செந்தமிழும் சிவநெறியும் நமது இரு கண்கள். தமிழராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இவ்விரண்டையும் பேணி வளர்த்தல் நமது தலையாயக் கடன்களாகும். இன்று நம் தமிழ் மக்கள் உலகெங்கும் பரவி வாழ்ந்து வருகின்றனர். தாம் வாழும் இடமெல்லாம் தமிழ் மணம் கமழச் செய்வதும் - சைவப்பயிர் வளர்ப்பதும் அன்னாரின் பெருவிருப்பமாக அமைகின்றன. “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்ற பாரதியின் கனவு நிறைவேறும் வகையில் இந்தியாவின் பிற மாநிலங்களிலும். கடல் கடந்து உலகெங்கும் இன்று தமிழும் - சைவமும் தழைத்தோங்கி வருகின்றன. இத்தகைய அரிய பணிகளை இயற்றுவோர் தமிழ்மக்களின் நன்றிக்கு உரியவர்கள்.
திருவண்ணாமலையில் அவதாரம் செய்த அருளாளர் அருணகிரி நாதப் பெருமானின் திருப்புகழ்ப் பாடல்களை பரப்பும் முகத்தானும் - தமிழுக்கு அவர் செய்த பெரும் பணியைப் போற்றுகின்ற வகையிலும் - நமது தமிழ் பண்பாடு - கலாச்சாரம் - பெருமைமிகு சைவநெறி போன்ற உயர்ந்த கருத்துக்களை கடந்த 70 ஆண்டுகாலமாக திருவண்ணாமலை நகரில் திருப்புகழ்ச் செம்மல் திருமிகு வ.தனுசு எம்.எஸ்.சி. அவர்கள் தலைமையில் இயங்கும் அருளாளர் அருணகிரிநாதர் பெருமானின் விழாவினை ஆகஸ்டு மாதத்தில் 14,15,16 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் சீரும் சிறப்புமாக கொண்டாடுவது நீண்ட வரலாற்றுப் பின்னணி உடையது ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டு “அருளாளர் அருணகிரிநாதர் மணிமண்டப அறக்கட்டளை” என்று ஓர் அமைப்பைத் தொடங்கி, அந்த அமைப்பிற்கு, திருமிகு. மா.சின்ராசு தலைவராகவும், திருமிகு. ப.அமேரசன் அவர்கள் செயலாளராகவும், திருமிகு. திருப்புகழ்ச் செம்மல் வ.தனுசு அவர்கள் பொருளாளராகவும் இருந்து பணியாற்றுகின்றார்கள். அவர்களின் சீரிய முயற்சியால் திருவண்ணாமலை மலை சுற்றும் வழியில் அருணகிரிநாதர் பெருமானுக்கு ஒரு மணி மண்டபம் பல கோடி செலவில் நிறுவி விரைவில் குடமுழுக்கு நன்னீராட்டு விழாவும் நடத்த முடிவு செய்துள்ளார்கள்.
அத்தருணத்தில் சைவ சமயம் - தமிழ் மனம் கமழும் அரிய விழா மலர் ஒன்றை வெளியிட்டுத் தமிழ் மொழிக்கும் - தமிழர்களுக்கும், அருளாளர் அருணகிரிநாதருக்கும் காணிக்கையாக்க விருப்பம் கொண்டு - கண்ணுக்கும் - கருத்துக்கும் விருந்தாக விழாமலர் அமைய வேண்டும் என்று விழாக்குழுவினர் தீர்மானித்து உள்ளனர். அம்முயற்சி வெற்றி பெற எளியேன் வாழ்த்துவதோடு அல்லாமல் ஒரு கட்டுரையும் இம்மலரில், அலங்கரிக்கவேண்டும் என்ற விழாக்குழுவினரின் விருப்பத்தினையும் நிறைவு செய்ய விழைகின்றேன். எல்லாம் வல்ல முருகப் பெருமானின் திருவருளாலும், எம்பிரான் அருளாளர் அருணகிரிநாதரின் கருணையினாலும், குறுகிய காலத்தில் இவ்வண்ணமலர் வெளிவரவுள்ளது மகிழ்ச்சி அளிக்கின்றது.
