புலிக்கால் முனிவர்
புலிக்கால் முனிவர், வண்டுகள் தேன் உண்பதற்கு முன்பாகவே இரவு நேரத்தில் பூஞ்செடிகளிலும் மரங்களிலும் உள்ள பூக்களைப் பறித்து இறைவனை வழிபட விரும்பினார். அதற்காகத் தவம் செய்து சிவபெருமானிடம் புலிக்காலைப் பெற்றுக்கொண்டவர். இவர் வழிபட்டதால் சிதம்பரத் தலம் புலியூர் எனப் பெயர் பெற்றது.
பதஞ்சலி முனிவர்
ஆதிசேசனுடைய அவதாரமாக விளங்கியர், பதஞ்சலி முனிவர். பதஞ்சலி முனிவரும் புலிக்கால் முனிவருக்கும் சிவபெருமான் தன்னுடைய திருநடனக் காட்சியைக் காண்பித்து அருளினார்.
இரணியவர்மன்
இம்மன்னர் பிறந்தபோது சிங்க நிறத்தில் இருந்தார்; தில்லைக்கு வந்தபோது புலிக்கால் முனிவர் அருளுரையால் தில்லையில் உள்ள சிவகங்கைத் தீர்த்தத்தில் மூழ்கிப் பொன்னிற மேனியைப் பெற்றார்.
எட்டும் இரண்டும்
எட்டும் இரண்டும் என்னும் சொற்றொடர் சமய உலகில் மிக இன்றியமையாத சொற்றொடர் ஆகும்.
எட்டு + இரண்டு = பத்து ஆகும்.
பத்து என்பது பக்தி எனப் பொருள் தரும். பத்துடையீர் ஈசன் பழ அடியீர் என வரும் திருவாசக வரியையும், பத்துடைய அடியவர் என வரும் திருவாய்மொழி வரியையும் எட்டினோடு இரண்டும் அறியேனையே என வரும் திருவாசக வரியையும் காண்க.
'கட்டி முண்டகர பாலி' எனத் தொடங்கும் சிதம்பரத் திருப்புகழ்ப் பாடலில் இச்சொற்றொடரை அருணகிரிநாதர் குறிப்பிடுகின்றார்.
“எட்டு இரண்டும் அறியாத என் செவியில் எட்டு இரண்டும் இதுவாம் இலிங்கம் என எட்டு இரண்டு வெளியா மொழிந்த குரு முருகோனே” (திருப்புகழ், 639)
என்பன அப்பாடல் வரிகளாகும்.
அகலிகை
இராமாயண, மகாபாரத நிகழ்ச்சிகளை அருணகிரிநாதர் திருப்புகழ்ப் பாடல்கள் பலவற்றில் குறிப்பிட்டு உள்ளார். சிதம்பரம் திருப்புகழில்
“கல்லிலே பொன் தாள்பட வேயது
நல்லரூபத் தேவர கானிடை
கௌவை தீரப் போகும் இவ்இராகவன் மருகோனே” (திருப்புகழ், 651)
கற்கு உரு அடியாலே மேவியே (திருப்புகழ், 387)
என வரும் வரிகள் இராமாயண நிகழ்ச்சியாகிய அகலிகை வைவு நீக்கம் (சாபவிமோசனம்) சொல்லப்படுவது காணத்தக்கது. அருணகிரிநாதர் சிதம்பரத் தலத்தில் பாடிய பாடல்கள் அனைத்தும் கருத்துச் செறிவும் கற்பனை வளமும் நிறைந்தவையாக விளங்குகின்றன.
சந்தத் தமிழ் பரப்பும்
சிவகாசி ஸ்ரீ அருணகிரிநாதர் சபை, மாதர் சபை
திரு. சுப.இரத்தினகிரி, பொருளாளர், அருணகிரிநாதர் சபை மற்றும் மாதர்சபை, சிவகாசி.
