திருப்புகழில் தம்பிரான் தோழர்

முனைவர் திருமதி. எழிலரசி, திருவண்ணாமலை.

பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமான திருவண்ணாமலையில் பிறந்து, திருமுருகனின் திருவருளால் சந்தக் கவியானவர் அருளாளர் அருணகிரிநாதர். மதுரகவியான அவர் இயற்றிய திருப்புகழில் பல இறையடியர்களின் தத்துவங்கள் குறித்தும் அவர்களின் பெருமைகள் குறித்தும் பாடியுள்ளார்.

தம்பிரான் தோழர், நம்பியாரூரர், வன்தொண்டர் என்றெல்லாம் போற்றப்படும் சமயக் குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரரின் பக்தி குறித்தும், இறைவனையே தன் தோழனாகப் பெற்ற அவரின் சிறப்புகள் குறித்தும் அருணகிரிநாதர் தான் இயற்றிய திருப்புகழில் பல பாடல்களில் பாடியுள்ளார்.

தடுத்தாட்கொள்ளல்

இவர் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூர் என்னும் ஊரில், சடையனார் இசை ஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். ஆதி சைவர் குலத்தைச் சார்ந்த இவரது இயற்பெயர் நம்பியாரூரன். இவருடைய அழகைக் கண்டு சிவபெருமானே சுந்தரர் என்று அழைத்தமையால் அப்பெயராலேயே இவர் அழைக்கப்படுகிறார்.

ஆலால சுந்தரரின் திருமண நாளன்று அவரைத் தடுத்தாட் கொள்ள வேண்டி சிவபெருமான் முதிய வேதியனாய் வேடமணிந்து வந்தார். சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு ஓலைச் சுவடியைக் காட்டி சுந்தரரும் அவர் வழித் தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். அதனால் திருமணம் தடைபட்டது. சுந்தரரை அழைத்துக்கொண்டு கோயிலுக்குள் நுழைந்த வயோதிகர் திடீரென மறைந்தார். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர், “பித்தா பிறை சூடி” என்ற தனது முதல் தேவாரப்பதிகத்தைப் பாடித் துதித்தார். சிவபெருமானின் இந்த திருவிளையாடலைச் சுட்டிக்காட்டி, அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த பெருமானின் மைந்தனே, என்று முருகனை பாடித் துதிக்கிறார் அருணகிரிநாதர்.

“ஒரு சிறுவன் மணமதுசெய் போதி லெய்த்து வந்து கிழவடிவு கொடுமுடுகி வாசலிற்பு குந்து உலகறிய இவனடிமை யாமெ னக்கொணர்ந்து... சபையூடே ஒரு பழைய சருகுமடி ஆவ ணத்தை யன்று உரமொடவ னதுவலிய வேகி ழிக்க நின்று உதறிமுறை யிடுபழைய வேத வித்தர் தந்த... சிறியோனே”

மேலும் இதே நிகழ்வினை மற்றொரு பாடலில்

“சுந்தரன் பந்தமும் சிந்த வந்து அன்புடன் தொண்டன் என்று

அன்று கொண்டிருக்கும் ஆதி................”

என்று இறைவன் சுந்தரரைத் தடுத்தாட் கொண்டதை திருப்புகழில் சுட்டிப் பாடுகிறார்.

குண்டையூரில் நெல்மலை அளிக்கப்பெற்ற அற்புதம்

குண்டையூரில் பெரியவர் ஒருவர் சுந்தரரிடத்தில் பேரன்பு கொண்டிருந்தக் காரணத்தால் செந்நெல், பருப்பு முதலியப் பொருட்களைப் பரவையார் திருமாளிகைக்கு தவறாமல் அனுப்பிக் கொண்டிருந்தார். ஒரு சமயம் மழையின்மையால் நிலவளம் சுருங்கிற்று. அப்பெரியவர் சுந்தரருக்கு செந்நெல் அனுப்ப முடியவில்லையே என்ற கவலையோடு உறங்கச் சென்றார். கனவில் தோன்றிய எம்பெருமான் “ஆரூரனுக்குப் படி அமைக்க உனக்கு நெல் தந்தோம்” என்றருளிச் செய்து, குபேரனைக் கொண்டு குண்டையூர் முழுவதும் நெல்மலையாக ஓங்கச் செய்தார். அப்பெரியவர் திருவாரூருக்குச் சென்று சுந்தரரிடம், இறைவன் கருணையை எடுத்தியம்பி, மனிதர்களால் அம்மலையை எடுத்து வர இயலாது, எவ்விதமேனும் அதனை தாங்கள் ஏற்றருள வேண்டும் என வேண்டிக்கொண்டார்.

