முன்னுரை:
உலகெலாம் உணர்ந்து ஓதற்கரிய இறைவனை பலவிதமான மக்கள் அவரவர் விருப்பப்படி அவரவருக்கு பிடித்த உருவத்தில் அவரவர் சமயந்தோறும் வணங்குகின்றனர். அவன் அருளால் அவன் தாள் வணங்கும் அடியார்களை அவன் தாளோடு பேதமையின்றி ஒன்றுவிக்கும் முயற்சியும் பயிற்சியும் தவம் எனப்படும். அத்தகு தவத்தை எப்படி ஆற்றுவது என்று சிவாகமங்கள் நான்கு படிமுறைகளை வகுத்திருக்கிறது. அவை முறையே சரியை, கிரியை, யோகம், ஞானம் எனப்படுகிறது என்று சிவஞானபோதம் பறை சாற்றுகிறது. பழந்தமிழர் அதனை சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்றழைத்தனர். இந்நான்கையும் அடிப்படையாக வைத்து தான் பகவத்கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கர்ம யோகம், பக்தி யோகம், ஞான யோகம் என்ற மூன்று யோகங்களை பாடினார். ஏன் இசுலாமியத்திலும் இந்த
நான்கு படிநிலைகளை ஷரியத், தரிகத், ஹகிகத், மஹ்ரிஃபத் என்று அழைக்கின்றார்கள். இந்நான்கு படிநிலைகளையும் அனைத்து அருளாளர்களும் பாடியுள்ளனர். முருகனை திருப்புகழ் மாலை சாற்றி அலங்கரித்த அருணகிரிநாதரும் இந்த நான்கு படிநிலைகளையும் தனது திருப்புகழில் படியுள்ளார். இதில் நான்காம் படிநிலையான யோகத்தை ஆழமாக உணர்ந்து, அதன் முழு பயனான சிவ ஞானத்தை எய்தச் செய்கின்ற வகையில் செய்யும் தவமுறை பயிற்சியே சிவயோகம். இன்னும் குறிப்பாகக் கூறினால் சிவாகமங்களில் விளக்கப்படும் அட்டாங்க யோகத்தைத் தவமுறையோடு பயில்வதே சிவயோகம்.
அருணகிரிநாதர் பாடிய சிவயோகக் குறிப்புகள்:
உண்மையில் சிவயோகம் என்பது விழிகளை புருவ நடுவில் வைத்து எண்ணத்தை ஒரு நிலைப் படுத்தும் பயிற்சி மட்டும் அல்ல. சிவயோகத்தின் வெளிப்பாடு யாதெனின் நம்மை சூழ்ந்திருக்கும் திருவருளின் குறிப்புகளை (Pure Energy Vibration) உணர்ந்து அதன் வழி செம்மையாக அறம் பிறழாமல் வாழ்வியலை செலுத்துதலே சிவயோகி மேற்கொள்ளும் சிவயோகமாகும். இது முற்றிலும் சிவயோகம் மேற்கொள்ளும் உயிரின் அனுபவத்தினாலேயே ஏற்படுகிறது. இதனைப் பற்றி அருணகிரிநாதர் தமது திருப்புகழ் மற்றும் பிற பாடல்களில் தெளிவாக குறிக்கிறார். வயலூர் திருப்புகழில் சரியை கிரியை யோக நெறிகளை கடனுக்காக பின்பற்றி அதிலேயே தோய்ந்து விடாமல் சலனப்படாத சிவஞானம் பெறவேண்டியே நாம் யோகம் பயில வேண்டும் என்று வலுக்கப் பறைகிறார்.
“சரியைக்ரி யாயோக நியமத்தின் மாயாது... சலனப்ப டாருஞானம்... வந்துதாராய்”
மேலும் சிவயோகமே நம் அறிவினை வளர்த்து நம்மை வித்தகனாக்கி, உள்ளத்தால் உத்தமனாக்கி அந்நெறியிலேயே பிறழாமல் நின்று சிவஞானத்தை அடைவிக்கும் பரியோகத்தை (சிவயோகம்) அருள்வாயே என்று கருவூர் முருகப்பெருமானிடம் விண்ணப்பிக்கிறார்.