சிவகாசி ஸ்ரீ அருணகிரிநாதர் சபை, மாதர் சபை ஒரு சிற்றறிமுகம்:
1945ஆம் ஆண்டில் திரு. ரத்தினசாமி நாடார் அவர்கள் ஸ்தாபகராக இருந்து ஆரம்பிக்க, திரு. அருணாசல நாடார், திரு. வைகுண்டராம நாடார், திரு. சுப்பையா நாடார் ஆகியோர் முன்னாள் தலைவர்களாகவும், திரு. நடராஜ நாடார், திரு. சுப்பையா நாடார் ஆகியோர் முன்னாள் செயலாளர்களாகவும், திரு. சங்கரலிங்க நாடார் அவர்கள் முன்னாள் பொருளாளராகவும், திருமதி. கோசலை அம்மாள் அவர்கள் முன்னாள் காரியதரிசியாகவும், திருமதி. புவனேஸ்வரி சங்கரலிங்கம் அவர்கள் புரவலராகவும் கொண்டு எங்கள் சபை பல ஆண்டுகள் சிறப்பாகச் செயல்பட்டது. திரு. வைகுண்டராம நாடார் அவர்கள் காலத்திற்குப்
பின்னர் திரு. சுப்பையா நாடார் (காளிதாஸ் மெஸ்) அவர்கள் தலைவராகச் செயல்பட்டார்கள். வாழையடி வாழையென வந்த திருக்கூட்டம் என்பது போல் தற்போது திருமதி. கோசலை அம்மாள் அவர்கள் குமாரர் திரு. மாரியப்பன் அவர்கள் தலைவராகவும், திரு. நாகரத்தினம் அவர்கள் துணைத் தலைவராகவும், திருமதி. பரமேஸ்வரி அவர்கள் செயலாளராகவும், அடியேன் பொருளாளராகவும், திரு. காளிராஜன் அவர்கள் துணைச் செயலாளராகவும் திருமதி. புஷ்பா அவர்கள் இணைப் பொருளாளராகவும் நிர்வாகக் குழுவில் இணைந்து சிறப்பாகச் செயல்பட்டு சபை 78வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
எல்லாம் வல்ல முருகப் பெருமான் திருவருளும், ஸ்ரீ அருணகிரிநாதர் குருவருளும் ஆன்மீகச் செம்மல் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் வழிகாட்டுதலும், ஊக்கமும் சிவகாசி வாழ் தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்களின் பேராதரவும் அன்பும் கொண்ட பங்களிப்பில் சபைக்கான கோவில் போன்ற கட்டிடத்தில் பிரம்மாண்டமான தஞ்சை புவனேஸ்வரி அம்மன், திரு அண்ணாமலை முருகன் மற்றும் குரு ஸ்ரீ அருணகிரிநாதர் படங்களும், ஸ்ரீ அருணகிரிநாதர் மற்றும் இராமலிங்க வள்ளலார் திருவுருவச் சிலைகளும் கொண்டு தினமும் பலரும் வழிபட்டு வருகின்றனர். தங்கள் வாழ்வு சிறக்கப் பல நேர்த்திக் கடன்களும் செலுத்தி தினந்தோறும் கைமேல் பலனும் கண்டுள்ளனர். குறிப்பாக ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் திருவுருவத்திற்கு மாதந்தோறும் பௌர்ணமியன்று நேர்த்திக்கடன் இட்டு சேலை சாத்தி மீண்டும் வேண்டியது நிறைவேறியதும் சேவை சாத்தி வழிபடுவது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
ஆண்டுதோறும் மார்கழி மாதச் சொற்பொழிவுகள் மட்டுமின்றி, சோமவார பஜனை, வள்ளலார் மற்றும் அருணகிரியார் குருபூஜை விழாக்கள் ஆகியவை சிறப்புச் செய்யப்படுகின்றது. சிவகாசியில் பார் போற்ற அமைந்திருக்கும் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் வளாகத்தில் ஸ்ரீ அருணகிரி முருகன் சந்நிதானம் அழகிய கல்தேர் வடிவில் நமது சபையின் சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் முருகன் வேலும் மயிலுடனும், ஸ்ரீ அருணகிரிநாதருடன் இருக்கும் காட்சி காண்போரைப் பேரானந்தத்தில் திளைக்க வைக்கின்றது.
இவ்வாறு சிவகாசியில் ஸ்ரீ அருணகிரிநாதர் சபை மற்றும் மாதர் சபையைத் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் மற்றும் ஆன்மீகப் பெருமக்கள் துவங்கி 77 ஆண்டுகள் நிறைவு பெற்று மூன்றாம் தலைமுறையினரும் போற்றிப் பாதுகாத்து வருகின்றோம் என்றால் அதற்கு மூன்று முக்கிய காரணங்களைக் கூறலாம்.
- மாதர் சபையார் தினந்தோறும் சங்கக் கட்டிடத்தில் வைத்து திருப்புகழ் பாராயணம், வகுப்புகள் மற்றும்
- பஜனைகள் செய்து வருவது.
- ஆண்டுதோறும் நினைக்க முக்தி தரும் திருஅண்ணாமலை திருக்கோவிலில் ஆகஸ்டு 15ஆம்
- தேதியன்று ஸ்ரீ அருணகிரிநாதர் விழாவில் தெய்வீக முத்தமிழ் மேடையில் பாடுவது.
- ஆண்டுதோறும் மார்கழி மாதம் முழுவதும் அருள்நிறை சான்றோர் பெருமக்களின் ஆன்மீகச்
- சொற்பொழிவுகள் நிகழ்த்துவது.
