15-ஆம் நூற்றாண்டில் பிறந்து இருமொழிப் புலமைப் பெற்ற அரிய புதல்வர் அருணகிரியார் அவர்கள்.
சிறு வயதில் டிஎம்.சௌந்தரராஜன் அவர்கள் நடித்த அருணகிரிநாதர் படம் பார்த்துதான் இவரது அருமை பெருமைகளைத் தெரிந்துகொண்டேன். பின்னர், தமிழிலக்கிய மாணவனாய் மேலும் அறிந்து, வணங்கத் தக்க புலவர் என வியந்தேன்.
இவர் பலநூறு எழுதினாலும், நமக்குக் கிடைத்த திருப்புகழில் 1307 இசைப்பாடல்களே உள்ளன. இவற்றுள் 1008க்கும் மேற்பட்டவை சந்த வேறுபாடுகள் கொண்டவை என்பது இவரது ஆற்றலை வெளிப்படுத்துகின்றன.
சிக்கலான சந்த நயத்திற்கும் தாள அமைப்பிற்கும் பெயர்பெற்ற அருணகிரியாரின் பாடல்களால் தாம் இத்தமிழரின் இசையறிவு உலகறியப்பட்டது.
திருப்புகழில் இலக்கியத்தையும் பக்தியையும் இணக்கமாகக் கலப்பதில் அருணகிரியாருக்கு இணை யார்? “முத்தைத் தரு பத்தித் திருநகை” பாடல் நான் அடிக்கடி உச்சரிக்கும் பாடலாகும். எனக்கு மிகப் பிடிக்கும். இவரது இலக்கியங்களை நவரத்தினங்கள் என்பேன்.
தென்னிந்தியா முழுதும் பயணம் செய்து தமிழ் மாநிலத்தை முழுவதுமாக உணர்ந்த அரிய பெருமை இவருக்கு உண்டு. பல்லாயிரக்கணக்கானப் பாடல்களை இவர் இயற்றியிருந்தாலும் சுமார் 1334 பாடல்கள் மட்டுமே இன்று வரை காணக் கிடக்கின்றன.
நல்லொழுக்கம், நீதிமிக்க வாழ்க்கை வாழ்வதற்கான வழிகாட்டியாக விளங்கி, மக்களை நெறிப்படுத்தியதில் அருணகிரியாரின் பங்கு அரியது என்பேன்.
திருப்புகழை தேவாரத்திற்கு இணையாகவும், கந்தர் அலங்காரத்தைத் திருவாசத்திற்கு இணையாகவும் பேசும் இலக்கியவாதிகள் உண்டு. கந்தர் அநுபூதி திருமந்திரத்திற்கு இணையாகவும் போற்றப்படுவதைக் கேள்வியுற்றிருக்கிறேன். பெருமக்கள் வேறுபடலாம். ஆனால் இலக்கிய உலகில் இக்கருத்துகள் வலம் வருவது இயல்பு.
தமிழ்த் தொண்டைத் தவத் தொண்டாக செய்துவந்த அருணகிரியார், தமிழகத்தின் பல இடங்களுக்குச் சென்றவர். புலவர் பெருமான் வில்லிபுத்தூரார், பல புலவர்களை வரவைத்து, வாதத்திற்கு அழைப்பார். வாதம் நிகழ்கையில் வில்லிபுத்தூரார் கையில் ஒரு நீளமான துரட்டி ஒன்று இருக்குமாம். இதை எதிராளியின் காதின் மீது வைத்துக்கொண்டு கேள்விகள் கேட்பார். பதிலில் ஏதேனும் தவறு இருந்தால் துரட்டியை இழுத்துக்காதை அறுத்துவிடுவாராம். செவி வழிச் செய்தி இது. யாரோ கண்டார்கள்?
காது அறுபட்ட பல புலவர்கள் அச்சமயம் அங்கு வந்த அருணகிரியாரை வாதத்திற்கு அழைக்க, போட்டித் துவங்கியது. போட்டியின்போது தமக்கும் துரடு வேண்டும் எனவும், தான் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் கூறாவிட்டால் தானும் வில்லிபுத்தூரார் காதை அறுப்பதாக அருணகிரியார் இயம்பினாராம்.
முதலில் ஏகாக்ஷரச் செய்யுள் அமைப்பில் ஒரு பாடலைச் சொல்லி அருணகிரியார் விளக்கம் கேட்க வில்லிபுத்தூரார் திகைத்தாராம். தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, தம் காதை அறுக்கும்படி சொல்ல, “காதைக் கொய்வது என் நோக்கமல்ல, வாதத்திற்கு தோற்கும் புலவர்களுக்குச் செய்யும்கொடுமையை நீர் நிறுத்தினால்போதும்” என்றாராம் அருணகிரியார். வில்லிபுத்தூராரும் தம் தவறை உணர்ந்து மனம் மாறினார் என்பர்.
மனித சக்திக்கு அப்பாற்பட்ட அற்புதச் செயல்களை நிகழ்த்திக்காட்டியவர் அருணகிரியார். சம்சார வாழ்க்கையை மாயை எனப் பார்த்தவர். மக்கள் இதிலிருந்து விடுபடவேண்டும் என வலியுறுத்தவும் அருணகிரியார் தவறவில்லை.
வாக்கிற்கு அருணகிரி, ஸார்வ பௌமதி மக்கவி, அஷ்டபாஷா பரமேஸ்வரர் போன்ற பல சிறப்புப் பட்டங்களைக் கொண்ட அருந்தவப்புலவர் அருணகிரியார்.
அருணகிரியார் வாழ்வு சுவையான திருப்பங்களைக் கொண்டது என்பதற்கு மேலும் ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.
தன் தம்பியை திருத்தவே முடியாதோ என அஞ்சிய இத் தமக்கையார். ஒரு கட்டத்தில் அவரது விருப்பத்தை பூர்த்தி செய்யத் தன்னிடம் பணம் இல்லாததால் தன்னையே யாருக்காவது விற்று, அதன் மூலம் பெறும் பணத்தைக் கொண்டு சந்தோஷமாக இருக்கச் சொன்னபோது அதிர்ச்சியடைந்த அருணகிரியார் மனம் மாறியதாக ஒரு வரலாறு உண்டு.
வாலிப வயதில் காமமே வாழ்க்கை எனக் கருதிய இவருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தவர் இவரது தமக்கை அவர்கள்.
பல்லாற்றாலும் பெருமைபெற்ற அருணகிரியார் நம் தமிழகத்தில் பிறந்து தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்தவர் என்ற வகையில் அவருக்கு எடுக்கப்படும் விழாவும், விழா மலரும் எனக்கு பெருமையுணர்வைத் தருகின்றன.
விழாக் குழுவினருக்கு என் பாராட்டுக்கள்.
★★★
நம் ஆன்மீகப் பயணத்தில் கலங்கரை விளக்காகத் திகழ்ந்து, வழிகாட்டியாய் திகழ்பவர் குரு என்னும் பெரியார். அருணகிரி குரு அருளை மிகச் சிறப்பாக புகழ்கிறார். திரு அருளுக்கு குரு அருளே மேலான வழிகாட்டி என்கிறார்.
‘உறுதிகுரு வாக்கியப் பொருளாலே
உனதுபத காட்சியைத் தருவாயே’
பிறவிஅலை - திருப்புகழ்.

