முன்னுரை:
தமிழிலக்கிய வரலாற்றிலும் சமய வரலாற்றிலும் அருணகிரிநாதருக்கென ஒரு சிறப்பிடம் உண்டு. தொங்கலுடன் கூடிய வண்ண விருத்தங்களாகிய திருப்புகழ்ப் பாடல்கள் தமிழுக்குக் கிடைத்த அற்புதக் கற்பகமரம். இசை நயத்துடனும் தாளலயத்துடனும் அமைந்த திருப்புகழ் சமய உலகிற்குக் கிடைத்த வரப்பிரசாதம். திருமுறைகளுக்குப் பின் தமிழில் தோன்றிய மிகச் சிறந்த இசைப் பாட்டிலக்கியம் திருப்புகழ் என்று முனைவர் திரு. சுப.அண்ணாமலையவர்கள் குறிப்பிடுவர்.
திருப்புகழ் என்னும் புதிய இலக்கிய வகையின் ஆதிகர்த்தா; நாற்கவிராசர்; நவரச நாவலர்; தாளங்களுக்கு இலக்கணமாகத் திருப்புகழைத் தந்த தாளச் செல்வர். நீண்ட
நெடுங்காலத்திற்குப் பின் முருக வழிபாட்டில் மறுமலர்ச்சியை உண்டாக்கிய முருகன் திருவருட்செல்வர். சைவத்திற்கு மிகப் பெரும் தொண்டாற்றிய சைவ சித்தாந்த வாரிதி. சமயக் காழ்ப்பைக் கடந்த சமரச ஞானி.
இவ்வளவு பெருமைக்கும் காரண கர்த்தராகிய அருணகிரிப் பெருமான் சமய உலகில் சாதித்துள்ள சாதனைகள் பலவாகும். அவற்றின் வாயிலாகத் தனிப்பெரும் செல்வாக்கை எவ்வாறு நிலைநிறுத்தினார் என்பதைச் சிந்திப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
தீர்வு காணப்பட வேண்டிய சிக்கல்கள்:
தமிழில் முருகனைப் பற்றியும் முருக வழிபாட்டைப் பற்றியும் பாடுகின்ற முதல் இலக்கியமாகத் திருமுருகாற்றுப்படை விளங்குகின்றது. பரிபாடலில் எட்டுப் பாடல்கள் முருகன் புகழ்பாடுகின்றன. தமிழர் தெய்வமாக, வீடுபேறு நல்கும் பரம் பொருளாகச் சங்க காலத்தில் போற்றப்பட்டவன் முருகன். முக்கட் செல்வனும், திருமாலும், இந்திரனும், முப்பத்து மூவரும், பதினெண் கணங்களும் வந்து கண்டு போற்றிப் பாடப்பட்டவன் முருகன். அத்தகைய முருகனின் வழிபாடு பக்தி இயக்கத்தின் முதற்கட்டமான திருமுறைகளின் காலத்தில் முற்றிலும் மங்கிப் போயிற்று. நூல்களில் இங்கொன்றும் அங்கொன்றுமாகவே முருகனைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. ஆறுதலாக ஒன்பதாம் திருமுறையில் சேந்தனார் பாடிய முருகனைப் பற்றிய திருவிடைக்கழிப்பதிகம் விளங்குகின்றது.
இரண்டாவதாக, பரிபாடலிலும் திருமுருகாற்றுப் படையிலும் சுட்டப்படும் முருகனின் அவதாரம் பற்றிய கதை பௌராணிகத் தாக்கத்தால் உந்தப்பட்டுப் புனையப்பட்டது. ஏற்கனவே இராமாயண பாரதங்களில் சொல்லப்பட்ட அந்தக்கதை ஒரு சாதாரண மனிதனின் பிறப்புப் போலக் கூடச் சொல்லப்படவில்லை. அது ஏற்றுக் கொள்ளத்தக்கதன்று என்பது மட்டுமன்று; முத்திக்கொரு வித்தாகப் பாடப்பட்ட முருகனுக்கும் பெருமை தருவதாக இல்லை. “நின்னளந்தறிதல் மன்னுயிர்க்கு அருமை” என்று போற்றப்பட்ட முருகனின் அவதாரம் புனிதமானதாக, அவனுக்குச் சிறப்புச் செய்வதாக உயர்வாகக் காட்டப்படவேண்டும்.
பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப்பின் தமிழகத்தில் நிலவிய அரசியல் சமயச் சூழல்களைப் பற்றியும் சற்றுப் பார்க்க வேண்டியுள்ளது. சோழப் பேரரசுக்குக் கட்டுப்பட்டிருந்த குறுநில மன்னர்கள் இராசாதிராசன் காலத்தில் முற்றிலுமாகத் தங்களை விடுவித்துக் கொண்டு தனியாட்சி செலுத்திய தோடு தங்களுக்குள்ளேயே போர்களும் உடன்பாடுகளும் கொண்டனர். வீரபாண்டியனும் சுந்தர பாண்டியனும் அரசுரிமைக்காகத் தங்களுக்குள் மோதிக்கொண்டனர். அழியப் போவது தன்னாடு என்பதை சுந்தரபாண்டியன் எண்ணாமல் வேற்று நாட்டவரான முகமதியரின் ஆதிக்கத்திற்கு வாசலைத் திறந்துவிட்டு வரவேற்பும் கொடுத்துவிட்டான். அதன் விளைவாகப் பாண்டிநாடு சீர்குலைந்தது. 14-ஆம் நூற்றாண்டுக்குப்பின் விசயநகரப் பேரரசு தென்னிந்தியாவில் காலூன்றியது. 14-15ஆம் நூற்றாண்டுகளுக்கிடையில் நிகழ்ந்த அரசியல் குழப்பத்தை அருணகிரியார் கருவூர்த் திருப்புகழ் ஒன்றில் பின்வருமாறு காட்டியுள்ளார்.
அகத்தியர்
"சஞ்சல சரித பரநாட்டவர்கள்
மந்திரிகுமரர் படையாட்சிகள்
சங்கட மகிபர் தொழ ஆக்கினை முடிகூடித்
தண்டிகை களிறு பரிமேற்றனி
வெண்குடை நிழலி லுலவாக்கன
சம்பரம விபவ சவுபாக்கிய முடையோராய்க்
குஞ்சமும் விசிற இறுமாப்பொடு
பஞ்சணை மிசையி லிசை யாத்திரள்
கொம்புகள் குழல்கள் வெகுவாத்திய மியல் கீதங்
கொங்கணி மகளிர் பெருநாட்டிய
நன்றெனமனது மகிழ் பார்த்திபா
கொண்டய னெழுதும் யமகோட்டியை உணராரே”
பண்டைய சோழ மன்னர்களின் கீழ் அமைச்சர்களாகவும், படைத் தலைவர்களாகவும் வாழ்ந்திருந்த சம்புவராயர் தொண்டைநாடு, சோழநாடு ஆகியவற்றுக்குத் தாங்களே தலைவராகி ஆளத் தொடங்கினர் என்பது மேற்கண்ட பாடலிற் குறிக்கப்பட்டது.