“மதியால்வித் தகனாகி மனதாலுத்....தமனாகிப்
பதிவாகிச் சிவஞான பரயோகத்....தருள்வாயே”
இதே போல் சுவாமிமலையில், அரை நிமிட அளவிற்கு கூட சிவயோகத் தியானம் செய்யத் தெரியாத மூடன் என்று தன்னைத் தானே இகழ்கிறார்.
“சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில், தவமுறைதி யானம் வைக்க... அறியாத சடகசட மூட மட்டி” சிவயோகம் எப்படி செய்தல் வேண்டும் என்று சீர்பாத வகுப்பில் மிகச்சரியாக பாடுகிறார்.
“உடலுமுட லுயிருநிலை பெறுதல்பொரு ளெனவுலக
மொருவிவரு மநுபவன... சிவயோக சாதனையில்
ஒழுகுமவர் பிறிதுபர வசமழிய விழிசெருகி
யுணர்வுவிழி கொடுநியத.... தமதூடு நாடுவதும்”
நம் உடலும் உடலின் உள் இருக்கும் நம் உயிரும் ஒரு நிலை பெறுதலையே குறிக்கோளாகக் கொண்டு புருவ நடுவில் விழியினைச் செருகி நம் உள்ளுணர்வை ஆராய்ந்து, அதன் வழியே சிந்தையை ஊடுருவி, யோக நியதியாகிய அறங்கள் பிறழாமல் நின்று 'நான்' என்னும் உணர்வு உதிக்கின்ற அந்த இடத்தை அகத்தில் நாடிச் சென்று இவ்வுலகத்தில் உள்ள அனைத்து பொருட்களின் தன்மைகளை அறிந்து தன்னையும் அறிந்து தனக்கு மூலமான தலைவனையும் நாடி அறிதலே சிவயோகம் என்று தெளிவுபடப் பாடுகிறார்.
சிவயோக அருட்குருவாகிய அருணகிரிநாதர்:-
சிவயோகம் என்பது காசு கொடுத்துக் கற்றுக் கொள்ளும் கல்வி போல் இல்லாமல் குருவின் அருள் வழியே நமக்கு கிடைப்பது. இருபத்தோராம் நூற்றாண்டாகிய இன்றைய காலத்தில் பல மனிதர்கள் தங்களை சிவயோகி என்று அழைத்துக் கொண்டு, யோகம் கற்றுத் தருகின்றனர். ஆனால் அருணகிரிநாதரின் பாடல்களே உபதேசமாக மாறி அடியாளர்களை சிவயோக நெறியில் பிறழாமல் வழிநடத்துகின்றது. இதற்கு மிகச் சிறப்பான உதாரணமாக வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகளைக் குறிப்பிடலாம். திருப்புகழையே காதல் செய்து வாழ்வியலை செலுத்திய அவர் தனக்கு குருவுபதேசம் செய்ய வேண்டி திருவண்ணாமலை இரமண மஹரிஷியிடம் கேட்டுக்கொண்டார். இரமணரோ அவரை மலையடிவாரத்தில் வசித்து வரும் சேஷாத்ரி சுவாமிகளிடம் உபதேசம் கேட்குமாறு கூறி அனுப்பினார். எருமைமாடுகள் நீராடிய சேற்றில் இருந்த சேஷாத்ரி சுவாமிகளை சந்திக்கச் சென்றார் அவர். சேறென்றும் பாராமல் அதில் இறங்கி தன் குருவை சந்தித்து இரமணர் கூறியதைச் சொன்னார். இறைவனின் ஏகத்துவத்தை குறிக்கும் ஒரு திருப்புகழை பாடச் சொன்னார் சேஷாத்திரி சுவாமிகள். அவ்வாறே பாடினார் சச்சிதானந்த சுவாமிகள். அப்பாடலே சச்சிதானந்த சுவாமிகளுக்கான உபதேசம் என்று மொழிந்த அருட்குருநாதர் சேஷாத்ரி சுவாமிகள், அந்த திருப்புகழை குருமந்திரமாக பற்றி சிவயோகம் பயின்ற அவர் இறுதியில் சமாதி நிலை அடைந்தார். அப்படியென்றால் திருப்புகழில் வாழ்வியல் நெறி இருக்கிறது, புராணக் கதைகள் இருக்கின்றன. வரலாற்றுக் குறிப்புகள் இருக்கிறது, இவற்றுக்கெல்லாம் மேலாக உபதேச மந்திரங்கள் இருக்கின்றன. ஆம் முருகனையே கனவிலும் நனவிலும் காணும் அடியார்கள் யாவரும் உய்யும் பொருட்டு திருப்புகழ் வழியாக முருகனே தன் அடியார்களின் அகத்தில் நின்று சிவயோக நெறியில் வழிநடத்துகின்றான். திருப்புகழே சிவயோக உபதேச மந்திரமாக மாறுவதால் திருப்புகழ்ப் பாடிய அருணகிரிநாதர் வேறு சிவயோக குருவாய் விளங்கும் முருகனும் வேறல்ல.
