“திருவடியும் தண்டையும் சிலம்பும் சிலம்பூடுருவ
பொருவடி வேலும் கடம்பும் தடம்புயம் ஆரிரண் டும்
மருவடிவான வதனங்களாறும் மலர்க் கண்களும்
குருவடிவாய் வந்து என்னுள்ளம் குளிரக் குதி கொண்டவே”
உலகம் தோன்றிய காலத்திலிருந்தே உலக மக்களை உய்விக்கும் பொருட்டு எத்தனை எத்தனையோ மகான்களும், அருளாளர்களும் சித்தர்களும் தோன்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஞானப் பரம்பரையில் வந்து கி.பி. 15ஆம் நூற்றாண்டில் அவதாரம் செய்தவர்தான் அருளாளர் அருணை மாமுனிவர் அருணகிரிநாத சுவாமிகள்.
இவர் முருகப் பெருமானையே முழுமையாக வழிபடுகின்ற பரமஞானி. எப்பொழுதும் முருகனையே பாடும் பணியே பணியாக விளங்கி வாழ்ந்து அருள்புரிந்தவர். முருகனையே குருவாக ஏற்று முருகனிடம் உபதேசம் பெற்றவர். முருகப்பெருமான் சிவபெருமானுக்கு, அகத்திய முனிவருக்கு, அருணகிரி நாதருக்கு என இம் மூவருக்கும் உபதேசம் செய்ததாக கீழ் வரும் பாடல் நமக்கு அறிவிக்கின்றது.
“வேலா சரணம் சரணம் வெகுளாமலினி
மேலா யினும் கடைக்கண் பார் பருப்பதன் மகள்
பாலா குறுமுனியார்க்கும் திருப்புகழ் பண்ணவர்க்கும்
ஆலால முண்டவர்க்கும் உபதேசித்த என் ஆண்டவனே”
ஞானம் பெறுவதற்கு மோன வீடேறுவதற்கு வழிகாட்டுவது அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்கள். வேதவியாசர் அருளிய மகாபாரதம் திருப்புகழ் பாடல்களில் பல இடங்களில் விரவிக் கிடக்கின்றது. அதனை இக்கட்டுடையில் கவனித்துக் காணலாம் வாருங்கள்.
‘கைத்தல’ நிறைகனி எனத் தொடங்கும் திருப்புகழ் பாடலில்,
‘முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே'
அதாவது, முனிவர்களுக்கெல்லாம் தலைவராகிய வேத வியாசர் சொல்ல, மலைகளுக்கெல்லாம் தலைமையாகிய மேருமலையிலே தெய்வங்களுக்கெல்லாம் தலைவராகிய விநாயகப் பெருமான் தனது வலது கொம்பை எழுத்தாணியாகக் கொண்டு வியாசர் சொல்வதற்கு முன்னே அவர் கருத்துணர்ந்து விநாயகர் முற்பட எழுதினார் என்று பாடுகிறார். மற்றோர் திருப்புகழிலும் இதே கருத்தை பாடுகிறார்.
‘பாரதத்தை மேரு வெளீ வெளீ திகழ்
கோடொடித் தனானில் வரை வரைபவர்
பானிரக் கணேசர் குவாகு வாகனார் இளையோனே’
என்று பாடுகின்றார். இதே கருத்தமைந்த மற்றோர் பாடல் (அலகிலவுணரை) எனத் தொடங்கும் பாடலில் 'இலகு கடலை கற்கண்டு தேனொடு இரதமுநு தினைப் பிண்டி பாகுடன் இனிமையி னுகரும் எம்பிரானொரு கொம்பினாலே எழுதென மொழியப் பண்டு பாரதம்
வடகன சிகரச் செம்பொன் மேருவில்
எழுதிய பவளக் குன்று'
என்று திருப்புகழ்ப் பாடலில் வேத வியாசர் சொல்லச் சொல்ல விநாயகப் பெருமான் மகாபாரதம் எழுதினார் என்பதனை மிகவும் விளக்கமாகப் பாடுவார்.
பாண்டவர்கள் சூதாடி நாடிழந்து வனவாசம் சென்றதும் விராட நாட்டில் ஒரு வருடம் மறைந்து வாழ்ந்ததும் அர்ச்சுனன் ஆநிரை மீட்டதும் பகவான் தூது போய் துரியோதனனிடம் நாடு கேட்டதும் அவன் தர மறுத்ததும் பகவான் அர்ச்சுனனுக்குத் தேரோட்டியாக விளங்கித் தேரூர்ந்ததும் (சஞ்சல சரித) எனத் தொடங்கும் திருப்புகழில் மிக அருமையாகப் பாடிப் பரவுகின்றார்.