தமிழ் இலக்கியக்கண் கொண்டு பார்க்கும்போது முருகப்பெருமான் வழிபாட்டின் தொன்மையும் - பெருமையும் தெளிவாகப்புலப்படுகின்றன. “திராவிட நாகரிகத்தின் இறைநெறி வழிபாடே” என நம் முன்னோர்கள் கூறிச்சென்றுள்ளனர். சங்க இலக்கியங்கள் இதனை நிறுவ நமக்கு முற்றும் உதவவில்லை. முருகன், திருமால், காடுகிழாள் என்னும் கொற்றவை, பலதேவன், வழிபாடுகள் பற்றிய குறிப்புகளே அங்கே நிறைந்துள்ளன. மிகப் பழம்பாடல் தொகுப்பான பரிபாடலிலும் சரி, பத்துப்பாட்டின் கடவுள் வாழ்த்துபோல் முன்னிற்கும் திருமுருகாற்றுப்படையிலும் சரி, ஏனைய சங்க இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகளிலும் சரி, முருக வழிபாட்டைப் போல் வேறுவழிபாடுகள் விரித்துரைக்கப் பெறவில்லை. “சேயோன் மேயமைவரை உலகமும்” என்ற தொல்காப்பியர் காலம் தொட்டு முருகவழிபாடு இன்றுவரை தமிழ்நாட்டில் சிறந்தோங்கியே நிற்கின்றது.
வட ஆரியர்களின் கலப்பால் தமிழ் முருகன் சுப்பிரமணியனாக மாற்றப்பட்டு - வள்ளியம்மைக்குப் போட்டியாக ஒரு தெய்வயானை அம்மையையும் அவன் துணைவியாக ஆக்கப்பட்டனர் என்று அறிஞர் மயிலை சீனிவேங்கடசாமி கூறியதை நினைவு கூறுவோம். சங்க காலத்திலேயே இக்கலப்பு அமைந்தது. புராண வரலாறுகளிலும் புகுந்தன.
இக்கருத்தினை திருமுருகாற்றுப்படைத் தெளிவாக விளக்குகிறது. ஏனைய வழிபாடுகளில் இருந்து, சில காலம் முருகவழிபாடு தனித்து நின்றிருந்ததை விரும்பாது சைவ வழிபாட்டையும், முருக வழிபாட்டையும் ஒன்றாக்கி பாலம் அமைக்க முயன்ற முயற்சியினை கச்சியப்பரின் கந்தபுராணத்தில் தெளிவாகக்காண்கின்றோம். ஒட்டாது நின்ற வைணவத்தை முருக வழிபாட்டுடன் இணைப்பது மூலம் சைவத்தின் அருகில் கொண்டுவர முயன்ற அரிய முயற்சிக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் நம் அருளாளர் அருணகிரிப் பெருமான் ஆவார்.
திருப்புகழில் ஆழங்கால் பட்ட சான்றோர்கள், ஆய்வாளர்கள், நன்கு அறிந்து போற்றியவர்கள் அனைவர்க்கும் இந்த உண்மை புலப்படாது போகாது. சிவபாலனாகிய முருகப் பெருமானை அருணகிரி நாதர் “மாயோன் மருகன்” என்றும், “மாலோன் மருகன்” என்றும், பாடுவதிலே பெரு விருப்பம் உடையவராக விளங்கும் நுட்பத்தினை நாம் கண்டு ரசிக்கத்தக்கது நலம். பல பாடல்களில் இராமாவதாரம் மற்றும் கிருஷ்ணாவதாரச் செய்திகளே பெரிதாக விரிக்கப்பெறும். இறுதியில் இத்தகு பெருமானின் “முருகோனே” எனப் பாடல் நிறைவுறும். அருளால் அருணகிரிநாதரின் இந்த அரிய முயற்சி தமிழ் இலக்கிய வரலாறு மற்றும் சைவ சமய வரலாற்று ஆசிரியர்களாலே பெரிதும் பாராட்டப்படாமை வியப்பாக உள்ளது.