திருமுறைக் காலத்திற்குப் பின் ஓங்கி வேரூன்றியிருந்த சிவ வழிபாடும் தன்னிலையிலிருந்து மெல்ல மெல்ல மாறியது. அந்தச் சூழ்நிலையில் சைவத்தை நிலைநிறுத்த பக்தி இயக்கக் காவலர்கள் எவரும் இல்லாமற் போனதும் வருத்தத்திற்குரியது. சமயம் மக்களைவிட்டு வெகுதூரம் விலகிச் செல்லத் தலைப்பட்டது. ஆங்காங்குச் சிறுதெய்வ வழிபாடுகள் பெருகத் தொடங்கின. அரசனின் ஆதரவைப் பெற்ற சமயவாதிகள் பிற சமயத்தவரை அடக்கியொடுக்க முற்பட்டனர். சோழமன்னர் சிலரது ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த சைவ வைணவப் பூசல்களே இதற்குச் சான்றாகும். இந்நிலையில் ஒருபுறம் சக்தி வழிபாட்டுக்கூட்டம் வளரத் தொடங்கியது. அருணகிரியார் வரலாற்றிலேயே சம்பந்தாண்டான் என்னும் சக்தி உபாசகனைப் பற்றி கேள்விப்படுகிறோம். சைவத்திலேயே பல பிரிவுகள் உண்டாகி எரிகின்ற தீயை ஏறத் தள்ளியதையும் நினைவு கூறுகிறோம். மக்களை இணைக்க வேண்டிய, ஒன்று படுத்த வேண்டிய, நெறிப்படுத்தவேண்டிய சமயமே, வேற்றுமையை வளர்த்துப் பகைமைப் பூசல் என்னும் நச்சு மரத்திற்கு நீருற்றியிலிருந்த கொடுமையை என்ன சொல்ல! மேற்கூறிய சூழலைப் பற்றி தொ.பொ.மீ. கூறுவதாவது,
“தமிழர் தம் உரிமையை இழந்து சீர்குலைந்து வாடிய காலம் அது! வேற்றுப் பண்பாட்டையும் வேற்று அரசையும் தடுத்து நிறுத்தவேண்டிய நிலையில் தென்னிந்தியா இருந்தது. தமிழ்ப் பண்பாடு இந்தியப் பண்பாடாகச் சமரசம் காணவேண்டிய ஒரு நிலைமை நெருக்கடியாக எழுந்தது”
இவ்வாறு அரசியற் புயலிலும் சமயச் சண்டையிலும் சிக்கித் தவிக்கும் மக்களிடையே நம்பிக்கையை உருவாக்க வேண்டும். அவர்களுக்கு சமய விழிப்புணர்வும் ஆன்மீகப் புத்துணர்ச்சியும் உண்டாக வேண்டிய அவசியம் ஏற்பட்டது. சமயம் மீண்டும் மக்களுக்குரியதாகக் கொண்டு செல்லப்பட வேண்டும். இறையுணர்வைப் பெருக்க வேண்டும். சமய வேற்றுமைகளைக் களைந்து ஒருங்கிணைப்பின் மூலம் சமரச மனப்பான்மை நிலைநாட்டப்படவேண்டும். இதற்காகப் பக்தி இயக்கம் மீண்டும் எழவேண்டிய அவசியமும் அவசரமும் ஏற்பட்டன.
இதுவரை கூறிய செய்திகளைக் கொண்டு சிந்தித்தால் தீர்வு காணப்பட வேண்டிய சிக்கல்கள் இவையிவை என்று பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
- முருகவழிபாடு மீண்டும் நிலை நிறுத்தப்படவேண்டும்.
- முருகனின் அவதாரச் சிறப்பு உரிய வகையில் காட்டப்படவேண்டும்.
- சைவம் மீண்டும் ஏற்றம் பெறவேண்டும்.
- சமயம் மக்களை நெறிப்படுத்தவே என்பதைக் காட்டி அதன்மூலம் ஆன்மீக மறுமலர்ச்சி காணவேண்டும்
- சமயப் பூசல்களைக் களையவேண்டும்.
- வேற்றுச் சமயத்தின் வேகத்தைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
இவைகளைத் துணிந்து தம் தோளில் சுமந்து அருணகிரியார் ஆற்றிய பணிகளைப் பக்தி இயக்கத்தின் இரண்டாம் கட்டம் என்று கூறுவது மிகையன்று.
அருணகிரியார் கண்ட தீர்வுகள்:
முருக வழிபாடு மீண்டும் ஏற்றம் பெறவேண்டும்; முருக வழிபாட்டில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தவேண்டும் என்று விரும்பிய அருணகிரியாருக்குக் கச்சியப்பர் பாதை காட்டிப் போயினர். முருகனின் பழைய அவதாரக் கதைகள் கந்த புராணத்தின் மூலம் முற்றிலும் மாற்றம் பெற்றுவிட்டன. முருகன் சிவனின் நெற்றிக் கண்ணில் உதித்தவன்; அவன் அருவமும் உருவும் ஆகி அனாதியாய்ப் பலவாய் ஒன்றாய் பிரமமாய் நின்ற சோதிப்பிழம்பு; உயிர்க்குலத்தை வாழவைக்க வேண்டும் என்ற கருணையால் வடிவம் தாங்கி வந்தான். தந்தைக்கே உபதேசம் செய்தவன். வேதங்களாலும் அறிய முடியாதவன்; ஐம்முகச் சிவனும் அறுமுகச் செல்வனும் வேறல்லர்; தானே தனக்கு மகனாகியதத்துவன். இத்தகைய முருகன் போற்றினார்க்கு வீடுபேறு அருள வல்லவன். மாலயன் தனக்கும் ஏனைய வானவர் தமக்கும் மூலகாரணமாய் நின்ற மூர்த்தி. இவ்வாறு முருகனை முழுமுதற் பரம்பொருளாகக் கச்சியப்பர் காட்டியதை அருணகிரியார் அப்படியே ஏற்றுக்கொண்டார்.
அருணகிரியார் முருகனால் ஆட்கொள்ளப்பட்டு அவனிடத்தினின்றும் பல அருளனுபவங்களைப் பெற்ற அநுபூதிமான். முருகனைப் பரம்பொருளாகக் கண்டு ஆராதித்தவர். தாம் பெற்ற பேறு உலகோர் அனைவரும் பெற வேண்டும் என்று விரும்பினார். மக்களிடம் வழிபாட்டுக்குரிய தெய்வமாகக் கொண்டு செல்ல வேண்டுமானால் முருகன் சிவனுக்குச் சமமானவன்; அவன் தலைமைத் தெய்வம் என்று நிறுவவேண்டும். அதற்காக முருகன் “த்வம்” பதத்தின் நுட்பத்தை சிவனுக்குக் கூறிய சிவகுருநாதன் என்றார். தமிழ்க்கடவுளாகிய முருகனை வேதக் கடவுள் என்று பாடுகிறார். முருகன் வேத மந்திர வடிவினன்.
“வேதங்கடந்த விமலன்; முருகன் முத்தொழில் முதல்வன்; அயன் அரி அரன் என்னும் மூவராகவும் அவர்களுக்கு மேலாகவும் விளங்குபவன்; முருகன் சர்வ வியாபகன்; முருகன் தீபமங்கள ஜோதி; சோதி சொரூபன்; அறிவும் அறியாமையும் கடந்த அறிவுத் திருமேனியானவன்; முருகன் தத்துவங்களாகவும் அவை கடந்தும் விளங்குபவன். வேதாகமம் கடந்த ஈறு கூறரும் சுவாமியாக இருப்பவன்; அவன் உதய மரணமில்லா ஒரு பொருள்; யுக முடிவு காலம் இறுதியிலாத உறுதியநுபூதிப் பெருமான்” என்று பலவாறு முருகனைக் காட்டுகிறார் அருணகிரியார்.
“திருப்புகாழசிரியரே முருகனின் எளிவந்த பண்பையும் அருட்கொடையையும் அனுபவித்தவர். அதனால் முருகன், அன்பர் உபகாரன்; அடியார்க்கு நல்ல பெருமான்; மருவும் அடியார்கள் மனதில் விளையாடும் மரகத மயூரப் பெருமாள்” என்றார். சரி, இவைகளை எல்லாம் மக்கள் உளங்கொள்ளச் செய்வது எப்படி? முன்னோர்கள் காட்டிய வழியைத் தொடர்கிறார் அருணகிரியார்.
