கொல்கத்தாவில் அமைந்துள்ள சிருங்கேரி மடம், அன்று விழாக்கோலம் கண்டது. சிருங்கேரி ஆச்சார்யர் ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மஹாஸ்வாமிகள் விழாவில் கலந்து ஆசி வழங்கி, உரை நிகழ்த்தவுள்ளதால் மக்கள் கூட்டம் அலை மோதியது. சிருங்கேரி மடாதிபதியின் உரைக்கு முன், ஒரு திருப்புகழ் இசை வழிபாடும் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்கள் குறிப்பிட்ட நேரத்தில், நெற்றியில் திருநீறும், கழுத்தில் ருத்திராட்ச மாலையுமாக தெய்வீகத் தோற்றத்துடன், அன்பர்கள் புடைசூழ மேடை ஏறி வந்தார் திருப்புகழ்ப் பாடகர். சிருங்கேரி ஆச்சார்யர் வருகையையும் எதிர்பார்த்திருந்தனர் அனைவரும். குறிப்பிட்ட நேரத்தில் 'கைத்தல நிறைகனி' என்று விநாயக ஸ்துதி செய்து திருப்புகழ் இசை வழிபாட்டைத் துவக்கினார் பாடகர். திருப்புகழ் இசை வெள்ளத்தில் மூழ்கி இருக்க, மகா சன்னிதானம் அமரும் இடம் காலியாக இருந்ததை பார்த்து பாடகரின் முகம் சற்று வாடியது. இசை வழிபாடு நிறைவடைந்து 'ஏறு மயில்' எனும் நிறைவுப் பாடல் பாடும் தருணத்தில் சிருங்கேரி ஆசார்யர் சிஷ்யர்கள் சூழ மண்டபத்திற்கு வந்து, இருக்கையில் அமர்ந்தார். ஆசி பெற நிற்கும் வரிசையில் தானும் நின்று ஆச்சார்யரை நெருங்கினார் பாடகர். "தங்களின் பஜனை மிக நன்றாக இருந்தது" என்று உரைத்தார் சிருங்கேரி ஆச்சார்யாள்.. 'ஆனால் சுவாமிகளை காணவில்லையே' என்றார் இவர். சுவாமிகள் புன்னகைத்துச் சொன்னார்: “நீங்கள் பாடல் துவங்கும்போது நான் வந்து விட்டேன் அத்தருணத்தில் மண்டபத்தில் வந்தேன் என்றால் கவனம் மாறிவிடும். ஆனந்தம் அளிக்கும் தங்கள் பாடல் மீதே கவனம் இருக்க வேண்டுமென்று எண்ணி வெளிப் பிரகாரத்திலேயே இருந்து உங்கள் பாடலை ரசித்தேன் என்றார் ஜகத்குரு அவர்கள். குருநாதர் கேட்டு ரசித்த திருப்புகழ் இசை வழங்கியவர், 'குருஜி' என்று அனைவராலும் போற்றும் திரு ஏ.எஸ் ராகவன் அவர்களே ஆவார்.

தென்னிந்திய திருச்செந்தூர் அருகில் பிறந்து, மேற்கே திருச்செம்பூர் அருகில் வளர்ந்து, உத்தர சுவாமி மலை அருகில் முருகன் அருள் பெற்றார் குருஜி

அவர்கள். அப்பொழுது ஓதுவார்
அவர்கள் கோவில்களில்
திருப்புகழ் பாடி வந்தனர்.
இறைவன் தனக்கு
பிறவியிலேயே கொடுத்த இசை
ஞானம் திருப்புகழ் ஓதுவதற்கே
என்று உணர்ந்த ஸ்ரீ ராகவன்
அவர்கள் பல ராகங்கள்
கொடுத்து சந்தச் சிறப்பு கெடாது

தாளங்களும் அமைத்து ஒரு சிறந்த இசை வழிபாடு முறையை அமைத்தார். பக்தியுடன் அவன் திருப்புகழ் பாடுவதே தனது பணி என்று உணர்ந்து அப்பணியில் தன்னை முற்றிலுமாக இணைத்துக்கொண்டார் அவர். இசை ஞானமும் இறை ஞானமும் ஒன்றே அமைந்த திரு ராகவன் அவர்கள் 1300

திருப்புகழ் பாடல்களை தேர்ந்தெடுத்து பல வகை ராகம் கொடுத்து, சந்தம் கெடாமல், அங்க தாளங்களில் அமைத்தார். தனித்தன்மையுடன் விளங்கும் கர்நாடக இசையின் ராக தாளங்களை கொடுத்து, திருப்புகழ் எனும் அமுதம் மேலும் சிறப்படைய செய்தார்.