அருணகிரிநாதரின் திருப்புகழ், தமிழ் இலக்கிய வரலாற்றில் பல்வேறு முதன் முயற்சிக்கு துணை நிற்கும் அருமை நினைவில் வருகிறது. நூற்றுக்கணக்கான சந்தப் பாடல்களை விரிவாக வழங்கிய முயற்சியை அங்கே காண்கின்றோம். சந்தமும் - சொந்தமும் அருணகிரிநாதர் பாடல்களில் எல்லா இடங்களிலும் நாம் காணலாம். சந்தம் என்ற நிலை வரும்போது பிறமொழிக்கலப்பு தவிர்க்க இயலாத அறச்சிக்கலாக ஆகிவிடுகிறது. அருணகிரிநாதருக்கு முன் தமிழ் இலக்கியங்களில் இந்த அளவு வடசொல் கலப்பு நேரிடவில்லை. சில நன்மைகளை ஒட்டியே சில தீமைகளும் வருவது உலக இயல்பு.
முருகப்பெருமானுக்கு சூட்டப்பெற்ற பாமாலைகளுள் திருப்புகழே முதன்மையானது. தலங்கள், தோறும் சென்று சிவபிரானைப்பாடி மகிழ்ந்த தேவார ஆசிரியர்களுக்குப்பின், முருகனை அவ்வாறு பாடியநெறி அருணகிரிநாதரால் புதுபிக்கப்பட்டது. தேவாரப்பாடல் பெற்ற தலங்களுக்கு ஏற்பட்ட பெருமையும், புகழும் திருப்புகழ் பாடல் பெற்ற தலங்களுக்கும் அமைந்தமை நினைந்து நினைந்து மகிழத்தக்கது. திருமுருகாற்றுப்படையில் பேசப்பட்ட ஆறுபடை வீடுகளுக்கு இணையாக அருணகிரிநாதர் பாடிய தலங்கள் பல பெருஞ்சிறப்புப் பெற்று இன்றும் நிலவுவதை இவ்வுலகம் நன்கு அறியும்.
புல்லைக்காட்டி மாடுகளை ஈர்ப்பது போல், காமச்சுவைகாட்டி மனிதர்களை முருகன்பால் ஈர்க்கும் அழகிய உத்தி திருப்புகழ் பாடல்களில், நிறையவே உண்டு. சிருங்கார ரசம் சற்று அதிகம் போல் தோன்றினாலும், சிற்றின்ப நிறைவே பேரின்பம் என்ற தெளிவோடு நோக்கும் போது குறைவாக எண்ணத்தோன்றாது. இம்மையிலும் பிழைப்பது என எம்போல்வாரும் தெளிய நின்ற அப்பர்அடிகள், அப்பூதி அடிகள் வியப்பதுபோல் குற்றமும் - குறையும் உடையராய் சிற்றின்ப வயப்பட்டு சீரழிவாரும் முருகன் அடி போற்றினால் இம்மையிலேயே உய்யலாம் என்பதனை உலகுக்கு உணர்த்திய பெருமையால் அருணகிரிநாதர் புகழ் உயர்கிறது. இதற்கு குறிப்பாக மூன்று உதாரணங்களை, கந்தபுராணப் பாடல் மூலமும், சுந்தரரின் திருப்பாட்டு மூலமும், மணிவாசகப்பெருமானின் பாடல் மூலமும் நாம் தெளிவு பெறலாம்.
இதோ அந்தப் பாடல்கள் உங்கள் பார்வைக்கும் .
- “தீயவை புரிந்தாரேனும் குமரவேள் திருமுன் உற்றால்
- தூயவராகி - மேலைத்தொல்கதி அடைவர் – என்கை
- ஆயவும்வேண்டும் கொல்லோ? – அடுசமர் அந்நாள் செய்த
- மாயையின் மகனும் அன்றோ? வரம்பிலா அருள் பெற்று உய்ந்தான்”
- கச்சியப்பசிவாச்சாரியார்
- “நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன் நாவினுக்கு அரையன் நாளைப் போவானும்
- கற்றசூதன் நற்சாக்கியன் சிலந்தி கண்ணப்பன் கணம்புல்லன் என்று இவர்கள்
- குற்றம் செய்யினும் குணம் எனக் கருதும் கொள்கை கண்டு நின் குறைகழல் அடைந்தேன்
- பொற்றிரள் மணிக்கமல மலரும் பொய்கை சூழ் திருப்புங்கூர் ஊருளானே”.