சம்பந்தரும் அப்பரும் சுந்தரரும் வாதவூரரும் இறைவனை இசைப் பாடல்களால் ஆராதித்தனர். பல தலங்களுக்கும் சென்று எளிய இனிய இசைப்பாடல்களைப் பாடித் தங்கள் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்தனர். அவர்கள் பாதையிலேயே சென்ற அருணகிரியார் சந்தமும் இசை நயமும் தாள நுட்பமும் கூடிய இசைப்பாடல்களை முருகன் கோவில் கொண்ட இடமெல்லாம் பாடினார். பூர்வ பச்சிம தட்சிண உத்தர திசையிலுள்ள பக்தர்கள் அற்புதம் என்று பாராட்டியதோடு திருப்புகழ்ப் பாடல்களைப் பாடவும் செய்தனர். முருகவழிபாட்டைப் பரப்ப எந்த ஒரு குறிப்பிட்ட பூசனை முறையையும் அருணகிரியார் விதிக்கவில்லை. அன்பால் நெகிழ்ந்து அழுது நம் குறைகளை அவன் முன் வைத்து முறையிட்டுப் பணிந்தாலே போதும் என்கிறார். இது நல்ல வரவேற்பைப் பெற்றது. முருக வழிபாட்டை மக்கள் இயக்கமாக்கி அதில் அருணகிரியார் வெற்றியும் கண்டுவிட்டார் எனலாம்.
முருகன் தேவதேவ தேவாதி தேவப் பெருமான் மட்டுமல்லன்; அவன் 'உலகெங்கு மேவிய தேவாலயந்தொறும் பெருமானே' என்றும் காட்டப்படுகிறான். இதன் மூலம் அனைத்துலகும் தொழும் தெய்வமாக முருகனைக் காட்டுகிறார். தென்னாடுடைய சிவனை எந்நாட்டவர்க்கும் இறைவனாகக் காட்டிய மணிவாசகரை ஒப்பிட்டுக் கண்டால் அருணகிரிநாதர் உலகளாவிய பக்தி ஒருமைப்பாட்டை உணர்த்தல் காணலாம். நல்லசுரர் வாழவும், வல்லசுரர் வீழவும் முருகன் வேலெடுத்த திறத்தை, தீயரை அழித்து எளியோரைக் காத்த பண்பைப் பல பாடல்களில் பாடியிருப்பதன் மூலம் ஆன்மீக விழிப்புணர்வையும் தீமையை எதிர்க்கும் நெஞ்சுரத்தையும் வளர்த்துள்ளார் எனலாம். வேற்றுச் சமயத்தின் வேகத்தைத் தடுத்து நிறுத்தும் உறுதியை மக்களிடம் விதைத்துள்ளார். “அன்றைய நெருக்கடியான காலச் சூழலில் புத்துயிரூட்டப்பட்ட இந்து சமயம், ஆக்கிரமிக்கும் வேற்று கலாசரத்தின் கடுமையான தாக்குதலுக்கு எதிராக ஒருமுகப்பட்ட எதிர்ப்புச் சக்தியை நிலை நிறுத்துவது, உலக ஒற்றுமையும் ஓர் அனுபவமாக வேண்டும் என்ற நடைமுறைக் கண்ணோட்டத்தின்படி அவசியமாக இருந்தது” என்று அருணகிரியாரின் பக்திப் பணியைப் பற்றிக் கூறியிருப்பதும், ஆ.வேலுப்பிள்ளை, “அருணகிரிநாதர் முருகனைப் பற்றிப் பாடல்கள் பல பாடியுள்ளார். அக்காலச் சூழ்நிலையில் தமிழ்ச்சைவர் முருகப்பெருமானின் வீரச் செயல்களை நினைவு கூர்ந்தனர் எனலாம்” என்று கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கன.
சமயப் பூசல்களையும், சமய வேறுபாட்டையும் அருணகிரிநாதர் எவ்வாறு எதிர்கொண்டு வெற்றிகண்டார் என்பதைச் சற்றுக் காண்போம்.
சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், கௌமாரம் என்று பிரிந்து கிடந்த இந்து சமயத்தில் இணக்கமான ஓர் ஒருங்கிணைப்பையும் ஒற்றுமை உணர்வையும் உண்டாக்க வேண்டிய பெரும் பொறுப்பை அருணகிரிநாதர் ஏற்றுக்கொண்டார். முருகனை விநாயகருக்கு இளவல் என்றும், சிவன் மைந்தன் என்றும், உமையாம் உத்தமி புதல்வன் என்றும், திருமால் மருகன் என்றும் பாடிச் சென்றுள்ளமையை அவருடைய நூல்களில் பரக்கக் காணலாம். பிற தெய்வங்களை இழித்தும் பழித்தும் பேசாமல், அவர்களுக்குரிய சிறப்பை எந்த இடத்தும் தாழ்த்தாமல் புகழ்ந்தே பாடிச் செல்வது சிந்திக்கத்தக்கது. அதே சமயம் முருகனே முழுமுதற் பரம்பொருள் என்னும் தம் கொள்கையிலிருந்தும் விலகாமல் நின்றுள்ளார். ஆதிசங்கரர் நிர்க்குணப் பிரம்மத்தை ஆராதித்தவர். அத்வைதத்தை நிலைநாட்டிய அவரே அறு சமயங்களை நிறுவி அவ்வவ் தெய்வங்களின் மீது பிரார்த்தனைச் சுலோகங்களையும் பாடிப் போற்றியுள்ளார் என்பதை இங்கு நினைவு கூர்தல் பொருந்தும்.
முருகனே பரம்பொருள் என்று கொண்டு தம் நூல்களிலும் அதை வலியுறுத்திப் பாடியிருப்பது கொண்டு அருணகிரியார் கௌமாரம் என்னும் ஓர் தனிச்சமயத்தை நிறுவவோ அப்படி ஓர் இயக்கத்தை வளர்க்கவோ முயலவில்லை என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். முருகனைச் சைவ சமயத் தெய்வமாகவே காட்டுகின்றார். கீழ்க்காணும் அவர் வாக்குகளே இதை மெய்ப்பிக்கும்.
- சதாசிவ கோத்திரன் அருள்பாலா
- திங்கள் முடி நாதர் சமயக்கார
- சிவசமய அறுமுகவ திருவேரகத்திலுறை பெருமாளே
- சிவசமய வடிவாய்வந்த அத்துவிதமான பரசுடரொளி.
தமிழறிஞர் திரு. மு.அருணாசலம் அவர்கள் 'சைவ சமய வரலாறு' என்னும் தம்நூலில், "முருகனை வழிபடு தெய்வமாகக் கொள்வாரும் ஐந்தெழுத்தைத் தியான மந்திரமாகக் கொள்வர்; சீவதீக்கை பெற்றுச் சிவவழிபாடு செய்வோரும் முருகனை இட்ட தெய்வமாகக் கொண்டு வழிபடுவதாலேயே முருகவழிபாடு சைவவழிபாடு எனப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளமை இங்கு எண்ணத்தகும்.
ஷண்மதங்களுக்கிடையே சமரச நோக்கம் கொண்டவர் அருணகிரியார் என்பதைச் சற்று விளக்கி மேற்செல்வோம். தேவேந்திர சங்கவகுப்பில், கணபதியைச் சதாகாலமும் தியானம் செய்பவர்களின் உள்ளத்தில் தானும் குடிகொள்பவனாக முருகன் விளங்குகின்றான் என்று பாடுகிறார்.
“அடல் மிகு கடதட விகடிதமதகளிறனவர தமும் அக
லாமாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம்படி செந்திலில்
அதிபதி எனவரு பொருதிறல் முருகனை...”
