நடனக் கலையின் கடவுளாக போற்றப்படுபவர் சிவபெருமான். அவரை கூத்தன், சபேசன், அம்பலத்தான், நடராஜன், ஆடல் வல்லான் என்று பல பெயர்களில் அழைப்பதுண்டு. சிவபெருமான் ஆடும் நடனத்தை தாண்டவம் என்று அழைப்பர்.
தாண்டவங்களில் ஏழு வகைகள் உண்டு. அவைகளை ஆனந்தத் தாண்டவம், சந்தியா தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், கௌரி தாண்டவம், காளிகா தாண்டவம், திரிபுர தாண்டவம், சங்கார தாண்டவம் என்று அழைப்பர்.
சிவபெருமான் ஆடிய ஏழு தாண்டவங்கள் சப்த ஸ்வரங்களைக் குறிப்பதாக அமைகின்றன. ஏழு ஸ்வரங்களைத் தோற்றுவித்தமையை சுந்தரர் “ஏழிசையாய் இசைப்பயனாய்” என்று தேவாரத்தில் பாடுகின்றார்.
நடனம் பற்றிய குறிப்புகள் பல்வேறு தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. நடனக் கலையைப் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கண வரிசையில் முதன்மையானதாகக் கருதப்படும் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளன.
கீழ்க்காணும் தொல்காப்பிய சூத்திரம் நடனக் கலையைப் பற்றி விளக்குகின்றது.
“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறார்க்கு அறிவுறீ இச்
சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்”
(தொல்.பு.இ.88)
சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்” (தொல்.பு.இ.88)
2-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் நாட்டியத்தை நாடகம் என்ற சொல்லினாலே தான் குறிப்பிடுகின்றார். தேவேந்திரனின் சபையில் நாரதமுனிவர் வீணை வாசிக்க ஊர்வசி நாட்டியம் ஆடியதை சொல்லும்போது
“நாரதர் வீணை நயந்தெரி பாடலும்
தோரிய மடந்தை வாரம் பாடலும்
ஆயிரம் கண்ணோன் செவியகம் நிறைய
நாடகம் உருப்பசி நல்காள் ஆகி”
என்கிறார் இளங்கோ அடிகள். “நாடகம் ஆடுதல்” என்பதே முற்கால வழக்கு. “நாடகம் நடித்தல்” பிற்கால வழக்கு மாணிக்க வாசகர் காலத்தில் நடித்தல் வழக்கமாகிவிட்டது. “நாடகத்தால் உன் அடியார்போல் நடித்து” என்பது அவரது திருவாசக வரி.
இளங்கோவடிகள் பதினொரு வகையான நடனங்களைப் பற்றி சிலப்பதிகாரத்தில் குறிப்பிடுகின்றார். மாதவியின் தாய் சித்திராபதி தன் மகளுக்காக நடன ஆசிரியை வைத்து நடனம் பயிற்றுவித்தார். மாதவி ஐந்தாவது அகவையில் தொடங்கி ஏழு அண்டுகளுக்கு தொடர்ந்து நடனப் பயிற்சி பெற்று நடனக் கலைகளில் நுட்பங்களைத் தெரிந்து கொண்டார்.
சங்க காலத்தில் வாரம் பாடிக் கடவுளைத் தொழுதல், ஆளத்திபாடி பாடல்களைப் பாடுதல், பாடலுக்கு அபிநயம் செய்தல், அவிநயத்திற்கு ஆடுதல், தாளத்திற்கு ஆடுதல், முகமாடல், வரிப்பாடலுக்கு ஆடல், குரவை ஆடல் போன்ற ஆடல்கள் ஆடப்பட்டன.
பக்தி இலக்கிய காலங்களில் கோயில்களில் பாடலுக்கு நடனம்
ஆடுதலை சதிர் என்பர். இதனை சம்பந்தர் தமது தேவாரத்துள் பெண்கள்
ஆலயத்துள் நடனம் ஆடுகின்ற காட்சியை அழகாக பாடியிருக்கின்றார்.
“வலம் வந்த மடவார்கள் நடமாட முழுவதிர
மழையென்றஞ்சி
சிலமந்தி அலமந்து மரமேறி முகில் பார்க்கும்
திருவையாறே”
ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் நடராஜரின் நடனத்தைப் பற்றி பல பதிகங்களில் பாடியுள்ளனர். உமை பாட சிவபெருமான் நடனம் புரிந்த செய்தியை திருஞானசம்பந்தப் பெருமான் “பாதம் பலரேத்தப் பரமன் பரமேட்டி” என்று துவங்கும் பதிகத்திலும், அப்பர் பெருமான் “அங்கை ஆர ஏந்தி நின்று ஆடலன்” என்ற பாடலிலும் பதிவு செய்துள்ளனர்.