சுந்தரரும் வந்து வியந்து, இறைவனை வேண்டினார். இறைவனும் தம் பூதகணங்களை ஏவி, நெல்மலையை திருவாரூரில் பரவையார் மாளிகையிலும், திருவீதிகளிலும் நிரப்பினார். இறைவன் சுந்தரருக்கு அருள் செய்த அந்த அற்புதத்தை அருணகிரிநாதர்,

“கற்ற தமிழ்ப் புலவனுக்குமே மகிழ்வுற்று ஒரு பொற்கொடி

களிக்கவே பொரு கற்பனை நெல் பல அளித்தகாரணன் அருள் பாலா...”

என்று பாடுகிறார்.

தம்பிரான் தோழருக்குக் கருணைக்காட்டிய சிவபெருமான்

திருவாரூரில் இருந்த தன் ஒப்பற்ற காதல் மனைவி பரவை நாச்சியாருக்கு ஏற்றதான ஆயிரம் பொன்னைச் சம்பாதிக்க, தலங்கள் தோறும் சென்று, சிவனை தரிசித்த அடியவராகிய சுந்தரர், உறுதியான முயற்சித் தெளிவுடன் உள்ளப் பெருக்கத்துடன் தேவராப்பதிகம் பாடி வரலானார். ஒரு நாள் காட்டில் நடந்து வந்துக் கொண்டிருந்த சுந்தரருக்கு பசி களைப்பு வர, எதிரே தோன்றிய இறைவன் தன் சோற்றுக்கட்டைஅவிழ்த்துத் தந்து அவர்தம் பசியாற உதவினார். மற்றொரு முறை அவிநாசி தலத்திற்குச் சுந்தரர் வருகின்ற போது திசையறியாது தடுமாறினார். அச்சமயத்தில் இறைவன் அவருக்கு திசையைக் காட்டி உதவி செய்தார். மேலும் ஒரு முறை திருப்புக்கொளியூர் ஏரியில் குளிக்கச் சென்ற பாலகனை ஒரு முதலை உண்டது. பிறகு ஓராண்டு கழித்து அங்குச் சென்ற சுந்தரமூர்த்தி நாயனார், வற்றிய ஏரியின் கரையிலிருந்து, அவிநாசியின் மேல் பதிகம் பாட, ஏரியில் நீர் நிரம்பியது. முதலை வந்து கரையில் பாலகனை ஓராண்டு வளர்ச்சியுடன் உயிரோடு உமிழ்ந்தது.

சுந்தரரின் வாழ்வில் சிவபெருமான் நிகழ்த்திய இத்தனை அற்புதங்களையும் குறிப்பிட்டு அருணகிரிநாதர் கீழ்வரும் ஒரு பாடல் பாடியுள்ளார்.

“இதப்பட்டிட வேகம லாலய ஒருத்திக்கு இசைவான பொன் ஆயிரம் இயற்றப் பதிதோறும் உலாவிய தொண்டர் தாள இசைக்கு ஒக்க இராசத பாவனை உ(ள்)ளப் பெற்றொடு பாடிட வேடையில் இளைப்பு உக்கிட வார் மறையோன் என வந்து கானில் திதப்பட்டு எதிரே... பொதி சோறினை அவிழ்த்து இட்ட அவிநாசியிலே வரு திசைக்கு உற்ற சகாயனும் ஆகி மறைந்து போம் முன் செறிப்பு இத்த கரா அதின் வாய் மகவு அழைப்பித்த புராண க்ருபாகர... திருப்புக் கொளியூர் உடையார் புகழ் தம்பிரானே”

என்று சுந்தரரை புகழ்ந்து பாடுகிறார் அருணகிரியார். சுந்தரர் முதலையுண்ட பாலகனை மீட்ட செய்தியைத் திருப்புகழில் பல பாடல்களில் பாடியுள்ளார்.

