திரு. கே எஸ். சந்திரசேகரன், ஓம் முருகாச்ரமம், சென்னை-33.
“மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்” - என்று பறைசாற்றுகிறது கந்தபுராணம். விறகினுள் தீயினைப் போலும், பாலினுள் படுநெய் போலும் மறைபொருளாக மறைந்து நிற்கின்றான் இறைவன். மனிதன் வீடுபேறு என்னும் உயர்நிலையை எய்துவதற்கு சமயங்களும் மதங்களும் உறுதுணையாக இருத்தல் அவசியமாகும். அறநெறிகளும், இறை பக்தியும், மாண்பும் தழைத்தோங்கிய நம் செந்தமிழ் நாட்டினில் சித்தர்களும், நாயன்மார்களும், ஆழ்வார்ப் பெருமக்களும், சான்றோரும், சங்கப் புலவர்களும், ஏனையோரும் இங்கு அவதரித்து இறையுணர்வையே, திருப்பணியையே உணவாகவும், சுவாசமாகவும் கொண்டு இறைத்தொண்டாற்றி மக்களை செம்மைப்படுத்தி தூய இறைநெறியில் ஈடுபடுத்தி அவர்கள் நற்குடிமக்களாக வாழ்வதற்கு அடித்தளமிட்டுத் தந்துள்ளனர்.
அருணகிரிநாதர் பதிநான்காம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்ததாகச் சொல்லப்படும் திரு. அருணகிரிநாதர் பற்றிய வரலாற்றுக்கு ஆதாரப்பூர்வமான சான்றுகள் ஏதும் இல்லை என்பதாகக் கூறப்படுகிறது. அங்கொன்றும், இங்கொன்றுமாகக் கிடைத்த சில குறிப்பேடுகளையும், செவிவழிச் செய்திகளையும், அவர் பாடிய திருப்புகழ் பாக்களையும் ஆதாரமாகக் கொண்டே அவருடைய சரித்திரம் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. இவ்வகையில் அவர் ஒரு சிறந்த சைவ மரபைச் சார்ந்த குடும்பத்தில் தோன்றியவராக இருக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது. ஆராய்ச்சி வல்லுனர்களால் எழுதப்பட்ட இப்படிப்பட்ட சரித்திரமே இன்று பொதுவாக தழுவிச் சொல்லப்படுகிறது.
இயற்றிய நூல்கள் மற்றும் சிறப்பு
முருக பக்தியைப் பற்றி பல தமிழ் நூல்கள் பல மகான்களால் இயற்றப்பட்டிருந்தாலும் அவற்றுள் சிறப்பானதாகவும், சற்று வித்தியாசமாகவும், தனிச் சிறப்புடையதாகவும் காணப்படுவது அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ் பாக்கள். கந்தரனுபூதி, கந்தரலங்காரம், கந்தரந்தாதி போன்றவை இலக்கண வரைமுறைக்குள் கட்டுப்பட்டிருந்தாலும் அவர் இயற்றிய திருப்புகழ்ப் பாக்கள் சந்தப் பாடல்களாக அமைந்திருக்கின்றன. இது மற்ற நூல்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது. பலவிதமான தாளக் கட்டுகளில் சந்தப் பாடல்களாக அமைந்திருப்பதைக் காணும்பொழுது அருணகிரிநாதர் தாளக் கலையில் (லயம் என்று சொல்லப்படுவது) புலமை பெற்றவராக இருந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது. அந்த வகையில் அவரைச் சிலர் 'திண்டிம கவி' என்றும் சிறப்பித்துக் கூறுகின்றனர். தாள வகைகளில் 72 மேளகர்த்தா தாளங்கள் உள்ளதென்றும், சிலர் மொத்தம் 108 தாள வகைகள் இருப்பதாகவும் கூறுகிறார்கள். அருணகிரிநாதரின் சந்தப் பாடல்கள் இந்த எல்லா தாள வகைகளிலும் புனையப்பட்டிருக்கிறது என்றும் ஆராய்ச்சி வல்லுனர்கள் கூறுகிறார்கள். மேலும் தமிழும் சமஸ்கிருதமும் கலந்து மணிப்பிரவாள நடையில் அமைந்திருக்கும் பாடல்களைக் காணும்பொழுது அவர் வடமொழிப் புலமை பெற்றவராகவும், சிவஞான போதத்தைப் பற்றி பல இடங்களில் கூறியிருக்கும் கருத்துக்களைக் காணும்பொழுது அவர் மறைநூல்களை நன்கு கற்றுணர்ந்தவராகவும் காணப்படுகிறார். சில பாடல்களில் “சபாஷ் ..', “சலாமிடு..”, “ராவுத்தனே..” போன்ற அயல்மொழி வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன. மேலும், பல பாடல்களில் காணப்படும் சைவ, வைணவ, சாக்த எடுத்துக்காட்டுகளைக் காணும்பொழுது அவரை மொழி, சமய பேதங்களைக் கடந்த ஒரு மாபெரும் ஆன்மீக ஞானியாக அறிய முடிகிறது. முருகப்பெருமானிடம் தீவிர பக்தி கொண்டிருந்த அவருக்கு அஷ்டமா சித்திகளும் எளிதில் கைவரப் பெற்றதை அநேக இடங்களில் சுட்டிக்காட்டி அவர் ஒரு மகா சித்தபுருஷர் என்பதை நம்மிடம் அறிய வைக்கிறார்.