சோழர் கால ஆட்சியில் 16 வகையான வழிபாடுகளில் நடனமும் ஒன்றாகக் கருதப்பட்டது. இதனை சோடச உபச்சாரம் என்பர். கர்ப்ப கிரஹத்தில் நடைபெறுகின்ற ஒவ்வொரு உபச்சாரத்தையும் தன் கை முத்திரைகளின் வழியே கணிகையர் காட்டுவர். இதற்கு “கைக்காட்டு முறை” என்று பெயர். ராஜராஜசோழன் நாட்டியத்திற்கு எத்தகு முக்கியத்துவம் கொடுத்தான் என்றால். அவன் காலத்தில் பெருவுடையார் கோயிலில் நடனம் புரிவதற்காக 407 ஆடல் மகளிரை தஞ்சையில் குடியமர்த்தி அவர்களுக்கு குடியிருப்புகளையும் அமைத்துக் கொடுத்தான். இவர்கள் “தளிச்சேரி பெண்டீர்” என அழைக்கப்பட்டனர். இவர் காலத்தில் இத்தகு ஆடல் மகளிர் தேவரடியார் என்றே அழைக்கப்பட்டனர்.
இத்தகைய சிறப்புடைய நடனத்தைப் பற்றி 15-ஆம் நூற்றாண்டில் தோன்றிய சந்தப்பாவலர் அருணகிரிநாதப் பெருமான் திருப்புகழில் பல பாடல்களில் குறிப்பிடுகின்றார்கள். இவர் பிரபுடதேவ மகாராஜா காலத்திலே திருவண்ணாமலையிலே வாழ்ந்தவர்.
நடனம் என்பது ஓர் உயரியக் கலை, அஃது மனத்திற்கும், உடம்பிற்கும், ஆன்மாவிற்கும் பக்குவத்தைக் கொடுப்பது. ஆகவே, நடனக்கலை 64 கலைகளிலே மிகச்சிறந்த கலையாக உள்ளது.
சரி, இனி திருப்புகழில் நடனத்தைக் காண்போம்.
அருளாளர் அருணகிரிநாதர் இறைவனை நேரில் காண விழைகிறார். சிந்தனை செய்கிறார். தவத்தில் அமர்கிறார். அவர் தந்தையையும் நினைக்கிறார். இறைவா! முருகா எனக்கு நீ இந்தக் கோலத்தில் காட்சியைக்காட்டு. நீ வரும்போது தண்டைசலங்கை ஒலிகள் கேட்க வேண்டும். அதைக்கேட்டு நான் மெய்மறந்து உன்னைப்பற்றிப் பாடவேண்டும். சிலம்பு சத்தம் கேட்க வேண்டும். புண்டரிகம் ஆடவேண்டும். நீ வரும்போது நடனம் ஆடிக்கொண்டு வரவேண்டும். கொஞ்சி நடனம் ஆடுகின்ற ஓசை என் காதில் விழவேண்டும். முருகா உன்னைக் கண் குளிரக் காணவேண்டும் எனப் பலவாறாக திருச்செந்தூர் பெருமானைப் பாடி ஆன்மீக விளக்கமாக கூறுகிறார். இதனை, “தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
தண்கழல்சி லம்புடன் கொஞ்சவேநின்
தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
சந்தொடம ணைந்து நின் றன்பு போலக்”
என்ற சொற்றொடர்கள் நமக்கு இறைவிளக்கத்தைக் கொடுக்கிறது. புண்டரிகமும் கொண்டு, பகரண்டமும் பொங்கியெழ, கொண்ட நடனம், கொஞ்சி நடனமும் கொண்ட கந்தவேளே எனக்கு இந்நிலையில் காட்சியைக் கொடு எனக்கேட்டவுடன் முருகப் பெருமான் நடனமாடி அருளாளர் அருணகிரிநாதர் மனம் மகிழக் காட்சி வழங்கினார்.
“தலைவலி மருந்தீடு” (பா.166) - பழநித் திருப்புகழில் காளிதேவி நானும்படி சிவபெருமான் நடனமாடிய செய்தியை அழகாக இவ்வரிகளில் குறிப்பிட்டுள்ளார் அருளாளர்.