“நாடா முடுகு முதலையை வரித்துக் கோட்டி ஆடியர் தொழ

மகவு அழைத்துக் கூட்டி முறை செய் தமிழினை விரித்துக் கேட்ட முதுநீதர்” என்றும், மற்றொரு பாடலில்,

“கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையில்

அப்பரருள் கொண்டு உடலுற்ற பொருள் அருள்வாயே”

என்றும் சிவன் வாயிலாக சுந்தரர் நிகழ்த்திய அற்புதத்தை கூறி திருமுருகனைப் போற்றுகிறார்.

தோழனுக்காக தூது சென்ற இறைவன்

திருவொற்றியூரில் சுந்தரர் சங்கிலியாரைத் திருமணம் செய்துக் கொண்டார் என்பதையறிந்து பரவையார் சுந்தரர் மீது கடுங்கோபம் கொண்டார். சுந்தரர் சில பெரியவர்களை அனுப்பி, பரவையாரை சமாதானம் செய்ய முயல்கிறார். அந்த முயற்சியில் தோல்வியடையவே, சிவபெருமானிடம் சென்று நீரே தூது சென்று பரவையாரின் ஊடலைத் தீர்த்தருளவேண்டும் என்று இறைஞ்சுகிறார்.

அரியும் பிரம்மாவும் காணவொண்ணா அடிமுடி தாங்கிய சிவபெருமான் தன் தோழனாகிய சுந்தரருக்காக திருவாரூர் தெருக்களில் தன் பாதம் தோய நடந்து தூது சென்று இருவருக்கும் சமாதானம் செய்துவித்தார். இறைவனின் இந்த எளிவந்த தன்மையினை அருணகிரிநாதர்

“பரவைக்கு எத்தனை விசைதூது
பகரற்கு உற்றவர் என மாண் உன்
மரபுக்கு உச்சித ப்ரபுவாக
வரம் மெத்தத் தர வருவாயே...” என்றும், மற்றொரு பாடலில்

“சுந்தரர் பாடல் உகந்து இருதாளைக் கொண்டு நல் தூது

நடந்தவர் ஆகத் தொந்தமொடு ஆடி இருந்தவள் ஞானச் சிவகாமி”

என்றும், மேலும் ஒரு பாடலில்

“அச்சோ என வச உவகையில் உள்சோர்தல் உடைய
பரவையொடு அக்காகி விரக பரிபவம் அறவே...
பார்பத்து ஊரர் பரவ விரைவு செல் மெய்த்தூதர் விரவ
அருள் தரு பற்று ஆய பரம பவுருஷ குருநாதா...”

இப்படி பல பாடல்களில் இறைவனின் எளிவந்த தன்மையினையும், சுந்தரரின் பக்தியையும் பாடுகிறார்.

“விதைக்குள்ளே இருக்கிறது விஸ்வரூபம்” என்பதைப் போல, அருணகிரிநாதரின் ஒவ்வொரு சொல்லிலும் ஒரு உன்னதம் புதைந்திருக்கும்.

“தித்திக்கும் திருப்புகழ் எத்திக்கும் பரவட்டும்”

★★★

அருணகிரிநாத சுவாமிகள் திருவாய் மலர்ந்துருளிய பிரபந்தங்களில் ஒன்று கந்தர் அலங்காரம். இது முருகவேலுக்கு மிகவும் உகந்த பாமாலை; இந்நூலில் பற்பல அரிய பெரிய கருத்துக்கள் பொதிந்து கிடக்கின்றன. அருணகிரிநாதர் அறம் செய்தலின் அவசியத்தையும், யமபயத்தையும், யாக்கை நிலையாமையும், செல்வ நிலையாமையும், சிவ யோகத்தையும், இன்னார் இன்ன பிற விஷயங்களையும் உடல் கம்பிக்க, உள்ளம் உருக, அன்பு பெருக எடுத்து உபதேசிக்கின்றார். இத்திருவருட்பாக்களை நாள்தோறும் பாராணம் செய்வோர் துன்பங்கள் பலவும் நீங்கி இன்புற்று எந்தை கந்தவேல் தண்ணருளை பெற்று நலம் பெறுவர். -திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்.