மேலும், திருப்புகழிலிருந்து தகுந்த பாடல்களைத் தேர்ந்தெடுத்து, 'வள்ளி சன்மார்க்கம்' எனும் தத்துவத்தை பறைசாற்றும் ‘வள்ளி கல்யாணம்' என்ற தொகுப்பைத் தயாரித்து அதை பாடும் முறையையும் கற்பித்தார் ‘தகமை பெற்று உனது பொற் சரணம் எப்பொழுதும் நட்புடன் நினைத்திட அருள்வாயே” என்று அவன் புகழ் பாடுவதே தனது பணி' என்றிருந்தார் குருஜி. இப்பணி சிறப்பாக அமைய திரு நாராயணன், திரு மஹாலிங்கம் போன்ற பல நண்பர்களும் அவர் கூட இருந்து கை கொடுத்தனர் 'யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்தனால்" என்ற கந்தரநுபூதியின் 17 வது செய்யுளைக் குறிப்பிட்டு குருஜி சொன்னார்: “அனைத்து உயிர்களிலும் குடிகொண்டிருக்கிறான் முருகன். ஆதலால், 'தாமே பெறவேண்டும்’

என்கிறபோது, தன்னை சார்ந்த அனைத்து உயிர்களும் பயன் பெற வேண்டும் என்றே சொல்கிறார் இறைவன்.” இதயத்தில் முருகனை உணர்ந்து அவன் திருப்புகழைப் பாடும் திறன் அவன் அருளால் கிடைத்தது. இத்திறனை அவன் புகழ் பாடுவதற்க்காகவும், தித்திக்கும் இந்த அமுதத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதே தமது பணி என்றார் குருஜி ஸ்ரீ ராகவன் அவர்கள். ‘நான்’ ‘எனது' என்ற எண்ணமின்றி, அவன் புகழ் பாடுவதே குறியாக கொண்டு இயங்கிவந்தார் அவர்.

தெய்வீகம் நிறைந்த, இனிமையான, மங்களகரமான அவரது குரல் புது டெல்லியில் உதித்து, நாடெங்கிலும், வெளிநாட்டிலும் ஒலிக்கத் துவங்கியது. “கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய நான்கு திசைகளிலும் உள்ள பத்தர்கள் அற்புதம் என வியந்து கொண்டாடும் திருப்புகழை, உலகெங்கும் பரவும்படி பாட அனுக்கிரஹம் செய்த உன் கருணையை மறவேன்” என்றார் அருணகிரிநாத சுவாமிகள் ‘பத்தர் கணப்ரிய’ என்ற பாடலில். இன்று உலகெங்கும், பக்தர்கள் வெகு ஆர்வமுடன் திருப்புகழ்ப் பாடி இறைவனை வணங்குகிறார்கள் என்றால் அப்பெருமை குருஜி அவர்களையே சேரும். ஒரு தனி நபராக இருந்து, திருப்புகழை ஒரு மாபெரும் இயக்கமாக மாற்றி பெரும் சாதனை புரிந்துள்ளார் குருஜி என்றார்கள் பக்தர்கள். ‘இல்லை, நான் ஒரு தூண்டுகோல் மட்டுமே. எல்லாப் புகழும் அவனை சேர்ந்ததே' என்றார் அவர். முற்றிலும் தனி நபர் முயற்சி என்று சொல்வதைவிட செந்தில் ஆண்டவனின் அருளும், அருளாளர்களின் ஆதரவும் அவருக்கு நிறையவே இருந்தது என்றே சொல்ல வேண்டும்.

நாம் இறைவனிடம் வைக்கும் அன்புதான் பக்தியாக வெளிப்படுகிறது. “அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார், அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார். அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே” என்றார் திருமூலர். திருப்புகழ் அன்பர்களும், ‘அன்பே சிவம்‘ என்று உணர்ந்து, அன்புடன் செயல்படவேண்டும் என்றார் குருஜி அவர்கள். ‘அன்பாக வந்து உன் தாள் பணிந்து’ என்று துவங்குகிறது திருச்செங்கோடு திருப்புகழ். “ஐங்கரனை யொத்தமனம்” என்ற கொங்கணகிரித் திருப்புகழில், ‘அன்போடு துதிக்க மனம் அருள்வாயே‘ என்று வேண்டுகிறார் திருவண்ணாமலை புலவர். “பஞ்ச பூதங்களுக்கு அடிமை ஆகாமல், உள்ளம் உருகி, அன்போடு தினமும் உன்னையே நினைந்திருக்க அருள்வாய்‘ என்கிறார் ‘மருவு மஞ்சு பூத‘ என்ற

விரிஞ்சிபுரம் திருப்புகழில். “எனநாளும்
உன்திருப்புகழே பாடி, அன்புடன் ஆசார பூஜை செய்திட
அருள்வாயே என்கிறார் ‘கொம்பனையார்' என்று
தொடங்கும் திருச்செந்தூர் திருப்புகழில். அன்பு எனும்
குணம் நிறைந்திருக்க, தீய எண்ணங்களெல்லாம்
மறைந்து, மனம் தூய்மையாகி பரிசுத்தமாக
விளங்குகிறது.

இறைவனிடம் வைக்கும் அன்பும் குருநாதரிடம் வைக்கும் அன்பும் ஒன்றே, வேறல்ல. அன்பின் அடையாளமாக திகழ்ந்தார் குருஜி. இதயத்தில் அன்போடு வேறொரு சிந்தனை இல்லாமல் திருப்புகழ் பாடும் அடியார்களை அவர் 'திருப்புகழ் அன்பர்' என்று அழைத்தார். இன்று உலகெங்கிலும் வசிக்கும் திருப்புகழ் பக்தர்கள் அனைவரும் அன்பால் இணைந்து, முருகன் பொற்பாதங்கள் அடைவதே இலட்சியமாக செயல்படுகிறார்கள். அன்பர்கள் எல்லோரும் சேர்ந்து ஒன்றாகத் திருப்புகழ் பாடும்பொழுது, அங்கு முருகப்பெருமானின் சந்நிதானம் நிலவுவதை உணர்கிறார்கள். குருஜி சொன்னார்: ‘நாம் வாழ்க்கையில் ஒரு சிலர் மீது அதிக அன்புடனும், வேறு சிலருடன் பகையும் வைக்கிறோம். பாம்பும் கீரியும் விரோத மனப்பான்மை கொண்டுள்ளன. இது அவைகளின் பிறவிக்குணமாகும். ஆனால் விவேகமுடைய மனிதராகிய நாம் விரோத மனப்பான்மையை விட்டு, அன்புடன் செயல்பட வேண்டும். ‘இறைவனை இடைவிடாது உள்நோக்கி தவ முறை தியானம் செய்பவர் நெஞ்சில் இறைவன் குடி இருப்பான், இது உறுதி” என்றார் குருஜி.

குருஜி அவர்கள் உருவாக்கிய 'திருப்புகழ் அன்பர்கள்' எனும் இயக்கம் ஒரு மாபெரும் இயக்கமாக விளங்கியது. 'திருப்புகழ் அன்பர்கள்' எனும் பதிவு செய்யப்பட்ட இயக்கம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தரநுபூதி, கந்தரந்தாதி, திரு வகுப்பு, திருஎழுகூற்றிருக்கை, வேல், மயில், சேவல் விருத்தங்கள் எல்லாம் அடங்கிய 'திருப்புகழ் இசை வழிபாடு' எனும் இசைநூலை வெளியிட்டது. குருஜியிடம் நேரடியாகக் கற்றவர்கள் திருப்புகழ் மரபை முன்னெடுத்துச் சென்றனர். திருப்புகழை அழகான ராகத்தில் பாடச் சொல்லிக் கொடுப்பதல்லாமல், பாடுபவர்களை மற்றவர்களுக்கும் சொல்லி கொடுக்கும்படியான நிலைக்கு உயர்த்தினார் குருஜி அவர்கள். வேறு இடங்களுக்குச் சென்றவர்கள் தாங்கள் குடியேறிய இடத்திலிருந்து வகுப்புகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கினர்.