“அறுகினைமுடித்தோனை யாதார மானவனை - அறுகம்புல்லை சடையில் முடித்தவனும் உயிர்கட்கெல்லாம் ஆதாரமானவனும் மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமும் - மழு, மான் இவைகளை ஏந்தியவனும், மாகாளி வெட்கும் படியாக முன்னர் அவைதனில் நடித்தோனை மாதாதையே - சபைதனிலே நடனம் ஆடியவனான சிவபிரானை, சிறந்த தந்தையே என்றழைக்கவும் வந்தவனே”
என்று போற்றுகின்றார்.
“மதனேவிய கணையலிடு” (பா.1186) என்று தொடங்குகின்ற இப்பாடலில் சிவபெருமான் மிக அழகாக தாளத்துடன் நடனமாடும் செய்தியை செப்புகின்றார்.
“சடைமாமுடி முநிவோர்சர - ஒரு கோடிக்கணக்கான, சடைமுடி தாங்கிய முநிவர்கள் சரணம் என்று வணங்க
என வேதியர் மறையோதுக - வேதியர்கள் வேதங்களை ஓதிட
சதிநாடக மருள் வேணிய னருள் பாலா - தாளத்துடன் கூடிய நடனத்தை ஆடிய
சடாமுடி தாங்கும் சிவபெருமான் அருளிய குழந்தையே!”
இவ்வாறான உயரிய கருத்துக்களை மிக அழகாக கூறிவிட்டு அருளாளர் வாத்சல்ய பாவத்திலே யாவனைப் பாடுகிறார்.
குன்று தோறாடல்
அதேபோல், “அதிரும் கழல்” (பா.308) என்று தொடங்கும் குன்று தோறாடல் திருப்புகழில் தேவசபையில் தனக்கு சமானம் ஒருவரும் இன்றி, ஆனந்தத் தாண்டவம் செய்து அருளும் செய்தியை கீழ்க்கண்ட வரிகளில் உணர்த்துகின்றார்.
எதிரங் கொருவ ரன்றி - தனக்கு சமானம் ஒருவருமில்லாமல் நடனமாடும்
இறைவன் தனது பங்கிலுமை பாலா - ஆனந்தத் தாண்டவம் செய்யும் திருக்குமாரனே ஆஹா! அர்த்த நாரீஸ்வர ஸ்வரூபத்தை எவ்வளவு அழகாய் காட்சிபடுத்தியுள்ளார் அருளாளர். “பரதரும்” இந் நடனத்தைப் பற்றியக் குறிப்புகளை மிகச்சிறப்பாக கொடுத்துள்ளார்.
“அவணகுண” (பா.எண்.470, சிதம்பரம்) என்ற இப்பாடலில் சிவபெருமான் பொன்னம் பலத்தில் நடனமாடுவதை குறிப்பிட்டுள்ளார் சந்தப்பாவலர் அருணகிரியார்.
மநுநீதியுடன் ஆளும் சோழ நாட்டரசர் தலைவன் அநபாயனுடன் தேவர்கள் புடைசூழ வரும் இந்திரனும், புகழ்கின்ற புலியூர் சிதம்பரத்தில் வாழ்கின்ற சபாநாயகர் நடராஜரும், அவர் அருகில் இளமயில் போல நிற்கின்ற சிவகாம சுந்தரியும் மகிழ்ச்சி அடைய தேவர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கும் மலைமகள் பார்வதி பெற்ற செல்வமே, இனியவனே, பொன்னம்பலத்தில் நடனமாடும் “சிவசிவ ஹரஹர தேவா” போற்றி போற்றி என்று புகழாரம் சூட்டிப் பாடுகின்றார். ஆடற்கலை, இசைக்கலை, வாத்தியக்கலை என்று எதை எடுத்துக் கொண்டாலும் அருளாளர் ஞான ஊற்றாய் திகழ்ந்திருப்பார் போலும்.
அருளாளரின் ஞானமானது காலங்கள் பல கடந்தது. இன்னும் எத்தனைக் காலம் கடந்து பார்த்தாலும் ஆடற்கலையின் அனைத்து நுட்பங்களையும், அழகினையும் பாவத்துடனே பாடுவோர், ஆடுவோர் உள்ளம் உருகும்படி வரிகளையும் காட்சிகளையும் அமைத்துள்ளார் இப் பேரருளாளர்.
