தருமையாதீனப்புலவர், சிவத்தமிழ்ச்செல்வர், சைவத்தமிழ் நன்மணி
- பேராசிரியர் முனைவர் மு.சிவச்சந்திரன்,
இயக்குநர், அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம், தருமபுரம், மயிலாடுதுறை.
முருகனின் அறுபடைவீடுகளுள் ஒன்றாகிய பழனி மலையின் அடிவாரம் திருஆவிநன்குடியையும் இணைத்து அருணகிரிநாதப் பெருமான் ஏறத்தாழ 100 திருப்புகழ்ப் பாடல்கள் அருளியுள்ளார். திருஆவிநன்குடியில் அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் ஜெபமாலை வழங்கி அருளினார் என்று அப்பெருமானே அறிகின்றார். இதுகுறித்தச் சிந்தனைகளையும், பழனியைப் பற்றியும், அத்திருப்புகழ் பற்றியும் இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம்.
பழனிமலை - வரலாற்று நிலை:
சிவபெருமானும் உமாதேவியாரும் இளம் குழவியாகிய முருகனைப் பார்த்து, “ஞானப்பழம் நீ” என அன்போடு அழைத்தமையால், முருகன் எழுந்தருளிய இம்மலை பழனிமலை எனப்பெயர் பெற்றது. பழம் நீ என வழங்கப்பெற்றுப் பின்னர், பழனி என்று மருவியது. சித்தர் போகரின் அருள் திருவிளையாடல்கள் நிகழ்ந்த தலம் இம்மலையாகும். அவரின் முயற்சியினால் எழுப்பிக்கப்பெற்ற ஞான தண்டாயுதபாணியே பழனி ஆண்டவராகப் பார் முழுவதும் போற்றப் பெறுகின்றார்.
திருக்கயிலையிலிருந்து சிவகிரி சக்திகிரி என்ற இருமலைகளைச் சிவபெருமான் அகத்தியருக்குக் கொடுக்க, அவற்றைப் பொதிகைக்கு எடுத்துச் செல்லுமாறு அகத்தியர் இடும்பனுக்கு ஆணையிட்டார். அவற்றை எடுத்துவந்த இடும்பன், களைப்படைந்து அவற்றை இங்கே இறக்கி வைத்திட அம்மலைகள் இரண்டும் இங்கேயே நிலைபெற்றுவிட்டன. சிவகிரியின்மீது குமரப்பெருமான் குராமரத்தின் கீழ் நிற்பது கண்டு, யாரோ சிறுவன் என கோபித்து இடும்பன் அவருடன் போரிட்டு இறந்தான். இடும்பியின் துன்பம்
போக்க, மீண்டும்
இடும்பன் உயிர்பெற்று
எழுமாறு இறைவன்
அருள் செய்தான்.
இடும்பன் இரண்டு
வரங்களை இங்குப்
பெற்றுக்கொண்டான்.
ஒன்றினால், இடும்பன்
சந்நிதி என்ற இடத்தின்
வாயிலில் காவலனாக இடும்பன் விளங்க விரும்பினார். பிறிதொன்றினால், தாம் இரு மலைகளையும் எடுத்து வந்தது போன்றே இங்கு வரும் பக்தர்கள் காவடியுடன் தமது பிரார்த்தனைகளைக் கொண்டு வருவார்களேயானால், அவர்களுக்கு முருகப்பெருமான் அருள் வழங்கவும் வேண்டிக் கொண்டான். அங்ஙனமே, முருகன் அருள் வழங்கினார். இது, காவடி எடுத்து வரும் வழக்கத்திற்குரிய வரலாற்று நிலையாகும்.