- சுந்தரர்
- “புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ”
என்ற மாணிக்கவாசகர் திருவண்ணாமலைத் திருத்தலத்தில் பாடிய திருவெம்பாவைப் பாடல் மூலமாகவும் அடியார்கள் விருப்பத்திற்கு எளிவந்து நிற்கும் முருகப்பெருமானின் கருணைக்கு அருணகிரியார் வாழ்வு ஓர் உதாரணம்.
திருப்புகழ் படிக்குமவர் இப்பனுவலை இருப்பு அவல் என்பர். காரணம் திருப்புகழ்பாட்டு மிடுக்கால் வந்தது – வாக்கிற்கு அருணகிரி என்பர். அது ஆயிரத்தில் ஒன்று. திருப்புகழ் என்ற தொகுப்பில் கந்தர் அலங்காரமும் - கந்தர் அநுபூதியும், இணைகின்றன. பக்தி ஞான வைராக்கியத்தால் திருப்புகழ் மிளிர்கின்றது.
திருப்புகழ் படிப்பவர் சிந்தை வலுவாலே ஒருத்தரையும் மதிப்பதில்லை உந்தன் அருளாலே என்ற வைராக்கியம் தரும் நூல் திருப்புகழ் பனுவல். நூலின் சொல்லாட்சி காரணமாகத் திருப்புகழைக் கற்பார் தொகை இன்று அருகிவருகிறது. பலபாடல்களுக்கு தெளிவாக விளக்கம் தரும் வாரியார் சுவாமிகள் போன்ற சிலரும் இன்று இல்லை. புலவர்கள், கவிஞர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பலரும் கூட இதில் இரண்டொருபாடலும் மனப்பாடம் இல்லாமை பெரும்குறை. முறையான உரைகளோடு இதனை எளிமைப்படுத்தி வழங்குவது தமிழ் அறிஞர் பெருமக்களின் கடமையாகக் கருதவேண்டும். இம்முயற்சி வருங்கால இளைய சந்ததியினருக்கு நன்மை பயக்கும்.
திருப்புகழின் திறம் தெரிந்து தெளிந்து, நாம் அனைவரும் இதனை போற்ற வேண்டும். தேவாரப்பாடல்களுக்குப் பிறகு தமிழில் தோன்றிய சிறந்த இசைப் பாடல்களான திருப்புகழிற்கு உரிய மதிப்பளித்தல், அனைவருக்கும் உரியது. திருப்புகழ் உரியவாறு சந்த இசையோடு அறிமுகப்படுத்தப்படுமானால் அதனால் விளையும் பயன்கள் பெரிதாகும்.
அருளாளர் அருணகிரிநாதர், முருகப்பெருமானின் அருளைப்பெற்றவர். உண்மை உணர்ந்த ஞானி. இந்த தமிழகமும் தமிழும் புனிதம் அடைய திருப்புகழைக் பாடிக் கொடுத்த மகாபெரியவர் ஆவார். நமது மக்களுக்கு அஞ்ஞான இருள் அகலப்பெற்றது உள் ஒளியான அருட்பெரும்ஜோதி எனப்போற்றும் சுயம்பிரகாச மயமான தனது ஆன்மாவை சுப்ரமண்யப்பிரம்மம் என்று உணர்ந்தவரும், புனிதமே உருவாக பாரத தேசத்தில் தெய்வங்கள் போற்றும், தமிழகத்தில் குறிப்பாக திருவண்ணாமலைத் திருத்தலத்தில் பிறந்த அருளாளர் அருணகிரிப்பெருமாள் உலகமகா குருவும் ஆவார். அவர் முருகப்பெருமானிடம் வேண்டிப்பெற்றது முருகனே குருவாக வந்து அருளவேண்டும் என்பதே ஆகும். அதனைக் கந்தர் அனுபூதியில் இறுதிப் பாடல் மூலமாக நமக்கு வழிகாட்டியுள்ளார்.
