திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, கந்தர் அந்தாதி, திருவகுப்பு, திருவெழுகூற்றிருக்கை முதலானவை முருகப்பெருமானுக்கு உகந்தவை. இவற்றை இயற்றி முருகன் திருவருள்பெறத் துணைநின்றவர் அருணகிரிநாதர்.

அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் கி.பி. 1370இல் தோன்றி 1450 வரை வாழ்ந்தவர். முருகப் பெருமானின் அருளை எண்ணி உருகியபடியே முருக பக்தி பெருகி அறுபடை வீடுகளுக்கும் சென்று அருள் வேண்டிப் பாடியதோடு வயலூர் உள்ளிட்ட எண்ணற்ற முருகன் திருத்தலங்களுக்கும் சென்று முருகன் புகழைப் பாடி வரலானார். முருகன் புகழை இவ்வாறு பாடியதாலேயே அவர் பாடிய வண்ணப் பாடல்கள் 'திரு' என்ற அடைமொழி பெற்று 'திருப்புகழ்' என்று வழங்கப் பெற்றது. இதனை,

“யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும்

தாமே பெற வேலவர் தந்ததனால்” (கந்தர் அனுபூதி 17)

வந்தது என்று அருணகிரியார் குறிப்பிடுகிறார்.

முருகவேள் பன்னிரு திருமுறைகளில் முதல் பத்து திருமுறைகள் அருணகிரிநாதர் எழுதியவை.

அருணகிரிநாதர் கூறும் மெய்ப்பொருள்

மனிதனின் பகுத்தறிவு, உள்ளுணர்வு, செயலாற்றும் திறன், ஐம்பொறிகள் அனைத்திற்கும் அப்பாற்பட்ட ஏதோஒரு உயரிய சக்தி இருக்கவேண்டும். அதை எவ்வாறு உணர்வது? எப்படி எடுத்துக் கூறுவது? என்பது இயலாது. இந்தப் பேருண்மையைத் திருவள்ளுவர் 'மெயப்பொருள்' என்கிறார். மெய்ப்பொருள் பற்றிய ஞானத்தைப் ‘பதிஞானம்’ என்று சைவ சமயத்தினர் அழைக்கின்றனர்.

யாரும் கண்டறியாத இந்த மெய்ப்பொருள் குறித்து மாணிக்க வாசகர்,

“ஒருநாமம் ஓர் உருவம் இல்லார்க்கு ஆயிரம்

திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ” என்று பாடுகிறார்.

இதே கருத்தை அருணகிரிநாதர் தமக்கே உரியமுறையில்,

“உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!”

என்று கந்தர் அனுபூதியில் குறிப்பிடுகிறார்.

இறைவனிடம் பொறுப்பை ஒப்படைத்த அருணகிரியார்:

பக்தர்கள் பெரும்பாலும் இறைவனைத் தொழும்பொழுது எனக்கு இதுவேண்டும்; அது வேண்டும் என்றுதான் கேட்பார்கள். அருட்செல்வம் வேண்டுமென்போர் மிகவும் குறைவே. ஆனால் நம் அருணகிரிநாதர், ‘என் தகுதிக்கு ஏற்ப வரம் கொடுக்கும் முடிவை இறைவா நீயே எடுத்துச் செய்யவேண்டும்’ என்கிறார். இதனை

“இறந்திட்டுப் பெறவே கதியாயினும்
இருந்திட்டுப் பெறவே மதியாயினும்
இரண்டில் தக்கதுஓர் ஊதியம்நீ தர இசைவாயே” (திருப்புகழ் 1274)

என்ற பாடலால் தெளிவுபடுத்துகிறார்.

அருணகிரியாரின் அறிவுரை:

அருணகிரிநாதர் இளமைப் பருவத்தில் மூவாசைகளையும் (மண், பெண், பொன்) அனுபவித்துக் கழித்தவர். அதனால் நோய்வாய்பட்டு பெரும் துன்பத்திற்கு ஆளானவர். முருகப் பெருமான் அருளால் பிணி நீங்கி வண்ணம் பாடும் வல்லமை பெற்றவர்.

அருணகிரிநாதர், மற்றவர்கள் தன்னைப் போல் தீயவழிகளில் சென்று துன்பப்படுவதைத் தவிர்க்க, அளவுக்கு மீறிய இன்ப நுகர்ச்சியால் ஏற்படும் விளைவுகளை சந்தப்பாக்களில் எழுதி வைத்தார். இக்காலத்தில் மக்கள் அவருடைய அறிவுரையைப் பின்பற்றி நடக்க முயற்சிக்க வேண்டும்.