'பஞ்சவர் கொடியவினை நூற்றுவர் வென்றிட சகுனி கவருள் பொருள் பங்குடை அவனிபதி தோற்றிட அயலேபோய் பண்டையில் விதியை நினையாப் பனி நண்டுடை வருச முறையாப் பல பண்புடன் மறைவின் முறையாற்றிரு வருளாலே வஞ்சனை நழுவி நிரை மீட்சியில் முந்து தமுடைய மனை வாழ்க்கையில் வந்தபி னுரிமையது கேட்டிட இசையாநாள் மண்கொள விசயன் விடுதேர்ப்பரி யுந்தினன் மருக வயலூர்க் குக வஞ்சியி லமரர் சிறை மீட்டருள் பெருமாளே' மேலும் 'ஏட்டின் விதி' எனத் தொடங்கும் திருப்புகழில், 'வீட்டி லடைத்தெரி யேயிடு பாதக நாட்டை விடுத்திட வேபல சூதினில் வீழ்த்த விதிப்படியே குரு காவலர் வனமேபோய் வேற்றுமை யுற்றுரு வோடியல் நாளது பார்த்து முடித்திட வேயொரு பாரத மேற்புனை வித்த மகாவிர மாயவன் மருகோனே'
என்று துரியோதனன் பாண்டவர்களைக் கொல்வதற்கு செய்த சூழ்ச்சிகளை எல்லாம் பாடுவார்.
தேவர்களுக்கு பகையாகிய காலகேய நிவாதகவசர் மூன்று கோடி அறுபதினாயிரம் வீரர்களை வென்று அர்ச்சுனன் தேவர்களுக்கு வாழ்வளித்த செய்தியை (சிந்து கூர) எனத் தொடங்கும் திருப்புகழில் பாடுகின்றார்.
'இந்திர நீல வனத்தில் செம்புவி
அண்ட கடாக மளித்திட் டண்டர்கள்
எண்படு சூரை அழித்துக் கொண்டருள் ஒருபேடி
இன்கன தேரை நடத்திச் செங்குரு
மண்டல நாடு மளித்துப் பஞ்சவர்
இன்புறு தோழமை யுடைக்கத் தன் திரு மருகோனே'
விராட நாட்டில் அர்ச்சுனன் ஆநிரை மீட்டச் செய்தியை (மோதுமளைலி) எனத் தொடங்கும் பாடலில் பாடுகின்றார்.
‘சூதுபொரு தரும நாடு தோற்றிரு
ஆறு வருட வனவாச மேற்றியல்
தோகையுடனுமெ விராட ராச்சிய முறைநாளில்
சூரைநிரை கொடவர் ஏக மீட்டெதி
ராளுமுரிமைதரு மாறு கேட் டொரு
தூது செல அடுவ லாண்மை தாக்குவ னெனமீன
வாதுசமர் திருதரான ராட்டிரர்
ராஜகுமர துரியோதனாற் பிறர்
மாள நிருபரொடு சேனை தூன்பட வரிசாப
வாகை விசய டைல் வாசி பூட்டியள
தேரை முடுகு நெடுமால் பராக்ரம
மாயன் மருக அமர்நாடர் பார்த்திப பெருமாளே’
என்று பாடிப் பரவுவார்.
பாண்டவர்க்காக பகவான் தூது சென்றதனை (சரியுமவல) எனத் தொடங்கும் திருப்புகழில்.
‘விரியு முதய பாஸ்கர கிரண மறைய வார்ப்பெழ
மடையுமலகில் தேர்ப்படை யொடுகூழும்
விகட மகுட பார்த்திப ரனைவ ருடனு நூற்றுவர்
விசய னொருவ னாற்பட வொருதூது
திரியு மொரு பராக்கிரம அரியின் மருக பார்ப்பதி
சிறுவ தருகண் வேட்டுவர் கொடி கோவே...’
விதுரரைப் போரினின்றும் நீக்கியருளியதை (எதிரெதிர்) எனத் தொடங்கும் திருப்புகழில் பாடுவார்.
