★★★

முருகனுக்கு ஏராளமான கோவில்கள் இருக்கின்றன. அவனுக்கு இனி புதிய கோயில்கள் கட்டுதல் வேண்டா; எங்கும் நிறைந்துள்ள அவனுக்கு எக்கோவிலும் வேண்டா. அவன் செந்நெறி வளர்க்க கழகங்கள் காணுங்கள்; கல்லூரி அமையுங்கள்; அறநிலையம் நிறுவுங்கள்; திருப்புகழைப் பொருளுணர்ந்து ஓதுங்கள்; இயற்கையிலுள்ள அவன் அழகை நூல்களாக எழுதுங்கள்; பாட்டாகப் பாடுங்கள்.

- தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார்