அருணகிரிநாதனும் அருணகிரிநாதரும்

திரு. D.திருநாவுக்கரசு, வட்டார வளர்ச்சி அலுவலர் (பணி நிறைவு) திருவண்ணாமலை

தமிழ்நாடு ஒரு ஆன்மீக பூமி. இங்கு தொன்றுதொட்டு மகான்கள், ரிஷிகள், அருளாளர்கள் பலர் தோன்றி இம் மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். அவர்களுக்கு இறைவன் நேரில் தோன்றி காட்சி அளித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களை வழிநடத்தவும் செய்துள்ளார். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் அருணை நகரத்தில் தோன்றிய அருளாளர் அருணகிரிநாதர் ஆவார். அவருக்கு முருகப்பெருமான் முற்பிறவியில் செய்த பலன் காரணமாக பலமுறை நேரில் காட்சி கொடுத்துள்ளார்கள். கோபுரத்திலிருந்து அவர் குதித்தபோது ஒரு சாதுவின் உருவின் முருகப் பெருமான் அவரை தாங்கிப் பிடித்து தடுத்தாட் கொண்டு 'சும்மா இரு சொல்லற ‘ என்று மந்திர உபதேசம் புரிந்தார். பிறகு ஆழ்ந்த

நிஷ்டையில் இருந்த அவருக்கு காட்சி கொடுத்து அவரது நாவில் பிரணவ மந்திரத்தை எழுதி ‘முத்தையத்ரு‘ என பாடப் பணித்து, வயலூருக்கு வருமாறு பணித்தார்.

அங்கு அவருக்கு முருகப்பெருமான் காட்சி கொடுத்தார். அங்கிருந்து விராலிமலைக்கு சென்ற அருளாளருக்கு முருகப்பெருமான் வேடன் உருவில் தோன்றி அவருக்கு வழிகாட்டினார். பிறகு அங்கு அரிய அட்டமா சித்தியும் வழங்கினார். இப்படியாக பழனியில் ஜபமாலையும், திருச்செந்தூரில் நடன தரிசனமும், சுவாமி மலையில் மந்திர உபதேசமும், புரிந்து பலமுறை காட்சி அளித்தார்.

சம்பந்தாண்டானுடன் ஏற்பட்ட வாதத்தின் போது தூணிலிருந்து காட்சி கொடுத்தார். இதுபோல எந்த ஒரு மகானுக்கும் இறைவன் இத்தனை முறை காட்சி கொடுத்ததில்லை.மேற்பட்ட அனைத்து நிகழ்வுகளையும் அனைவரும் அறிவர்.

ஆனால் சிவபெருமான் அருணகிரிநாதப் பெருமானுக்கு காட்சி கொடுத்த சம்பவம் பலர் அறியார். அண்ணாமலையார் தனக்கு காட்சி கொடுத்த செய்தியை அருளாளர் பல பாடல்களில் பதிவு செய்கின்றார்.

'தமிழோதிய குயிலோ' என்று துவங்கும் அருணைத் திருப்புகழில் சிவபெருமான் தனது துயர் நீங்க வெண்மையான பெருமை வாய்ந்த திருநீற்றை அருளினார் என்ற செய்தியை இவ்வாறு குறிப்பிடுகின்றார்:-

‘கமழ்மாவிதம் சடையாரடி யேன்துயர் தீர்ந்திடவெண்

தழல்மாபொடி யருள்வோரடல் மான்துடி ‘

அதேபோல் சிவபெருமான் தன்னை அடிமையாகக் கொண்ட செய்தியை ‘எகினினம் பழி’ என்று துவங்கும் திருப்புகழில் பின்வருமாறு விவரிக்கின்றார்:-

‘கரிநெ டும்புலி தோலுடை யாரெனை

யடிமை கொண்டசு வாமி சதாசிவ கடவுள்'

‘விந்துபே தித்தவடி’ என்று துவங்கும் திருப்புகழில் தன் உயிருக்கு சிவபெருமான் உதவிய செய்தியை இவ்வாறு செப்புகின்றார்

‘எந்தனா விக்குதவு சந்த்ரசேர் வைச்சடையர்’

மேலும் 'கமல குமிளத ‘எனத் தொடங்கும் திருப்புகழில் ஆறுமுகக் கடவுளை இடைவிடாது தியானிப்பாயாக என அண்ணாமலையார் உபதேசம் செய்த செய்தியை இவ்வாறு பதிவு செய்கின்றார்.

