அருணகிரிநாதர் வாக்கில் திருஞானசம்பந்தர்

திருமதி. விஜயலட்சுமி இராஜாராம், கனடா.

எறும்பு ஒன்று கற்கண்டு மலையில் இருந்து, தன் வாயில் ஒரு சிறு துளியைக் கௌவிக்கொண்டு வருவதைப்போல, அருணகிரிநாதர் திருஞானசம்பந்தரைப் பற்றிப்பாடிய திருப்புகழ் பாடல்களில் இருந்து ஒரு சில தகவல்கள்.

அழுது உலகை வாழ்வித்த ஆளுடைப்பிள்ளையான திருஞானசம்பந்தரைப் பற்றி, மிக விரிவாகவே சொல்கிறது பெரிய புராணம். அதனாலேயே 'பிள்ளைப் பாதி புராணம் பாதி' எனும் சொற்றொடர் உருவானது. அப்படிப்பட்ட திருஞானசம்பந்தரை, அருணகிரிநாதர் பாடாமல் இருப்பாரா? பல பாடல்களில் பாடுகிறார். அருணகிரிநாதரைப் பொறுத்தவரை, சம்பந்தரும் சரவணபவனும் ஒன்று. இதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் அருணகிரிநாதர்.

அந்த வழியிலேயே வரிசையாக இயன்றவரை தரிசிக்கலாம் வாருங்கள்

சம்பந்தர் அவதரித்த சீகாழியில் இருந்தே துவங்கலாம். அருணகிரிநாதர் அப்படித்தான் துவங்குகிறார்.

“மழைமுகில் தவழ்தரு மண்டு கோபுர
மதில்வயல் புடையுற விஞ்சு காழியில்
வருமொரு கவுணியர் மைந்த” (அலைகடல்-திருப்புகழ்)

கருத்து : மழை கொண்ட மேகங்கள் தவழும் - நெருங்கிய கோபுரங்கள், மதில்கள், வயல்கள் - இவைகழ் மேம்பட்டு விளங்கும் 'சீகாழி' யில் அவதரித்த ஒப்பற்ற, கவுணியர் குலத்துப் பிள்ளையே

சம்பந்தரின் அவதாரத்தைச் சொல்ல வந்த அருணகிரிநாதர், அதற்கு முன்னால் சம்பந்தர் அவதரித்த சீகாழியைப் பற்றிப் படிப்படியாகச் சொல்லியிருக்கும் சூட்சுமங்கள் நிறைந்த பாடலிது. மேலிருந்து கீழாக, படிப்படியாகப் பார்க்க வேண்டும்.

அவதாரம் என்ற சொல்லுக்கு, 'இறங்கி வருதல்' என்பது பொருள். ஆளுடைப்பிள்ளையின் அவதாரத்தைச் சொல்லும் இப்பாடலையும் அந்த முறையிலேயே, இறங்கி வரும்படியாக அமைத்திருக்கிறார் அருணகிரிநாதர்.

மழை பொழியும் மேகங்கள்; அவை இறங்கி வந்து தவழும் உயர்ந்த - நெருங்கிய கோபுரங்கள்; அதன்பிறகு அந்தக் கோபுரங்களைவிட உயரம் குறைந்த மதில்கள்; அதன்பிறகு மதிலை விட மிகமிகத் தாழ்வாக இருக்கும் வயல்.

மழை பொழியும் மேகங்களைச்சொல்லி, படிப்படியாக இறக்கி, வயலில் கொண்டுவந்து முடித்திருப்பதும் அற்புதம்! அழகு! இறங்கி வரும் - இரங்கி வரும் மழைமேகம் படிப்படியாக இறங்கி வந்து, பயிர்களை விளைவித்து, பல்லோரையும் வாழ வைக்கும். அப்படிப்பட்டவர் தான் - ஞானசம்பந்தர். இரக்கத்தின் காரணமாக இறங்கிவந்து, கோபுரம்-மதில்-வயல் என எந்த உயர்வு தாழ்வும் பார்க்காத, எந்த விதமான பிரதிபலனும் எதிர்பார்க்காமல், மழை போல அனைவருக்கும் அருள்மழை பொழிந்தவர் ஞானசம்பந்தர்.