திருப்புகழில் சிவயோக அனுபவ முறைகள்:
திருப்புகழ் வாயிலாக அருணகிரிநாதரே நமக்கு அருட்குருநாதராக இருந்து வழிநடத்துகிறார் என்று பார்த்தோம். இனி அவர் எவ்வாறு வழிநடத்துகிறார் என்று பார்ப்போம்.
“சிலகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர் திருவடிக ளேநி னைந்து... துதியாமல் தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று திரியுமடி யேனை யுன்ற... னடிசேராய்”
இந்த பழனித் திருப்புகழில் யாருடன் கூடக்கூடாது, யாருடன் கூட வேண்டும், எதைச் செய்யக் கூடாது, எதைச் செய்ய வேண்டும் போன்ற அட்டாங்க யோக இயம நியமங்களை குறிப்புகளாகத் தருகிறார்.
“ஊமை யேனையொளிர் வித்துனது முத்திபெற
மூல வாசல்வெளி விட்டுனது ரத்திலொளிர்
யோக பேதவகை யெட்டுமிதி லொட்டும்வகை....யின்றுதாராய்”
இந்த பழமுதிர்ச்சோலைத் திருப்புகழில் அட்டாங்க யோகத்தை தமக்கு நல்குமாறு முருகனை வேண்டுகிறார் அருணகிரியார். சிவயோகத்தைப் பற்றிய அனுபவம் இல்லாமல், அந்த அனுபவங்களை தனக்கு நல்குமாறு முருகனை வேண்டவில்லை. அருணகிரிநாதர் சிவயோகத்தை நன்கு உணர்ந்து செய்திருக்கிறார். ஆனால் திருப்புகழை உபதேச நெறியாக பின்பற்றும் அடியவர் இந்த சிவயோக அனுபவங்களை பெறுவதற்காக இவ்வாறு வேண்டுகிறார். இதற்கு சான்று அதே திருப்புகழில் வருகிறது.
“ஆர மூணுபதி யிற்கொளநி றுத்திவெளி
யாரு சோதிநூறு பத்தினுட னெட்டுஇத
யாழி யேழுமள விட்டருண விறப்தியின்... விந்துநாத”
என்று தான் பெற்ற அனுபவத்தை அடியார்களும் பெற்றிட முருகனை வேண்டுவதாகப் பாடலை அமைக்கிறார். நாத விந்து அனுபவம் என்பது சிவயோகத்தின் முதிர்ச்சியில் பயிற்சியாளர் பெறும் அனுபவம். அந்த அனுபவத்தை பெற்றவரே உண்மையை வெள்ளிடையாக வைத்து அருளியல் நெறிப்பாடல்கள் பாடமுடியும்.
அதே போல் சிவயோகத்தைத் தவிர வேறு எந்த யோகப் பயிற்சியையும் அவர் ஆதரிக்கவில்லை. இக்கருத்தை கந்தர் அலங்காரத்தில் பதிகிறார்.