‘அமுத மொழிகொடு தவநிலை யருளிய

பெரிய குணதர ருரைசெய்த மொழிவகை

அடைவு நடைபடி பயிலவு முயலவு ...... மறியாத அசடன்'

இவ்வாறாக அருளாளர் தனக்கு சிவபெருமான் காட்சி கொடுத்த அனுபவத்தை பல பாடல்களில் தெரிவிக்கின்றார்கள். சிவனைக் கண்டவர் முருகனைக் கண்டதில்லை. அதேபோல் முருகனைக் கண்டவர் சிவனைக் கண்டதில்லை.

ஆனால் அகத்தியர், நக்கீரர், அவ்வையார் போன்ற வெகு சிலரே இருவரையும் தரிசித்த பெருமை உடையவர்கள். இந்த பட்டியலில் நம் அருளாளரும் இணைந்து ஞானிகளில் சிறந்தவராகவும், ஒப்பற்றவராகவும் திகழ்கின்றார் என்று ஐயத்திற்கு இடமின்றி உறுதியோடு கூறலாம்.

★★★

கி.பி. 1488ல் திருப்புகழ் மேற்கோள்

சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கில் ஒன்று உமாபதி சிவம் இயற்றிய சிவப்பிரகாசம். இதற்கு மதுரைச் சிவப்பிரகாசர் ஓர் உரை எழுதினார். இதற்கு ஒரு சிறப்புப் பாயிரம் எழுதப்பட்டது. அப்பாயிரத்தில்

“ஓதுபுகழ் சகாத்தம் ஆயிரத்து நானூற்று
ஒருபதின்மேல் செல்கின்ற காலம் தன்னில்
மாதுபயில் மதுரையில் வாழ் சிவப்ர காசன்
தீதில்சிவப் பிரகாசச் செய்யுள் நூறும்
தேர்ந்துரையிட் டேஉலகில் சிறப்பித்தானே”

என்ற பாடல் உள்ளது. இதனால் அந்த உரை சாலிவாகன சகாப்தம் 1410ல் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. இதற்குச் சரியான ஆங்கில ஆண்டு 1488. இவ்வுரையில் பத்தாம் சூத்திரத்தில் முதல் பாடலில் தத்துவம் முப்பத்தாறும் நீங்கிய முத்திகிட்டும் என்று கூறப்பட்டுள்ளது. உரையாசிரியர் இதற்கு மேற்கோளாகத் திருக்களிற்றுப்படியாரில் "நாதாந்தத்தே இருப்பர்" என்றும், கோயில் புராணத்தில் “தரைமுதல் ஆறாறெனவரும் நாதாதியின் மீதே” என்றும், திருப்புகழில் “விந்துநாத ஓசைக்குத் தூரமானது” என்றும் வரும் தொடர்களைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.

திருப்புகழில் வாசித்துக் காரணொணாதது எனத் தொடங்கும் பாடல் திருச்சிராப்பள்ளித் திருப்புகழ் (பாடல் எண். 348) இப்பாடலில் தான் "விந்துநாத ஓசைக்குத் தூரமானது" என்ற வரி உள்ளது. திருப்புகழ் பாடப்பெற்ற காலம் கி.பி. 1450ஐ ஒட்டிய காலம் என்பதால் கி.பி.1488ல் அதை மேற்கோளாகக் காட்டியிருப்பதால் அக்காலத்தில் கற்றறிந்த பெரியோர்களால் மிக விரைவில் பாராட்டத்தக்க அளவுக்குப் பரவி இருந்தது என்பது புலப்படுகின்றது. இச்செய்தியைத் தணிகைமணி வ.சு.செங்கல்வராயப் பிள்ளை அவர்கள் தன்னுடைய அருணகிரிநாதர் வரலாறும், நூல் ஆராய்ச்சியும் என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள். இந்நூல் 1947ல் எழுதப்பட்டது.