திருப்புகழிலும், அருணகிரியாரின் பிறநூல்களிலும் உள்ள அம்பிகை பரமான அடிகளைத் தனியே தொகுத்துப் பார்த்தால் அருணகிரியார் ஒரு சாக்தர் என்று கூசாமல் சொல்லிவிடலாம். தேவேந்திர சங்க வகுப்பில் உள்ள 16 அடிகளில் 12 அடிகள் தேவி துதியாக அமைந்தது. “இவ்வகுப்பிலுள்ள தேவிதுதி போல அழகும் சிறப்பும் வாய்ந்த தேவிதுதி தமிழ்நூல்களில் காண்பது அரிது” என்று தணிகைமணியார் குறிப்பிட்டுள்ளார். திருப்புகழ்ப் பாடல்களில் ஏறத்தாழ பாதிப்பாடல்களில் திருமால் பெருமை பேசப்படுகிறது. ஒரு பாடலில் அருணகிரியார் ஆழ்வாராகவே நின்று பரத்துவம் கூறிப்பாடும் பெருந்தகைமைப் பண்பைப் புகழ நான் கற்ற தமிழே போதாது போதாது
“மங்கு லின்புறு வானாய் வானூ
டன்ற ரும்பிய காலாய் நீள்கால்
மண்டு றும பகை நீறா வீறா எரிதீயாய்
வந்தி ரைந்தெழு நீராய் நீர்சூழ்
அம்பரம் பனை பாராய் பாரேழ்
மண்ட லம்புகழ் நீயாய் நானாய் மலரோனாய்
உங்கள் சங்கரர் தாமாய் நாமார்
அண்ட பந்திகள் தாமாய் வானாய்
ஒன்றி லுங்கண்ட தோயா மாயோன் மருகோனே” (-அங்கைமென்குழல்)
அருணகிரிநாதரின் சமய ஒருங்கிணைப்புப் பணிகுறித்து தெ.பொ.மீ. கூறுவதாவது,
“ஒற்றுமை அனுபவத்தை மனதில் கொண்டு ஒன்றுக்கொன்று மாறுபட்ட புராணக் கதைகளை முருகனை மையமாகக் கொண்டு விளக்கிச் செல்கிறார் அருணகிரிநாதர்”
வேறுபட்டுக் கிடந்த சமயங்களிடையே இணக்கத்தை வலியுறுத்திய அவருடைய நடுநிலை நோக்கு சமயச் சழக்கைச் சாடுவதிலும் வெளிப்படுகிறது. தாம் சைவ சித்தாந்தச் செந்நெறியைச் சார்ந்திருந்தவர். 'சுருதிவழிமொழி சிவகலை யலதினி உலக கலைகளும் அலம் அலம்' என்பதில் ஊறி நின்றவர். மதவிசாரர்கள் ஒருவரையொருவர் தேறியறிகிலர். மூண்டு அவியாத சமய விரோத சாம்கலை வாரிதி என்று சாடுகிறார். அறுசமய நீதியொன்னும் அறியாமையைக் கண்டிக்கிறார். சகர சங்க சாகரம் என முழங்கும் சமய வாதிகள் பஞ்சபாதகர். இறைவன் திருவடி அவர்களால் அறியப்பட முடியாதது. அவர்கள் கருமமான பிறப்பற ஒரு கதி காணாது எய்த்துத் தடுமாறும் துர்க்குண சமயிகள். கலக காரணர் என்பதால் கண்டனம் செய்கிறார். கதறிய கலை கொண்டு பதறிய சமயிகள் எட்டாப் பேரொளி இறைவன் என்கிறார். அவன் சமய பேதத்திற்கு அணுகவெண்ணா மெய்ப்பொருள். சிவவிஷ்ணுவைப் பூசை செய்வோர் தமை இகழ்வோர்கள் ஏழ்நரகுஉழல்வர் என்று கூறுவதிலிருந்தே அவரது நடுநிலைப் பண்பை உணரலாம்.
சமய உலகில் அருணகிரிநாதரின் செல்வாக்கு
நாதோபாசனை என்னும் இன்னிசை வாயிலாக இறைவனை ஆராதித்தவர்கள் சைவ சமயச் சான்றோராகிய நால்வர். அவர்கள் வழியில் சென்று இசை வவிபாட்டில் புதுமையைச் செய்து முருகனை ஆராதித்தவர் அருணகிரிநாதர். இதன் தாக்கம் பிற சமயத்தவரிடமும் வேற்றுச் சமயத்தவரிடமும் ஏற்பட்டது. திருப்புகழின் செல்வாக்கு இது என்று துணிந்து கூறலாம்.