ஞானசம்பந்தரின் அவதாரத்தை; மழை மேகத்தில் தொடங்கி, கோபுரத்தைச் சொல்லி, வயல் வெளியைச்சொல்லி, ஞான சம்பந்தரின் அவதாரத்தை மூன்றே வரிகளில் பாடிய அருணகிரிநாதரின் அளப்பரும் ஆற்றல், எண்ணி இன்புற வேண்டியது. அடுத்தது; அம்பிகை சம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்தது. தெரிந்த இந்த வரலாற்றை அருணகிரிநாதர் சொல்லும் அழகே தனி;

'நுகர் வித்தக மாகு மென்றுமை
மொழி யிற்பொழி பாலை யுண்டிடு
நுவல் மெய்ப்புள பால னென்றிடு மிளையோனே' (பகர்தற்கரி)

கருத்து: 'இதை அருந்து! ஞானம் பெருகும்' என்று சொல்லி, உமையம்மையார் பொழிகின்ற ஞானப்பாலை அருந்திய; அறிஞர்கள் புகழ்ந்து, "திருக்குழந்தையே!" என்று கூறப்படுபவரே; என்றும் இளையவரே

அருணகிரிநாதரின் இந்த வாக்கில், அம்பிகை என்ன சொல்லி ஞானப்பாலை ஊட்டியிருக்கிறார்? - என்று பாருங்கள்!

‘ஞானம் பெருகும். இப்பாலை அருந்து!’ என்று சொன்னாராம் அம்பிகை.

அம்பிகையே இவ்வாறு சொன்னபிறகு, அந்தக்குழந்தை திருவை வளர்க்கும் திருஞான சம்பந்தராக இல்லாமல், வேறு எப்படி இருக்கும்?

அது மட்டுமல்ல! குழந்தைகளுக்குப் பாலமுதம் அளிக்கும்போது, தாயார்கள் என்ன சொல்லி-என்ன எண்ணத்தோடு அளிக்கவேண்டும் என்று, பாடமும் நடத்துகிறார் அருணை முனிவர்.

பாலமுதம் அளித்த நிகழ்வை, 'உண் அடிசில்' என உமையம்மையின் வாக்காக, சேக்கிழார் சுவாமிகள் பெரிய புராணத்தில் சொல்லியிருப்பதை; 'நுகர்! வித்தகம் ஆகும்' என அருணை முனிவர் சொல்லியிருப்பது, வைரத்தைப் பட்டைத் தீட்டியதைப் போன்றதாகும்.

அடுத்து, அருணகிரிநாதரைப் போல ஈசரருள் பெற்றவர்கள் பாடி வைத்ததை, உணர்ந்து அனுபவிக்க வேண்டுமானால், தெய்வ அருள் இல்லாமல் இயலாது. 'அவன் அருளால் அவன் தாள் வணங்கி' என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்?

ஆம்! அருள் தான்! அருள் வசம் தான்! வாருங்கள்! அருணகிரிநாதரின் வாக்கு ஒன்றை அனுபவிக்கலாம்.

திருஞான சம்பந்தரும் அவருடன் வந்தவர்களும் வழி நடந்த களைப்பும் வெம்மையும் தாங்காமல் தவித்தபோது, சிவபெருமான் ஞானசம்பந்தருக்கு முத்துச்சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னங்கள் ஆகியவற்றைத் தந்து அருள் செய்தார். அருள் செய்த அந்த நிகழ்வைச் சேக்கிழார் பதிவு செய்திருக்கிறார். அப்பதிவில் 'அருள்' என்ற சொல்லைப் பல விதங்களிலும் கையாண்டிருக்கிறார் சேக்கிழார். அருள் என்ற சொல்லைச் சேக்கிழார் மிக அதிக அளவில் பயன் படுத்தியிருப்பது, இந்த ஒரு நிகழ்வில் தான்.

"நீறு வந்த நிமலர் அருளுவார்...
ஆங்கு மற்ற அருள் அடியாருடன்...
அங்கண் நாதர் அருளினால் கண்டனர்...
அங்கணன் அருளால் அலவ கொண்டுடன்...
ஈசர் இன் அருளால் தாங்கி ஏகினார்...
உள்ளவாறு அருள் செய்ய உணர்ந்த பின்...
தொண்டருக்கு அருள் செய்து தொழாமுனம்...
தந்த பேர் அருள் தாங்குவீர் என்றனர்...
என்று தங்களுக்கு ஈசர் அருள் செய்தது...
மன்றுளார் அருள் என்று வணங்கினார்...
செம்மை நித்தில யானச் சிறப்பு அருள்...

எந்தை ஈசன் என எடுத்து இவ்வருள்...

அரத்துலற அடிகள் தம் அருபள...

ஆதியார் அருள் ஆதலின்...

என்னையும் பொருளாக இன் அருள் புரிந்து அருளும்...”