"துருத்தி யெனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றிமுறித்
தருத்தி யுடம்பை யொருக்கிலென் னாஞ்சிவ யோகமென்னுங்
குருத்தை யறிந்து முகமா றுடைக்குரு நாதன் சொன்ன
கருத்தை மனத்தி லிருத்துங்கண் டீர்முத்தி கைகண்டதே”
இதே கருத்தை திருமூலரும் தமது திருமந்திரத்தில் எண்ணாயிரத் தாண்டு யோகம் இருக்கினும் கண்ணார் அமுதினைக் கண்டுஅறி வார் இல்லை என்ற பாடல் வரிகளால் குறிக்கிறார்.
சிவயோகத்தின் பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய பயிற்சியை முறையாக மேற்கொள்ளும் அடியார்களுக்கு இவ்வுலகப் படைப்பிற்கு ஆதாரமாய் விளங்கும் 51 எழுத்துக்களை அறியும் அறிவு ஏற்படும். இந்த அனுபவமே சிவாகமம் விளக்கும் தத்துவ தரிசனம், தம்முடைய மூலமான அறிவை அறியும் அனுபவம் ஏற்படும். இந்த அனுபவமே சிவாகமம் விளக்கும் சீவ தரிசனம். அதுமட்டுமின்றி தமது அறிவுக்கு ஆதாரமான ஒரு பொருள் நிறைவு குறைவின்றி எங்கும் நிறைந்திருக்கும் இயல்பினை அறியும் அனுபவமும் ஏற்படும். இதுவே சிவாகமங்கள் விளக்கும் சிவ தரிசனம். இம்மூன்றும் சிவயோகத்தின் உண்மைப் பயன்கள் ஆகும். இதைப்பற்றிய குறிப்புகளைப் பொதுத் திருப்புகழில் பதிவு செய்கிறார் அருணகிரிநாதர்.
அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரட்சரமும்
அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும்
அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை.... எப்பொருளுமாய
அறிவையறி பவரறியும் இன்பந்த னைத்துரிய
முடிவைஅடி நடுமுடிவில் துங்கந்த னைச்சிறிய
அணுவையணு வினின்மலமு நெஞ்சுங்கு ணத்ரயமு... மற்றதொருகாலம்
நிகழும்வடி வினைமுடிவி லொன்றின்றி ருப்பதனை
நிறைவுகுறை வொழிவறநி றைந்தெங்கு நிற்பதனை
நிகர்பகர அரியதைவி சும்பின்பு ரத்யமெ....ரித்த பெருமானும்
நிருபகுரு பரகுமர என்றென்று பக்திகொடு
பரவஅரு ளியமவுன மந்த்ரந்த னைப்பழைய
நினதுவழி யடிமையும்வி ளங்கும்ப டிக்கினிது...ணர்த்தியருள்வாயே
இந்த மூன்று அனுபவங்களும் சிவயோகம் பயிலும் உயிரை இறை வேறு உயிர் வேறு என்று பேதமை அறுத்து இறைவனோடு ஒன்றி நிற்கும் அத்துவித நிலையை ஏற்படுத்தும்.
இந்த அனுபவத்தையும் ஒரு பொதுத் திருப்புகழில் பதிவு செய்கிறார்.
“அமல வாயு வோடாத கமல நாபி மேல்மூல அமுத பான மேமூல...அனல்மூள அசைவு றாது பேராத விதமு மேவி யோவாது அரிச தான சோபான... மதனாலே எமனை மோதி யாகாச கமன மாம னோபாவ மெளிது சால மேலாக.... வுரையாடும் எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும் இதய பாவ னாதீத...மருள்வாயே”
அது மட்டுமின்றி சிவயோகத்தை பயிலாகி நாம் காவி ஆடை கட்டாயம் உடுத்த வேண்டும் என்றில்லை. தாடி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றில்லை. காடு மலைகள் என்று சுற்றித்திரியவும் வேண்டாம். இல்லத்திலேயே இருந்து பயிலலாம் என்ற உண்மையைச் சிதம்பரத்தில் பாடுகிறார்.