மரபு
மரபு என்ற சொல்லுக்கு பழமை, முறைமை இலக்கணம், வம்சம், தன்மை, மேம்பாடு, வழிபாடு என்று பல பொருள்கள் சொல்லப்படுகின்றன. இவற்றுள் 'வழிபாடு' மற்றும் 'முறைமை இலக்கணம்” என்ற பொருள் அருணகிரிநாதர் மரபுக் கவிதையாக கருதப்படும் மேலே கூறப்பட்ட அவருடைய நூல்களுக்கு சாலப் பொருந்தும் என்று தோன்றுகிறது.
சைவம்
சிவனைப் பரம்பொருளாகக் கொண்டு வழிபடும் சமயம் “சைவம்” என்று வழக்கில் உள்ளது. “சிவம்” என்கின்ற சொல்லிர்க்கு “நன்மை” என்றும், “முக்தி” என்றும் அகராதி விளக்கமளிக்கிறது. கடல்போல ஆழ்ந்து விரிந்து பரந்துபட்டது சைவ மார்க்கம். கன்னியாகுமரி தொடங்கி காசுமீரம் வரை சைவ வழிபாடு பல்வேறு வகைகளில் அமையப்பெற்றிருந்தது. திருமூலசித்தர் சைவக் கோட்பாட்டை “அன்பே சிவம்” என்று அனைவரும் புரிந்துகொள்ளும் வகையிலே எளிமையாகக் கூறியுள்ளார்.
அருணகிரிநாதரின் இறைத் தத்துவமும் கோட்பாடும்;
தெய்வம் ஒன்றே, அதுவே பலவாறாக பாவிக்கப்பட்டு உலகில் பரவப்படுகிறது என்பது ஒரு பொதுவான ஆன்மீகக் கருத்து.
“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும், நன்றே நினைமின்....” என்கிறார் திருமூலர்
மறைகள் புகழ்வது ஒன்றேயான அந்த பரம்பொருளையே. பரம்பொருளுக்கு உருவம் கிடையாது, பெயர்களற்றது, குணங்களற்றது என்பதாக பலவிதமாகக் கூறுகிறது மறைகள். புராணங்களும், இதிகாசங்களும், ஆறுசமயங்களும் அவற்றின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு இணங்க ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை உயர்வான பரம்பொருளாகக் கூறி பெருமைப் படுத்துகின்றன. அந்த வகையில் திரு.அருணகிரிநாதர் தன் படைப்புகளில் “முருகக் கடவுளை” எல்லாம் வல்ல பரம்பொருளாகவே பாவித்து அவரைப் பெருமைப்படுத்தும் வகையில் மற்ற தெய்வங்கள் அவரை வணங்குவதாகவும், புகழ்வதாகவும் மற்றும் அந்த தெய்வங்களின் பெருமைகளைக் கூறி அவற்றுடன் உறவுபடுத்தியும் பாடல்கள் அமைத்துள்ளார். இவர் பாடல்களில் புராணங்கள், இதிகாசங்கள், நாயன்மார்கள் சரித்திரம் ஆகியவற்றிலிருந்து எடுத்துக்காட்டுகளும் மிகுதியாகவே இடம் பெற்றுள்ளன. குறிப்பாக பரம்பொருளைப் பற்றிய உபநிடதங்களின் கருத்துக்கள் நேரிடையாக பொருள்படுத்தி பேசப்படுகின்றன. இது மிகவும் வியக்கத்தக்க செய்தியாகவும், வடமொழியில் “ஆத்மவித்யை” என்று சொல்லப்படுவதாகிய ஆன்மீக சாதனையில் திரு.அருணகிரிநாதர் மிகவும் உயர்ந்த நிலையை அடைந்தவராகவும் தெரியவருகிறது.
பரத்தில் விளங்கும் இறைவனே நம் இதயத்தினுள்ளும் உறைகிறான் என்றும் அவரை உள்ளே தேடி அறியவேண்டும் என்றும் மறை நூல்களும் குறிப்பாக உபநிடதங்களும் கூறுகின்றன. இக்கருத்தை 'உள்ளக்கண் நோக்கும் அறிவுறி, உள்ளத்தை நோக்க அருள்வாயே ‘ என்று தன் பாடலில் கூறுகின்ற அருணகிரிநாதர் “சங்கைக்கத்தோடு சிலிகிடும்......” என்ற பட்டாலியூர் திருப்புகழில் சமயச் சண்டைகளையும், அர்த்தமற்ற சடங்குகளையும் கடுமையாக விமர்சிக்கிறார். ‘உருவெனவும் அருவெனவும் உளதெனவும் இலதெனவும் உழலுவன பரசமய கலை ஆரவாரமற..” (சீர்பாத வகுப்பு) என்றும் ‘ஆரவார மாறாத நூல் கற்றிடு நாயேன், ஆவிசாவியாகமல் நீசற்றருள்வயே‘ (பேரவாவரா வாய்மை-திருப்புகழ்) என்று சமயச் சண்டைகளைச் சாடி இறைவனை அறிய மன ஒருமைப்பாடு முக்கியம் என்பதையும் தெளிவிக்கிறார். மேலும், மன ஒருமைப்பாட்டை அடைய க்ரியா யோகங்கள் பயன்படா என்று கூறி “உயர்கருணை புரியும் இன்பக் கடல் மூழ்கி, உனை எனதுள் அறியும் அன்பைத் தருவாயே” என்று சொல்லி இறைவனை அறிய அன்பின் வழி காட்டுகிறார்.