அப்...பா! எவ்...வளவு அருள்!”

என்று சேக்கிழார் இவ்வாறு பாடியதை அருணகிரிநாதரும் பாடியிருக்கிறார்.

“... கொச்சையிற் சதுர்வேதச்
சிறுவ நிற்கருட் கவிகை நித்திலச்
சிவிகை யைக்கொடுத் தருளீசன்” (கறுவி)

கருத்து: சீகாழியில் நான்கு வேதங்களும் வல்லவராய் வந்த - (திருஞானசம்பந்தச்) சிறுவனே! உன்னிடம் திருவருள் வைத்து, முத்துக் குடையும் முத்துப் பல்லக்கும் கொடுத்து அருள் புரிந்த ஈசன் - சிவபெருமான்.

ஏராளமான பாடல்களில் சேக்கிழார் சொன்ன தகவலை, ஒரே பாடலில் அதுவும் ஒரு சில வரிகளில் சொன்ன அருணகிரிநாதரின் அருந்தமிழ் ஆளுமை ஆற்றல் வியக்கவைக்கும். இந்த வரிகளில் இரு முறைகள் ‘அருள்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி, ஞானசம்பந்தருக்கு முத்துப்பல்லக்கு முதலானவைகளைக் கொடுத்ததைப்பாடி, அவற்றிற்கு முன்னும் பின்னும் ‘அருள்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி, நம்மையும் அருள் வழிப்பட அறிவுரை கூறுமுகமாக அமைந்த பாடல் இது.

ஆம்! ஞான சம்பந்தருக்கு மட்டுமல்லாது அவருடன் வந்த அனைவரையும் கட்டிக்காத்த ஈசன், நம்மையும் கட்டிக்காக்க வேண்டுவோம்! நல்லவர்களுடன் சேர்வதன் பலனான இந்நிகழ்வைச் சொல்லி, நம்மையும் நல்லவர்களுடன் சேர அறிவுறுத்துகிறார் அருணகிரிநாதர்.அறிவுறுத்தும் தகவல்கள் நிலறந்த பாடல் இது.

ஞானசம்பந்தருக்கு முத்துப்பல்லக்கு முதலானவைகளை ஈசர் அருளிய நிகழ்வு, திருநெல்வாயில் அரத்துறை என்னும் திருத்தலத்தில் நடந்தது. அங்கு நடந்த இந்நிகழ்வை அந்த ஊர்த் திருப்புகழிலேயே பதிவு செய்திருக்கிறார் அருணகிரிநாதர்.

அடுத்து, அருணகிரிநாதரின் ஆச்சரியமான வேண்டுகொள் இடம் பெறும் பாடல்

“புவியதனிற் ப்ரபுவான புகலியில்வித் தகர்போல
அமிர்தகவித் தொடைபாட அடிமைதனக் கருள்வாயே
சமரிலெதிர்த் தசுர்மாள தனிஅயில்விட் டருள்வோனே
நமசிவயப் பொருளானே ரசதகிரிப் பெருமாளே”

கருத்து: இந்தப் பூமியில் பிரபுவாக-அரசராகத் தோன்றிய,சீகாழித் தலத்து ஞான சம்பந்தப் பெருமான் போல, அமுதமே இது என்று சொல்லத்தக்க கவி மாலையைப் பாடுதற்கு, அடிமையாகிய எனக்கு அருள் பாலிப்பாயாக! போரில் எதிர்த்து வந்த அசுரர்கள் மாளும்படி ஒப்பற்ற வேலாயுதத்தைச் செலுத்தி அருள்வோனே! நமசிவய எனும் ஐந்தெழுத்தின் மூலப்பொருளாய் உள்ளவனே

வெள்ளியங்கிரி (கைலை மலைப்) பெருமாளே! (தணிகைமணி உரை)

இப்பாடலிலும் அருணை முனிவர் தன் வழக்கப்படி, நுணுக்கமான தகவல்களைப் பதிவு செய்திருக்கிறார். அவற்றில் ஒரு சில... பாடலின் தொடக்கமே வியப்பூட்டுவதாக உள்ளது. 'புவியதனிற்' எனத் தொடங்குகிறது. இதை 'உலகதனிற்' எனப் பாடியிருந்தால், சந்தத்தில் எந்தக்குறைவும் ஏற்படாது; ஏற்படவில்லை. ஆனால் 'உலகதனிற்' எனப் போட்டிருந்தால், எந்த உலகு? மேலுலகா, பூவுலகா, பாதாள உலகா?-என சந்தேகம் வரும். அந்த சந்தேகம் -குழப்பம் வரக்கூடாது என்பதற்காகவே, 'புவியதனிற்' என்றார் அருணகிரிநாதர்.