மேற்கூறிய மூன்று காரணங்களுக்குமே கிரியாவூக்கியாகத் திகழ்வது நம் திருஅண்ணாமலையார் கோவில் மேடையில் ஆண்டுதோறும் நமக்கு வாய்ப்பளித்து வரும் ஸ்ரீ அருணகிரிநாதர் விழாக் கமிட்டியார்களுடன் நமக்கிருக்கும் தெய்வீக அன்பும், நட்பும், உரிமையும் என்றால் அது மிகையாகாது.
திருஅண்ணாமலையாருக்கும் சிவகாசிக்கும் இருக்கும் தொடர்பு இன்று நேற்றல்ல. பல நூறு ஆண்டுகள் கடந்து வரும் தொடர்பாகும். அதற்கு ஆதாரமாக சிவகாசியில் இன்றும் பலரும் ஆண் பிறந்தால் அண்ணாமலை என்றும் பெண் பிறந்தால் உண்ணாமுலை என்றும் பெயர் வைப்பதைக் காணலாம். திருக்கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு சிவகாசியிலிருந்து செல்வோர் எண்ணிக்கை கணக்கிலடங்கா. இவ்வாறு திருக்கார்த்திகை தீபத்திற்கும், பௌர்ணமி கிரிவலத்துக்கும் மட்டுமே முக்கியமாகச் சென்று வந்து கொண்டிருந்த சிவகாசி மக்கள், ஆகஸ்ட் 15 அன்றும் அண்ணாமலைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள் என்றால் அதற்கு நமது அண்ணாமலை ஸ்ரீ அருணகிரியார் விழாவும் நமது ஸ்ரீ அருணகிரிநாதர் சபையும் மட்டுமே காரணமாகும்.
1980களில் அடியேன் சிறுவனாக இருந்த காலத்தை நினைத்துப் பார்க்கின்றேன். அப்போதெல்லாம் அண்ணாமலையார் கோவில் திருப்பந்தலில் அலங்கார மேடையில் திரு. பித்துக்குளி முருகதாஸ் அவர்கள் பாடல் பாடியும் மேடையில் பங்கேற்பவர்கள் குறித்து அறிமுகம் செய்து வைத்து மேடையை நாள்முழுதும் அலங்கரிப்பார்கள். அன்று திரு. முருகதாஸ் அப்போது ஆற்றிய மேடைப் பணியைத் தற்போது செவ்வனே திரு. தனுசு அவர்கள் தொடர்ந்து மிகச் சிறப்பாக நடத்தி வருகின்றார்கள்.
அண்ணாமலை திருவூடல் வீதியில் இருக்கும் சிவகாசி நாடார் மடம் முழுவதும் சிவகாசி சபை மெய்யன்பர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். மேடையில் மட்டுமன்றி நாடார்கள் மடத்திலும் நாள் முழுதும் திருப்புகழ் பாடல் பஜனை நடந்து கொண்டே இருக்கும். விசிறி சாமியார் என்று அழைக்கப்பட்ட யோகிராம் சுரத்குமார் அவர்கள் சிவகாசி மடத்தில் வந்திருந்து நமது சபையாரின் திருப்புகழ் பஜனையை ரசித்துக் கேட்டு ஆசீர்வதித்த நிகழ்வுகளும் உண்டு. சபை மெய்யன்பர்கள் ரமணாச்ரமம், ஸ்கந்தாச்ரமம் மற்றும் கிரிவலம் சென்று வருவார்கள். அன்பர்கள் அனைவருக்கும் திரு. வைகுண்டராமன் நாடார், திருமதி. சஞ்சீவித்தாயம்மாள் குடும்பத்தினர் விருந்தளித்து மகிழ்கின்றனர்.
இதற்கெல்லாம் முத்தாரம் வைத்தாற்போல் மாலையில் தமிழகமெங்கும் இருந்து திருப்புகழ் பாராயணம் செய்யும் சபையார்கள் திரு அண்ணாமலையில் ஊர்வலமாக வீதி வலம் வந்து திருப்புகழைப் பாடி மகிழ்வார்கள். தெருவெங்கும் அப்பப்பா! அந்தந்தத் தெருவின் முக்கியஸ்தர்கள் ஆதரவில் அத்தனை மேடைகள் உருவாக்கப்பட்டிருக்கும். ஊர்வலம் முழுவதும் நமது சபையார் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு பல்வேறு திருப்புகழ், கந்தரனுபூதி என ஒவ்வொரு மேடையிலும் ஏறிச்சில பாடல்கள் பாடி அன்று திருஅண்ணாமலை நகரமே திருப்புகழால் மணக்கும். அஃதோடு சில மேடைகளில் நமது மாதர் சபையாரும், ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று” என்று பாடும் போது தெய்வீகமும், தேசியமும் ஒன்று என்று மெய்சிலிர்க்கக் கண்ணீர் மல்காதோர் இருக்கமாட்டார்கள்.