கார்த்திகை த்பத்திருநாள் அன்று திருவண்ணாமலை உச்சியில் ஜோதி தெரிந்த பிறகு நாடெங்கும் ஒளிமயமாக தோன்றியதுபோல, குருஜியிடம் திருப்புகழ் கற்றவர்கள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் குடியேறிய பிறகு, அங்கும் திருப்புகழ் எனும் ஒளிமயமான சத்சங்கத்தை நிறுவினார்கள். திருப்புகழ் இசை எங்கும் ஒலித்தது. பல இராகங்களும் தாளங்களும் சந்தச் சிறப்பும் சேர்ந்து குருஜி உருவாக்கிய திருப்புகழ் ஒரு அலையாக நாடு முழுவதும் பரவியது. ஒரு தனித்துவமான தெய்வீக சக்தியாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்த பக்தர்களை ஈர்த்தது திருப்புகழ். ஆண்டுவிழா அல்லது குரு சமர்ப்பண விழா போன்ற சிறப்பான சந்தர்ப்பங்களில், குருஜியிடமிருந்து திருப்புகழ் கேட்பதற்கும், கற்கவும், அனுபவிக்கவும் பலதரப்பட்ட பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். 'அருணகிரிநாத சுவாமிகள் திருப்புகழ்ப் பாடல்களை எப்படி பாடவேண்டுமென்று விருந்திருப்பாரோ அதே பாணியில் பாட குருஜியைத் தவிர இந்த தலைமுறையில் வேறு ஒருவரும் இல்லை' என்பது கர்நாடக இசை விமர்சகர் காலம் சென்ற சுப்புடு அவர்களின் கருத்து. திரு ராகவன் அவர்கள் ஆற்றிய தொண்டைப் போற்றிப் புகழ்ந்து, பல மடாதிபதிகளும் அருளாளர்களும் அவருக்கு 'திருப்புகழ் தொண்டர்', 'திருப்புகழ் சக்ரவர்த்தி', 'குகஸ்ரீ, 'பக்த ரத்னா' போன்ற பட்டங்கள் கொடுத்து கௌரவித்தனர். இருந்தும் பக்தர்களால் கொடுக்கப்பட்ட 'குருஜி' என்ற பட்டமே என்றும் நிலைத்திருப்பதை காண்கிறோம்.

திருப்புகழ் அன்பரின் அடையாளங்கள் என்ன, அவரை எப்படி கண்டுகொள்வது என்பதையும் விளக்கினார் குருஜி. சதாசிவ பெருமாள் முதற்கொண்டு, ஸ்ரீ சங்கராச்சார்யர் வழியாக வந்து, இன்று அருள்புரிந்து வரும் ஆச்சார்யர்களை வணங்கும் குரு பரம்பரையில் வந்தவர்கள் அன்பர்கள். செந்தில் நாதனைத் தவிர திருப்புகழ் அன்பருக்கு வேறு சிந்தனை இல்லை. அன்பர்கள் நெற்றியில் எப்பொழும் திருநீறு இருக்கும், 'நாமேல் நடவீர் நடவீர் இனியே' என்று கந்தரநுபூதியில் அருணகிரிநாத சுவாமிகள் பாடியது போல, அன்பர்கள் நாவில் முருகன் நாமம் ஒலித்துக்கொண்டே இருக்கும். மனம் தூய்மையாகவும், இதயத்தில் பக்தியும் நிறைந்திருக்கும். அன்பர்கள் திருப்புகழ் பாடலின் ராகத்தையும் தாளத்தையும் மட்டும் கற்றுக்கொள்வதில்லை. அன்பு, அவிரோதம் எனும் நெறியுடன், சத்சங்கத்தின் சிறப்பை உணர்ந்து, ஒன்றாக, ஒற்றுமையாக செயல்படுவார். முருகன் மீது பக்தியும் மற்றனைவர் மீது அன்பும் உடையவர் என்று