450 அடி உயரமுள்ள பழனி மலையை அடைய 697 படிகள் உள்ளன. மலை மீது உட்பிரகார தென்மேற்கு மூலையில் போகர் சந்நிதி உள்ளது. போகரின் மாணவராகிய புலிப்பாணி வழிவந்தவர்களே போகர் சந்நிதியை இன்றும் பூஜித்து வருகின்றனர். போகர் பூஜித்த புவனேஸ்வரி அம்பாள் சந்நிதியும் இங்கு உள்ளது. இங்குதான், போகர் சமாதியில் இருந்தார் என்று கூறப்படுகின்றது.
மாம்பழமா? மாதுளம்பழமா?
பழம் நீ என்று இறைவனும் இறைவியும்
அருளிய நிலையில் அந்தப் பழம் யாது? என்பது
ஆய்வுக்குரியது. பலரும் நாரதர் கொண்டு வந்தது
மாம்பழம் என்று குறிக்கின்றனர். மாம்பழத்தை இரண்டாகப் பிரிக்க முடியாது என்றோ? அது கிடைத்தற்கரிய கனி என்றோ வழக்கமில்லை. எனவே, இங்குக் கனி என்பது - அதாவது, பழம் என்பது மாதுளம் கனி ஆகும். மாதுளம் கனியைத்தான் இரண்டாக உடைக்கமுடியாது. இக்கருத்தினை வைத்து வாரியார் சுவாமிகள், “கைத்தலம் நிறைகனி” என்னும் திருப்புகழ்ப் பாடலுக்கு, இங்கு கனி என்பது மாதுளம் கனி என்று உரை எழுதினார். அதற்கு மேற்கோளாகக் கீழ்வரும் திருப்புகழ் வரியைக் குறிப்பிட்டுள்ளார்.
“ஒளிரானையின் கரமில் மகிழ்
மாதுளங்கனியை
ஒருநாள் பகிர்ந்த உமை அருள்பாலா”
(சிவஞான புண்டரிகம்-திருப்புகழ்)
எனவே, மாதுளம் கனியே சிவபெருமானால் விநாயகருக்குத் தரப்பட்டது. இதன் மூலம் வாரியார் சுவாமிகள் ஒரு அருமையான விளக்கம் தருகின்றார். விநாயகப் பெருமான் கையில் உள்ள கனி, பழம் நீ ஆன முருகன் என்று குறிப்பிடுகின்றார். அதாவது, ஐங்கரத்தான் என்னும் விநாயகர் கையில் ஆறுமுகன் கனியாக விளங்குகின்றான் என்பது வாரியார் தரும் விளக்கம். இதைத்தான் “கைத்தலம் நிறைகனி” என்று அருணகிரிநாதர் பெருமான் குறிப்பிடுகின்றார்.
அருளாளர்கள் பலரும் பழனிவேறு; திருஆவினன்குடி வேறு என்று கருதாது, பிரபந்தங்களில் இரு தலங்களையும் இணைத்தே பாடியுள்ளனர். மேலே குறிப்பிட்ட சிவகிரி, சக்திகிரி இரண்டில் சிவகிரி பழனியாகவும், சக்திகிரி இடும்பன் மலையாகவும் விளங்குகின்றன. இவ்வகையில் தான் அருணகிரிநாதர், திருஆவினன்குடி, பழனி என்ற இரண்டையும் இணைத்து 100 திருப்புகழ்ப் படங்கள் பாடியுள்ளார்கள் என முன்னமே சிந்தித்தோம்.