ஓசையும் சந்தமும், தாள நயமும் மிக்க இனிய திருப்புகழால் ஆன்மீகத் தொண்டு மட்டுமன்றி சைவ, வைணவ வேறுபாடுகளை களையும் விதமாகப் பல பாடல்களில் திருமாலை சிறப்பு செய்து திருமாலின் மருகன் முருகன் என்று பாடி சமூகத் தொண்டும், தமிழ்த் தொண்டும், ஆற்றிய நமது குருநாதர் ஸ்ரீ அருணகிரிநாதருக்கு அரசாங்கமே முன்னின்று பல விழா மண்டபங்களை அமைத்து, விழாக்களும் நடத்த வேண்டும். அதற்கு முன்னோடியாக நமது திருஅண்ணாமலை விழாக் கமிட்டியார் முருகன் திருவருளால் கிரிவலப்பாதையில் அனைத்து மெய்யன்பர்களும் சிறப்பாக ஒன்று கூடி வழிபடும் விதமாக, ஸ்ரீ அருணகரிநாதர் மணிமண்டபம் அமையப் பெறுகின்றது. அதிலும் பக்தர்கள் அனைவரும் தங்களால் இயன்ற அளவு பொருளளித்து மணிமண்டபம் மிகச் சிறப்பாக திருஅண்ணாமலைக்கு மற்றுமொரு அடையாளமாகத் திகழ உதவி செய்யவேண்டும்.
“அருணை விலங்கல் மகிழ்குற மங்கை அமளி நலங்கொள் பெருமான்” முருகன் திருவருளாலும், ஸ்ரீ அருணகிரிநாதர் குருவருளும் கூடிவர இந்த அழகிய மணிமண்டபத்தினை எண்ணத்தில் கருவாக்கி அதனை இன்று நனவாக்கி என்றென்றும் சிறக்கும் வண்ணம் பாங்குடன் அமைத்திடக் காரணமாயிருந்த அனைவரின் பாதங்களையும் பரவிப் பணிந்து இக்கட்டுரையை நிறைவு செய்கின்றேன்.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
★★★
கந்தரனுபூதி (வழிபாடு சார்ந்த அமுத மொழிகள்)
* தோகை விரித்தாடும் முருகனது ஊர்தியாகிய மயிலையும்
படைக்கலமாகிய வேலையும் புகழ்ந்து பாடும் தொழிலையே
தொழிலாகக் கொள்ள கந்தனைத் தொழு. (ஆடும்) கந்தரனுபூதி.
* காளை போன்ற முருகன் என வாயால் கூறி மனத்தால் நினைந்து
மெய்யால் (உடம்பால்) அவன் திருவடிகளை மெய்யாய் வணங்கு
(மனம், வாக்கு, காயம் இம்மூன்றால் முருகனை வணங்கு) -
(காளைக்) கந்தரனுபூதி.
* உலகியல் உறவு, உரை, உணர்வு பிறவற்றை அறியும் அறிவு
உயிரோடு தொடர்ந்து நின்ற அறியாமை முதலிய அனைத்தும்
அற்றுப்போக மனம் மெய்களைக் கடந்து நிற்கும் இறைவனை வேற
நினைவின்றி உள்ளத்துட் கொண்டு அப்பரம் பொருளோடு ஒட்டி
வாழும் நெறியை அறிந்து கொள். - (குறியை) கந்தரனுபூதி.
- குருவாய் வந்து அருள்புரிய குகனை வணங்கு. (குருவிலான் கொண்ட ஞானம் கோப்பிலான்
- கொண்ட கோலம் ஆப்பிலா சகடுபோல அழியும்) - (உருவாய்) கந்தரனுபூதி.
- நற்குடி, இழிகுடி என எக்குடிப் பிறப்பினும் கல்வி, செல்வம், முதலிய வளங்கள் இல்லாமல்
- இருப்பினும் கந்தனை வணங்கு.
- குணம் குன்றியவனாய் இருப்பினும் குகனை வணங்கு. குருவாய் வருவான். (பெரியோன்)
- கந்தரனுபூதி.
- குணம் குன்றியவனாய் இருப்பினும் குகனை வணங்கு. குருவாய் வருவான். (பெரியோன்) கந்தரனுபூதி.
நன்றி-அருளாளர் அருணகிரிநாதரின் அமுத மொழிகள் -திருப்புகழ் மாமணி வெ. இராமு

