அனாதி மதம் என்ற பெருமை நமது இந்து மதத்துக்கு மட்டுமே உண்டு. ஆதியில் இந்த உலகம் முழுவதும் பரவியிருந்தது நமது இந்து மதமே ஆகும். இதற்கான ஆதாரங்களை மகா பெரியவர் என்று அழைக்கப்படும் காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதியாக விளங்கிய ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகள் தனது தெய்வத்தின் குரல் நூலில் பல்வேறு இடங்களில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
உலகில் தோன்றிய பல்வேறு மதங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தோற்றுவாய் உண்டு என்றால் இந்து மதம் தோன்றியது எப்போது என்பதற்குக் கால எல்லை கிடையாது. எனவேதான் மாணிக்கவாசகர் கூறியது போல முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளாகத் தொடக்கமும் முடிவும் இல்லாததாக இந்து மதம் விளங்குகிறது. ஆதியந்தம் அறிய முடியாத வேதத்தோடு தோன்றியது இந்து மதம்.
இந்து மதம் அல்லது இந்து சமயம் பல உட்பிரிவுகளையும் பல கடவுள் வழிபாட்டினையும் தன்னகத்தே கொண்டிருந்தாலும் இந்து சமயத்தின் முக்கிய பிரிவுகளாகக் கருதப்படுபவை ஆறு பிரிவுகளாகும்.சூரியன், விநாயகர், முருகன், சிவன், சக்தி, திருமால் என்னும் ஆறு தெய்வங்களை பாரத நாட்டினர் தொன்று தொட்டு வணங்கி வந்தனர். இதனை அறுசமயம் அல்லது ஷண்மதம் என்று கூறுவார்கள். பல்வேறு பிரிவுகளாகக் கிடந்த இந்து சமயத்தினை முக்கியமான ஆறு சமயநெறிகளாகத் தொகுத்துக் கொடுத்தவர் ஆதிசங்கரர் ஆவார். எனவேதான் அவருக்கு ஷண்மத ஸ்தாபகர் என்று பெயர் ஏற்பட்டது.
களப்பிரர்கள் காலத்தில் ஒருமுறை தமிழகத்தில் இந்துமதம் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. அப்போது நாயன்மார்களும், ஆழ்வார்களும் தோன்றி இந்து சமயத்தின் தூண்களாக விளங்கினார்கள். கிபி பதினோராம் நூற்றாண்டிலிருந்து கிபி பதினைந்தாம் நூற்றாண்டு வரையில் முகமதியர்களினால் மீண்டும் ஒரு பின்னடவை இந்து சமயம் சந்தித்தது. இந்தக் காலகட்டத்தில் அதாவது கிபி 14-15ஆம் நூற்றாண்டுகளில் தோன்றியவராகக் கருதப்படும் அருணகிரிநாதர் மூலம் மிகப் பெரிய பக்தி இயக்கம் தமிழகத்தில் வேரூன்றியது என்றால் மிகையில்லை. இத்தகைய திருப்புகழைத் தமிழகம் முழுவதும் பரவச் செய்தவர் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த வள்ளிமலை சுவாமிகளாவார்.
தமிழர்களின் தனிப்பெரும் கடவுளான முருகவேளைத் திருப்புகழ் மூலம் போற்றிப் பாடிய அருணகிரிநாதர் நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை என்ற தலத்தில் அவதாரம் செய்தார். முத்து என்ற கணிகையின் மகனாகப் பிறந்து சகல மொழிகளையும் கற்றுத் தேர்ந்து இடையில் காம எண்ணங்களினால் அலைக்கழிக்கப்பட்டு அவரது மூத்த சகோதரி ஆதி என்பவரால் தடுத்தாட்கொள்ளப்பட்டு மனம் நொந்து திருவண்ணாமலை கோவிலின் கோபுரத்து உச்சியிலிருந்து விழுந்த அருணகிரிநாதரை ஒரு சித்தர் உருவில் முருகபெருமான் வந்து தாங்கிக் காப்பாற்றி திருப்புகழ் பாட வைத்ததாகக் கூறப்படும் செவிவழி கதைக்கு வரலாற்று ஆதாரங்கள் இல்லை என்றாலும் அகச் சான்றுகளாக அவரது திருப்புகழில் குறிப்புகள் உள்ளன.