திருப்புகழ் அன்பர்களை இரண்டு அழகான
வார்த்தைகளில் விவரித்துள்ளார் குருஜி ஸ்ரீ ராகவன்
அவர்கள்.
அடியார்க்கு அடியாராக, திருப்புகழ் எனும்
பணியில் தம்மை முழுவதும் இணைத்துக்கொண்டு
அன்பின் உருவமாக பல பக்தர்கள்
இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். அவர்கள்
ஆற்றிய அரிய தொண்டைப் போற்றும் அதே
வேளையில், இரண்டு கிருஷ்ணன் அன்பர்களின்
அனுபவங்களை மட்டும் உதாரணமாக இங்கு
பார்க்கிறோம்.
'அம்மா, அப்பா, உங்கள் அன்புக்காக ஏங்குகிறார்கள் உங்கள் பேரக் குழைந்தைகள் கூடிய சீக்கிரம் இங்கு வந்து, அவர்கள் ஆவலை பூர்த்தி செய்யுங்கள்'. பெரும்பாலான பெற்றோர்கள் வெளிநாட்டில் குடியேறிய தங்கள் மகன் அல்லது மகளிடமிருந்து இதுபோன்ற கோரிக்கையைப் பெற்றிருப்பார்கள். திருமதி தாரா கிருஷ்ணன் அவர்களுக்கும் இதே போல ஒரு அழைப்பு வந்தது. குருஜியிடம் திருப்புகழ் கற்றுக்கொண்டிருந்த அவருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அழைப்பை ஏற்று, கனடா சென்றால் திருப்புகழ் கற்பதை இழக்க நேரிடும். ஏற்கவில்லை என்றால் குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் கழிக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும். தீவிர ஆலோசனைக்குப் பிறகு ஸ்ரீமதி. தாரா கிருஷ்ணன் குருஜியிடமே சென்று 'என்ன செய்யலாம்' என்று யோசனைக் கேட்டார். குருஜி சொன்னார்: ‘அவர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு உங்களை அழைக்கிறார்கள். “போய் வாருங்கள்; ஆனால் திருப்புகழ் மரபை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்” என்றார். அதன்பின் 1982 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி, அன்று, வெளிநாடு மற்றும் தெரியாத மண்ணில் திருப்புகழ் எனும் கற்பக விருக்ஷத்தை நடும் பணியை எப்படி மேற்கொள்வது என்று யோசித்துக்கொண்டு விமானத்தில் ஏறினார் திருமதி தாரா கிருஷ்ணன். கனடா வந்து சேர்ந்து பேரக் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நாட்களை கழித்துக்கொண்டிருக்கும் வேளையில் ஒரு நாள், தொலைபேசி ஒலித்தது. மறுமுனையில் சாந்தா கிருஷ்ணமூர்த்தி எனும் ஒருவரின் குரல் கேட்டது. “தங்களுடைய திருப்புகழ் தொடர்பு தெரிய வந்தது. நாங்கள் திருப்புகழ் கற்க ஆவலாக இருக்கிறோம். தங்களால் கற்றுத்தர இயலுமா?' என்றார் மறுமுனையில் இருப்பவர். இதையே எதிர்பார்த்திருந்த இவர் ஆனந்த மிகுதியில், ‘எனது ஆர்வமும் அதுவே‘
என்றார். விரைவில் நான்கு மாணவர்களுடன்
தொடங்கியது திருப்புகழ் கற்பித்தல். நான்கில் இருந்து
நாற்பது மற்றும் பல அன்பர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு
அடியார் திருக்கூட்டமாக அமைந்தது. ஒரு இடத்தில்

இருந்து, பல்வேறு இடங்களுக்கு

பயணித்தது திருப்புகழ் எனும் இசைக் கல்லூரி. கனடா மற்றும் அமெரிக்கா முழுவதும் கிளைகளை நிறுவிய திருப்புகழ் எனும் இளம் பயிர் மிகப் பெரிய ஆலமரமாக வளர்ந்தது. திருப்புகழ் வடக்கு, தெற்கு, மேற்கு மற்றும் கிழக்குப் பகுதி மக்களால் ஒரு அதிசயமாகப் போற்றப்படுவது என்று