இராமநுஜதாசர் என்னும் வைணவர் நூற்றெட்டுத் திருப்பதிகத் திருப்புகழ் பாடினார். இராமஜெயத் திருப்புகழ் என்பதும் திருப்புகழைப் பின்பற்றிப் பாடப்பட்டதேயாம். ஞானியார் சாகிபு பொலியுல்லா என்னும் முகமதியப் பெரியார் பாடியுள்ள மெய்ஞ்ஞானத் திருப்பாடற்றிரட்டு என்னும் நூலில் காணப்படும் ஞானத் திருப்புகழ் என்னும் எட்டுப் பாடல்களும் திருப்புகழின் அடியொற்றிப் பாடப்பட்டவையே. காசிம்புலவர் என்னும் இஸ்லாமியரும் திருப்புகழ்ச் சந்தத்திலேயே பல பாடல்கள் பாடியிருக்கிறார். இது அருணகரிநாதருக்கு கிடைத்த பெருமையாகும்.
முருக வழிபாட்டில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமன்றி அதை மக்கள் இயக்கமாக்கி முழுமையான வெற்றி கண்டவர் அருணகிரிநாதர். முருகன் பரம்பொருள் என்று காட்டி மக்கள் அதை முழுமையாக ஏற்கச் செய்தபெருமை இவரையே சாரும். பின்னர் வந்த ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் முருகன்தான் பரம்பொருள் என்பதை உறுதிபட நிலை நிறுத்தினார்.
முருகன் பரம்பொருள் என்று கொண்டவராயினும் பிற தெய்வங்களை நிந்தனை செய்யாத பெருந்தகையாளர். சமயங்களிடையே ஒருமைப் பாட்டை உண்டாக்கியவர் அருணகிரியாரே. அவருடைய இந்த நடுநிலை நோக்கின் தாக்கம் பின்வந்த தாயுமானவரிடமும், இராமலிங்க அடிகளிடமும் காணப்படுகின்றது. அருணகிரியாரைப் பின்பற்றிச் சமயக் காழ்ப்பையும், சமயச் சண்டையையும் மேற்கண்ட இரண்டு அருளாளர்களும் கண்டித்துள்ளனர். அருணகிரியார், வழிபாட்டு முறை இன்னின்னவாறு தான் அமையவேண்டும் துன்புறுத்தாமல் அன்பு ஒன்றையே வலியுறுத்தியதை தாயுமானவரும் வள்ளலாரும் அப்படியே ஏற்றுள்ளனர். இசைப் பாடல்களின் வாயிலாக இறைவழிபாடு என்பதும் பின்வந்த இரண்டு சான்றோர்களின் பாடல்களில் எதிரொலிப்பதைக் காணலாம். சமய உலகில் அருணகிரிநாதர் ஈடு இணையற்ற சாதனையாளர்தான்
★★★
இப்பொழுது நிலவிற்கு மனிதனை அனுப்பி அதனை ஆராய வேண்டும் என்று பல நாடுகள் முயற்சி எடுக்கின்றன. அருளாளர் அவர்கள் 'ஐங்கரனை ஒத்தமனம்' என்று துவங்கும் கொங்கணகிரித் திருப்புகழில் சந்திரனைக் காணும் படியான யோக நிலை மார்க்கத்தை காட்டி அருள் புரிவாயே என்று பொருட்பட 'சந்திர வெளிக்கு வழி அருள்வாயே' என்று பாடுவார்.
இன்று அவர் கண்ட கனவு சந்திராயன்-3 மூலம் நனவானது. சந்திராயனின் பயணம் வெற்றி அடைய அது விண்ணில் ஏவப்பட்ட நாளிலிருந்து நிலவை அடையும்வரை இப்பாடல் திருப்புகழ் அன்பர்களால் தினமும் பாடப்பட்டது.
— திரு லட்சுமி நரசிம்மன். சென்னை