'விதுர நெடுந் துரேணை மேற்று
எதிர்பொரு மம்பாதி யேற்றி
விரதி னெழுந் தோய நூற்று வருமாள
விரவு ஜெயன் காளி காட்டில்
வரு தருமன் தூத னீற்ற
விசய நெடும் பாக தீர்த்தன் மருகோனே'
போரில் சூரியனை மறைத்து அர்ச்சுனனைத் தீயில் விழாதபடி காப்பாற்றிய செய்தியை பாடுகின்றார் (முத்தைத்தரு) எனத் தொடங்கும் பாடலில்,
‘பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக
பக்தர்க்கு ரதத்தைக் கடவிய
பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்துடன் ரட்சித் தருளுவ தொருநோளே’
இதே கருத்தடங்கிய மற்றுமொரு திருப்புகழ் (சீரானகோல) எனத் தொடங்கும் பாடலில்,
‘கூராழி யால்முன் வீய நினைபவ
னீடேறு மாறு பானு மறைவு செய்
கோபால ராய னேய முள திரு மருகோனே’
பகலை இரவாக்கி மீண்டும் இரவைப் பகலாக்கி, தீயில் விழ இருந்த அர்ச்சுனனைப் பகவான் காப்பாற்றியதைப் பாடி மகிழ்கிறார்.
கர்ணனுக்கு கண்ணபிரான் காட்சி தந்த நிகழ்வை, குயிலோ எனத் தொடங்கும் திருப்புகழ் பாடலில், ‘வெயில்வீசிய கதிராயிர வருணோதய விருணாசனே
விசையேழ்பரி ரவிசேயெனும் அங்கராஜன்
விசிகாவல மயல்பேடிகை படுபோது சன்னதியானவன்
விதிதேடிய திருவாளிய நன்குமாரா’
எனவும்,
கண்ணன் தேரொட்டியாக அமர்ந்து போரை நடத்தியதை ‘பருதியால்’ எனத் தொடங்கும் பாடலில்
'திருத ராட்டிரன் உதவு நூற்றுவர்
சேனாடாள்வா னாளோர் மூவா
திலக பார்த்தனு முலகு காத்தருள்
சீராமாறே தேரூர் கோமான் மருகோனே'
‘வரிசேர்ந்திடு’ எனத் தொடங்கும் பாடலில்,
‘கரிவாம்பரி தேர்திரள் சேனையு
முடனாம் துரியோதன னாதியர்
கள மாண்டிடவே யொரு பாரத மதிலேகி
கன பாண்டவர் தேர்தனிலே யெழு
பரி தூண்டிய சாரதி யாகிய
கதி ரோங்கிய நேமியனாம்அரி ரகுராம்’
எனவும், 'கருமமான' எனத் தொடங்கும் பாடலில்
'தரும வீம அர்சசுன நகுலச
காதேவர்க்குப் புகலாகிச்
சமர பூமியில் விக்ரம வளைகொடு
நாளோர் பத்தெட் டினிலாளும்
குருமதீதல முட்பட வுளமது
கோடாமல் சத் ரியர்மாளக்
குலவுதேர் கடவச்சுதன் மருககு
மாரா கச்சிப் பெருமாளே'
எனவும், ‘எத்தி இருகுழையை’ எனத் தொடங்கும் திருப்புகழில்,
‘உற்ற தரும னடல்பீமன் வேல் விசையன்
வெற்றி நகுல சகதேவர் தேர்தனிலும்
ஒத்து முடுகிவிடு பாகன் வாளமரில் அசுரேசன்’
எனவும் பாண்டவர் ஐவருக்குமே கண்ணன் தேர் ஓட்டிய தாகவே ஐவருடைப் பேரையும் தனித்தனியே சொல்லி ஐவருக்கும் தேர் ஓட்டியதாகவே அருளாளர் அருணகிரிநாதர் பாடுவதன் தத்துவம் அவர் பாண்டவர்களுக்கு மட்டுமல்ல உலகில் உள்ள அனைவருக்கும் அவர்தான் சாரதி. இந்த உடம்பாகிய ரதத்தில் உயிராகிய குதிரையைப் பூட்டி அவர்தான் சாரதியாக இருந்து அனைவரையும் ஓட்டிக் கொண்டிருக்கிறார் என்ற உண்மையை உணரவேண்டும்.
இவர் பாடியருளிய திருப்புகழில் கந்தபுராணம், பெரிய புராணம், திருவிளையாடல் புராணம், இராமாயணம், மகாபாரதம் மற்றும் பல புராணங்களின் தத்துவக் கருத்துக்கள் திருப்புகழில் ஒளிவீசிக் கொண்டிருக்கின்றது. தமக்கே உரிய தாளகதியுடன் சந்த இசை கொஞ்சு தமிழில் தந்த குருநாதர் எந்தை அருணகிரிநாத சுவாமிகள். நாம் நமது வாழ்நாளை வீணாக்கிவிடாமல் நாளும் ஒரு திருப்புகழையாவது பாடிப்பரவி பிறவியெடுத்த பயனை நாம் அடைய வேண்டும் வாழ்க தமிழ் வளர்க அருணகிரிநாத சுவாமிகளின் புகழ்.
★★★