அருணகிரிநாத சுவாமிகள் கூறிய வாக்கு இங்கு நிஜமாகி வருவதைக் கண்டேன் என்றார் ஒரு அன்பார். திருப்புகழில் இசை வழிபாடு செய்ய பல இடங்களில் இருந்து அழைப்பு வந்தது. யார்க் பல்கலைக்கழகத்தில் இவர்கள் நிகழ்த்திய இசை வழிபாட்டில் பல்வேறு நாட்டினரைக் கொண்ட ஏராளமான பார்வையாளர்கள் பார்த்தும் கேட்டும் மகிழ்ந்தனர். 'தாங்கள் இங்கு வந்து, எங்களுக்கு மேலும் ஊக்கம் அளிக்கவேண்டும்' என்று குருஜியிடம் கோரிக்கை வைக்க, குருஜியும் அந்த அழைப்பை ஏற்றார். குருஜியை வரவேற்க கனடா விமான நிலையத்தில் மலர் மாலையுடன் காத்திருந்த அன்பர்களின் ஆனந்தம் சொல்லால் விளக்கமுடியாது. மறுநாள் கிருத்திகை நன்னாளில் குருஜியின் திருப்புகழைக் கேட்டவர்கள் அனைவரும் முருகப்பெருமானின் தரிசனத்தை உணர்ந்து ஆன்மீக நிறைவுடன் திரும்பினர். . பிறகு அமெரிக்கா அன்பர்களின் அழைப்பை ஏற்று குருஜி அவர்கள் அமெரிக்காவில் பல இடங்களுக்குச் சென்று ஸ்ரீ அருணகிரிநாதரின் திருப்புகழின் சிறப்பை பறைசாற்றினார். தன் இசைப் பயணம் வைகாசி விசாகத் திருநாள் அன்று நிறைவடைந்த பிறகு ஒரு ஆன்மீக நிறைவுடன் திரும்பினார் குருஜி அவர்கள். இன்று அமெரிக்கா மற்றும் கனடாவில் திருப்புகழ் ஒரு சிறந்த பக்தி மார்க்கமாக விளங்குகிறது என்றால் அதற்கு விதை இட்டவர் திருமதி தாரா கிருஷ்ணன் என்று சொன்னால் மிகையாகாது.

திருமதி. ராஜி கிருஷ்ணன் அவர்கள் தன்
திருப்புகழ் அனுபவத்தைக் கூறுகிறார். ‘எனது
பெற்றோர்கள் தவறாமல் திருப்புகழ் கற்றுக் கொடுக்கும்

நிகழ்ச்சிக்கு செல்வது வழக்கம். 1970 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். ஏழு வயதான என்னையும் அழைத்துச் செல்வார்கள் அவர்கள். நானும், ஒன்றும் புரியாவிட்டாலும், அவர்களுடன் சென்று கூட இருந்து கேட்டு, வீடு திரும்புவேன். ச்ரவணம் அதாவது இறைவனின் புகழை காதால் கேட்பதே ஒரு புனித அனுபவம் என்பார்கள். திருப்புகழ்ப் பாடல் என் காதில் விழ, போகப் போக எனக்குள் ஒரு நிறைவும் மன அமைதியும் ஏற்பட்டது. வருடங்கள் பல ஓடின. மாற்றங்கள் பல நிகழ்ந்தன; ஆனால் எனக்குள்ளே விளங்கும் திருப்புகழ் எனும் அனுபவம் மாறாமல், மறையாமல் எப்பொழுதும் பிரகாசித்தது. திருப்புகழ் என்பது என் வாழ்க்கையில் ஒரு முக்கிய அம்சமாக, என்னுடன் கலந்த, ஒரு இன்றியமையாத அனுபவமாக இருப்பதை உணர்ந்தேன். திருப்புகழைப் பாடப் பாட, எப்பொழுதும் சலித்துக்கொண்டிருக்கும் மனம் அமைதி அடைவதை உணர்ந்தேன். வாழ்க்கையில் தோன்றும் எந்த விதமான சோதனைகளையும் சவால்களையும் ஏற்கக்கூடிய சக்தியை கொடுக்கவல்லது திருப்புகழ் என்று உணர்ந்தேன். 1999 ஆம் வருடம் நான் சிகாகோவில் இருந்து வந்தேன். திருப்புகழ் எனும் வழிமுறையில் என்னை முழுதும் ஈடுபடுத்தி, தேர்ச்சி பெற்ற பிறகு, குருஜி வகுத்த ராக தாளங்கள் சற்றும் தவறாமல் மற்றவர்க்கு கற்று கொடுக்கத் தொடங்கினேன். வகுப்பு எடுக்கற ஆரம்பத்திலேயே சுமார் 40 குடும்பத்தார் வந்து கலந்துகொண்டனர். சுமார் 20 சிறுவர் சிறுமிகளும் இருந்தனர். 2003 ஆம் ஆண்டு நாங்கள் இந்தியா திரும்பிவந்தோம். சிகாகோவில் இருந்த அன்பர்கள் எல்லோரும் எப்படி திருப்புகழைத் தொடர்ந்து

கற்றுக்கொள்வது

சிந்திக்கத் தொடங்கினர்.
தொலைபேசி மூலமாக வகுப்பு
எடுக்க முயற்சித்து அதில்
வெற்றியும் கண்டோம்.
ஒவ்வொரு வாரமும் இந்தியா
நேரம் காலை 6 மணிக்குத்
தொடங்கி ஒன்றரை மணி நேரம்
இசைப் பயிற்சி தொலைபேசி
மூலமாக வெற்றிகரமாக
நடந்தது. மேலும், முக்கியமான