இந்து சமயம் நலிவுற்ற காலத்தில் தோன்றியதாலோ என்னவோ அருணகிரிநாதருக்குக் மேலே குறிப்பிட்ட அறுசமயத்தில் எந்த சமயத்தின் மீதும் தீவிரத் தனிப்பற்றின்றி அனைத்து சமயக் கடவுள்களையும் ஏற்றுக் கொண்டே பாடுகிறார். தேவாரம் பாடிய மூவர்களும், மாணிக்கவாசகரும் கொண்டிருந்த வைணவ மறுப்போ, ஆழ்வார்கள் கொண்டிருந்த சைவ சமய வெறுப்போ இல்லாமல் அருணகிரிநாதர் திருப்புகழைப் பாடியுள்ளார். எங்கே சுத்தினாலும் ரங்கனைச் சேவி என்று திருவரங்கத்தில் உள்ள சொலவடை போல இவர் ஷண்மதத்துக் கடவுள்களைப் பாடினாலும் முடிவில் அவர்கள் மூலம் முருகப் பெருமானை வணங்குவதிலேயே குறியாக இருந்தார்.
இதனை அவர் தனது பாட்டாலியூர் திருப்புகழில் (சங்கைக் கத் தோடு எனத் தொடங்கும் பாடல்)
‘சங்கைக்கத் தொடும் சங்கிட் கோல சமயிகள்
சங்கற்பித் தோதும் வெகுவித கலைஞானச் சண்டைக்குட் கேள்வி அலம் அலம்'
என்கிறார். சந்தேகத்தோடும் கூச்சலோடும் வாதம் செய்கின்ற அறுவகை சமயத்தைச் சேர்ந்தவர்களும் சங்கல்பம் செய்து கொண்டு இறங்கி போடும் வாதங்களுக்குத் தேவையான அறிவு போதும் போதும் என்று ஒருமுறைக்கு இருமுறை கூறி கேட்டுக் கொள்கிறார். ஒருவேளை ‘ஆறுமுகமான பொருள் நீ அருளால் வேண்டும்' என்று ஆதி அருணாசலத்திடம் அவர் வேண்டும் அந்தப் பொருள் அறுசமய நல்லிணக்கம்தானோ?
சூரியன் ஒளியின் வடிவானவன். அந்த ஒளிவடிவாகவே எம்பெருமான் முருகவேளை அருணகிரிநாதர் ஆராதிக்கிறார்.
அருணகிரிநாதர் போற்றிய சைவம்
திருப்புகழை முற்றும் ஓதி அனுபவிக்கும்போதுதான் அருணகிரிநாதர் எத்தகைய ஞானி என்பது விளங்கும். திருப்புகழ் மூலம் அவர் கற்றறிந்த சாஸ்திரங்களின் கணக்கு நமக்குத் தெரிய வரும். அருணகிரிநாதர் பல்வேறு சாஸ்திரங்களைப் படித்து அறிவும் திருவருளும் பெற்றிருந்தாலும் அவரது பாடல்களில் முதன்மை பெற்று விளங்குவது சைவ சித்தாந்தக் கோட்பாடுகளே ஆகும்.
