அருளாளர் அருணகிரிநாதப் பெருமான் அவர்கள் விஜயநகர பேரரசின் பகுதியாக விளங்கிய திருவண்ணாமலையில் வாழ்ந்தவர். செக்கோஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர் கமில் சுவலபில் அவர்கள் தான் எழுதிய 'இந்திய இலக்கியங்களின் சரித்திரம்' என்ற புத்தகத்தில் அருணகிரிநாதர் காலத்தை 1370 முதல் 1450 வரை என கணித்துள்ளார்.

ஆனால் எல்லார் மனதிலும் எழும் வினா ‘என்னால் பிறக்கவும் என்னால் இறக்கவும் இங்கு நான் யார்‘ என்று பாடிய பெருமானின் பிறந்த ஊர், இடம் எதுவென்பதே

அருளாளர் பிறந்த ஊர் குறித்து நிறைய சர்ச்சைகள் உள்ளன. ஒரு சாரார் அருளாளர்

அவர்கள் ஆரணி அருகே உள்ள முள்ளன்றம் பகுதியில் வாழ்ந்த பிராமண தின்டிமக் கவிகளின் வழித்தோன்றல் என்று கூறுவர். ஆனால் திருவண்ணாமலை வாழ் மக்களும், பெரும்பாலான திருப்புகழ் அறிஞர்களும் அருணகிரிநாதர் அவதரித்தத் தலம் திருவண்ணாமலை என்றே கூறுவர். திரு பாம்பன் சுவாமிகளும், திரு வாரியார் சுவாமிகளும் அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் தான் அவதரித்தார் என்று ஆணித்தரமாக கூறியிருக்கின்றனர்.

அருளாளரின் தாயார் முத்தம்மை அவர்கள் கணிகையர் குலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அன்றாடம் கோயிலுக்குச் சென்று ஆலயப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்கள்.

அருளாளர் அவர்கள் தனது சிறு வயதிலேயே தனது தாயையும் தந்தையும் இழந்தார்கள். பிறகு அவருடைய தமக்கையான ஆதி அவர்கள் அவரை வளர்த்தார்கள்.

திருவண்ணாமலையில் வாழும் மக்கள் அருணகிரிநாதப்பெருமான் திருவண்ணாமலையில் உள்ள கீழை வீதியில் பிறந்தார் என்று நம்புவர். அதற்குச் சான்றாக தற்பொழுது இயங்கி வரும் கனரா வங்கி கட்டிடத்தை சுட்டி காட்டுவார்கள்.

திருவண்ணாமலையின் முதுபெரும் அறிஞர் திரு
பாண்டுரங்கனார் அவர்கள் தான் எழுதிய ‘அருள்நிலை
அண்ணாமலை’ என்ற புத்தகத்தில்

'திருவண்ணாமலையில் மேலத்தெரு, கீழத்தெருக்களில் திருக்கோயிலில் ஆடல் பாடல் புரியும் கணிகையர் குடும்பங்கள் இருந்தன. கீழைத்தெரு என்பது திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியின் பின்புறம் தொடங்கி வடக்கு நோக்கிச் செல்வதாகும். அத்தெருவின் தொடக்கத்தில் முத்தம்மை விநாயகர் கோயில் என்ற பெயருடைய மிகப் பழமை வாய்ந்த பிள்ளையார் கோவில் ஒன்று இருக்கிறது. அக்கோவிலை திருப்புகழ் அருளிய அருணகிரிநாதருடைய தாயாகிய முத்தம்மாள் கட்டியது என்று கீழத் தெருவில் உள்ளவர்கள் இன்றும் சொல்லி வருகின்றனர். அத்தெருவில் குறிப்பிட்டதொரு வீட்டினை அருணகிரியார் பிறந்த வீடு என்றும் சொல்லி வருகின்றனர். ஆகவே அவருடைய முன்னோர்கள் திருவண்ணாமலையைச் சேர்ந்த பழங்குடிகள் என்பதும் அவர் கணிகையர் வகுப்பில் பிறந்தவர் என்றும் சொல்வதற்கு தடைகள் ஏதும் இல்லை என்பதும் தெளிவாகின்றன‘ என்று பதிவிட்டிருக்கிறார்.

அதே போல் கயிலை மணி சி.முனிரத்தினம் அவர்களும் தனது புத்தகத்தில் அருளாளர் அருணகிரிநாதர் தற்போது கனரா வங்கி இயங்கிவரும் கட்டிடத்தில் தான் பிறந்தார் என்று கூறியுள்ளார்கள்.

அடியேன் 36 ஆண்டுகளாக திருவண்ணாமலை கனரா வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவன். நானும் என் தந்தையுமான திரு ராஜகோபால் பிள்ளை அவர்களும் அருளாளர் மீது தீவிர ஈடுபாடு உள்ளவர்கள். என் தந்தை அருணகிரிநாதர் விழாக் குழுவில் செயளாளராக பணியாற்றி

*ஸ்ரீ முத்து விநாயகர் துணை, ஸ்ரீ பச்சையப்பன் துணை

ஸ்ரீ முத்து விநாயகர் துணை, ஸ்ரீ பச்சையப்பன் துணை

ஸ்ரீ*

அவரைத் தொடர்ந்து நானும் அவ்விழாவில் இணைச்
செயலாளராக பணியாற்றி வருகின்றேன்.

அருளாளர் நான் பணி செய்யும் கனரா வங்கி இருக்கும் இடத்தில்தான் அவதரித்தார் என்று முதலில் அறிந்த போது என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் அருள் மிகு அண்ணாமலையார் திருக்கோயிலின் வங்கிக் கணக்கு, அருளாளர் அருணகிரிநாதர் விழாக் குழுவின் கணக்கு, அருளாளர் அருணகிரிநாதர் மணிமண்டப அறக்கட்டளையின் கணக்கு ஆகியவற்றை எங்கள் வங்கியில் துவங்கியபோதுதான் எனக்கு இவ்விடத்திற்கும் அருளாருக்கும் ஏதோ தொடர்பு இருக்குமென்று என் மனதுக்குத் தோன்றியது. அதேபோல் எங்கள் வங்கியின் அருகே உள்ள முத்து விநாயகர் கோவிலின் அறங்காவலர்களைக் கேட்டபோது அவர்கள் முத்து விநாயகர் கோயில் முத்தம்மை வழிபட்ட கோயில் என்றும் விநாயகருக்கு முன்னால் வரும் முத்து என்னும் அடை மொழி அருளாளரின் தாயார் முத்தம்மையை குறிப்பதாகவும் கூறினார்கள். ஆகவே என்னுடைய கூற்றுக்கு இது வலிமை சேர்த்தது. அருளாளர் பிறந்த இல்லத்தில் ஏறக்குறைய 36 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றதை நான் ஒரு மிகப் பெரிய பாக்கியமாகவும், எனது பிறவிப்பயனையும் அடைந்ததாகவும் பெருமிதம் கொள்கின்றேன்.

★★★