திருஆவிநன்குடி - விளக்கம்:
திரு என்னும் திருமகளும் ஆ என்னும் காமதேனுவும் இனன் என்னும் சூரியனும் முருகனை வழிபாடு செய்தமையால் இத்தலம் திரு + ஆ + இனன் + குடி என்றமைந்து தீருஆவினன்குடி ஆயிற்று. இது பழநியின் அடிவார ஸ்தலம் ஆகும். முருகனை மதியாதிருந்த பிரமன் சாபம் பெற்று மண்ணுலகில் பிறந்தான். அவனைக் காக்கும் பொருட்டு திருமால்
முதலான தேவர்கள் முருகனிடம் வேண்டப் பழநிக்கு வந்தனர். அப்பொழுது அவர்களின் முன்னே முனிவர்கள் சென்றனர். அம்முனிவர்கள் மரவுரி தரித்துச் சங்கினை ஒத்த நரைமுடி கொண்டு ஒளிவீசும் உடம்பினைக் கொண்டு மான்தோலைப் போர்த்தித் தசைப்பிடிப்பு அற்ற நிலையில் நடந்தனர். அங்ஙனம் நடக்கும்போது அவர்களின் உள் எலும்புகள் அசைந்து தெரிந்தன. அவர்கள் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும் நிலையினர். பழி வாங்கும் எண்ணம் இல்லாதவர்கள். நூல்களைக் கற்று மெய்ஞ்ஞானம் உடையவர்கள். கற்றோர்க்கு வரம்பானவர்கள், காமத்தையும், கோபத்தையும் துறந்தவர்கள். துன்பங்களைப் கடந்தவர்கள். அவர்கள் முருகனிடத்தே முன்னே செல்லுகின்றனர். அவர்கட்குப் பின்னே கந்தர்வர்கள் பாடி ஆடி வருகின்றனர்.
கந்தர்வப் பெண்கள் யாழை இசைக்கின்றனர். மென்மையான மொழி பேசும் இயல்பினர். நோய் இல்லாது அமைந்த உடம்பினை உடைய கந்தர்வப் பெண்களும் ஆண்களும் இணைந்து பாடி வருகின்றனர். முனிவர்கள் முன்னே செல்லக் கந்தர்வர்கள் இசைபாடிப் பின்னே செல்லத் திருமால் முதலான தேவர்கள் அவர்களின் பின்னே செல்கின்றனர். கருடக் கொடியுடைய திருமால் முருகனைக் காண வருகின்றார். திருமாலின் பின்னே சிவபெருமானும் முருகனைக் காண வருகிறார். உமாதேவியை இடப்பாகத்திலும் ரிஷபத்தைக் கொடியிலும் கொண்டவர் சிவபெருமான். இமையா முக்கண்களை உடையவர். திரிபுரங்களை எரித்தவர். அனைவருக்கும் செல்வங்களை வழங்கும் ஈஸ்வரன் ஆவார். இத்தகைய சிவபெருமானுக்குப் பின்னே இந்திரன் வருகின்றான். அவன் நூறு யாகங்கள் செய்து இப்பதவியைப் பெற்றவன். நான்கு தந்தங்களையும், பிரமாண்டமான துதிக்கைகளையும் உடைய ஐராவதத்தின் பிடரியில் அமர்ந்து வருகின்றான். இங்ஙனம் அனைவரும் முருகனைக் காண வருகின்றனர். ஐராவதம் - ஆயிரம் தந்தங்கள் கொண்ட இந்திரனின் யானை. ஐராவணம் - இரண்டாயிரம் தந்தங்கள் கொண்ட சிவபெருமானின் யானை.
இந்திரன், யமன், வருணன், குபேரன் என்னும்
நால்வரால் இந்த உலகம் காக்கப்படுகிறது. ஒன்றுபட்ட
கொள்கை உடைய அரன், அரி என்போர் பிரமனின் சாபத்தைக் களையுமாறு வேண்டத் திருஆவினன் குடிக்கு முருகனைக் காண வருகின்றனர். தேவர்கள் சூரியனைப் போல ஒளி விளங்கும் தோற்றம் உடையவர்கள். ஏகாதச ருத்திரர் என்னும் பதினொருவரும், துவாதச ஆதித்தர் என்னும் பன்னிருவரும், அஷ்டவசுக்கள் என்னும் எட்டு பேர்களும், அஸ்வினி, தேவர் என்னும் இருவரும் ஆக முப்பத்து மூன்று தேவர்களும் நான்கு வகையினராக முருகனைக் காண வருகின்றனர். பதினெண் கணத்தவர்கள் ஆகி உயர்நிலை பெற்ற தேவர்களும் முருகனைக் காண வருகின்றனர். அனைவரும் ஒன்று கூடி முருகனை வழிபடத் திரண்டுள்ளனர். ஆகாயம் வழியாக வந்து பிரமனின் பொருட்டு முருகனைத் தரிசித்து நின்றனர். இங்ஙனம் தேவர்கள் வழிபடுமாறு முருகன் தெய்வானையுடன் திருஆவினன் குடியில் தங்கியுள்ளான்.