“தொந்தி சரிய மயிரே வெளிர நிரை
தந்தம் அசைய முதுகே வளைய - இதழ்
தொங்க ஒருகை தடிமேல்வர மகளிர் - நகையாடி” (திருப்புகழ் 813)

எனப்பாடி துயரங்களுக்கு மூல காரணம் பெண், பொன், மண் என்றாலும் இவற்றுள் மிகக் கொடியது பெண் ஆசையே என்பது அருணகிரிநாதர் கருத்து. இதனைத் தாம் எழுதிய பல பாடல்கள் மூலம் அவர் வெளிப்படுத்தக் காணலாம்.

கடவுள்:

‘அறிவுக்கு எட்டிய குணப் பண்புகளையெல்லாம் மீறியது கடவுள்’ என்ற கருத்தை உள்வாங்கி அருணகிரியார்.

“அறிவும் அறியாமையும் கடந்த அறிவுத் திருமேனி

என்றுரைத்துன் அருண சரணார விந்தம் அடைந்தேனே!” (திருப்புகழ் 490)

என்று பாடுகிறார்.

'முருகப் பெருமானும் சிவபெருமானும் ஒருவரே' என்பது அருணகிரியாரின் கருத்து. ஓரிடத்தில் 'ஓம்' என்ற சொல் பஞ்சாட்சரமாகிய 'சிவாயநம' என்ற மந்திரத்தையும் 'சரவண பவ' என்னும் ஆறெழுத்து மந்திரத்தையும் உணர்த்தும் என்ற கருத்தை,

“ஓதுவித்த நாதர் கற்க ஓதுவித்த முநி நாண

ஓர் எழுத்தில் ஆறெழுத்தை ஓதுவித்த பெருமாளே” (திருப்புகழ் 1310)

என்ற அடியில் அருணகிரியார் விளக்குகிறார். இங்கு ஓரெழுத்து என்றது ‘ஓம்’ ஐக் குறித்ததாகும்.

அகர உகர மகரங்களின் இயைபு 'ஓம்'என்பதைக் குறிக்கும். எட்டு என்பது 'அ' என்ற தமிழெண்ணைக் குறிக்கும். இரண்டு என்பது உகர மகரங்களைக் குறிக்கும். 'எட்டும் இரண்டும் அறியாதவன் திருமந்திரத்தை அறியாதவன்' என்பார் அருணகிரியார், “எட்டும் இரண்டும் அறியாத என்செவியில் எட்டும் இரண்டும் இதுவாம் இலிங்கமென எட்டும் இரண்டும் வெளியா மொழிந்தகுரு முருகோனே” (திருப்புகழ் 345)

என்ற பாடல் அடிகளால் விளக்குகிறார்.

கிரியை சரியையின் நோக்கம்:

பற்றுகளை மடைமாற்றம் செய்வதற்கு சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கும் பயன்படும்.

சரியை : இதனைத் தாச மார்க்கம் என்பர். கோயிலுக்குச் சென்று வழிபடுதல், இறைவழி பாட்டுக்குத் தேவையான தொண்டுகளைச் செய்தல் ஆகியவை இதில் அடங்கும்.

கிரியை : இதனைச் 'சற்புத்திர மார்க்கம்' என்பர். இறைவனை உள்ளும் புறமும் பூசித்து வழிபடும் செயல்.

யோகம் : இதனைச் 'சக மார்க்கம்' என்பர். ஆசைகளைத் துறந்து, மனதை ஒருமுகப்படுத்தி, இறைவனோடு ஒன்றி இன்பம் காணுவது இதில் அடங்கும்.

ஞானம் : இதனைச் 'சன்மார்க்கம்' என்பர். குருவின் உபதேசம் பெறுவது இதில் அடங்கும். இவற்றை மனதில் கொண்டே அருணகிரிநாதர்.

“சரியையுடன் கிரியை போற்றிய பரமபதம்
பெறுவோர்க்கு அருள்தரு கணன்” (திருப்புகழ் 59)

என்று பாடிக்களிக்கிறார்.

“சும்மா இரு சொல்லற” - அருணகிரியார் அருள்வாக்கு:

கந்தர் அலங்காரத்தில் அருணகிரியார்,

“சொல்லுகைக்கு இல்லை என்று
எல்லாம் இழந்து சும்மா
இருக்கும் எல்லையுள் செல்ல
எனை விட்டவா”

என்று மௌனவயப்படுமாறு முருகன் தன்னைச் செய்ததைப் பாடுகிறார்.