“உருவாய் - அருளாய் - உளதாய் - இலதாய்
மருவாய் - மலராய் - மணியாய் - ஒளியாய் கருவாய் - உயிராய் - கதியாய் - விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே”
உயிர்கள் அனைத்துக்கும் நான்கு பொருள்கள் மிக மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. அவை மாதா, பிதா, குரு, தெய்வம். இந்த நான்கில் குருவின் கருணையினால் இறைவனின் திருவருளைப்பெறலாம். இது முடிந்த முடிவாகும் - இதனைத் திருமூலரும், திருமந்திரப் பாடல் மூலமாகத் தெளிவு படுத்தி உள்ளார்
“குருவே சிவம் என்று கூறினன் நந்தி
குருவே சிவம் என்பது குறித்து ஓரார்.
குருவே சிவனுமாய் - கோனுமாய் நிற்கும்
குருவே உரை உணர்வு ஆற்றதோர் கோவே”
-திருமூலர்
சைவசித்தாந்தத்தில் சிவம் என்பது பதி; சக்தி என்பது உயிர்; காந்தன் அல்லது கந்தன் என்பது உலகம். ஒருவன் உலகநிலைகளை அவற்றின் தோற்றம் - மாற்றங்களைப் பற்றிய தெளிவு பெறப்பெற உயிர் அனுபவமும் இறை அனுபவமும் ஏற்படும். அதற்குரிய அடிப்படையாகவே கந்தனை வழிபடும் உருவவழிபாடு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த உருவ வழிபாட்டுத் தத்துவத்தை விளக்கும் வகையில் அருணகிரிநாதர் கந்தரலங்காரத்தில் ஒரு பாடலில் அமைந்துள்ளதனை ஆழ்ந்து - சிந்தித்தால் தெளிவு பெறலாம்.
“சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டுவெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ்நூல் விரித்தோனை - விளங்குவள்ளிக்
காந்தனைக் கந்தக் கடம்பனை - கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வு இல்லையே”
கந்தப்பெருமானின் இயல்பினை நினைந்து நினைந்து அதனோடு ஒன்றுபட ஒன்றுபட எல்லாவற்றையும் ஒன்றெனக் காணும் உணர்வு ஏற்படும். இது சமநிலைநோக்கு அனுபவம் ஆகும். ஆகவே முருகனை குருவாகக் கொண்டு வழிபடுவோம் - வாழ்வில் வளமும், நலமும் பெற்று உய்வோம். அருளாளர் அருணகிரிநாதர் புகழ் ஓங்குக! இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை. வாழ்க வையகம் - வளர்க திருப்புகழ் நெறி.
★★★
அருணகிரிநாதர் இவ்வுலக மாயையுட்பட்டு வருந்தும் ஆன்மாக்கள் நன்னெறியைக் கடைபிடித்து ஈடேற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் உலகத்துள்ளீர் ஈதல் எனும் அறத்தை மறவாது செய்யுங்கள்; அப்போது உண்மைப் பொருள் தானே விளங்கும்; அப்பொருள் விளக்கமுற அதனின்றும் உண்மை இன்பம் புலப்படும்; அவ்வின்பம் பெருகப் பெருக இருவினை, மும்மலம் ஆகியவை ஒடுங்கி மெய்வீடு கிடைக்கும் என திருப்புகழில் விளக்கிக் காட்டியுள்ளார். மேலும் திருப்புகழ்ப் பாடல்களை நியமமுடன் ஓதுவார்க்கு அட்டமா சித்திகளும் உண்டாகும்; துன்பங்கள் விலகும்; வறுமையும் பகையும் நீங்கும்; வேதம் முதலான எல்லா நூல்களையும் கற்ற பயன் உண்டாகும்; சாந்தமும் நல்லறிவும் உண்டாகும்; நோய்கள் நீங்கும்; திருமணம் நடைபெறும்; சுக வாழ்வு கிடைக்கும்; இசை அறிவு பெருகும்; திருப்புகழ்க் காலத்திலிருந்த பழக்கவழக்கங்களை அறியமுடியும்; முருகன் தல சிறப்புகளைத் தெரிந்து கொள்ள முடியும்.
— வி.சி. சசிவல்லி