இக்கருத்து விளக்கத்தினை நக்கீரர், தம்
திருமுருகாற்றுப் படையில் விளக்குகின்றார்.
“சீரைதைஇய உடுக்கையர்; சீரொடு
வலம்புரி புரையும் வால்நரை முடியினர்;
மாசற இமைக்கும் உருவினர்; மானின்
உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்
என்பெழுந்து இயங்கும் யாக்கையர்; நண்பகல்
பலவுடன் கழிந்த உண்டியர்; இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தினர்; யாவதும்
கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத்
தாம் வரம்பாகிய தலைமையர்; காமமொடு
கடுஞ்சினம் கடிந்த காட்சியர்; இடும்பை
யாவதும் அறியா இயல்பினர்; மேவரத்
துனியில் காட்சி முனிவர் முற்புகப்
புகைமுகந்து அன்ன மாசில் தூவடை
முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச்
செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின்.
நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்
மென்மொழி மேவலர் இன்னரம் புளர
நோயின் றியன்ற யாக்கையர்; மாவின்
அவிர்தளிர் புரையும் மேனியர்; அவிர்தொறும்
பொன்உரை கடுக்கும் திதலையர்; இன்நகைப்
பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல்
மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்கக்
கடுவோடு ஒடுங்கிய தூம்புடை வால் எயிற்று
அழல்என உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பாம்பு படப்புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப்
புள்ளணி நீள்கொடிச் செல்வனும் வெள்ளேறு
வலவயின் உயரிய பலர்புகழ் திணிதோள்
உமை அமர்ந்த விளங்கும் இமையா முக்கண்
மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்
நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய
உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்
பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக
ஏழுறு ஞாலம் தன்னில் தோன்றித்
தாமரை பயந்த தாவில் ஊழி
நான்முக ஒருவன் சுட்டிக் காண்வரப்
பகலில் தோன்றும் இகலில் காட்சி
நால்வேறு இயற்கைப் பதினொரு மூவரொடு
ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர்
மீன்பூத்து அன்ன தோன்றலர்; மீன்சேர்பு
வளிகிளர்ந்து அன்ன செலவினர்; வளியிடைத்
தீஎழுந்து அன்ன திறலினர்; தீப்பட
உரும் இடித்து அன்ன குரலினர்; விழுமிய
உறுகுறை மருங்கில்தம் பெறுமுறை கொண்மார்
அந்தரக் கொட்பினர் வந்துடன் காணத்
தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள்
ஆவினன்குடி அசைதலும் உரியன்; அதா அன்ற”
இங்ஙனம் திருஆவினன்குடியில் சிவபெருமான் பெருமாள் உள்ளிட்ட அனைவரும் பிரம்மன் பொருட்டு வந்து முருகனை வேண்டினர் என்னும் கருத்து ஆழமாகச் சிந்திக்கத்தக்கது. நாம் நினைப்பதுபோல் திருஆவினன்குடி என்பது பழனியின் அடிவாரம் மட்டுமல்ல; முருகனின் அருள்பெற அஸ்திவாரமாக விளங்குவது. இந்த உணர்வில் பழனி செல்வோர்க்ள் திருஆவினன்குடியை வணங்குதல் வேண்டும்.