“காவி யுடுத்துந் தாழ்சடை வைத்துங் காடுகள் புக்குந்.... தடுமாறிக் காய்கனி துய்த்துங் காயமொ றுத்துங் காசினி முற்றுந்... திரியாதே சீவ னொடுக்கம் பூத வொடுக்கம் தேற வுதிக்கும் ... பரஞான தீப விளக்கங் காண எனக்குன் சீதள பத்மந்... தருவாயே”
இவ்வாறு சிவயோகத்தின் பெருமையை பாடி அதை மட்டுமே பயிலும் படி அடியார்களுக்கு அறிவுறுத்துகிறார்.
ஐந்தெழுத்தின் விரிவே சிவயோகம்:
சிவயோகம் பயிலும் அடியார்களின் அக அனுபவத்தை அடிப்படையாக வைத்து அமைக்கப் பட்டதே கந்த புராணம். உயிரைச் சூழ்ந்துள்ள மூன்று மலமான ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை சூரர்களாக உருவகப்படுத்தி எழுதினார் கச்சியப்ப சிவாச்சாரியார். அவர் எழுதிய சித்தாந்த கருத்துச் செறிவு மாறாமல் அருணகிரிநாதரும் சிதம்பரம் திருப்புகழில் இதைக் குறிக்கிறார்.
“செருவெங் களத்தில் வந்த அவுணன் தெறித்து மங்க
சிவமஞ் செழுத்தை முந்த...விடுவோனே”
உயிரைச் சூழ்ந்துள்ள மலங்களான சூரர்களை சற்குருவாகிய முருகபிரான் ஐந்தெழுத்தாகிய வேல் கொண்டு தகர்த்தான் என்பது தான் இந்த வரிகள் குறிக்கும் கருத்து. இதில் ஐந்தெழுத்து என்பது வெறும் நமசிவாய, சிவாயநம என்று நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஐந்தெழுத்தின் ஐந்து பதங்களாவன சிவயநம, வயநமசி, யநமசிவ, நமசிய, மசிவயந இந்த ஐந்து பதங்களும் அடியார்களின் பக்குவ முதிர்ச்சியை குறிக்கும். அதாவது நம் உயிரின் பக்குவ முதிர்ச்சி என்பது நம்மை உண்மைச் சரியை, உண்மைக் கிரியை, உண்மை யோகம், உண்மை ஞானம் ஆகிய நான்கு படிநிலைகளில் ஏறுதலையே குறிப்பதாகும். ஐந்தெழுத்தின் உண்மையை பற்றி திருமந்திரம் மிகத் தெளிவாக விளக்குகிறது. சற்குரு தனது திருவாய் மலர்ந்து உபதேசமாக உரைக்கும் எந்தச் சொல்லும் ஐந்தெழுத்தாகும். சச்சிதானந்த சுவாமிகளுக்கு சேஷாத்ரி சுவாமிகள் உரைத்த திருப்புகழும் ஐந்தெழுத்து உபதேசமாகும். அதனை செம்மையாக பின்பற்றி மேற் சொன்ன நான்கு படிநிலைகளிலும் ஏறிய சச்சிதானந்த சுவாமிகளுக்கு, அந்த திருப்புகழே அஞ்செழுத்தாகி வேல் போல் அவரின் மும்மலத்தையும் அறுத்தது.
முடிவுரை:
அருணகிரிநாதரின் திருப்புகழை காதலாகிக் கசிந்து உருகி ஓதும் அடியார்களை முருகனே சற்குருவாய் நின்று அவரவர் பக்குவத்திற்கேற்ப படிநிலைகளில் உயர்த்துவான். திருப்புகழே ஐந்தெழுத்து உபதேசம், அதைவிடாது மன ஒருமையுடன் ஓதி அறம் பிறழாது வாழ்வியலைச் செலுத்துவதே உண்மையான சிவயோகம். திருப்புகழ் ஓதும் அடியார்கள் அதை ஓதுவதோடு மட்டும் நிற்காமல், அதையே ஐந்தெழுத்து உபதேசமாக எண்ணி சிவயோகம் பயின்று முருகனின் திருவடியைப் பெறுவதே பிறவிச் சுழற்சியை கடந்து சிறப்பான பேரின்பம் எய்தும் வழியாகும்.