மௌனமும் தியானமும் சிதறுண்டு போகாமல் மனதை ஒருமைப்படுத்த வல்லவை. இதனை நம் அருளாளர் அருணகிரியார்,

"சரணகமல ஆலயத்தை அரைநிமிட நேரமட்டில்
தவ முறை தியானம் வைக்க அறியாத
சடகசட மூடமட்டி பவ்வினையி லேசனித்த தமியன்” (திருப்புகழ் 621)

என்று பாடியுள்ளார்.

அருணகிரிநாதர் சிவயோக முறைகளை எண்ணற்ற பாக்களில் குறிப்பிட்டு நமக்கு வழிகாட்டுகிறார்.

சைவ சமய தத்துவம் உணர்த்திய அருணகிரியார்

இறைவனுக்கும் உயிர்க்கும் உள்ள தொடர்பை விளக்குவது அத்வைதம். சைவ சமயத்தைப் பொருத்தவரை ‘அத்வைதம்’ என்ற சொல்லே ஆன்மா இறைவன் இரண்டும் கலந்து ஒன்றாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது என்று அருளாளர்கள் உரைப்பர். இதனை அருணகிரிநாதர், “நீ நான் வேறு அன்றி நிற்க நியமாக நீவசா என
நீ இங்கு அழைத்து பாராவரம் ஆனந்த சித்தி” (திருப்புகழ் 130)
“நீ வேறெனாதிருக்க நான்வேறு எனாது இருக்க
நேராக வாழ்வதற்கு அருள் கூர” (திருப்புகழ் 852)

என்னும் பாடல் வரிகளில் அத்வைத கருத்தைப் புலப்படுத்தியுள்ளார்.

அருணகிரியார் முருகப் பெருமான்மேல் உளம் உருகப்பாட அவர் திருப்புகழுக்கு மகிழ்ந்த முருகன் பல்வேறு வகையில் நேரில் அருள்புரிந்ததை அவர் திருப்புகழில் குறிப்பிட்டுள்ளார்.

“தண்டை யணி வெண்டயம் கிண்கிணி சதங்கையும்
தன்கழல் சிலம்புடன் கொஞ்சவே
நின்தந்தையினை முன் பரிந்தின் பவுரிகொண்டு நல்
சத்தொடம் அணைந்துநின்று அன்பு போல” (திருப்புகழ் 725)

என்றெல்லாம் தொடர்ந்து பாடி முருகப்பெருமான் தமக்களித்த தரிசனத்தை அருணகிரியார் உளம் நெகிழ்ந்து பாடியுள்ளார்.

மனதுக்கு உபதேசம்:

நம்மை நன்னெறிப்படுத்தும் வகையில் அருணகிரியார்,

“அபகார நிந்தைபட்டு உழலாதே!
அறியாத வஞ்சரைக் குறியாதே!
உபதேச மந்திரப் பொருளாலே
உனைநான் நினைந்தருட் பெறுவேனே!” (திருப்ப

(திருப்புகழ் 34)

என்று பாடி நம் வாழ்வில் நலம் சேர்க்கிறார் அருணகிரியார். அருள்தரு முருகனை உளத்தில் வைத்து வாழ்வில் உயர்வடைவோமாக!

★★★

திருப்புகழ் சொற்செறிவிலும் ஓசை நயத்திலும் தானப் பிரத்தாரங்களிலும் பொருள் நுட்பத்திலும் மிகவும் சிறந்தது என்பதை தமிழறிஞர்கள் யாவரும் அறிவர். ஆனால் அதனுள் அமைந்திருக்கும் நுட்பமாகிய தாள லயத்தைச் சிலரே அறிவர். இசைக் கலையில் தேர்ச்சி பெற்ற லய சம்பந்தமான ஆராய்ச்சியுள்ளவர்களுக்கே இதன் கண் அமைந்த தாள நுட்பங்கள் நன்கு புலனாகும்.

அவரால் பாடப்பெற்ற திருப்புகழில் உள்ள சொல் நடைகளும் தாளச்சொற் கூட்டுக்களும் தாள வகைகளுக்கு பெருக்கிச் சொல்லுதாகிய பிரஸ்தாபக் கிரமங்களும் லய சம்பந்தமான இசை இலக்கியம் திருப்புகழ் என்பதை நன்கு விளக்குவனவாம்.

— இசைப் பேரறிஞர் சித்தூர் சுப்பிரமணியப்பிள்ளை