சமரச நன்னெறி
அருணகிரிநாதரின் படைப்புகளில் பாட்டுடைத் தலைவனாக முருகப்பெருமானை சித்தரித்த போதிலும் பெரும்பாலான பாடல்களில் அவர் சுத்த சிவஞான போதத்தைப் பற்றி வெகுவாகப் பேசியுள்ளார். “அரகர சிவாயவென்று தினமும் நினையாமல் நின்று, அறுசமய நீதியொன்றும் அறியாமல்....” (கருவினுருவாகி - பழனி திருப்புகழ் ) என்றும் “.....நல் சுருதியின், முறையோடே சந்தித்து அரகர சிவசிவ சரணென, கும்பிட்டு இணையடி அவையென் தலைமிசை, தங்க புளகிதமெழ எனிருவிழிபுனல் குதிபாய....” (சுவாமிமலை திருப்புகழ்) என்றும் கூறி ஆறுமுகச் சிவனாம் கந்தப் பெருமானை சிவனின் வடிவமாகவே பாவித்துப் பாடியுள்ளார். “ஐந்து பூதமும் ஆறுசமயமும்..................விந்து நாதமும் ஏகவடிவம், அதன் சொரூபமாக விளைவது சிவயோகம்..” என்று விராலிமலைத் திருப்புகழிலும்; ‘ ஓலமறைக ளறைகின்ற ஒன்றது............ போத அருவசுருபம் ப்ரபஞ்சமும், ஊனுமுயிரும் முழுதும் கலந்தது..” ஆகிய பரம்பொருளை “..... சிவஞானம் சாலவுடைய தவர் கண்டுகொண்டது.....” என்று சிவஞான போதத்தின் பெருமையை திருவானைக்கா திருப்புகழிலும் சிறப்பித்துப் பாடியிருப்பது திரு.அருணகிரிநாதர் சைவ சமயக் கோட்பாடின்மீது கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாட்டைக் காட்டுகிறது. இதைப்போல் பல இடங்களில் சைவ மரபு பற்றிய கருத்துக்களும், குறிப்பாக பெரியபுராணம், திருவிளையாடற் புராணம் ஆகியவற்றிலிருந்து மேற்கோள்களும் காட்டப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி பெரும்பாலான திருப்புகழ்ப் பாக்களில் சிவனுடைய பெருமைகளையும், திருவிளையாடல்களையும் அழகுற விளக்கி, அவ்வாறே திருமாலின் அவதாரங்களைப் பற்றிய குறிப்புகளையும், இதிகாசங்களாகிய இராமாயண, மகாபாரதச் செய்திகளையும் நிகழ்வுகளையும் பாங்குற எடுத்தியம்புகிறார். அவருடைய மேன்மையான கொள்கையாக விளங்குவது யாதெனின் சமயங்களுக்குள்ளே வேற்றுமையும், பகைமையும் காணாது இறை தத்துவத்தை அறிந்திட மனிதன் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் என்பதே ஆகும். இன்னும் இப்படிப்பட்ட சமய ஒற்றுமைக்கான பாடல்கள் அநேகம் திருப்புகழில் உள்ளன.
மேலே கண்டவாறு கருத்து ஆளுமை மற்ற எந்த நூல்களிலும் காணப்படாத ஒரு சிறப்பு அம்சம். இப்படிப் பல வகைகளில் மற்ற பக்தி நூல்களிலிருந்து தனித்து நிற்கும் அருணகிரிநாதரின் படைப்புக்கள் தனிச் சிறப்பு வாய்ந்ததாகக் காணப்படுகிறது. இப்படியாகத் தனக்கென்று ஒரு முறைமை இலக்கணம் வகுத்துக்கொண்டு அவரால் பாடப்பட்ட இவ்வகைப் படைப்புகளை “திரு.அருணகிரிநாதரின் தனித்துவ மரபு” என்றே கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
வாழ்க ஆன்மீகம் ! வாழ்க திருப்புகழ் ! வாழ்க அருணகிரிநாதர் புகழ்
சும்மா இரு என நீ சொல்லப் பொருள் ஒன்றும்
அம்மா அறிந்திலம் என்றுரைத்த- எம்மான்
அருணகிரிநாதன் அனுபவம் நாயேற்குக்
கருணை பொழி போரூரா காட்டு
— திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்