நாம் இருக்கும் பூமியைச்சொல்லி, அடுத்து 'ப்ரபு'வான-என்கிறது பாடல். பிரபு என்ற சொல்லுக்குப் பெருமையில் சிறந்தவர் - செல்வர் - கொடையாளி - அதிகாரி எனப் பொருள் உண்டு.

சிவபெருமானும் அம்பிகையும் நேரே வந்து ஞானப்பால் கொடுத்த - பெருமையில் சிறந்தவர்; ஞானச்செல்வர்; அடுத்தவர்களின் துயர்தீரப் பலவிதங்களிலும் உதவிய- கொடையாளி; ஆண்பனையைப் பெண் பனையாக ஆக்கும் அளவிற்கு சக்தி படைத்த- அதிகாரி - ஞானசம்பந்தர்.

அடுத்து; இப்படிப்பட்ட ஞானசம்பந்தர் அவதரித்த திருத்தலத்தைச் சொல்கிறார் அருணகிரிநாதர். அதிலும் 'புகலி'யில் எனப் பாடியிருப்பது, அபூர்வமான சொற்பிரயோகம். காரணம்?

சீகாழிக்கு உண்டான பன்னிரு திருநாமங்களில் 'புகலி' என்பதும் ஒன்று. சூரபத்மனுக்குப் பயந்த தேவர்கள்,தங்களுக்குப் புகலிடமாகக் கொண்டு பூஜை செய்ததால், 'புகலி' எனப் பெயர் பெற்றது.

'முருகா! தேவர்கள் உன்னிடம் புகல் அடைந்தார்கள்; வேண்டுகோள் நிறைவேறப் பெற்றார்கள் அல்லவா? அதுபோல நானும் உன்னிடம் புகல் அடைந்திருக்கிறேன். என் வேண்டுகோளையும் நிறைவேற்று!' எனக் குறிக்கும் முகமாகவே, 'புகலி' எனப்பாடினார் அருணகிரிநாதர்.

'அது சரி! உன் வேண்டுகோள் என்ன? நீ யார்?' என முருகப் பெருமான் கேட்டால், அதற்கு பதில் சொல்ல வேண்டுமல்லவா? அதைச் சொல்கிறது, பாடலின் அடுத்தப் பகுதி.

'புகலியில் வித்தகர் போல' என்கிறது பாடல். தமிழ் அகராதிகளின்படி, ஞானம்-கல்வி-நிறைந்த நற்குணம்-பெருமை முதலானவை கொண்டவர் யாரோ, அவர் வித்தகர். ஞானசம்பந்தர் அப்படிப்பட்ட வித்தகர். அவரைப்போலப் பாடும் ஆற்றலை வேண்டுகிறார் அருணகிரிநாதர்.

வேண்டுதல் நிறைவேற ஒரு காரணம் வேண்டுமல்லவா? அதைச்சொல்லி வேண்டுகோளை நிறைவு செய்கிறார் அருணகிரிநாதர்.

'அடிலம தனக்கருள்வாயே'

'நான் உன் அடிமை. எஜமானன் நீ! அடிமையான நான், எஜமானனான உன்னிடம் கேட்காமல் வேறு யாரிடம் போய்க் கேட்பேன்? 'என் வேண்டுகோளை நிறைவேற்று!' என வேண்டுகிறார்.

நாமும் வேண்டுவோம்

தேவர்கள் புகல் அடைந்த, ஞானசம்பந்தர் அவதரித்த புகலியைச் சொல்லி, ஞானசம்பந்தரைப் போலப்பாடும் ஆற்றலை வேண்டுவதாக அமைந்த இப்பாடல், ரசதகிரி-வெள்ளி, மலை-கைலாய மலையில் நிறைவு பெறுகிறது. நாமும் அந்தக் கைலாய நாதரிடம் வேண்டுவோம்! அருள்வார்

★★★

அடியேன் எனச் சொல்வ தல்லாமல் நின் தாள் அடைந் தரைக் கண்டே, துடியேன் அருணகிரி பாடும் நின்அருள் தோய் புகழைப், படியேன் பதைத்துரு கேன்பணி யேன்மனப் பந்தம்மெலாம், கடியேன் தணிகையைக் காணேன் என் செய்வேன் எம் காதலனே.

— வள்ளலார்