“கலகல கலெனக் கண்ட பேரொடு
சிலுகிடு சமயப் பங்க வாதிகள்
கதறிய வெகுசொற் பங்க மாகிய பொங்களாவுங்
கலைகளு மொழியப் பஞ்ச பூதமு
மொழியுற மொழியிற் றுஞ்சு றாதன
கரணமு மொழியத் தந்த ஞானமி ருந்தவாறென்”
பல்வேறு சமயக் கூச்சல்களும் ஒடுங்கி,பஞ்ச பூதங்களும் ஒடுங்கி ஓய்வு ஒழிதல் இல்லாத மனம் ஒடுங்கும் நிலையில் நீ எனக்கு உபதேசம் செய்த ஞானம் எப்படி இருந்தது தெரியுமா? என்று இரண்டு பள்ளிச் சிறுவர்கள் முதல் நாள் சாப்பிட்ட இனிப்பின் சுவையைச் சப்புக் கொட்டியபடி கேட்பது போல சிவஞான சுவையை முருகனிடமே கூறுகிறார்.
"இன்னும் ஒருபடி மேலே போய், சுருதிமுடி மோனஞ்சொல் சிற்பரம ஞானசிவ சமயவடி வாய்வந்த அத்துவித மானபர சுடரொளிய தாய்நின்ற நிட்களசொ ரூபமுத லொருவாழ்வே”
ஞான சிவ வடிவாய் வந்த அத்வைதமான பரசுடரொளி என்று ஒரேயடியாக வேதம் போற்றும் முழுமுதற் கடவுளான சிவசொருபியே நீ என்று கூறுகிறார். அருணகிரிநாதர் முருகப் பெருமானிடம் பரம்பொருளான சிவபெருமானையே கண்டார் என்பதற்கு,
‘அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி அகமாகி
அயனென வாகி அரியென வாகி அரனென வாகி'
என்று தொடங்கும் திருப்புகழ் ஒன்று போதும்.
முருகனிடம் 'சிவஞான சித்தருள்வாயே' என்று நேரடியாகக் கேட்கிறார். சிவபெருமானின் பல்வேறு தோற்றங்களைத் தனது திருப்புகழில் பாடியுள்ளார்.
அருணகிரிநாதரைப் பொறுத்தவரை சிவனும் முருகவேளும் வேறு வேறு அல்ல என்பது திருப்புகழைப் படிக்கும்போது நாம் அறிந்து கொள்ளலாம்.
அருணகிரிநாதர் போற்றிய சாக்கம்:
“எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பாள்” இது சிவஞான சித்தியார் கூற்றாகும். ஆறு வெவ்வேறு சமயங்கள் இருந்தாலும் அத்தனை சமயங்களுக்கும் ஆதாரமாகத் திகழ்பவள் அந்த பராசக்தியே. அருணகிரிநாதர் என்ற பெயரை ஊன்றி கவனித்தால் சாக்தர்கள் தங்கள் பெயரில் சேர்த்துக் கொள்ளும் நாதர் என்பது இருப்பதை அறியக்கூடும். எனவே அருணகிரிநாதர் அந்த பராசக்தியைப் போற்றுவதில் வியப்பெதுவும் இல்லை அன்றோ?
இங்கு அருணகிரிநாதர் வரலாற்றில் நமக்குக் கிடைக்கும் ஒரு கதை இங்கே நினைவுகூரத்தக்கது.
அக்காலத்தில் திருவண்ணாமலைப் பகுதியை பிரபுடதேவ மகாராஜன் என்பவன் ஆண்டு வந்தான். அவன் சபையில் தேவி உபாசகனாக விளங்கிய சம்பந்தாண்டான் என்ற புலவன் ஒருவன் இருந்தான். அரசர் சம்பந்தாண்டானுக்கு அளித்த மரியாதையையும் கௌரவத்தையும் முருகன் அடிமையான அருணகிரிநாதருக்கும் அளித்து வந்ததை அந்தச் சம்பந்தாண்டான் பொறுக்காமல் ஒருநாள் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் ஒரு தூணில் முருகனை அருணகிரிநாதரும் தான் அதே தூணில் அன்னை பராசக்தியையும் எழுந்தருளச் செய்ய வேண்டும் என்று சவால் விட்டான். முதலில் பாடிய சம்பந்தாண்டானால் தேவியை அந்தத் தூணில் எழுந்தருளப் பண்ண முடியவில்லை. அதற்குக் காரணம் அருணகிரிநாதர் தேவேந்திர சங்க வகுப்பைப் பாடியதால் அம்பிகை மெய்மறந்து நிற்க சம்பந்தாண்டானால் அம்பிகையை அந்தத் தூணில் எழுந்தருளச் செய்ய முடியாமல் போனதாக ஒரு கதை உள்ளது. இதன் மூலம் அவர் தேவியை உபாசித்தது தெரிய வருகிறது.