முருகப்பெருமான் அருணகிரிநாதரைத்
திருவண்ணாமலையில் தாங்கிப்பிடித்தார் என்பது
மட்டுமல்லாமல், அருணகிரிநாதரின் நாவில் சடாச்சர
மந்திரத்தை எழுதி அருளினார் என்பதும், சும்மா இரு
சொல்லற என்று உபதேசித்து அருளினார் என்பதும்
ஜெபமாலை தந்த குருநாதர்: அவரைப் பல இடங்களுக்கு வரச்சொல்லி அருள் வழங்கினார் என்பதும் அருணகிரிநாதரின் வரலாற்றுச் செய்திகளாகும். அதே நேரத்தில், திருஆவினன்குடியில் முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கு ஜெபமாலை வழங்கியருளினார் என்பது நினைந்து நினைந்து மகிழத்தக்கது. அருணகிரிநாதரின் ஏடுகள் முருகப்பெருமானின் திருவடிப்பட்டவை என்பதும் அருணகிரிநாதரின் வாக்கு. ஜெபமாலை பெற்ற நிலையை அருணகிரிநாதர் கீழ்வரும் பாடலில் அருளிச் செய்கின்றார்.
- அபகார நிந்தைபட் டுழலாதே
- அறியாத வஞ்சரைக் குறியாதே
- உபதேச மந்திரப் பொருளாலே
- உனை நானினைந்தருட் பெறுவேனோ
- இபமாமுகன் தனக் கிளையோனே
- இமவான்மடந்தையுத் தமிபாலா;
- ஜெபமாலை தந்த சற் குருநாதா
- திருவாவினன்குடிப் பெருமாளே!
முருகனிடம் அருணகிரிநாதர், சில வேண்டுகோள்களை வைக்கிறார். இவ்வேண்டுகோள்கள் எனக்குக் கிடைக்கும் நிலையில், என் தகுதியறிந்து குருநாதா எனக்கு அருள் செய்வாயாக! என்று பிரார்த்திக்கின்றார். முருகனின் அருளைப் பெறுவோர் இத்தகுதிகளைப் பெற்றிருக்கவேண்டும். 1. தீமைகள் செய்யாத மனிதம், 2. அதனால் வரும் பழிகளுக்கு ஆளாகாத நிலையும். 3. நன்நெறி அறியாத வஞ்சகர்களுடன் இணங்குவதைக் கருதாத உணர்வும் முருகா! என் நிலை என்பதை நீ திருவுள்ளத்தில் அடக்கி, எனக்கு உபதேசக் குருவாக எழுந்தருள்வீராக என்று வேண்டினார். முருகன், திருவுள்ளம் மகிழ்ந்து ஜெபமாலையும் தந்து சற்குருநாதராகவும் எழுந்தருளிவந்து அருள் செய்தார் என்பதுதான் அருணகிரிநாதரின் தனிச்சிறப்பு நிலையாகும். இப்பாடலை, நாளும் நாம் ஓதி ஓதி இந்நிலை பெற்று முருகனின் அருளைப் பெற முயல்வோமாக
★★★
Saint Arunagirinathar born in approximately AD1330 in the temple city of Tiruvannamalai is identified with the number of excellent stories about the Arunachaleswarar temple. He is probably the peak ,the greatest language communicator in the Tamil language among the Tamil poets. His songs reveal immense wealth of vocabulary, most of the sounds are , I suspect sacred.“The kambathu Ellayanar sannathi Murugan temple in the fifth pragaram of the Arunachaleswara temple marks the actual spot were Lord Murugan appeared to Arunagirinathar, who was without doubt is the greatest Muruga Bhakta . He composed Thirupugazh - praising god - as well as other compositions. It is practically impossible to explain the love expressed in Sri Arunagirinatha' s works and the impact he has made on the cultural heritage of Southern India.
- Iswari Kamalabaskaran
(Founder Member and Trustee London Highgate Murugan Temple)