விஷயம் என்ன வென்றால் மாதத்தில் ஒரு நாள் திருப்புகழ் இசை வழிபாடும் குருஜி நிறுவிய முறைப்படி நடந்தது. பதினாயிரம் மைல் இடைவெளி இருந்தும், இரண்டு இடத்திலும் ஒரே பாவத்துடன் திருப்புகழ் இசை வழிபாடு விமரிசையாக நடந்தது அவன் அருளாலே என்று தான் சொல்லவேண்டும். 2005 ஆம் ஆண்டு முதல் பெங்களூரில் திருப்புகழ் வகுப்புகள் வெற்றிகரமாக எடுத்துவந்தேன். திருப்புகழ்ப் பாடுவதிலும் கேட்பதிலும் மிகப் பெரிய மன நிம்மதியும் நிறைவும் அடைந்தோம். குருஜி அவர்களின் பரிபூர்ண ஆசியாலும் செந்தில் நாதனின் அருளாலும் மட்டுமே இது சாத்தியமாயிற்று”

திருப்புகழ் எனும் தெய்வீக இயக்கத்தில் ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகளைப் போன்ற மாபெரும் அடியார்களும், அடியார்க்கு அடியார்களாக பல கிருஷ்ணன்களும் இருந்திருக்கிறார்கள், திருப்புகழ்ப் பாடுவதில் மன நிறைவு அடைந்தவர், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமெரிக்கா போன்ற வல்லரசு நாட்டிலும், நிறைந்திருக்கிறார்கள். ஒரு சிலருக்கு தமிழ் தெரியாமல் இருக்கலாம். தமிழ் தெரிந்த ஒரு சிலருக்கு பொருள் விளங்காமல் இருக்கலாம். ஒரு சிலருக்கு ராகம், தாளம், லயத்துடன் பாடும் திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பது திருப்புகழ் எனும் வழிமுறை. 'நீ வேறு' ‘நான் வேறு' என்ற பேதமில்லாமல், அவர்கள் அனைவரையும் இணைப்பது அன்பு எனும் திருப்புகழ் பண்பே ஆகும். பாலினம், வயது, வசித்துவரும் இடம், பேசும் மொழி எல்லாம் வேறாக இருந்தாலும், அனைவரும் ஒரு பரிவாரம் அல்லது ஒரு குடும்பத்தினர்

என்று உணரவைப்பது திருப்புகழே. அமெரிக்கா போன்ற வல்லரசு நாட்டில் சீரும் சிறப்புமாக இருப்பவர், திருப்புகழ் இசை வழிபாட்டில் கலந்து வேண்டுவதெல்லாம், 'அருள்ஞான இன்பமது புரிவாயே' என்று 'சிவனார் மனம் குளிர' பாடலில் ஸ்ரீ அருணகிரிநாதர் செய்த பிரார்த்தனையே ஆகும். இசை வழிபாட்டில் மக்கள் திரளாக வந்து கலந்துகொள்கிறார்கள் என்றால் திருப்புகழில் நிறைந்திருக்கும் ஏதோ ஒரு சக்தி அவர்கள் மனதைக் கவருகிறது என்று விளங்குகிறது. அலை பாயும் மனம் சாந்தம் அடைந்து பரமானந்த நிலை நிலவுகிறது. திருப்புகழ் தரும் மன நிறைவை நாடிச் செல்லும் அனைவரையும் ‘வாழ்க சீர் அடியாரெல்லாம்' என்று போற்றுவோம்.

Response and feedback to:
vsk_tiruppugazh@yahoo.com

A salient feature of Arunagirinathar's thoughts is that he saw divinity in nature. This is keenly reflected in the rich and eloquent lyrics. His descriptions bring out vividly the divine beauty of nature. For instance in " virali Malai " he says the bussing of the bees forms the music for the dancing peacocks. The bees are intoxicated by the honey from the flowering forest. The golden rays of the sun forms the silhouette for the dancing peacocks. This is one among his innumerable quotations where the scenic beauty is vividly described with photographic eloquence. The descriptions add a divine depth to our memory Canvas.

  • R. Mythili M.A., M.Phil.,

— Saint Arunagirinadhar 600th Birthday Celebration Souvenir