அம்பிகையைப் பல்வேறு ரூபங்களிலும் நாமங்களிலும் திருப்புகழ் நெடுக அருணகிரிநாதர் போற்றிக் கொண்டாடுகிறார்.அம்பிகையின் வாகனங்கள், அம்பிகையின் பிரபாவம், அம்பிகையின் பராக்கிரமங்கள், அம்பிகையும் ஈசனும், அம்பிகையும் அண்ணன் திருமாலும், அம்பிகையும் மூத்த பிள்ளை கணபதியும் அம்பிகையின் திருநாமங்கள் போன்றவற்றை அவர் புகழ்ந்து பாடுவதில் வியப்பேதுமில்லை.சோமாஸ்கந்தனாக அந்த பாலமுருகன் ஈசனுக்கும் தேவிக்கும் நடுவில் அமர்ந்து அருள்பாளிக்கும்போது அருணகிரிநாதரால் சக்தியைப் பாடாமல் ஒழியுமோ?
அருணகிரிநாதரும் வைணவமும்
அருணகிரிநாதர் முருகவேளைத் திருமாலின் மருமகனாக எண்ணிப் பல பாடல்களைப் பாடியுள்ளார்.
“மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை...
என்று கந்தர் அனுபூதியில் முருகனைத் திருமாலின் மருகோனாகப் பார்த்தாலும் அதே பாடலில் வானவர்க்கு மேலான தேவனை என்று முருகனையே முன்னிலைப்படுத்துவதையும் காணலாம். திருமாலை அந்த இராமனாக கண்ணனாக பல பாடல்களில் அருணகிரிநாதர் பாடியுள்ளார். இராமயணக் காட்சிகளும், மகாபாரதக் காட்சிகளும் பல்வேறு இடங்களில் இடம் பெற்றுள்ளன. திருப்புகழில் இராமாயணம், மகாபாரதம் என்ற தலைப்பில் அன்பர்கள் சொற்பொழிவு நிகழ்த்தும் அளவிற்கு அருணகிரிநாதர் பல பாடல்களைத் திருமால் மீது பாடல்களைப் பாடியுள்ளார்.
வில்லிபுத்தூரார் வாழ்வில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி கூட இங்கே நினைவு கூரத்தக்கது. தமிழும் வைணவமும் இருகண்களாகக் கொண்ட வில்லிபுத்தூரார் தனது பாண்டித்தியத்தால் பல புலவர்களை வென்று அதன் அடையாளமாகத் தோற்றப் புலவர்களின் செவிகளைத் தன்னிடம் உள்ள குறடால் களைந்து வந்தார். திருவில்லிபுத்தூரில் எல்லா புலவர்களையும் வென்று ஊர் ஊராக திக்விஜயம் செய்து புலவர்களின் காதுகளை அறுத்து வந்தவர் திருவண்ணாமலையில் அருணகிரிநாதரிடம் ஒரு பாடலுக்குப் பொருள் கூற முடியாமல் தோற்றுப் போனார்.
அந்தப் பாடல் இது.
திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே
தன்னிடம் தோற்ற வில்லிபுத்தூராரின் செவிகளை பங்கம் செய்யாமல் பெருங்கருணையுடன் அவரைப் போகவிட்டார். இதன் காரணமாகவே “காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி”என்ற தனிப்பாடல் தோன்றியது.
