“வள்ளி மணவாளன் மயிலேறும் வள்ளல்தனை
அருணகிரி வாழ்த்தும் திருப்புகழை கற்பார் கரையேறுவார்”
உலக மக்கள் உய்வடைய உயர் பரம்பொருளை போற்றி துதித்துப் பாடி இறைவனைக் கண்டு மற்றவர்களும் காணுமாறு இசை இலக்கியமான திருப்புகழைத் தந்தருளிய ஞானி அருணகிரிநாதர் ஆவர். சொற்சுவை, பொருட்சுவை, பக்திச் சுவை இவை மூன்றும் கொண்ட தீந்தமிழ் என்று போற்றப்படும். திருப்புகழ், திருவகுப்பு, கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, வேல் மயில் சேவல் விருத்தங்கள் ஆகிய தோத்திர நூல்களை இயற்றியவர். நூல்களில் இன்பச் சுவை, நகைச்சுவை, கருணை, ரௌத்தரம், வீரம், பயம், குற்சை,
அற்புதம், சாந்தம் என்னும் நவரசங்களும் மிளிர்கின்றன. கி.பி. 14 மற்றும் 15ஆம் நூற்றாண்டுகளில் முஸ்லீம் ஆதிக்கமும் படையெடுப்புகளும் பெருகி நம் ஆலயங்களையும் சமய நெறிகளையும் சிதைத்த நேரத்தில் விழிப்புற்ற இந்து உணர்வின் விடி வெள்ளியாக அருணகிரிநாதர் ஒருவரே சண்மத வழிபாட்டை மறுமலர்ச்சி அடையுமாறு தலங்கள் தோறும் சென்று பாடி முருகனை மையமாகக் கொண்டு சமய நெறிகளை பயிலும் மாறு பரவி வழி அமைத்துக் கொடுத்தவர் அருணகிரி வள்ளல்.
அருணகிரிநாதர் முருகப் பெருமானை எல்லாம் வல்ல பிரம்ம தத்துவமாக விளக்கும் நூல் திருப்புகழாகும். ஆதிசங்கரர் நிறுவிய அறுவகை சமய வழிபாட்டை வலியுறுத்தும் சூரியன் சிவபெருமான் சக்தி, கணபதி, திருமால் என்று தெய்வங்களை முருகப்பெருமானுடன் உறவை காட்டும் அற்புத நூல் ஆகும்.
அருணகிரிநாதர் ஒரே பாடலில் அறுவகை சமய குறிப்புகளை காட்டும் வகையில் அமைந்த திருப்புகழ் சூரியனைப் பற்றி கூறுகிறார். போதக மாமுக நேரான சோதர நீறணி வேணியர் மேயா பிரபாகர என்ற வரிகளில் பிரபாகரன் ஒளி வடிவானவன் என்று குறிப்பிடுகின்றார். உபாசன மூர்த்தியாக சூரியன் முதலான சுடர்களை நினைவுறுத்தி அவற்றில் ஒளிர்பவனே என்று முருகனைப் போற்றுகிறார்.
உலக வாழ்வில் புற இருளைப் போக்க வல்லது சூரியன். அக இருளாகிய ஆணவ மலத்தை நீக்கவல்லது இறைவன் திருவருளே. அந்தத் திருவருளை நாம் பெற்றுய்ய அருளாளர்கள் கருணையோடு நமக்கு உதவிய நூல்கள் தாம் திருமுறைகளும், திருப்புகழும். எனவே அகஇருள் நீக்கும் சூரியன் அருணகிரிநாதர் என்று சொன்னால் அது மிகையாகாது.
அனுதினமும் உலகம் முழுவதும் தினந்தோறும் தோன்றி உயிர் வர்க்கத்திற்கு உதவும் சூரியன் கண்ணால் காணப்படுகின்ற தெய்வமாகவே கருதப்படுகின்றது. உலகில் உள்ள உயிரினங்கள் தாம் வாழ்வதற்கான சக்தியை சூரியன் தந்து உதவுகிறது. நான்கு வேதங்களும், பண்டைய நூல்களும் சூரியனின் பெருமையைப் பறைச் சாற்றுகின்றன. சூரிய வழிபாட்டை உணர்த்தும் சூரிய நமஸ்காரம் இன்றளவும் அனைவரும் அறிந்ததே. பரிதி, பாற்கரன், ஞாயிறு, ஆதவன், இரவி, கதிரவன், செங்கதிரோன், பகலோன், பானு, உதயன், சவீதா என்பனவெல்லாம் சூரியனைக் குறிக்கும் வேறு பெயர்கள்.