கணிகை குல இளவரசருக்கு கலைகளைப் பற்றி கற்றுத்தர வேண்டுமா என்ன? இருப்பினும், அழகன், ஞானக்காரகன் முருகன் அருளிய பேரருள் அல்லவா? இவர் கிடைக்கப்பெற்றது நமது பாக்கியமே.
தொல்காப்பியம், பஞ்சமரபு, சிலப்பதிகாரம், தேவாரம் இவை அனைத்திலும் கைத்தேர்ந்தவர் பாவலர் என்பதில் எள்ளவும் ஐய்யமில்லை. 1 1 வகை கூத்துக்கலையும் பல இடங்களில் தமது பாடலின் மூலம் காட்சிப்படுத்தியுள்ளார் அருளாளர் அருணகிரியார்.
சரி! இனி அருளாளர் எத்தனை விதமான நடனங்களைக் குறித்து தனது
திருப்புகிழிலே குறிப்பிட்டுள்ளார் என்பதை காணுங்கள்.
இடபத்தில் ஆடியது, உமை பக்கத்தில் இருக்க ஆடியது, உமையுடன் ஆடியது,
உலகெல்லாம் சூழ ஆடியது, ஊழிக் காலத்தில் ஆடியது, கயிலையில் ஆடியது, கருவிகள் ஒலிக்க ஆடியது, காளி அஞ்ச ஆடியது, காளி தாளமிட ஆடியது, காளி நாணும் படி ஆடியது, காளியுடன் வாதாடியது, சுடுகாட்டில் ஆடியது, திரிபுரம் எரித்து ஆடியது, திருமால் மத்தளம் வாசிக்க ஆடியது, நஞ்சுண்டு ஆடியது, பதஞ்சலிகாண ஆடியது, நாரதர் தும்புரு கீதம் ஓத ஆடியது, தேவர்கள் உய்ய ஆலங்காட்டில் ஆடியது, பேய் கருடன் ஆடியது, பேய் பூதம் பாட ஆடியது, பொன்னம்பலத்தில் ஆடியது, மதுரையில் கால் மாறி ஆடியது, முயலகன் மீது ஆடியது, வைரவர் துடி ஒலிக்க ஆடியது.
இறைவனைப் புகழ்ந்துப்பாடுவது “கீர்த்தனை” என்பர். விண்ணுலகத்தையும், மண்ணுலகத்தையும் கண்முன்னே காட்டியிருக்கிறார் அருளாளர். இதில் நடனக்குறிப்புகள் ஆழிபோல் கிடக்கின்றன. எவ்வளவோ ஆழம் சென்றுபார்க்க வேண்டியுள்ளது. ஆயினும், இந்த அடியேன் இந்நல் வாய்ப்பின் மூலம் அலையைக் கண்டுள்ளேன். ஆடல்வல்லானை அலங்கரித்தப் பெருமை அருளாளர் அருணகிரியாரையே சாரும்.
★★★
இப்படியாக இறைவன் (ம) இறைவியின் ஒவ்வொரு அசைவினையும் கண்குளிரக்கண்டு, மனம்குளிரப்பாடி நம் அனைவருக்கும் நடனத்தின் மகிமையை எடுத்துக்காட்டியுள்ளார் அருளாளர். இவரை பாவத்திற்கு சொந்தக்காரர் என்று கூறுவதிலேயே எனக்கு பெருமையுண்டு.
நல்ல வீடு, நல்ல தாய், நல்ல மனைவி, நல்ல பிள்ளை, நல்ல பெண்டிர்,நல்ல செல்வம் என்ற இவையெல்லாம் வாய்க்கப் பெற்றாலும் செருக்கு கொள்ளாதே, சினமடையாதே. குருவின் உபதேசத்தை உணராமல் வாழ்நாட்களை வீணே கழிக்காதே. சுடுகாட்டில் உன்னை தீயூட்டுவதற்கு முன்பாவது கந்தனின் கழலை உணர்ந்து கொள். மறைந்தாலும் மாலோன் மருகனை மருவு. இவ்வுலகில் உறைந்தாலும் அவனை நினைத்து உருகு.
— (குடி வாழ்க்கை) திருப்புகழ்
நன்றி-அருளாளர் அருணகிரிநாதரின் அமுத மொழிகள் -திருப்புகழ் மாமணி வெ. இராமு