“உரியதவ நெறியில் நம நாராயணாய என, ஒருமதலை மொழி அளவில் ஓராத கோபமுடன், உனது இறைவன் எதனில்உளன் ஓதாய், அடா, எனுமுன்”
என்று அருணகிரிநாதர் எட்டெழுத்து மந்திரத்தின் மகிமையைப் போற்றும்போது நாம் சொல்வதற்கு வேறு என்ன உள்ளது?
அறுசமய அண்ணல்
அருணகிரிநாதர் தனது சரவண பவநிதி அறுமுருகா என்ற ஒரே பாடலில் அறுசமயக் கடவுள்களையும் போற்றுவதைக் காணலாம்.
இப்பாடலில் விநாயகரை ‘ஒருதனி முதலென வருகரி திருமுகர்', என்கிறார். ஈசனை 'திரிபுரம் எரிசெயும் இறைவர்' என்றும் அம்பிகையை' அமலி விமலிபரை உமையவள்' என்றும் கூறுகிறார். அடியவர்களின் மனதில் மண்டிக் கிடக்கும் மும்மலம் என்ற இருளை அகற்ற வரும் தினகரன் என்று சூரியனைக் குறிப்பிடுகிறார். நரசிம்மராய் அவதரித்த நெடுமாலை 'நரகரி நெடியவர் மருகன்' என்று கூறுகிறார், இத்தனை கடவுள்களுக்கும் அச்சாணியாகத் திகழும் முருகப்பெருமானைக் கொண்டாடும் அருணகிரிநாதர் அறுசமயங்களையும் ஒன்றாக நோக்குபவர்தான் அல்லவோ?
முடிவுரை:
அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பல பாடல்களில் தேவர்களில் பலரையும், கணபதிராயனையும், ஈசனையும், அம்பிகையையும், திருமாலையும் போற்றிப் பாடுவதன் மூலம் தான் அறுசமயத்திற்கும் பொதுவானவன் என்பதைக் கூறாமல் கூறுகிறார்.இதற்கும் மேலாக ஒருபடி சென்று,
‘ஈசர் விஷ்ணுவை சேவை செய்வோர் தமை இகழ்ஆவார்கள்
ஏக சித்த தியானம் இலாதவர்
மோகம் உற்றிடு போகிதம் ஊறினர்
ஈனர் இத்தனை பேர்களும் ஏழ் நரகு உழல்வாரே’
என்று ஓங்கிக் குரல் கொடுப்பதன் மூலம் தான் அறுசமயத்தினரையும் ஒன்றாக நினைப்பவன் என்பதனைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
கட்டுரைக்கு உதவிய நூல்கள்:
(1) அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்: ஆசிரியர்-. தணிகைமணி வ.சு.செங்கல்வராய பிள்ளை- இரண்டாம் பதிப்பு-1979. (2) திருப்புகழில் சைவ சித்தாந்தம்: ஆசிரியர்- வித்துவான் கோ.மு.முத்துசாமிப்பிள்ளை ஐ.ஏ.எஸ்.(ஒய்வு)- சைவ சித்தாந்தப் பெருமன்றம். (3) திருப்புகழ் ஒளிநெறி(மூன்று புத்தகங்கள்) : ஆசிரியர்-முனைவர்.வி.சி.சசிவல்லி-உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்-2007. (4) அருணகிரிநாதர் அடிச்சுவட்டில்-(திருப்புகழ் தலப்பயணம்): ஆசிரியர் - சேக்கிழார்தாசன் ஆர். இராமசேஷன் - அருள்மிகு சுவாமிநாத திருக்கோவில்-1981. (5) ஸ்ரீவில்லிபுத்தூரர் சரிதம் : சி.கு.நாராயணசாமி முதலியார்- ஸ்டார் பிரசுரம், கோவை- 1933 கட்டுரைக்கு உதவிய இணைய தளங்கள் https://www.kaumaram.com/
★★★