ரகுவம்சம் என்ற இராமபிரான் குலவம்சம் சூரியனிடம் இருந்தே தோன்றுகின்றது. இராமபிரான் இராவணனை வெல்ல பலவாறாக முயன்று இறுதியில் அகத்திய முனிவரிடம் இருந்த கிடைக்கப்பெற்ற ஆதித்த இருதயம் (சூரியன் புகழ் மாலை) தான் வெற்றிக்கு துணை நின்றது. அகத்திய முனிவரால் தொகுக்கப்பட்ட ஆதித்ய இதயம் என்ற புனித மந்திரங்கள் நம்முடைய எல்லா குறைகளையும் போக்கவல்லது. வெற்றியைத் தருவது, மனக் கவலையை மாற்றும் திறத்தினது. ஜோசிய உலகிலும் சூரியன் நடுநாயமாக விளங்குகிறது. சூரிய ஆற்றல் (Solar Power) பல்வேறு துறைகளில் பயன்பட்டு வருகிறது. புலவர்களின் படைப்புகளில் சூரியன் என்றுமே இடம் பெறத் தவறியதில்லை. அருணகிரிநாதரும் பெருமைக்குரிய சூரியனை தம்முடைய நூல்களில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.
குருதி மலசல என்று துவங்கும் பழநி மலைத் திருப்புகழில்,
“பருதி மகதிகனல் விழிய சிவனிட
மருவு மொருமலை யரையர் திருமகள்
படிவ முகிலென அரியி னிளையவ......ளருள்பாலா”
என்று பாடுகிறார். சூரியன், சந்திரன், அக்கினி இவற்றை விழியாகக் கொண்ட சிவபிரானின் இடப்பக்கத்தில் இருப்பவரும், ஒப்பற்ற மலையரசனான இமயானின் திருமகளாக வந்தவரும், தன் வடிவம் மேகம் போல் கருத்த திருமாலின் தங்கையானவருமான பார்வதிதேவி அருளிய குழந்தையே என முருகனைப் புகழ்கிறார்.
“வஞ்சமாசுரன் சேனை கடலோடுகுவ
டுங்கவேலினள் போல ஒளிர் வேலைவிடு
வண்கையா கடம் பேடு தொடையாடு முடி முருகோனே”
உலகத்தில் காணப்படும் உயர்ந்த ஒளிப்பொருளான சூரியன் முருகப் பெருமானின் பேரொளிமுன் தோற்றுப்போய் ஒளித்துக்கொள்ளவும், குளிர்ந்த கிரணங்களை உடைய வெண் கதிரோனும் ஒளித்துக் கொள்ளவும், கரை கடந்து உலகை அழிக்காதபடி சமுத்திரத்தை அடக்கிக் கொண்டிருக்கும் வடவாமுக அக்னி ஒளித்துக் கொள்ளவும், பிரகாசிக்கின்ற ஒளியை உடைய ஞானசக்தியை எங்கும் பரவும்படி செய்யும் முருகனின் பேராற்றலை வேல் வகுப்பில் அருணகிரிநாதர் புகழ்ந்துப் பாடுகிறார்.
“சுடர் பருதி ஒளிப்ப நில வொழுக்கு மதி
ஒளிப்ப அலையடக்கு தழல் ஒளிப்பவொளிர்
ஒளிப் பிரபை வீசும்”
என்பது அப்பாடல். காலை எழுந்தவுடன் வழிபாடு என்பது நமது பாரம்பரியம். அருணகிரிநாதப் பெருமான் சூரிய பகவானை கீழ்கண்ட நாமங்களில் தனது பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
அரி, அருக்கன், அருணர், அருணோதயம், அலரி, ஆடவன், ஆதித்தன், இரவி, இளஞாயிறு, உதய தினகரன், உதய பாஸ்கரர், உதிக்கும் செங்கதிரவன், கதிரவன் கிரணமணி, சிவசூரியன், சூரியர், சூரியன், செங்கதிரோன், சோதி, ஞாயிறு, தபனன், திவாகரன், தினகரன், தினமணி, நபோமணி, பகலவன், பதமுநாயகன், பரிதி, பாநு, முதுரவி என்பனவாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகள்...
“காலை எழுந்து தொழுவார் தங்கள் கவலை களைவாய் கறைக்கண்டா”
என்று திருக்கச்சூர் ஆலக்கோயில் தேவாரத்தில் பாடுகிறார். அருணகிரிநாதரும்....
“காலைக்கே முழுகிக் குணதிக்கினில் ஆதித்யா எனப் பகர் தர்ப்பணம் காயத்ரீ செபம் அர்ச்சனையைச் செய்யும் முனிவோர்கள்” என்று திருவான்காவில் பாடுகிறார்.
இவ்வாறே பல இடங்களில் முருகப் பெருமானின் அருளையும், அழகையும் சூரியனோடு தொடர்புபடுத்தி அருணகிரிநாதர் பாடல்களை அருளியுள்ளார்.
திருப்புகழ் நம் சமய வாழ்விற்கு பெருந்துணைப்புரிய உதவுமாறு வேண்டி முருகப் பெருமானையும், அருணகிரிநாதரையும் வணங்குவோம். வாழ்வில் நலமடைவோம்.
★★★

